உத்திரப்பிரதேசத்தில், வடக்கே இமயமலைச் சரிவை ஒட்டியுள்ள இந்த எட்டு மாவட்டங்களிலும் ஏறத்தாழ 80 சதவீதம் பேர் பிராமணர்கள் மற்றும் மேல்சாதி இந்துக்களாவர்; 15 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்; ஏறக்குறைய 3 சதவீதம் பேரே பிற்பட்ட சாதியினர். தாழ்த்தப்பட்டோர் பிற்பட்டோர் என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் முலயம் சிங் யாதவ், அண்மையில் தனது மாநிலம் முழுவதுமுள்ள பிற்பட்டோர் அனைவருக்கும் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்பிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு அமலாக்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கிளர்ச்சி பற்றி எரிந்த உ.பி.யின் சமவெளிப் பகுதியில் இந்த ஒதுக்கீடு குறித்து இப்போது தீவிர எதிர்ப்பு இல்லை. ஆனால், மேல்சாதியினர் பெரும்பான்மையாக உள்ள மலை மாவட்டங்களில் எதிர்ப்பும் போராட்டமும் பெருகத் தொடங்கியது. ஏனெனில், இப்பகுதியில் 27% இட ஒதுக்கீடு அமலானால், அரசு வேலை வாய்ப்பை சமவெளிப் பகுதியைச் சேர்ந்த பிற்பட்டோர் கைப்பற்றிக் கொள்வர். இப்பகுதியில் பிற்பட்டோர் 3% ஆக இருக்கையில் அதிகார வர்க்கத்தில் மட்டும் 27% பேர் இருப்பர். இதேபோல உயர் கல்விக்கான கல்லூரிகளிலும் பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு அமலாகும். இதனால் உயர்கல்வியிலும், அரசு வேலை வாய்ப்பிலும் இதுவரை தாம் அனுபவித்து வந்த வாய்ப்புகள் பறிபோகும் என்பதால் மேல்சாதியினர் இம்முடிவை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். "உ.பி.யில் நாங்கள் இருந்தால்தானே இட ஒதுக்கீட்டு முடிவை எங்கள் மீது திணிக்க முடியும்? இமயமலைச் சரிவை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய "உத்தர்கண்ட்'' எனும் தனி மாநிலம் எங்களுக்கு வேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் முதல் நாளன்று இட ஒதுக்கீட்டு முடிவை எதிர்த்தும், தனி மாநிலம் கோரியும் மலை மாவட்ட மக்கள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தியபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து இப்பிராந்தியம் முழுவதும் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் பெருகத் தொடங்கின. இப்பிராந்தியம் முழுவதும் அரசு நிர்வாகம் செயலிழந்து கிடப்பதோடு, காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசும் துணை இராணுவப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
உ.பி.யின் மலை மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்த்தும் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தும் இப்பிராந்திய மக்கள் நீண்ட காலமாகப் போராடி வந்துள்ளனர். ஆயினும் இதர எல்லையோர மாநிலங்களைப் போலவே, இப்பகுதியிலும் உரிய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதேசமயம் இம்மக்களின் ஓட்டு வங்கியை இழந்து விடாதிருக்க உ.பி. மாநில சட்டமன்றத்தில் எல்லா ஓட்டுக் கட்சிகளும் சேர்ந்து தனிமாநிலம் அமைப்பதை ஆதரித்து ஏற்கெனவே இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இது ஒருபுறமிருக்க, உ.பி.யில் பாரதிய ஜனதாவின் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதற்காக முலயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் கூட்டணி ஆட்சியை காங்கிரசு, ஜனதா தளம் மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரித்து வந்தன. ஆனால் முலயம் சிங், பிற்பட்டோரின் குறிப்பாக யாதவ சாதியினரின் தனிப் பெருந்தலைவராக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். அதேபோல் கன்ஷிராம் தாழ்த்தப்பட்டோரின் தலைவராகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். அதிகார வர்க்கம் மற்றும் போலீசுத் துறைகளில் இருவருமே தமது கையாட்களை முறைகேடான வழிகளில் திணித்து வருகின்றனர். அரசுப் பதவிகள் சன்மானங்களை பகிர்ந்து கொள்வதில் இவ்விரு கட்சிகளுக்குமிடையே ஏற்பட்ட "லடாய்' காரணமாக ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று பலர் பீதியடைந்தனர். பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரைத் தம் கட்சிக்கு இழுக்க முயன்றார் முலயம் சிங். இதனால் கன்ஷிராமும் அவரது கட்சியின் பொதுச் செயலாளரான மாயாவதியும் கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கத் தொடங்கியதும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முலயம் சிங், அவர்களிடம் "பணிந்து'' போகத் தொடங்கினார். தனது அமைச்சரவையில் கல்வி மந்திரியின் பதவியைப் பறித்து மாயாவதியைச் சமாதானப்படுத்தி ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியை வாயடைக்கச் செய்து நெருக்கடியை திசை திருப்பவும், தனது நிலையை பலப்படுத்திக் கொள்ளவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமலாக்க முலயம் சிங் தீர்மானித்தார். இம்முடிவை மேல் சாதியினர் குறிப்பாக மலை மாவட்டங்களில் உள்ளவர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது அவர் அறியாததல்ல. ஆனாலும், இப்பிராந்திய மக்களின் வாக்குகளைப் பற்றி முலயம் சிங்கும், கன்ஷிராமும் கவலைப்படவில்லை. மலைப்பிராந்தியம் அல்லாத சமவெளிப் பகுதியிலுள்ள பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளே தமது தேர்தல் வெற்றிக்குப் போதுமானவை என்றே அவர்கள் கருதுகின்றனர். கடந்த தேர்தலிலும் மலை மாவட்டங்களில் இவர்களது கூட்டணிக்கு இரண்டு இடங்கள்தான் கிடைத்துள்ளன. எனவேதான் "உத்தர்கண்ட்' போராட்டத்தைப் பற்றி கவலைப்படாமல் அரசு எந்திரத்தைக் கொண்டு மிருகத்தனமாக ஒடுக்கி வருகிறது, ஆளும் கூட்டணி. தனி மாநிலக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசுதான் என்று பொறுப்பை அதன் மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்கிறது.
"உத்தர்கண்ட்' போராட்டம் தீவிரமடையத் தொடங்கியதும், பள்ளி கல்லூரிகளை இழுத்து மூடிய முலயம் சிங் அரசு, செப்டம்பர் 13ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் இட ஒதுக்கீட்டை ஆதரித்து கடையடைப்பு நடத்தியது. சில பகுதிகளில் மேல் சாதியினரும் ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதா குண்டர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியதும் சமாஜ்வாடி — பகுஜன் சமாஜ் கட்சிக் குண்டர்கள் போலீசாரோடு சேர்ந்து கொண்டு இரு தரப்பினரும் வன்முறை வெறியாட்டங்களில் இறங்கினர். மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடந்த இத்தகைய வன்முறை துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சுத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர். இக்கடையடைப்புப் போராட்டத்தை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த மேல்சாதி நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் எதிர் போராட்டத்தை வழிநடத்தி இயக்கியதைக் கண்டு ஆத்திரமடைந்த சமாஜ்வாடி கட்சிக் குண்டர்களும் போலீசாரும் நீதிமன்றத்தைச் சூறையாடி, வழக்கறிஞர்களைத் தாக்கியதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தினர். அலகாபாத் நீதிபதிகள், உச்சநீதி மன்றத்திடம் உடனடியாக புகார் செய்ததும் இராணுவம் அங்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்சநீதி மன்றம், மத்தியப் புலனாய்வுத் துறையைக் கொண்டு இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையைப் பெற்றுள்ளது.
இதேபோல, "உத்தர்கண்ட்'' பகுதியில் செப்.12ஆம் நாளன்று நடந்த தர்ணா, வேலைநிறுத்தம், பேரணிகளில் போலீசார் மிருகத்தனமாக தாக்கினர். முசோரி, டேராடூன், கதீமா நகர்களில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பர் பலியாகியுள்ளனர். அக்டோபர் 2ஆம் நாளன்று டெல்லியில் தமது கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான "உத்தர்கண்ட்'' ஆதரவாளர்கள் பேருந்துகளில் சென்றபோது அவர்களை முசாபர்நகர் அருகே வழி மறித்த உத்திரப் பிரதேச ஆயுதப்படை போலீசார், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, சிதறியோடிய மக்கள் மீது தடியடியும் நடத்தினர். பேருந்துகளிலிருந்து பெண்களை அருகிலிருந்த கரும்பு வயல்களுக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்முறையை ஏவினர்.
மேல்சாதியினரின் போராட்டத்தை முலயம் சிங் அரசு வன்முறையை ஏவி ஒடுக்கிய ஆத்திரத்தில், மேல் சாதியினரும் பாரதிய ஜனதா குண்டர்களும் எதிர்த்தாக்குதல் வன்முறையில் இறங்கினர். நைனிடால், ஜுலாகர் முதலான இடங்களில் மேல்சாதி வெறியர்கள் போலீசு நிலையத்தையே சூறையாடி, 5 போலீசாரைக் கொன்றனர். செப்டம்பர் 13ந் தேதி நடந்த கடையடைப்புப் போராட்டத்தின் போது கன்னாஜ் பகுதியின் சமாஜ்வாடி தலைவர் கல்லுபத்தான் என்பவரை முன்னாள் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதுதவிர பிற்பட்ட சாதியைச் சேர்ந்த போலீசு டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சிலரைக் குறிவைத்து கொன்றொழித்தனர். அண்மையில் சாமோலி மாவட்டத்திலுள்ள கர்ணபிரயாகை எனுமிடத்தில் உத்தர்கண்ட் மேல்சாதிக் கும்பல் 5 போலீசாரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளது. உத்தர்கண்ட் பகுதியிலுள்ள சிறுபான்மையினரான பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மீதும் மேல்சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இப்படி இருதரப்பிலும் சாதிய வன்முறைக் கொலை வெறியாட்டங்கள் நடந்துள்ள நிலையில் பார்ப்பன மேல்சாதி "தேசிய'ப் பத்திரிகைகள் போலீசின் வன்முறையை மட்டும் பெரிதுபடுத்தி முலயம் சிங் அரசைச் சாடுகின்றன. மலைமாவட்டங்களில் பார்ப்பன மேல்சாதியினர் பெரும்பான்மையாக உள்ளதை மூடிமறைத்து "மலைவாழ் மக்கள்'' என்று குறிப்பிட்டு ஏய்க்கின்றன. இட ஒதுக்கீடு அமலானால் இப்பிராந்திய மக்களின் வாழ்வே பறிபோய்விடும் என்று மிகைப்படுத்தப்பட்ட விபரங்களைக் கூறி பீதியூட்டுவதோடு, அவர்களது போராட்டம் நியாயமானதைப் போலவும் சித்தரிக்கின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தவொரு தனி மாநிலக் கோரிக்கையையும் சுயநிர்ணய உரிமை, மாநில சுயாட்சி, மாவட்ட சுயாட்சி கவுன்சில் எதுவானாலும் கடுமையாக எதிர்த்து, இவற்றை பிரிவினைவாதம் என்று சாடும் பாரதிய ஜனதா, "உத்தர்கண்ட்'' தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்து தீவிரமாகப் போராடுகிறது. இதற்கு அடிப்படையே அக்கட்சியின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு மேல்சாதி வெறிதான். உத்தர்கண்ட் பகுதி நீண்ட காலமாகப் பின் தங்கிய நிலையிலுள்ளது என்றும் அதிகாரத்தைப் பரவலாக்கி சிறிய மாநிலங்களை அமைப்பது அவசியமானதுதான் என்று அத்வானியும் ஜோஷியும் நியாயவாதம் பேசுகின்றனர். ஆனால் "ஜாட்'' சாதியினர் பெரும்பான்மையாக உள்ள மேற்கு உ.பி.யை தனி மாநிலமாக்க அஜித்சிங் கோருவதைப் பற்றி பாரதிய ஜனதா வாய் திறக்க மறுக்கிறது. சாதி அடிப்படையில் தனக்கென நிரந்தரமான, பாதுகாப்புள்ள மாநிலத்தை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்தோடுதான் அது உத்தர்கண்ட் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. மேல்சாதி இந்துக்களின் கட்சியாகத் தன்னை நிரூபித்துக் காட்டிய பாரதிய ஜனதா, இந்த லட்சணத்தில் முலயம் சிங்கையும் கன்ஷிராமையும் சாதிவெறியர்கள் என்று வெட்கமின்றி சாடிக் கொண்டிருக்கிறது. முலயம் சிங் ஆட்சியைக் கலைக்கக் கோரிப் போராடுகிறது.
இந்நிலையில், உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வன்முறை தலைவிரித்தாடுவதாகக் கூறி, முலயம் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று அதைக் கலைக்க வேண்டும் என்று மாநிலக் காங்கிரசார் போர்க் கொடி தூக்கியுள்ளனர். உத்தர்கண்ட் பகுதயைச் சேர்ந்த மேல்சாதிக்காரரும், மாநிலக் காங்கிரசுத் தலைவருமான என்.டி. திவாரி தன் பின்னே கணிசமான எம்.எல்.ஏ., எம்.பி.க்களைத் திரட்டிக் கொண்டு டெல்லி கட்சித் தலைமையை எதிர்த்துக் கலகம் செய்து வருகிறார். ஆனால் நரசிம்மராவ் கும்பலோ எதிர்கால நலன்களைக் கணக்கில் கொண்டு, முலயம்சிங் ஆட்சியைக் கலைக்கவோ, உத்தர்கண்ட் தனி மாநிலக் கோரிக்கையை ஏற்கவோ மறுத்துவிட்டது.
ஏனெனில், ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இப்படி ஆட்சியைக் கலைத்தால் அது எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்துக்கு சாதகமாக அமைந்துவிடும். இதைவிட, உ.பி. அரசைக் கலைத்தால் நாடு முழுவதும் பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் முசுலீம்களிடம் காங்கிரசின் செல்வாக்கு மேலும் சரிந்து செல்லாக்காசாகி விடும். இதோடு, என்.டி. திவாரி கோஷ்டியின் நிர்பந்தத்தை ஏற்றுப் பணிந்து போனால் இதைப் பார்த்து அர்ஜூன்சிங், சரத்பவார், சோனியா கோஷ்டிகளும் தைரியமடைந்து கலகம் செய்ய ஆரம்பித்தால் ராவ் கும்பலுக்குப் பேராபத்தாகி விடும். இதனாலேயே டெல்லி தலைமை, முலயம் சிங் ஆட்சியைக் கலைப்பதில்லை என்று அறிவித்துள்ளது. அதேசமயம் உத்தர்கண்ட் மக்களிடம் நம்பிக்கை பெறுவதற்காக, மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் அமைக்கப் பரிசீலிப்பதாகக் கூறுகிறது.
தொகுப்பாகக் கூறினால், முக்கியமாக இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேல்சாதியினர் நடத்தும் போராட்டம்தான் உத்தர்கண்ட் தனி மாநிலக் கோரிக்கையாகும். உத்தர்கண்ட் பகுதியிலுள்ள பெரும்பான்மையினர் ஒடுக்கப்படும் மலைவாழ் மக்களோ, தேசிய இனச் சிறுபான்மையினரோ அல்ல. அவர்கள் பார்ப்பனர்களும் மேல் சாதி இந்துக்களும்தான். சாதிய அடிப்படையிலான இத்தகைய தனி மாநில அல்லது மாவட்ட சுயாட்சிக் கோரிக்கையை நாம் எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது. நடப்பது சாதியச் சண்டை. அரசு பதவிகள், சலுகைகள், சன்மானங்களைப் பெற பிற்பட்ட மேல்சாதியினருக்கும், முற்பட்டோருக்கும் இடையிலான மேல்சாதி மேட்டுக்குடியினரின் சண்டை. இதிலே எத்தரப்பையும் நாம் ஆதரிக்க முடியாது. இட ஒதுக்கீடு ஆதரவானாலும், எதிர்ப்பானாலும் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும்ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்கிற அரசு எந்திரத்தில் பதவியை பிடிப்பதற்கான போட்டிதான். இதை மூடி மறைத்து விட்டு இத்தனை நாளும் பசப்பிவந்த ஓட்டுக் கட்சிகள் இப்போது சாதிய அடிப்படையில் பகிரங்கமான போராட்டத்தில் இறங்கி விட்டதையே உ.பி. விவகாரம் தெளிவாக்கிக் காட்டுகிறது.
(115 நவம்பர் 1994 இதழிலிருந்து)