Language Selection

ஒரு வாக்காளர் என்ற முறையில் சொல்லுங்கள். ஓட்டுக் கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு ஏன் தேவைப்படுகிறது? ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் என்ற இந்தக் கூத்தினால் என்ன பயன்?


“தேர்தல் என்ற ஒன்று நடக்காமல் அரசாங்கம் எப்படி அமையும்? நல்லதோ கெட்டதோ, அரசாங்கம் என்ற ஒன்று அமையாமல், சட்டசபை என்ற ஒன்று இல்லாமல், சட்ட திட்டங்கள் வகுப்பது எப்படி? நிர்வாகம் நடப்பது எப்படி? மக்களுக்கு நல்லது கெட்டது செய்வது எப்படி?” என்று நீங்கள் திருப்பிக் கேட்கக் கூடும்.


இது ஓட்டுப் போடும் வாக்காளராகிய உங்களுடைய கருத்து. ஓட்டு வாங்கும் வேட்பாளர்களிடம் இதே கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். வை.கோ என்ற அசிங்கத்தைப் பார்த்த பிறகும் இந்தத் தேர்தல் என்பது பொறுக்கித் தின்பதற்கான போட்டி என்பதை இவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?


தயாநிதியும் அன்புமணியும் திடீர் மந்திரிகளாக்கப் பட்டதும், முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதற்காகக் கருணாநிதியின் முதுகுக்குப் பின்னால் ஸ்டாலின் தயாராகக் காத்து நிற்பதும் வேறெதற்கு?


வீரபாண்டி ஆறுமுகம் தனக்கொரு சீட், தன் மகனுக்கு ஒரு சீட், மச்சானுக்கு ஒரு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் அன்பரசுவும் தமது பிள்ளைகளுக்கு சீட் வாங்கியிருப்பதும் எதற்கு, குடும்பத்தோடு மக்கள் தொண்டாற்றவா?


“எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று விஜயகாந்த் கெஞ்சுவதும், “கருணாநிதி குடும்பம் மட்டும்தான் கொள்ளை யடிக்க வேண்டுமா, காத்திருக்கும் நாங்களெல்லாம் இளித்த வாயர்களா” என்று வை.கோ குமுறி வெடிப்பதும், எல்லாக் கட்சிகளின் ‘செயல் வீரர்’ கூட்டங்களிலும் நாற்காலிகள் பறப்பதும், சத்தியமூர்த்தி பவனில் அன்றாடம் பத்து இருபது கதர்ச்சட்டைகள் கிழிவதும் எதற்காக?


இதில் மூடு மந்திரம் எதுவும் இல்லை. அ.தி.மு.க வில் வேட்பாளர் விண்ணப்பத்துக்கான கட்டணம் 10,000 ரூபாய். வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு ஜெயித்தால் பல கோடி பம்பர் பரிசு. தோற்றால், தேர்தல் செலவுக்கு அம்மா கொடுக்கும் 2 கோடியில் அமுக்கியவரை லாபம் - இது ஆறுதல் பரிசு. ஜெயித்தாலும் தோற்றாலும் பரிசு தரும் லாட்டரிச் சீட்டு உலகத்தில் வேறெங்காவது உண்டா?


“சீட்டு கிடைக்காதவர்கள் கோபப்படாதீர்கள்; ராஜ்யசபா சீட்டு தருகிறேன், மேல்சபைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறேன்” என்று உடன் பிறப்புகளுக்கு உற்சாகபானம் ஊற்றி உசுப்பி விடுகிறார் கலைஞர்.


தேர்தலின் நோக்கம் என்ன என்பது பற்றி வாக்காளராகிய நீங்கள் ஏதாவது முட்டாள்தனமாகக் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஒளிவு மறைவோ கூச்சநாச்சமோ இல்லாமல் அதை வெளிப்படையாகப் பேசவும் செய்கிறார்கள்.


ஆயுத பேரத்தில் லஞ்சம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம், தொகுதி மேம்பாட்டு நிதியை மக்களுக்குச் செலவிடுவதற்கு லஞ்சம் .. என அனைத்தும் தெளிவாக வீடியோ படமெடுத்து நாடெங்கும் ஒளிபரப்பப்பட்டுவிட்டன. நடைபெறவிருப்பது இரண்டு கொள்ளைக் கூட்டணிகளுக் கிடையிலான ‘ஜனநாயக பூர்வமான’ மோதல்.


மக்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரே ஊரிலுள்ள இரண்டு ரவுடிக்கும்பல்களுக்கிடையே போட்டி வந்தால் என்ன நடக்கும்? அடிதடி வெட்டு குத்தின் மூலம் ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை ஒழித்துக் கட்டி, தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும்.


அவ்வாறில்லாமல், கொள்ளையடிக்கும் உரிமையை ‘ஜனநாயகபூர்வமான’ முறையில் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தல். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் யாரால் கொள்ளை யடிக்கப்பட விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் ‘ரகசியமாக’த் தெரிவித்து விட்டால், அதன்பின் அவர்கள் உங்களைப் பகிரங்கமாகவும் சட்டபூர்வமாகவும் கொள்ளையடிப்பார்கள். இதுதான் தேர்தல் விசயத்தில் வேட்பாளர்கள் கொண்டிருக்கும் நோக்கம்.


யாருடைய நோக்கம் நிறைவேறப் போகிறது? வாக்காளர் களாகிய உங்களுடைய நோக்கமா, கொள்ளையர்களாகிய அவர்களுடைய நோக்கமா?