Language Selection

பார்ப்பனர்களுடனும், பார்ப்பனியத்துடனும் தானே பலவாறு சமரசம் செய்து கொண்டு "புதிய ஜனநாயகம்'' அவ்வாறு செய்வதாகப் பழி தூற்றுகிறது வீரமணி கும்பல். இதற்கு ஏதோ பல சான்றுகள் இருப்பதைப் போல "கடந்த கால வரலாற்றை முன்வைத்து ஆராய்வோம்'' என்று சொல்லி மண்டல் கமிசன் பற்றி நமது நிலைப்பாடு என்கிற ஒரே ஒரு உதாரணம் கொடுத்துள்ளது. அதிலும் நமது நிலைப்பாட்டைத் திரித்துச் சொல்லி, பார்ப்பனியத்துடன் நாம் சமரசம் செய்து கொண்டதாகப் புளுகி இருக்கிறது.

 "மண்டல் கமிசன் அறிக்கையைக் குறை கூறி எழுதி பார்ப்பன சார்பு போக்கை'' எடுத்தோம், சங்கராச்சாரி நிலைப்பாட்டிற்கும், புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையே வேற்றுமையே கிடையாது. அடிப்படையில் ஒற்றுமைதான் இருக்கிறது என்று முதலில் திரித்துச் சொல்கிறது வீரமணி கும்பல். ஆனால் அடுத்த சில வரிகளிலேயே மண்டல் கமிசன் குறித்த தெளிவான நிலைப்பாடு எடுத்து "அறிவுபூர்வமாக'' செயல்படாது நடுநிலைமை வகித்தோம், இதனால் பார்ப்பனர்களிடம் சமரசமாக நடந்து கொண்டோம் என்று முன்னுக்குப் பின் முரணாகவும் மேலும் திரித்தும் எழுதுகிறது.


ஆனால் மண்டல் கமிசன் விவகாரத்தில் நமது நிலைப்பாடு நடுநிலையானது அல்ல. அடிப்படையில் சங்கராச்சாரிகளின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது என்று மீண்டும் மீண்டும் நாம் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதற்கு, பெரியாரின் பரம்பரை உரிமை கொண்டாடும் வீரமணிகளோ, பஞ்சத்துக்கு உரிமை கொண்டாடும் நெடுமாறன், மணியரசன் போன்ற திடீர் தமிழினவாதிகளோ எவருமே இதுவரை பதில் கூறவே கிடையாது. மீண்டும் நமது நிலைபாட்டை இங்கே வெளியிடுகிறோம். அவர்கள் யாருக்காவது அரசியல் நேர்மை இருந்தால் பதில் கூறட்டும்.


"மண்டல் அறிக்கையைக் குறைகூறி எழுதி பார்ப்பனர் சார்பு போக்கை எடுத்தது'' என்பது பு.ஜ. மீது வீரமணி கும்பல் எழுதும் இன்னொரு குற்றச்சாட்டு. பார்ப்பன எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற வேண்டிய புரட்சிகர இயக்கமாக நாம் நடக்கவில்லை என்கிறது அக்கும்பல். நமது அமைப்புக்கு எதிராக இப்படிப்பட்ட பலரõலும் அவதூறும் ஆத்திரமும் தூண்டிவிடப்பட்ட போதும் நாம் நமது நிலைப்பாட்டை பகிரங்கமாகவும், துணிவோடும் முன்வைத்தோம். ஏனென்றால், சந்தர்ப்பவாதமாகப் பேசி ஆதாயம் அடையும் நோக்கம் ஒருபோதும் நம்மிடம் கிடையாது. ஆனால், மண்டலை ஆதரித்து வீராவேசம் காட்டிய அத்தனை "புரட்சிகளும் முற்போக்குகளும்'' உண்மையில் அடிப்படையிலேயே அதன் பரிந்துரைக்கு எதிரான நிலைப்பாட்டையே வலியுறுத்தினார்கள். அதாவது, சாதியை அடிப்படையாக வைத்து கல்வி ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கியவர்களே, ஒடுக்கப்பட்டவர்களே பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் மண்டல் கமிசன் நிலைப்பாடு.


ஆனால் மேற்படி "புரட்சி'களும், முற்போக்குகளும் ஒருபுறம் மண்டலை வீராவேசமாக ஆதரித்துக் கொண்டே, மறுபுறம், "இடஒதுக்கீடு ஏற்பாட்டினால் உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இதுவரை பலன் பெறவில்லை. பொருளாதார ரீதியில் முன்னேறிய வர்க்கங்களுக்கே பலன்கள் போய்ச் சேர்ந்தன. ஆகவே, பொருளாதார ரீதியில் வர்க்க ரீதியில் பார்த்து, உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்குமாறு செய்ய வேண்டும்'' என்று வாதாடினார்கள். இதன்மூலம் அடிப்படையில் மண்டல் கமிசன் பரிந்துரைகளை அவர்கள் நிராகரித்ததை வீரமணி போன்றவர்கள் கண்டு கொள்ளவில்லை. எப்படியோ அவர்கள் ஆதரவு கிட்டினால் போதும் என்று சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டார்கள். அதேபோல மண்டலை அமலாக்கிய "சமூக நீதிக் காவலன்'' என்று வீரமணி கும்பலால் போற்றப்படும் வி.பி.சிங்கை "புல்தரையில் ஒளிந்து கொண்டிருக்கும் பாம்பு'' எனச் சொன்ன பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராமின் நிலைப்பாடு என்ன? அவர் மண்டல் கமிசன் அறிக்கையை ஆதரிக்கவில்லை; இட ஒதுக்கீடு என்பதே ஒடுக்கப்படும் வெகுஜன சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தைத் திசை திருப்பி மழுங்கடிப்பதற்கான ஏற்பாடு என்று கூறி வருகிறார். இதை எல்லாம் எதிர்க்கத் துணியாத வீரமணி கும்பல் "புதிய ஜனநாயக''த்தின் மீது பாய்வதன் உள்நோக்கம் புரிந்து கொள்ளக் கூடியதே. அதன் துரோகத்தை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதுதான்!


(131 ஆகஸ்ட் 1994 இதழில் வெளியான "பெரியாரை வீரமணியிடமிருந்து
விடுதலை செய்வோம் வாரீர்!'' எனும் தொடர் கட்டுரையிலிருந்து)