Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


திராவிடக் கட்சிகள் இட ஒதுக்கீட்டில் மோசடி செய்ததாக எழுதும் உங்கள் "புதிய ஜனநாயகம்' யாருக்கு? என்று குறிப்பிடவில்லையே, ஏன்?


Socially and educationally backward (சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்கள்) economically backward (பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள்) என்ற இரண்டு பதங்களையும் பார்ப்பனர்கள் தெரிந்தே வேண்டுமென்றே குழப்புகிறார்கள். "புதிய ஜனநாயக'முமா? முன்பொரு முறை "புதிய ஜனநாயகம் என்பது புதிய பார்ப்பனியமே' என்று "உண்மை' எழுதியபோது நான் நம்பவில்லை. இப்போது அது உண்மைதானோ? என்று தோன்றுகிறது.


மண்ணோடு பொருந்தாத உங்கள் கொள்கைகளை இந்த மக்கள் எப்படி ஏற்பார்கள்? "நெல்லை ஜெபமணி' போன்று துக்ளக்கிலும், ஜூ.வி.யிலும் கூட நீங்கள் எழுதலாமே?
ந. அப்துல் ரகுமான், சென்னை 14.


இட ஒதுக்கீடு பிரச்சினையில் திராவிடக் கட்சிகளின் மோசடிகளை அம்பலப்படுத்துவதால்தான் மண்டல் கமிசன் அறிக்கையை முழுமையாக தமிழில் தி.க. வெளியிடவில்லை என்பது நமது விமர்சனம். இவ்விமர்சன அடிப்படையில் திரு.ந.அப்துல் ரகுமான் தி.க.வின் "உண்மை' ஏட்டிற்கு கேள்வி கேட்டார். அப்படி இல்லை என்றும், சம்பந்தப்பட்ட பகுதிகளை புதிய ஜனநாயகமே வெளியிடலாமே என்று "உண்மை' கேட்டது. அதை ஏற்று நாமும் அப்பகுதிகளை வெளியிட்டோம்.


மண்டல் அறிக்கையை முழுமையாகத் தமிழில் தி.க. ஏன் வெளியிடவில்லை என்பதற்காக நாம் சொன்ன காரணத்தை நிரூபித்துள்ளோம். நமது விமர்சனத்தை மறுக்காது, அதை அங்கீகரிக்கும் வகையில் பார்ப்பனரல்லாத உயர்சாதிக்கான இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தும் அடுத்தகட்ட விவாதத்துக்கு இழுப்பதற்காக திரு.ந. அப்துல்ரகுமானுக்கு நன்றி சொல்லுவோம்.


பார்ப்பனரல்லாதோர், பிற்படுத்தப்பட்டவர் என்கிற பெயர்களில் உண்மையில் உயர்சாதி, அதிலும் மேட்டுக்குடியினரது இட ஒதுக்கீட்டிற்காகவே திராவிடக் கட்சிகளும், அவற்றின் முன்னோடியான நீதிக்கட்சியும் பாடுபட்டு வந்தன. இதுதான் இந்த மண்ணின் வரலாறு. இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. மண்டல் கமிஷன் ஆய்வறிக்கையே சொல்லுகிறது. அதற்கு முந்தைய சட்டநாதன் கமிஷன் முடிவும் இதை உறுதி செய்கின்றது.


பார்ப்பனரல்லாத அனைவரும் சூத்திரர்கள்தாம்; கல்விரீதியிலும், சமூக ரீதியிலும் ஒடுக்கப்பட்டவர்கள்தாம்; இட ஒதுக்கீட்டிற்கு உரிமை உடையவர்கள்தாம் என்கிற தி.க. அதன் சார்புடையவர்கள் வாதத்தை மண்டல் மற்றும் சட்டநாதன் கமிஷன்கள் ஏற்கவில்லை; அவ்வாதத்தை மறுத்து நிராகரித்து விட்டன. இதைச் சொல்வதற்காக "புதிய ஜனநாயக''த்தைப் "புதிய பார்ப்பனீயம்' என்று வசைபாடுபவர்கள் இதே காரணத்துக்காக மண்டலையும், சட்டநாதனையும் அவ்வாறு முத்திரை குத்தவில்லையே, ஏன்?


இந்த மண்ணின் வரலாறு தெரியாதவர்கள் என்று எம்மை ஏசுபவர்கள் என்ன சொல்கிறார்கள்? "பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதை விமர்சிக்கக் கூடாது; அவர்களும் கல்வி மறுக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். இது உண்மை வரலாறா? திரிக்கப்பட்ட வரலாறா? அவர்களும் கல்வி மறுக்கப்பட்டவர்கள் என்றால் இங்கே மிட்டா மிராசுகளாகவும், குறுநில மன்னர்களாகவும், பேரரசர்களாகவும், பெரும் வணிகர்களாகவும், புலவர்களாகவும் புரவலர்களாகவும் வாழ்ந்தவர்கள் கல்வி, உரிமை மறுக்கப்பட்டவர்களா? இல்லை; இவர்கள் கல்வி மற்றும் சமூக உரிமை பெற்ற பார்ப்பனரல்லாத உயர்சாதிக்காரர்களா? அல்லது பார்ப்பனர்களா?


நீதிக் கட்சியின் பிதாக்களாகிய மிட்டாமிராசுகள், ஜமீன்தாரர்கள், குறுநில அரசர்கள், பெருவணிகர்கள் அடங்கிய பார்ப்பனரல்லாத உயர்சாதிகள் கல்வி மற்றும் சமூக உரிமை மறுக்கப்பட்டவையா? இவை தேவபாடைக் கல்வியையும் பெறுவதற்குக் கூட உரிமை பெற்றிருந்தன. இவர்கள் உண்மையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒதுக்கிவிட்டு பார்ப்பனரல்லாதோர் என்கிற பெயரில் இட ஒதுக்கீடு மூலம் ஆதாயம் அடைந்துள்ளார்கள். இதை நியாயப்படுத்தும் திராவிடக் கட்சிகளின் மோசடியை "புதிய ஜனநாயகம்' அம்பலப்படுத்துகிறது.


"புதிய ஜனநாயகம்' யாருக்கு என்று கேட்கிறார், கேள்வியாளர். பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத உயர்சாதி ஆதிக்கத்துக்கு எதிரானது; உண்மையில் ஒடுக்கப்பட்ட மற்ற பிற சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கானதுதான் "புதிய ஜனநாயகம்'. ஆனால், திராவிடக் கட்சிகளும் அவற்றின் சார்புடையவர்களும் பார்ப்பன சாதி ஆதிக்கத்தை மட்டுமே எதிர்க்க வேண்டும்; அதோடு பார்ப்பனரல்லாத உயர்சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதென்பதெல்லாம் பார்ப்பன ஆதரவுதான் என்கிறார்கள். உண்மையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டு பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, அதற்காக "தடா', தேசியப் பாதுகாப்பு சட்டம், அரசு துரோக சதிவழக்குகள் என்று பார்ப்பன பாசிச அடக்குமுறை நம் மீது பாய்ந்திட்டபோதும் பார்ப்பனரல்லாத உயர்சாதிகளுக்கு வக்காலத்து வாங்காததற்காக, அவற்றின் ஆதிக்கத்தையும் எதிர்ப்பதற்காக நம்மீது "பார்ப்பன'' முத்திரை குத்துகிறார்கள். இதன் மூலம் இவர்கள் பார்ப்பனரல்லாத உயர்சாதிகளுக்காக மட்டுமே நிற்கிறார்கள் என்பது தெரியவில்லையா? அதாவது, பார்ப்பனரல்லாத உயர்சாதிகளை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதுதான் இவர்களது அளவுகோலாக இருக்கிறது; பார்ப்பன எதிர்ப்போ, உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதோகூட இவர்களது அளவுகோலாக இல்லை என்பது தெரியவில்லையா? இவர்கள் பார்ப்பன பாசிச கும்பலுடன் சமரசம் செய்து கொள்வதும், பார்ப்பனரல்லாத உயர்சாதிகள் உண்மையில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் இதை மேலும் தெளிவுபடுத்தவில்லையா?


இட ஒதுக்கீடு குறித்து பார்ப்பன மற்றும் பிற உயர்சாதி இந்துக்கள் மூன்று விதமான நிலைப்பாடு எடுக்கின்றனர். ஒன்று: இட ஒதுக்கீடு என்பதே கூடாது; தகுதி, திறமை அடிப்படையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகள் தரவேண்டும் என்பது. இரண்டு: பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்து தரவேண்டும்; ஏனெனில், கல்வி மற்றும் சமூக உரிமை இப்போது கிடையாது என்பது. மூன்று: கல்வி மற்றும் சமூக ரீதியிலானவற்றோடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளதையும் அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது. இட ஒதுக்கீடு மண்டல் அறிக்கையின் தீவிர ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் சில "மார்க்சிய லெனினியக் குழுக்கள்'' கூட இந்த மூன்றாவது நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளன. ஆனால் "புதிய ஜனநாயகம்'' மேற்படி மூன்று நிலைப்பாடுகளை ஏற்கவில்லை; எதிர்த்து அம்பலப்படுத்தி வருகிறது.


சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது; இதுதான் சரியானது; இவ்விரு அடிப்படைகளில் எது ஒன்றையும் புறக்கணிக்கக் கூடாது என்பதுதான் திராவிடக் கட்சிகள், அவற்றின் சார்புடையவர்களது நிலைப்பாடு. இதை "புதிய ஜனநாயகம்'' எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள்தான் இட ஒதுக்கீடு கோரும் உரிமை உடையவர்கள் என்றே கூறி வந்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் திராவிடக் கட்சிகள் அவற்றின் சார்புடையவர்களுக்கும் "புதிய ஜனநாயக''த்திற்கும் இடையிலான வேறுபாடு, எந்தெந்த சாதிகள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் ஒடுக்கப்பட்டவைகள் உரிமை மறுக்கப்பட்டவைகள், இதை எப்படித் தீர்மானிப்பது என்பதுதான்! அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களைப் போலவே குழப்புவதாகவும், "புதிய ஜனநாயகம் என்பது புதிய பார்ப்பனீயமே' என்று எழுதுவதும் வெறும் அவதூறும், பொய்யும்தான்!
எந்தெந்த சாதிகள் உண்மையில் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் ஒடுக்கப்பட்டவை உரிமை மறுக்கப்பட்டவை என்கிற நமது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை; பார்ப்பனரல்லாத உயர்சாதிகளை அப்படிக் கருத முடியாது என்கிற நமது நிலைப்பாட்டுக்குத் தகுந்த பதிலும் அளிக்கவில்லை. அதற்கு மாறாக, அக்கேள்வி எழுப்புவதற்காகவே, பார்ப்பனரல்லாத உயர்சாதிகள் கூட இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியற்றவை எனச் சொல்வதாலேயே பார்ப்பன முத்திரை குத்துவது ஏன்? இந்த நாட்டின் உண்மையான பிற்படுத்தப்பட்டவர்களான சூத்திர சாதிகளையும், தாழ்த்தப்பட்டபழங்குடி மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதற்காக அவர்களின் கல்வி மற்றும் சமூக உரிமைகளை மறுப்பதில் பார்ப்பன சாதியோடு மற்றபிற பார்ப்பனரல்லாத உயர்சாதிகளும் கூட்டு சேர்ந்து இவ்வளவு காலமும் ஆதாயம் அடைந்து வந்தன. இப்போது இச்சாதிகள் பார்ப்பனரல்லாதோர் என்கிற முகாமுக்குள் புகுந்து கொண்டு ஆதாயம் அடைவதோடு, பார்ப்பனரோடு அதிகாரப் பதவிப் போட்டியில் இறங்கியுள்ளன. ஏதோ பார்ப்பனரல்லாதோர் அனைவருக்குமான வகுப்புரிமைப் போர் நடத்துவதாக சமூக நீதி பேசும் கட்சிகள் ஏய்க்கின்றன. இந்த உண்மையை மண்டல் மற்றும் சட்டநாதன் கமிசன்களின் ஆய்வறிக்கைகளது முடிவுகளே நிரூபிக்கின்றன. இதைச் சொல்வதற்காகத்தான் "புதிய ஜனநாயக''த்தின் மீது பார்ப்பன முத்திரை குத்தப்படுகிறது.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கல்வி மற்றும் சமூக உரிமை மறுக்கப்பட்டவர்கள் என்கிற முறையில் தாழ்த்தப்பட்டபழங்குடி சாதிகளோடு சூத்திர சாதிகள் தாம் இட ஒதுக்கீடு கோருவதற்கான உரிமை உடையவர்கள் என்பதே சரி. ஆனால் பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதிகளும் சூத்திர சாதிகள்தாம்; கல்வி மற்றும் சமூக உரிமை மறுக்கப்பட்டவைதாம்; தமிழ்நாட்டைப் பொருத்தவரை பார்ப்பனர், சூத்திரர் ஆகிய இரண்டு வருணங்கள்தாம் இருந்தன என்று திராவிடக் கட்சிகளும் அதன் சார்புடையவர்களும் வாதிடுவது சரியா? உண்மையா? பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதிகளும் சூத்திர சாதிகள்தாம் என்றால் சத்திரிய மற்றும் வைசிய வருணங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை இங்கே செய்து வந்தவர்கள் யார், யார்? இந்தத் தொழில்களைச் செய்து வந்தவர்களுக்கும் கல்வி மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டனவா? இல்லை, மிட்டாமிராசுகள், ஜமீன்தார்கள், குறுநில அரசுகள் முதல் பேரரசர்கள் வரையிலான பெருநிலப் பிரபுக்களாகவும் பெருவணிகர்களாகவும் பெரும் மடாதிபதிகளாகவும் இருப்பதற்கு சூத்திரர்கள் இங்கே மட்டும் அனுமதிக்கப்பட்டார்களா? பேரறிஞர் என்று கூறிக் கொள்ளும் அண்ணாதுரை சேர, சோழ, பாண்டிய, பல்லவப் பேரரசர்களைச் "சூத்திர ராஜாக்கள்' என்று கூறிப் பித்தலாட்டம் செய்தாரே அதை ஏற்பதா? சூத்திர சாதிகளுக்கென விதிக்கப்பட்ட சமூக நியதிகள் என்று பெரியார் போன்றவர்களால் தொகுத்துரைக்கப்பட்ட வரையறைகள் பார்ப்பனரல்லாத இந்த உயர்சாதிகளுக்கும் பொருந்துமா? அப்படிப் பொருந்தும் என்று யாராவது நிரூபித்துள்ளார்களா? "சூத்திரர்களாகிய தாம் தாழ்த்தப்பட்ட சாதிகளைவிட இழிவான சமூக நிலையிலிருப்பதாக'' பெரியார் உரிமை பாராட்டிக் கொண்டாரே, அது உண்மையா?


இட ஒதுக்கீடு மூலம் கல்வி, அதிகார பதவி வாய்ப்புகள் என்று வரும்போது மட்டும் இந்தப் பார்ப்பனரல்லாத உயர்சாதிகள் தாமும் கல்வி மற்றும் சமூகஉரிமை மறுக்கப்பட்டவர்கள் என்று கூறிக் கொள்கின்றன. ஆனால் வெளியே சமுதாய அரசியல் வாழ்க்கையில் மற்ற பிற சாதிகளை அடக்கி ஒடுக்கும் ஆண்டைகளுக்குரிய அதிகார உரிமை பெற்றவர்கள் என்கிற சமூகத் தகுதி பாராட்டுகின்றன. இதற்காக தாம் சத்திரிய, வைசிய குலங்களைச் சேர்ந்தவர்கள்; மிட்டாமிராசு, ஜமீன், குறுநில, அரச, பேரரச பாரம்பரியம் மிக்கவர்கள், பெரும் வணிகர் குல செல்வந்தவர்கள் எனப் பார்ப்பனரல்லாத உயர்சாதிகள் கூறிக் கொள்வது வெற்றுப் பெருமை, பீற்றல்களுக்கானதல்ல; தொடர்ந்து தமது சமூக ஒடுக்குமுறை ஆதிக்கத்தை நீட்டிப்பதற்காகத்தான். "சூத்திர சாதிகள் என்று கூறிக் கொள்ளுங்கள், சத்திரிய வைசிய வருண உரிமை பாராட்டாதீர்கள்'' என்று பெரியாரே கேட்டுக் கொண்டார்; ஆனால் பெரியாரின் "அவதாரமாக''க் காட்டிக் கொள்ளும் ராமதாசு கூட தம்மை ஆண்ட பரம்பரைசத்திரிய குலமென்று கூறிக் கொள்கிறார்.


இந்த உண்மைகளைச் சொல்வதையே பார்ப்பனரல்லாதோரைப் பிளவுபடுத்திவிடும் என்றும், பார்ப்பன சூழ்ச்சி என்றும் திராவிட கட்சிகளும் அவற்றின் சார்புடையவர்களும் "புதிய ஜனநாயக''த்திற்கு எதிராக அவதூறு செய்கின்றனர். பார்ப்பனரல்லாதோர் ஒற்றுமை என்பதே "அகில இந்திய ஒருமைப்பாடு'' போன்று மோசடியானது, போலியானதுதான். உண்மையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எதிராக சாதி ஆதிக்கம் செய்து வரும் அதேசமயம், பார்ப்பனரல்லாத உயர்சாதிகள் அம்மக்களுடன் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு ஒற்றுமை பேசுவதே பித்தலாட்டம் இல்லையா? பார்ப்பனரல்லாதோரைப் பிளவுபடுத்தும் கருவாக உள்ளது அவர்களின் உயர்சாதி சமூக அதிகாரம்தான். எனவேதான் பெரியார் முதல் ராமதாசு வரை பலரும் பார்ப்பனரல்லாதோர் ஒற்றுமை பற்றிப் பேசினாலும், கடந்த மாதம் நடந்த அரியலூர்ஒகளூர் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்னியர் தாக்குதல் உட்பட எதையும் அவர்களால் தடுக்க முடியவில்லை.


ஆகவேதான் பார்ப்பனரல்லாத உயர்சாதிகளின் ஆதாயத்துக்காக, பார்ப்பனர்களுடனான அவர்களின் அதிகாரப் பதவிப் போட்டிக்காக அவர்களை முதுகில் சுமக்க வேண்டியதில்லை. கீழே தள்ளுங்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களிடம் கூறுகிறோம். இதற்காக பார்ப்பன பாசிச எதிர்ப்பில் வீரமணி கும்பலைப்போல ஏதாவது சமரசம் செய்து கொண்டு ஆதாயம் தேடினோமா? அப்படிச் செய்யாது பார்ப்பன பாசிச எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாலேயே எமது தோழர்கள் "தடா'விலும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் வதைபடுகிறார்கள். ஆனால் துக்ளக், ஜூ.வி.யை விட மோசமாக "விடுதலை'யும் "உண்மை'யும் மாறிவிட்டதையும், நெல்லை ஜெபமணியை விஞ்சி விடுமாறு பாசிச பார்ப்பன சேவையில் வீரமணி இறங்கிவிட்டதையும் மறுக்க முடியுமா?


(115 மார்ச் 1992 இதழில் வெளியான கேள்விபதில் பகுதியிலிருந்து)