1990இல் வி.பி.சிங் தலைமையில் இருந்த ஜனதாதளம் தேசிய முன்னணி அரசு பிறப்பித்த மண்டல் பரிந்துரை அமுலாக்க உத்தரவு செல்லுபடியாகும். ஆனால், மண்டல் பரிந்துரையில் கண்டுள்ள இட ஒதுக்கீட்டிற்கான சாதிகளின் பட்டியலில் குறைபாடுகள் உள்ளன. சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவர் பட்டியலில் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியில்லாத சில "மேல்'' சாதிகள் சேர்க்கப்பட்டுள்ளன; அதற்குத் தகுதியான சில "கீழ்'' சாதிகள் விடுபட்டுப் போயுள்ளன. மத்திய, மாநில அரசுகள் அடுத்த நான்கு மாதத்திற்குள் இந்தக் குறைபாடுகளைக் களைவதற்கு தனிக் கமிட்டிகள் அமைத்திட வேண்டும். சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின் தங்கியவர்களிலேயே வசதிபடைத்த மேல் தட்டுப் பிரிவினரை இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்பில் இருந்து விலக்கி வைப்பதற்கான அடிப்படை வரன்முறைகளையும் அந்தக் கமிட்டி வகுத்திட வேண்டும். சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்களிலேயே தகுதி அடிப்படையில் இடம் பெற்றுவிட்டால் அவர்களையும் சேர்த்து 27% இட ஒதுக்கீடு கணக்கிடக் கூடாது; மொத்தத்தில் 50%க்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கவும் கூடது; வேலை வாய்ப்புக்குத்தான் இட ஒதுக்கீடே தவிர, பதவி உயர்வுகளுக்கு அது பொருந்தாது; மதச் சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு பொருந்தும்; அதேசமயம் (1991 செப்டம்பரில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசு) இட ஒதுக்கீட்டில் இடம் பெறாத ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செய்து பிறப்பித்த அரசு ஆணை செல்லுபடியாகாது — இவை உச்சநீதி மன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.
இந்தத் தீர்ப்பு "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் மக்களுக்குக் கிடைத்த சமூகநீதி'' என்றும் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் மண்டல் கமிசன் பரிந்துரையின் "தீவிர'' ஆதரவாளர்களான ஜனதாதளம், தி.மு.க., பா.ம.க., தி.க. போன்ற கட்சிகள் கொண்டாடுகின்றன. தீர்ப்பு வந்த அடுத்த நாளே வி.பி.சிங் தலைமையில் ஒரு பேரணியும், அதற்கு அடுத்த நாள் விழாவும் நடத்தினார்கள். இட ஒதுக்கீடு மண்டல் பரிந்துரையை சதிகார சகுனித்தனமான முறையில் எதிர்த்து வரும் காங்கிரசு, பாரதிய ஜனதா, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்' ஆகியவை உட்பட அனைத்துக் கட்சிகளுமே உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளன. அதேசமயம் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்சாதி மாணவர்களின் வன்முறைச் செயல்கள் வட இந்திய நகரங்களில் பெருகி வருகின்றன. கீழிருந்து அவர்களை ஆதரிக்கும் ஆளும் காங்கிரசு, பாரதீய ஜனதா அரசுகளுக்கே இவை இக்கட்டான பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், உச்சநீதி மன்றத் தீர்ப்பு உண்மையில் எந்தத் தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சாதக பாதக அம்சங்களைப் பகிர்ந்தளிக்கிறது. இட ஒதுக்கீடை கொள்கை ரீதியில் ஏற்கும் இத்தீர்ப்பு, அதை அமலுக்குக் கொண்டு வர முடியாதவாறு எல்லா தடைகளையும் போட்டுள்ளது. சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்களுக்குள்ளாகவே வசதி படைத்த மேல்தட்டுப் பிரிவினரைக் கண்டறிந்து இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்குவதற்கான வரன்முறைகளை வகுப்பது; மண்டல் பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகளை அகற்றுவது; அதாவது தகுதியானவர்களைச் சேர்ப்பது, தகுதியற்றவர்களை நீக்குவது; இதற்காக மத்தியமாநில அரசுகள் நியமிக்கும் கமிட்டி முடிவுகள் மீது மீண்டும் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போடுவது ஆகியவை இட ஒதுக்கீடு பிரச்சினையையே குளிர்பதனப் பெட்டியில் போட்டுப் பூட்டுவது போன்றதுதான். இந்த வகையில் உச்சநீதி மன்றம் செய்திருப்பது மோசடிதான். இதனால்தான் "தீர்ப்பை நன்றாகப் படியுங்கள்; போராட்டம் தேவையில்லை'' என்று வன்முறையில் இறங்கியிருக்கும் மேல்சாதி மாணவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி உபதேசிக்கிறார். அதேசமயம், இட ஒதுக்கீடு மண்டல் பரிந்துரையை எதிர்ப்பவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு சாதகமானதல்ல; கொள்கை ரீதியிலும் சட்ட ரீதியிலும் இட ஒதுக்கீடு சரியானதுதான் என்று இத்தீர்ப்புக் கூறுகிறது. இப்போது இல்லாவிட்டாலும் பின்னராவது இட ஒதுக்கீடு அமுலுக்கு வரும்; தாங்கள் இப்போது செய்து வருவதைப் போன்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாமற்போகும் என்கிற எச்சரிக்கையாகவே முற்பட்ட சாதிகள் எண்ணுகின்றன. ஆகவேதான், அதன் ஆதரவுக் கட்சிகள், சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டி முற்பட்ட சாதிகளில் உள்ள ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு செய்வதற்கு வழிகாண வேண்டும் என்கின்றன. முற்பட்ட சாதி மாணவர்கள் உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து வன்முறையில் மீண்டும் வெறியுடன் இறங்கியுள்ளனர்.
இட ஒதுக்கீடு திட்டத்தினால் உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிவாரணம் எதையும் அடைந்துவிடவில்லை என்றுதான் இதுவரையில் அமைக்கப்பட்ட கமிசன்களின் ஆய்வுகள் காட்டுகின்றன. இதற்குப் பரிகாரம் காணும் வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குத் தனியான இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் முன்வைத்தனர். அப்படிப்பட்ட ஏற்பாடு செல்லாது என்று இந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பு கூறுகிறது. அதோடு கல்வியும், தொழிலும் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது; ஆகவே இட ஒதுக்கீடு என்னும் கானல் நீரைத் தேடியலையாது, உண்மையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதி ஆதிக்கத்தை ஒழித்து சமூக நீதி காண்பதற்கு அரசியல் புரட்சி வழியில் பயணப்பட வேண்டும்.
(115 டிசம்பர் 1992 இதழின் தலையங்கம்)