பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தின் எதிரிகளாக இருப்பதால், இந்து வெறியர்கள் இந்த இயக்கத்தை எதிர்ப்பதில் புதுமையோ, வியப்போ எதுவும் இல்லை. ஆனால், கொள்கை பூர்வமான காரணமோ, காரியமோ எதுவுமில்லாத இந்தத் தமிழினவாதிகள் நமது இயக்கத்தை எதிர்க்கின்றனர். தாங்கமுடியாத எரிச்சலையும், குருட்டுத்தனமான காழ்ப்புணர்ச்சியையும் காட்டியுள்ளனர். இதற்காக நம்முடையது அல்லாத நிலைப்பாட்டை இட்டுக்கட்டி, விமர்சனம் என்கிற பெயரில் அவதூறுகளை எழுதுவதை வழக்கம்போல செய்துள்ளனர்.
பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு முழக்கமாக, "சுயமரியாதை உள்ள தலித்துக்களே, சூத்திரர்களே இந்துமதத்தை விட்டு வெளியேறுங்கள்!'' என்பதை புதிய ஜனநாயகப் புரட்சிகர அமைப்புகள் முன் வைத்துள்ளன. அந்த முழக்கத்திற்கு தமது சொந்த வியாக்கியானமும் உள்நோக்கமும் கற்பித்து "ம.க.இ.க.–வின் மறைமுகப் பார்ப்பனியம்'' என்று தலைப்பிட்டு த.தே.பொ. கட்சியின், "தமிழர் கண்ணோட்டம்'' எழுதியிருக்கிறது.
தலித்துக்களும் சூத்திரர்களும் இந்துமதத்தை விட்டு வெளியேறக் கோரி இயக்கம் நடத்தும் ம.க.இ.க. சில விளக்கங்கள் தரும்படி கேட்கும் "தமிழர் கண்ணோட்டம்'' சில கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால் ம.க.இ.க சார்பில் விளக்கமளிக்கும் முன்பாகவே, தானே கற்பித்த விளக்கங்கள் அடிப்படையில் வாதங்களை அடுக்கியிருக்கிறது.
"அவர்கள் இந்துமதத்தை விட்டு வெளியேறி வேறு மதத்திற்குப் போவதா? அல்லது மதமற்றவராக இருப்பதா? வேறுமதத்திற்குப் போவது என்றால் எந்த மதத்திற்குப் போவது? வேறு எந்த மதத்திற்குப் போனால் சாதி ஒழியும்? மார்க்சிய லெனினிய வழியில் இவர்கள் கூறும் மதமாற்றத்தைச் சாதி ஒழிப்பிற்கான தீர்வு என்று நிலைநாட்டமுடியுமா?
"தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறினால், அவர்கள் இப்பொழுது அனுபவித்துவரும் இட ஒதுக்கீடு பறிபோய்விடும். அப்படிப் போனால் போகட்டும் என்று ம.க.இ.க. கருதுகிறதா?''
"மதமற்றவர் பொதுப் பட்டியலில் வந்துவிடுவதால், அவர்கள் இட ஒதுக்கீட்டை இழப்பார்கள் என்பது ம.க.இ.க.வுக்குத் தெரியாதா?''
– இவை "தமிழர் கண்ணோட்டம்'' எழுப்பியிருக்கும் கேள்விகள். இந்த அடி முட்டாள்தனமான கேள்விகளுக்கு இட ஒதுக்கீடு – சமூக நீதி சித்தாந்தத் தலைவர்களான பெரியாரும் அம்பேத்கரும் தக்க பதிலளித்துள்ளனர் என்பது த.தே.பொ.க. தலைமைக்குத் தெரியாதா?
முந்தைய விசயங்கள் ஒருபுறமிருக்க, தற்போது கொங்குச் சீமையிலே வேளாளர்களும், வடுகநாயக்கர்களும், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர்களும் இந்து நாடார்களும் ஆகிய இட ஒதுக்கீட்டினால் ஆதாயம் அடையும் சாதிகள்தாம் "இந்துத்துவா'' பார்ப்பன – பயங்கரவாதத்தின் சமூக அடிப்படையாக உள்ளனர். மதமாற்றத்தடைச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதில் சங்கராச்சாரி – ஜெயலலிதா கும்பலுடன் பிற்படுத்தப்பட்ட சாதிச்சங்கங்கள்தாம் தோளோடுதோள் உரசிக் கொண்டு நிற்கின்றன. இங்கே கமண்டலத்துடன் மண்டல் கைகோர்த்துக் கொண்டுள்ளது. மேலும் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற சர்வகட்சிக் கொள்கையின் கீழ் சமூகநீதி – இட ஒதுக்கீடு முறை காற்றோடு கரைந்து போகிறது; அதைத் தடுக்கும் சக்தியும் முனைப்பும் சமூக நீதி வாதாடிகளுக்குக் கிடையாது. இதெல்லாம் த.தே.பொ.க.வுக்குத் தெரியாதா?
தெரிந்தும் த.தே.பொ.க. எழுதுகிறது, "இந்து மதத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று இயக்கம் நடத்தும் ம.க.இ.க.வின் உள்நோக்கம் ஐயத்திற்குஉரியது''; "இட ஒதுக்கீட்டைக் களவு செய்ய ம.க.இ.க. மறைமுகப் பார்ப்பனீய வேலை செய்வதாக நாம் ஐயுறுகிறோம்'' என்று.
மேலும், "பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, அதைப் பரிந்துரைத்த மண்டல் குழு அறிக்கையை ம.க.இ.க. கடுமையாக எதிர்த்தது'' என்று பச்சைப் புளுகை எழுதியுள்ளது. "எனவே, ம.க.இ.க.வின் இதயத்துக்குள் கிடக்கும் இட ஒதுக்கீடு எதிர்ப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள ஓர் உத்தியாக, இந்து மதத்தை விட்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றக் கோருகிறதா?'' என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
"இந்துமதத்தை விட்டு வெளியேறுங்கள்!'' என்று பெரியாரும் அம்பேத்கரும் குரல் கொடுத்தபோது, அப்படிச் செய்பவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பாடு நீடிக்கும் என்று இருந்ததா? இல்லையே! இந்து மதத்தைவிட்டு வெளியேறினால் இட ஒதுக்கீடு ஏற்பாடு பறிக்கப்படும் என்று தெரிந்தும் அவர்கள் அவ்வாறு ஏன் குரல் கொடுத்தார்கள்? அம்பேத்கரும் பெரியாரும் செய்ததைப்போல் இட ஒதுக்கீட்டையும் ஆதரித்துக்கொண்டு இந்துமதத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று இயக்கம் நடத்தினால் த.தே.பொ.க.வுக்கு உடன்பாடா? இப்படிச் செய்தாலும் இந்துமதத்தைவிட்டு வெளியேறுபவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும் என்கிற விளைவு ஒன்றுதானே!
இந்த முரண்பட்ட நிலைக்கு த.தே.பொ.க. ஒரு எளிமையான தீர்வு கண்டுள்ளது. தலித்துக்களும் சூத்திரர்களும் இந்து மதத்தை விட்டு வெளியேறக் கோரி இயக்கம் நடத்தக்கூடாது. வெளியேறும் உரிமைக்காக, அந்த உரிமையைச் சுற்றிவளைத்துப் பறிக்கும் தமிழக அரசின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை எதிர்ப்பதோடு நின்று விடவேண்டும் என்கிறது, த.தே.பொ.க. தலித்துகளும் சூத்திரர்களும் தற்போது அனுபவித்துவரும் இட ஒதுக்கீடு பறிபோகாமல் காத்துக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் இந்து மதத்திலேயே இருக்க வேண்டும்; வெளியேறிவிடக்கூடாது. இதுதான் த.தே.பொ.க.வின் நிலைப்பாடு. "சபாஷ்!'' இதுதான் "பிற்படுத்தப்பட்ட'' மேல்சாதி இந்துவெறியர்களின் விருப்பத்தைப் பாதிவழிபோய் வரவேற்கும் த.தே.பொ.க.வின் நிலை. அதாவது, தானும் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் என்கிற பெயரில் இட ஒதுக்கீடு வசதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும்; தாமே சமூக ரீதியில் ஒடுக்குவதற்கு வசதியாக தலித்துகளும், உண்மையில் சூத்திர சாதிகளும் இந்து மதத்தை விட்டு வெளியேறிவிடக்கூடாது. இதற்காகத்தான் பிற்படுத்தப்பட்ட மேல்சாதி சங்கங்கள் மதமாற்றத் தடைச்சட்டத்தை ஆதரிப்பதில் பார்ப்பன பயங்கரவாதத்துடன் கைகோர்த்துக் கொண்டுள்ளன. மேலும், இதனால் அவை அரசியல் ஆதாயமும் அடைவது கூடுதல் போனசு!
த.தே.பொ.க.வின் வாதங்கள் எல்லாம் ஒரே ஒரு அடிப்படையிலானதுதான். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டையும் அதைப் பரிந்துரைத்த மண்டல் குழு அறிக்கையையும் ம.க.இ.க. எதிர்க்கிறது என்கிற பொய்தான். இதே பொய்யின் அடிப்படையில்தான் ம.க.இ.க.வுடன் தன்னுடைய அணுகுமுறையை அக்கட்சி தனது மாநாட்டில் தீர்மானித்துள்ளது. எதிராளியின் நிலைப்பாடு என்னவோ அதைவைத்து வாதங்கள் புரிவதுதான் நேர்மையானவர்கள் செய்யும் வேலை. ஆனால், த.தே.பொ.க. தலைவர்கள் நம்பூதிரிபாடு பாசறையில் பயின்றவர்கள் அல்லவா! அதனால்தான் நமது நிலைப்பாட்டைத் திரித்துச் சொல்லி வாதங்கள் புரிந்துள்ளனர்.
பொதுவில் இட ஒதுக்கீடு, குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி நமது நிலையைப் பலமுறை தெளிவாக விளக்கியுள்ளோம். பொதுவில் இட ஒதுக்கீடு என்பது ஒரு சமூக சீர்திருத்தக் கொள்கைதானே தவிர, சமூக நீதிக்காரர்கள் வாதிடுவதைப்போல அது சமூகப் புரட்சிக் கொள்கை என்பதை நாம் ஏற்கவில்லை. அடுத்து, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று மண்டல் குழு பரிந்துரை வரையறுத்துள்ளவை அனைத்தும் உண்மையில் சமூகரீதியில், வரலாற்று ரீதியில் ஒடுக்கப்பட்ட சாதிகள் அல்ல; தமிழகத்தைப் பொருத்தவரை பார்ப்பனரல்லாத, தாழ்த்தப்பட்டவரல்லாத பிற எல்லா சாதிகளும் சூத்திர சாதிகள்தாம் என்கிற பெரியாரின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல.
உண்மையில் எந்தெந்த சாதிகள் சூத்திர வர்ண வழிப்பட்ட சாதிகள் என்பதில் பிரச்சினை உள்ளது. இன்று பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று கூறிக்கொண்டு இட ஒதுக்கீடு வசதி பெறும் சாதிகளில் பலவும் அதற்குத் தகுதியற்றவை; பார்ப்பனர்கள் கூறுவதைப் போல அந்தச் சாதிகள் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள் என்பதற்காக இதை நாம் கூறவில்லை. வரலாற்று ரீதியிலும், தற்போதும் தாழ்த்தப்பட்ட மக்களையும் உண்மையான சூத்திர சாதிகளையும் சமூக ரீதியில் ஒடுக்கும் சத்திரிய, வைசிய வழிவந்த மேல்சாதிகள் பலவும் தாமும் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் என்று ஏமாற்றி இட ஒதுக்கீடு வசதி பெறுகின்றனர்.
பிற்படுத்தப்பட்டவை என்று வரையறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாதிகளில் ஒரு சில மட்டுமே இட ஒதுக்கீடு வசதியை ஏகபோகமாக அனுபவித்து முன்னேறியுள்ளன; இந்த உண்மையை மூடிமறைப்பதற்கு தமிழினவாதம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன; இவ்வாறு சட்டநாதன் குழு மற்றும் மண்டல குழு அறிக்கைகளே கூறியுள்ளன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய நமது கொள்கை மேற்கண்ட உண்மைகள் அடிப்படையிலானவை.
1989–இல் மண்டல் குழு பரிந்துரைகளை ஜனதாதள அரசு அமலாக்கியபோது புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் (ம.க.இ.க. முதலியவை) அதை எதிர்க்கவுமில்லை;ஆதரிக்கவும் இல்லை. மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பலன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கு இடையே நடக்கும் மோதல் – சண்டை என்று வரையறுத்தது. ஆளும் வர்க்கங்களுக்குள்ளே, ஆளும் சாதிகளுக்குள்ளே அதிகாரத்துக்காக நடக்கும் மோதல் – சண்டையில் ஏதாவது ஒருதரப்பை ஆதரிக்க வேண்டும், மறுதரப்பை எதிர்க்கவேண்டும் என்பதில்லை. மூன்றாவது ஒருநிலை எடுப்பதுதான் சரியாக இருக்கும் என்பதுதான் ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகளின் நிலை. இதன் பொருள், நாம் நடுநிலை வகிக்கிறோம் என்பதல்ல. இரண்டு தரப்பிடமிருந்து மாறுபட்ட வேறொரு நிலை எடுக்கிறோம். அதேசமயம், மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கத்தை எதிர்த்து பார்ப்பன பயங்கரவாதிகள் நடத்திய வக்கிரமான – குரூரமான வெறியாட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளோம்.
இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகளின் நிலையைத் திரித்துச் சொல்லி வாதம் புரியும் த.தே.பொ.க. பின்வருமாறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
"ம.க.இ.க. தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இந்து மதத்தை விட்டு வெளியேறி விட்டார்களா? தங்கள் குழந்தைகளைக் கல்விக் கூடங்களில் சேர்க்கும்போது மதமற்றவர் என்று சேர்த்துள்ளார்களா?'' என்று கேட்டு, பிறருக்கு நம்பிக்கையூட்டவும், நமது நேர்மையை எடுத்துக் காட்டவும் அந்தப்பட்டியலை வெளியிடும்படி கேட்டுள்ளது. இந்த இரண்டு கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கிடமின்றி ஆமாம் என்பதுதான் பதில்; ம.க.இ.க.வினர் அனைவரும் சாதி–மதமற்றவர்கள்தாம். ம.க.இ.க. கறாராக வழிகாட்டி வலியுறுத்தி அமலாக்கும் நிலைப்பாடுகளில் இதுவும் அடங்கும். இதன் விளைவுகளை இந்த அமைப்பினர் சந்தித்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக சாதி–மத மறுப்பு, "இந்துமத'' எதிர்ப்பு இயக்கங்களை நடத்திவரும் ம.க.இ.க.விடம், அதன் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிடும்படி த.தே.பொ. கட்சி கேட்பதில் உண்மை அறியும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. காக்கிச் சட்டைகளின் வேர்வை நாற்றம்தான் அதில் அடிக்கிறது. அவசியமானால் த.தே.பொ.க.வினர் மட்டுமல்ல; வேறு எந்த இயக்கத்தினரானாலும் ம.க.இ.க. அலுவலகத்திற்கு வந்து எமது சாதி–மத மறுப்புகளுக்கு அவர்கள் கோரும் சான்றுகளைக் கண்டு நம்பிக்கை பெறலாம் என்று அழைக்கிறோம்.
(மார்ச் 2003 இதழிலிருந்து)