Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


பதில்: இப்படியும் சிலர் இருக்கிறார்களா? அவர்களுக்காகப் பரிதாபப்படுங்கள். வணக்கத்துக்குரிய நமது பொதுச் செயலாளர் மண்டல் கமிசன் அறிக்கையை முழுவதும்தான் கூட்டத்தில் வைத்துப் பேசுகிறார்.


முழுவதும் வெளியிட்டால் நம் தோழர்கள் வாங்குவது சிரமம், மற்றும் மக்களுக்கு அது தேவையும் இல்லை.


உங்களிடம் சொன்னவர் சொல்வது உண்மையானால் அவர்களே அந்தப் பகுதியை வெளியிடலாமே.''


"எங்கப்பன் குதிருக்குள் இல்லை'' என்கிற தோரணையில் வீரமணி கும்பல் எழுதியுள்ளதை வாசகர்கள் தாமே புரிந்து கொள்ள முடியும். திராவிடக் கட்சிகளின் உயிராதாரமான "வகுப்புரிமை' வழங்கிடும் மண்டல் கமிசன் அறிக்கையைப் பத்தாண்டுகளாகியும் வெளியிடாமல் இருப்பதன் காரணம் இந்தப் பதிலிலேயே அடங்கியிருக்கிறது. "உண்மை' என்று பெயர் வைத்து கொண்டு பொய் எழுதுவதையும் சேர்த்து அம்பலப்படுத்துவதற்காக மண்டல் கமிசன் அறிக்கையின் சம்பந்தப்பட்ட பகுதியை வெளியிடுவது என்று தீர்மானித்துள்ளோம்.


இட ஒதுக்கீடு முறைக்கு பீகார் உ.பி. போன்ற வடமாநிலங்களில் மேல்சாதியினரிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்புகிறது. தமிழ்நாடு, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் அவ்வாறில்லை. அதற்கு என்ன காரணம், இட ஒதுக்கீடு முறையின் விளைவுகள் என்னவென்பதை ஆய்வு செய்வதற்காக டாடா சமூக அறிவியல் கழகம் மூலமாக ஒரு துணைக்குழு அமைத்தது, மண்டல் கமிசன். அத்துணைக் குழுவின் ஆய்வறிக்கை மண்டல் கமிசன் அறிக்கையின் பகுதி ஐஐ தொகுதி ஐங ஆகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் 2வது அத்தியாயம், "தமிழ்நாடு: பிராமணரல்லாதோர் இயக்கத்தில் இருந்து தமிழர் மீட்புவாதம் வரை'' என்கிற தலைப்பில் உள்ளது. (பக்: 147150). தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறை உண்மையில் பார்ப்பனரல்லாத மேல்சாதி, மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்துக்குத்தான் பயன்பட்டிருக்கிறது; இந்த உண்மையை மூடி மறைத்து அவர்களின் நலன்களுக்காகவே திராவிடக் கட்சிகள் பாடுபடுகின்றன என்பதை இந்த ஆய்வறிக்கை காட்டுகிறது.


அந்த ஆய்வறிக்கையின் சாராம்சத்தைப் பின்வருமாறு மண்டல் கமிசனின் பிரதான அறிக்கைத் தருகிறது:


···


"பிரிட்டிஷ் கல்வி முறையாலும் அதிலிருந்து கிடைத்த வாய்ப்புகளாலும் பிரதானமாக நலனடைந்தவர்கள் தமிழ் பிராமணர்கள் தாம். ஏனென்றால், அவர்கள்தான் மேல்நிலைப் படிப்புக்கான பரம்பரைக் "காவலர்'களாக இருந்தார்கள். அனைத்து அரசாங்கத் துறை பதவிகளிலும் பிற தொழிற்துறைப் பணிகளிலும் கிட்டத்தட்ட ஏகபோக நிலையை நிறுவுவதற்கு இது உதவியது. மாண்டேகு சேம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ஏற்படுவதால் எச்சரிக்கை அடைந்திட்ட பிராமணரல்லாத மேட்டுக்குடிச் சாதிகள் முதலில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தையும் பிறகு 1916இல் நீதிக் கட்சியையும் நிறுவுவதற்குத் தலைமையெடுத்தனர். இந்தக் கட்சி 1920இல் ஆட்சிக்கு வந்தபிறகு (அரசுத் துறைகளின்) பதவிகளில் பிராமணருக்கிருந்த பிடிப்பைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1927 வகுப்புவாரி ஆணையின்படி பல்வேறு வகுப்புகளுக்கும் பதவிகளைத் தொகுதி பிரித்து இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.


"நீதிக் கட்சித் தலைவர்கள் நிலவுடைமை வகுப்புகளில் இருந்து வந்தவர்கள், அவர்கள் தங்களது அணிவரிசையில் நிலமற்ற சாதிகளைச் சேர்த்துக் கொண்டு தமது சமூக அடிப்படையை விரிவுபடுத்திக் கொள்வதில் அவ்வளவு அக்கறை கொண்டிருக்கவில்லை... 1927 வகுப்புவாரி அரசாணை வெள்ளாள சாதிகளின், குறிப்பாக முதலியார்களின் வெற்றியைக் குறித்தது'' என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்த அணுகுமுறை நீதிக்கட்சியின் மக்கள் திரள் அடிப்படையை கரைந்து போகச் செய்தது. தேசிய இயக்கத்தில் இருந்து அது ஒதுங்கியிருந்தது அதை மேலும் பலவீனப்படுத்திவிட்டது.


இதற்கிடையே காங்கிரசில் பிராமணர்களின் ஆதிக்கத்தால் கோபமும் ஒரு சுத்தமான வருணாசிரம சித்தாந்தத்தை காந்திஜி பின்பற்றியதால் எரிச்சலும் அடைந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். அவர் பிராமணீய மதம் மற்றும் பண்பாட்டை நிராகரித்து ஒரு தனி திராவிட நாடு கோரினார். திராவிடர் கழகம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சித்தாந்தத்தோடு இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு முழக்கங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.


"1927 வகுப்புவாரி அரசாணை 1947இல் மாற்றியமைக்கப்பட்டது; "முதன்முறையாக பிராமணரல்லாத சாதிகளை பிராணரல்லாத இந்துக்கள் என்றும், பிராமணரல்லாத பிற்பட்ட இந்துக்கள் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது'. இந்தப் புதிய அரசாணையின் ஒரு முக்கிய அம்சமாக இது இருந்தது. இந்தத் தனித்தனி தொகுதிவாரி இட ஒதுக்கீடு திட்டத்தை உச்சநீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. 1951இல் தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடி சாதிகள் மற்றும் பிற பிற்பட்ட சாதிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யும் இன்னொரு ஆணையை அரசாங்கம் பிறப்பித்தது. இது பிராமணரல்லாத முற்பட்ட சாதிகளிடம் இருந்து கடுமையான எதிர் விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அவர்கள் "ஏற்கனவே தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவுக்குப் போதிய அதிகாரமுள்ளவர்களாக மாறியிருந்தார்கள்; எனவே அவர்கள் எந்த வகையிலும் கண்டித்தெழவோ, எதிர்விளைவைக் காட்டவோ இறங்கிடவில்லை.


"மேற்கண்ட இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், மிகவும் பெரிய சமூகத்தையோ, சாதிக் குழுக்களையோ அது முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்று பிரித்தது. "தாழ்த்தப்பட்ட சாதிகளில் இருந்து கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் பிற்பட்டவர்கள்; பிற கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் பிற்பட்டவர்கள்; பிற கிறித்தவர்கள் முற்பட்டவர்கள்; லப்பை மற்றும் தெக்காணி முசுலீம்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ள அதேசமயம், உருது பேசும் முசுலீம்கள்முற்பட்டவர்கள்; ஆதிசைவ, கார்காத்த, களவல வெள்ளாளர்கள் முற்பட்டவர்களாக உள்ள அதேசமயம், துளுவ மற்றும் சோழிய வெள்ளாளர்கள் பிற்படுத்தவர்கள், கஞ்சம ரெட்டிகளைத் தவிர எல்லா ரெட்டியார்களும் முற்பட்டவர்கள். கௌரா, வடுகநாயுடுகள் பிற்படுத்தப்பட்டவர்கள். கம்மாநாயுடுகள் முற்பட்டவர்கள்''. இந்த பாணியிலான வகைப்படுத்தல்கூட முற்பட்ட கிளைச்சாதிகள் கண்டித்தெழவோ, கிளர்ச்சி செய்யவோ இருந்த வாய்ப்பை மிகவும் குறைத்துவிட்டது.


"உண்மையான அமலாக்கத்தில் இட ஒதுக்கீட்டின் பலன்கள் பட்டியலிடப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்குள்ளாகவே ஒப்பீடு ரீதியில் மிகவும் முன்னேறிய சாதிகளுக்கே பிரதானமாகச் சென்றது. இதை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான கமிசன் சிறப்புக் கவனத்தில் எடுத்துக் கொண்டது; பிற பிற்பட்ட வகுப்புகளின் வெவ்வேறு வகைகளுக்கும் தனித்தனி தொகுதிவாரி இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தது; ஆனால் இந்தப் பரிந்துரைக்கு மாநில அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. "பிற்பட்ட மக்கள் தொகையில் 88.7% கொண்ட பலவீனமான, சிறிய பிற்படுத்தப்பட்ட சாதிகள், இட ஒதுக்கீட்டின் பலன்கள் ஒரு கையளவேயான சாதிகளுக்கு மட்டுமே போய்ச் சேருவதற்கு எதிராக ஏன் வெறுப்புஅதிருப்தி கொள்ளவில்லை என்பது இங்கே முக்கிய கேள்வியாக இருக்கிறது. கர்நாடகத்தில் "இந்த வெறுப்பு அதிருப்தியை மூலதனமாக்கிக் கொண்டு தேவராஜ் அர்ஸ் தனக்கென ஒரு புதிய அரசியல் ஆதரவு அடித்தளத்தை கட்டியமைத்துக் கொண்டார்; ஆனால் தமிழ்நாட்டில் அம்மாதிரியான இயக்கம் உருப்பெறவில்லை; காரணம், திராவிடர் கழகப் பண்பாடு... தமிழ் பண்பாட்டு மீட்புவாதம் மாநிலத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருப்பது தொடரும் வரை... ஒரு உண்மையான பிற்பட்ட வகுப்புகளின் இயக்கம்... தோன்றாது.'


"பிராமணர் பிராமணர் அல்லாதோர் பிளவை மறைத்து விடுமளவுக்கு வேறு பிற மாநிலங்களில் உள்ளதைப் போல தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் இடையே ஒரு வெளிப்படையான மோதல் வளரவில்லை. "ஏனென்றால் தமிழ் நாடு சமஸ்கிருதப் பண்பாடு அல்லாத பகுதி, நான்கு வகை வருண முறை அங்கு குறைவாகவே பிரயோகிக்கக் கூடியதாக இருந்தது'. இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் கூட சுயமரியாதை இயக்கத்துக்கு மிகச் சரியாகவே செவி மடுத்தார்கள்.


"விரிவடையும் தமிழ்நாட்டுப் பொருளாதாரம், நகரமயமாக்குதலின் ஒப்பீட்டு ரீதியிலான அதிகரித்த விகிதம் ஆகியவை பிராமண, பிராமணரல்லாத மேல் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் புதிய வழிகளையும் வேலைவாய்ப்புகளையும் தோற்றுவித்தன. இவ்வாறில்லையானால் இட ஒதுக்கீடு, இன்ன பிறவற்றால் இந்தச் சமூகங்களுக்கிடையில் உருவாகி இருக்க வேண்டிய பதற்ற நிலை நிச்சயம் குறைந்திருக்காது.'' (மண்டல் கமிசன் அறிக்கை பகுதி 1, தொகுதி 1, பக்கம். 32)


மண்டல் கமிசன் அறிக்கையில் இருந்து தரப்பட்டிருக்கும் மேற்கண்ட பகுதியில் இருந்து யதார்த்தமாகப் பார்க்கும் எவரும் பின்வரும் முடிவுகளை ஏற்பர்:


· திராவிடக் கட்சிகள் வரலாற்றைத் திரித்துக் கூறுவதைப் போல, நீதிக் கட்சியானது பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதி மக்களின் நலனுக்கானதாக இருக்கவேயில்லை. நிலவுடைமை மேட்டுக்குடி மேல் சாதியினரின் நலனுக்கானதுதான்; நிலமற்ற "கீழ் சாதி'' மக்களைச் சேர்த்துக் கொள்வதில் அவர்களுக்கு அக்கறையே கிடையாது.


திராவிடக் கட்சிகளின் முன்னோடியான நீதிக் கட்சியின் மகத்தான வகுப்புரிமைச் சாதனை எனப் புகழப்படும் 1927 வகுப்புவாரி அரசாணை (கம்யூனல் ஜி.ஓ.) பார்ப்பனரல்லாத எல்லாச் சாதி மக்களின் நலன்களுக்கான ஏற்பாடு கிடையாது; அப்போது முற்பட்ட மேல் சாதி மேட்டுக்குடியினரான வெள்ளாள சாதிகள் — குறிப்பாக, வெள்ளாள முதலியார்களின் வெற்றியைத்தான் குறிக்கிறது.


· 1947 வரை அதாவது 20 ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத மேல்சாதிமேட்டுக் குடியினருக்கான இட ஒதுக்கீடே அமலில் இருந்தது. 1947இல் தான் பார்ப்பனரல்லாத சாதிகளிலேயே பார்ப்பனரல்லாத இந்துக்கள் என மேல்சாதிகளையும், பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் எனப் பிற சாதிகளையும் பிரித்து இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.


· 1951இல்தான் தாழ்த்தப்பட்ட, பழங்குடிச் சாதிகளுக்கும் பிற பிற்பட்ட சாதிகளுக்கும் மட்டுமே இட ஒதுக்கீடு செய்வது என்கிற முறை அமலுக்கு வந்தது. ஆனால், அதற்குள்ளாகவே 24 ஆண்டுகாலமாக பார்ப்பனரல்லாத மேல்சாதிமேட்டுக்குடிக்கு வழங்கப்பட்டிருந்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் எப்போதும் தனது நலன்களை பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்குப் போதிய அதிகாரம் பெற்றவர்களாக அவர்கள் மாறிவிட்டார்கள்.


· பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான தனி இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, அவற்றுள்ளும் ஒருசில முன்னேறிய சாதிகள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன்களைச் சுருட்டிக் கொண்டன; 88.7% மக்கள் தொகையைக் கொண்ட பலவீனமான, சிறிய பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அதன் பலன்கள் போய்ச் சேரவில்லை. இந்தப் பெரும்பான்மையினரின் சாதிகளைக் கொண்ட உண்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் இயக்கம் தோன்றாதற்குக் காரணம் திராவிடர் கழகப் பண்பாடு ஆகும்.


···


மண்டல் கமிசனே கேட்டுக் கொண்டவாறு ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை வடிகட்டித்தான் அதன் பிரதான அறிக்கையில் மண்டல் கமிசன் சேர்த்துள்ளது. மண்டல் கமிசனுக்கு திராவிடக் கட்சிகளுடன் இருந்த அரசியல் உறவுதான் இப்படி வடிகட்டுவதற்கு காரணம். அதோடு அந்த ஆய்வறிக்கையின் கருத்துக்களை கமிசன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று அவசியமில்லை என மண்டல் கமிசன் தெரிவித்து விட்டது; இருந்தபோதும் அக்கமிசன் வடிகட்டி தரப்பட்ட பகுதியும் கூட மேற்கண்டவாறு இட ஒதுக்கீடு பிரச்சினை பற்றிய திராவிடக் கட்சிகளின் மோசடிகளை அம்பலப்படுத்தி வருகிறது.


மண்டல் கமிசன் அறிக்கையின் பகுதி 2, தொகுதி 4, அத்தியாவசியம் 2வதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள டாடா சமூக அறிவியல் கழக ஆய்வறிக்கை மேலும் கூர்மையாகேவ திராவிடக் கட்சிகளின் மோசடிகளை அம்பலப்படுத்துகிறது.


வகுப்புரிமை என்று சொல்லிக் கொள்ளும் இட ஒதுக்கீடு கோரிக்கையின் பிதாமகன்கள் தமது முன்னோடிகளான நீதிக் கட்சியினர் தாம் எனத் திராவிடக் கட்சிகள் உரிமை பராட்டிக் கொள்கின்றன. ஆனால், நீதிக்கட்சியும், அதன் கோரிக்கையும் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே, ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கே அத்தகைய கண்ணோட்டம் இருந்தது; பார்ப்பனரை மட்டுமல்லாது பிற சாதிகளைச் சேர்ந்தவர்களையும் தமது ஆளும் நிறுவனத்தில் இணைத்துக் கொள்ள முயன்றனர். "1851லேயே அரசாங்கப் பதவிகளில் பிராமணர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சென்னை வருவாய்த்துறை வாரியம் அறிவுறுத்தியது'' என்கிறது டாடா சமூக அறிவியல் கழக ஆய்வறிக்கை. "சமூகத்தின் ஒடுக்கப்பட்ட அல்லது வாய்ப்புகள் பறிக்கப்பட்ட பிரிவினரின் நலனுக்கான தனிச்சிறப்பான திட்டங்களை இந்தியாவின் மாகாண அரசாங்கங்கள் ஏறக்குறைய நூறாண்டுகளாக அமலாக்கி வருகின்றன. ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக கல்வி நிறுவனங்களுக்கான நிதியை முறைப்படுத்தும்படி 1885இல் உதவிக்கான மானிய முறைமையை சென்னை அரசாங்கம் உருவாக்கியதானது இத்தகைய முதல் நடவடிக்கை'' என்கிறது மண்டல் அறிக்கை (பக்.5) "1920இல் ஆட்சிக்கு வந்தபிறகு நீதிக்கட்சியானது 1881 ஆணையை 1921இல் விரிவுபடுத்தியது; அதன்படி எல்லா மாவட்டங்களிலுமான நியமனங்களையும் பல்வேறு சமூகத்தாருக்கும் பிரித்து ஒதுக்கும்படி எல்லா இலாக்காக்களின் தலைவர்களையும் பணித்தது.'' (பக் 14) ஆகவே, நீதிக்கட்சிக்கு முன்பாகவே, ஆங்கிலேயருக்கே பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கீடு செய்யும் கண்ணோட்டம் இருந்தது. பார்ப்பனர்கள் அரசு மற்றும் பிற தொழிற்துறைப் பணிகளில் நுழைவதைக் கட்டுப்படுத்தவும் ஆங்கிலேயர்கள் முயன்றனர் என்பதே உண்மை.


திராவிடக் கட்சிகளால் மிகவும் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் 1927 வகுப்புவாரி அரசாணை பின்வருமாறு இருந்தது.


1. பிராமணரல்லாத இந்துக்களுக்கு 12 பதவிகளில் 5; அதாவது 42%
2. பிராமணரல்லாத இந்துக்களுக்கு உப பதவிகளில் 2; அதாவது 17%
3. முசுலீம்களுக்கு 12 பதவிகளில் 2 ; அதாவது 17%
4. ஆங்கிலோ இந்தியர்களுக்கு 12 பதவிகளில் 2; அதாவது 17%
5. தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு 12 பதவிகளில் 1; அதாவது 8%
மொத்தம் 100%


இந்த இட ஒதுக்கீடுத் திட்டம் 1947 வரை அமலில் இருந்தது. ".... தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு 8 சதவீத வேலைகள் மட்டுமே அந்த அரசாணையிலிருந்து பார்க்க முடியும்; அவர்களது மக்கள் தொகைக்குத் தேவையானதைவிட இது மிகமிகக் குறைவானதாகும்''. ஆகவே, பார்ப்பனரல்லாத மேல்சாதி மேட்டுக்குடியினர் தமது நலன்களுக்காக செய்துகொண்ட ஏற்பாடுதான் நீதிக் கட்சியின் இட ஒதுக்கீடு. பார்ப்பனரல்லாதோரிடையே பிற்படுத்தப்பட்டோர், முற்பட்டோர் என்கிற பாகுபாடு இல்லாதது இதையே உறுதிப்படுத்துகிறது.


"நீதிக் கட்சியின் தலைவர்கள் நிலவுடைமை வகுப்புகளில் இருந்து வந்தவர்கள்; தங்களது அணிவரிசையில் நிலமற்ற சாதிகளைச் சேர்த்துக் கொண்டு தமது சமூக அடிப்படையை விரிவுபடுத்திக் கொள்வதில் அவர்கள் அவ்வளவு அக்கறைக் கொண்டிருக்கவில்லை. பிற பலவீனமான, பிற்பட்ட சாதிகளின் நிலைமைகளை மேம்படுத்துவது மற்றும் சமூக சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பான விருப்பமின்மை (அல்லது வெறுப்பை)க் காட்டத் துவங்கினர் என்பதே உண்மை. 1920களிலேயே நீதிக் கட்சியின் அணிவரிசை சிறுகச் சிறுகக் கரைந்து காங்கிரசுக்குக் கட்சி மாறுவது துவங்கிவிட்டது. காங்கிரசுக்குள் ஊடுருவி, அதன் உள்ளிருந்து அமைப்பைக் கைப்பற்றுவது பிராமணரல்லாதோரின் வியூகமாக இருந்தது. ஜமீன்தார்களைப் பொருத்தவரை தமது நலன்கள், குறிப்பாக அரசாங்கப் பதவிகள் மற்றும் கல்வித் துறைகளிலான நலன்கள் பறிபோய் விட்டதான உணர்வு கொண்டிருந்தார்கள்; அந்த உணர்வை ஒரு பெருமளவு குறைத்திடும் வரலாற்றுப் பணியை 1930களுக்குள்ளாகவே நீதிக் கட்சி பூர்த்தி செய்துவிட்டது'' என்கிறது ஆய்வறிக்கை. ஆகவே, இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை நீதிக்கட்சி யாருக்காகக் கொண்டு வந்தது என்பது தெளிவாகிறது.


நீதிக் கட்சி செல்வாக்கிழந்து காங்கிரசிடம் தோற்றுப் போனதற்கான காரணம் என்னவென்று கூறாது திரும்பத் திரும்பத் திராவிடக் கட்சிகள் மழுப்புகின்றன. ஆனால், அதன் காரணத்தை பின்வருமாறு ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. "பிராமண இளைஞர்கள் வெளியேறிய இடத்தை மேல்சாதி இளைஞர்கள் நிரப்பினார்கள். இட ஒதுக்கீடு தமிழர்களின் அரசியல் உணர்வில் நிலைத்த யதார்த்தமாகியது. எனவே, அக்கட்சி சமூக அடித்தளத்தையும் திடீர் வேகத்தையும் இழந்தது. அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் வைத்திருந்த நெருங்கிய உறவு காரணமாக மிகவும் களங்கப்பட்டுப் போனது; எனவே, தேசிய அலையின் எழுச்சிக்கு முன்பு தாக்குப் பிடித்து நிற்க முடியவில்லை. சுயமரியாதை இயக்கம் மட்டும் இல்லை என்றால் 60களின் இறுதியில் கர்நாடகாவில் லிங்காயத்து, ஒக்கலிகா தலைவர்களுக்கு நேர்ந்ததைப் போல சென்னை மாகாண பிராமணரல்லாத மேட்டுக்குடியினர் காலப்போக்கில் கீழ்ச் சாதிப் பிரிவுகளிடம் இருந்து தனிமைப்பட்டு போயிருப்பார்கள். 1944இல் நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக மறு ஒழுங்கமைக்கப்பட்டது.''


திராவிடக் கட்சிகளால் மீண்டும், மீண்டும் போற்றப்படும் 1927 வகுப்புவாரி அரசாணையானது 1947இல் மாற்றியமைக்கப்பட்ட போதும் அதுவும் பிரதானமாக பார்ப்பனரல்லாத மேல்சாதிகளின் நலன்களுக்காகவே இருந்தது.


"பிராமணரல்லாத இந்துக்களுக்கு 14 பதவிகளில் 16; அதாவது 43%
பிற்பட்ட இந்துக்களுக்கு 14 பதவிகளில் 2; அதாவது 14%
பிராமணர்களுக்கு 14 பதவிகளில் 2 ; அதாவது 14%
தாழ்த்தப்பட்டவர்களுக்கு 14 பதவிகளில் 2; அதாவது 14%
ஆங்கிலோ இந்தியர்,
இந்திய கிறிஸ்தவர்களுக்கு 14 பதவிகளில் 1; அதாவது 7%
முசுலீம்களுக்கு 14 பதவிகளில் 1; அதாவது 7%


1947 வகுப்புவாரி அரசாணை வரலாற்று முக்கியத்தும் வாய்ந்தது. ஏனென்றால், முதன்முறையாக பிராமணரல்லாத சாதிகளை பிராமணரல்லாத இந்துக்கள் என்றும் பிராமணரல்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்றும் இது இரண்டாகப் பிரித்தது. இந்தப் பிரிவினை, அப்போதிருந்த கல்விச் சலுகைகளுக்கான சாதிப் பட்டியல்களின் அடிப்படையிலானது. வெள்ளாளர், நாயுடு, செட்டியார், ரெட்டி மற்றும் பிற முற்பட்ட சாதிகளை உள்ளடக்கிய பிராமணரல்லாத சாதிகள் மேற்கண்டவாறான இட ஒதுக்கீடு குறித்த அதிருப்தி காட்டவில்லை; ஏனென்றால், ஒரு தொகுதியாக 43% வேலைகளில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதில் இது வெளிப்படையாகிறது'', என்கிறது டாடா சமூக அறிவியல் கழக ஆய்வறிக்கை.
· 1947 இட ஒதுக்கீடு அரசாணை உச்சநீதி மன்றத்தினால் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு 1951இல் வேறொரு அரசாணை வந்தது; அதுவும் 1954இல் சிறு மாற்றமடைந்தது. 1951 மற்றும் 1954 அரசாணைகளில்தான் பொதுப் பேட்டிக்கான தொகுதி (59%) எனவும், பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு தனித் தொகுதி (25%) என்றும், தாழ்த்தப்பட்ட பழங்குடி சாதிகளுக்கு (16%) என்றும் இட ஒதுக்கீடு வந்தது. இவ்வாறு ஒரு பொதுத் தொகுதியின் கீழ் பார்ப்பனரோடு பார்ப்பனரல்லாத மேல் சாதிகள் தள்ளப்பட்டது குறித்து ஆய்வறிக்கை பின்வருமாறு கூறுகிறது. "20 ஆண்டுகளுக்கு முன்பு பிராமணரல்லாத இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய ஆதிசைவ வெள்ளாளர்கள், காருகாத்த வெள்ளாளர்கள், முதலியார்கள், கம்மாநாயுடுகள் போன்ற அந்த பிராமணரல்லாத முற்பட்ட சாதிகள், இப்போது வேலைக்கும் இடத்துக்கும் பொதுத் தேர்வுப் பிரிவில் பிராமணர்களுடன் போட்டியிட வேண்டியிருந்தது. பொதுத்தேர்வுப் பிரிவிற்குத் தள்ளிவிட்டதால், பிராமணரல்லாத இந்த முற்பட்ட சாதிகள் எவ்வித அச்சுறுத்தலையும் பெறுவதாக இல்லை. அவை ஏற்கெனவே தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டன. இந்த மூலாதாரத்தைக் கொண்டு அரசாங்கப் பணித் துறைகளில் போதுமான அளவுக்கு ஊடுருவி விட்டார்கள். அவர்களுக்கு பிராமணர்கள் கூட எந்த வகையிலும் கடுமையான போட்டியைத் தர முடியாதவாறு பொதுத்தேர்வுப் பிரிவுக்குள்ளாகவே கூட தங்களுடைய பங்கிற்கு மேலாகவே அவர்கள் பெற முடிந்தது. மேலும் துணை சாதிப் பிரிவுகளின் அடிப்படையில் முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்ற வகைப்படுத்தும் தனிச்சிறப்பான முறைமையின் காரணமாக அதையே வரைமுறையின்றிக் கேடாகப் பயன்படுத்துதலும் இருந்தது; இது பற்றிப் பின்னர் விவாதிப்போம். சுருக்கமாகக் கூறினால், வகுப்புவாரி இட ஒதுக்கீடுத் திட்டம் புதிய வடிவத்தில் அமலுக்கு வந்தபோது, பிராமணரல்லாத முற்பட்ட சாதிகள் தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு போதிய சக்தியுடையவர்களாக மாறி இருந்தார்கள். எனவே, அவர்கள் எந்த வகையிலும் கண்டித்தெழவோ எதிர்விளைவைக் காட்டவோ இறங்கவில்லை'' என்கிறது ஆய்வறிக்கை.


மேற்கண்ட விவரங்கள் காட்டுவதென்ன? 1927 முதல் 1951 வரையிலான இட ஒதுக்கீடு, பார்ப்பனரல்லாத மேட்டுக்குடிமேல்சாதிகளும் பார்ப்பனர்களும் தங்களுக்குப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் உண்மையான பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளையும் வஞ்சிப்பதாகவுமே இருந்தது. பார்ப்பனரல்லாத வகுப்புரிமை என்கிற பெயரில் மேட்டுக்குடிமேல்சாதி நலன்களுக்கும் ஆதிக்கத்துக்காகவுமே திராவிடக் கட்சிகள் பாடுபட்டு வந்ததைக் காட்டுகின்றது. 1951 முதல் இன்று வரையிலான இட ஒதுக்கீடும் கூட பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளாகவே ஒரு சில சாதிகள் மட்டுமே பயனடைவதாக இருக்கிறது. 1970இல் வந்த சட்டநாதன் கமிசன் அறிக்கை, இதைத் தெளிவாக சுட்டிக் காட்டிய பின்னரும் திராவிடக் கட்சிகள் உண்மையான பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்காக முன்னிற்கவில்லை.


மேற்கண்ட கருத்தைப் பின்வருமாறு மண்டல் கமிசன் அறிக்கை பகுதி 2 தொகுதி 4 அத்தியாயம் 1இல் ஆய்வறிக்கை விளக்குகிறது. "மொத்தமுள்ள பிற்பட்ட வகுப்புகளின் மக்கள் தொகையில் 11.7% மட்டுமே அடங்கிய 9 சாதிகள், அரசு பதிவிதழ் பெறாத 37.3% பதவிகளையும், அரசு பதவிதழ் பெற்ற 48.2% பதவிகளையும் சுருட்டிக் கொண்டு விட்டன என்பதை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் கமிசன் திட்டவட்டமாக நிரூபிக்கிறது. பிற சிறிய மற்றும் பலவீனமான பிற்படுத்தப்பட்ட சாதிகள் இட ஒதுக்கீடுத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அரசாங்கத் துறைப் பணிகளிலும் கல்விக்கான இடங்களிலும் மேலே சொன்ன பிராமணரல்லாத முற்பட்ட துணை சாதிகள் மட்டுமல்லாது, வேறுபிற 9 பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆதிக்கத்தின் கீழும் கூட வந்துவிட்டன. வடுகர்கள், வீரகோடி வெள்ளாளர்கள், கவரா நாயுடுகள், சௌராஷ்டிரர்கள், துளுவ வெள்ளாளர்கள், தேவாங்கர்கள், சோழிய வெள்ளாளர்கள், அகமுடையார்கள் மற்றும் சாதுச் செட்டியார்கள் ஆகியவைகளே இந்த 9 சாதிகள்... பலன்களை எல்லாம் ஒரு கையளவேயான சாதிகள் மட்டுமே சுருட்டிக் கொண்டதைக் கண்ட கமிசன், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வெவ்வேறு வகைகளுக்காக தொகுதிவாரி இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது; ஆனால் கருணாநிதி நிர்வாகம் இப்பரிந்துரையை ஏற்கவே இல்லை.'' சட்டநாதன், அதன்பிறகு வந்த அவசரநிலை ஆளுநர் ஆட்சிக்கும் எழுதினார். அதுவும் கண்டு கொள்ளவில்லை.


இவ்வாறு பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு 9 சாதிகளே இட ஒதுக்கீட்டினால் பலனடைந்தன என்பதைச் சுட்டிக் காட்டியும், அதற்குப் பரிகாரம் காணப்படவில்லை என்பது மட்டுமல்ல; கீழே தள்ளிய குதிரை குழியையும் பறிப்பது போன்று கருணாநிதி எம்.ஜி.ஆர். ஆட்சிகள் மேலும் கேடான முடிவுகள் எடுத்தன. அதாவது, ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த கொங்கு வேளாளர்கள், சோழிய வேளாளர்கள், கருணீகர்கள் போன்ற முற்பட்ட சாதிகளையும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் சேர்த்தன. இதனால் உண்மையான பிற்படுத்தப்பட்ட சாதிகள் வஞ்சிக்கப்பட்டன. இவ்வளவையும் அம்பலப்படுத்தும் ஆய்வறிக்கை பல முற்பட்ட சாதிகள் துணை சாதிகளின் பெயரால் மோசடி செய்து வருவதையும் அம்பலப்படுத்துகிறது. உதாரணமாக, முற்பட்ட கம்மா நாயுடுகள் கௌரா மற்றும் வடுக நாயுடுகள் என்றும், காருகாத்த வேளாளர்கள் சோழிய வேளாளர்கள் என்றும், வேளாள முதலியார்கள், கைக்கோல செங்குந்த முதலியார்கள் என்றும் போலி சான்றிதழ்களைக் காட்டி இட ஒதுக்கீடு ஆதாயம் அடைகின்றனர்.


திராவிடக் கட்சிகளை மேலும் அம்பலப்படுத்தும் முகமாகப் பின்வருமாறு அந்த ஆய்வறிக்கை எழுதியுள்ளது. "ஒரு கையளவேயான சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் போவது குறித்து, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மக்கள் தொகையில் 88.7 சதவீதமானவர்களைக் கொண்ட சிறிய மற்றும் பலவீனமான பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஏன் ஆத்திரமும் வெறுப்பும் கொள்ளவில்லை? இதுதான் முக்கியமான கேள்வி. அவை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதிகளுடன் ஒன்றாகவே இணைந்து அரசாங்கத்துக்கு நிர்பந்தம் கொடுத்திருக்க முடியுமே! கர்நாடகாவில் இட ஒதுக்கீடு மற்றும் அரசியல் முறைமைகளின் இயக்கங்களின் பலன்கள் லிங்காயத்துக்கள் மற்றும் வொக்கலிகா சாதிகளுக்கு மட்டுமே போவதைத் தாழ்த்தப்பட்ட சாதிகள் (பிராமணரல்லாத லிங்காயத்துக்கள் மற்றும் வொக்கலிகாக்கள் அல்லாத சாதிகள்) கண்டுபிடித்ததும் அல்லது உணர்ந்ததும் அவை ஆழமான ஆத்திரமும் வெறுப்பும் அடைந்தன. இதை மூலதனமாக்கிக் கொண்ட தேவராஜ் அர்ஸ் இச்சாதிகளை வைத்துத் தனக்கென ஒரு புதிய அடித்தளத்தை வளைத்துப் போட்டுக் கொண்டார். காங்கிரசு கட்சி அமைப்பிலும் அதிகாரத் தாழ்வாரத்திலும் லிங்காயத்துக்களுக்கும் வொக்கலிகாக்களுக்கும் இருந்த அதிகாரத்தைக் குறைத்தார். பிறகு ஒரு அரசாணையின் மூலம் அமலாக்கப்பட்ட ஹாவனூர் கமிசன், பெரும்பாலான லிங்காயத்துச் சாதிகளை இட ஒதுக்கீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கிவிட்டது. பலவீனமான, சிறுபான்மையினரான பிற்படுத்தப்பட்ட சாதிகளிடம் இருந்து அம்மாதிரியானதொரு அரசியல் இயக்கம் தமிழ்நாட்டில் ஏன் எழவில்லை? இதற்கான பதிலை குறிப்பாக திராவிடர் கழகப் பண்பாட்டில் காணவேண்டும். அப்பண்பாடு தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளாலும் பாரம்பரியமாகக் கொள்ளப்பட்டது. மாநிலத்தைத் தமிழ் பண்பாட்டு மீட்புவாதம் கவ்வியிருக்கும் வரை, மக்கள் மனதில் இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்புப் பிரச்சினைகள் ஆதிக்கம் வகிக்கும் வரை, உண்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் நலன்களுக்கான, ஒரு உண்மையான பிற்பட்ட வகுப்புகளின் இயக்கம் தோன்றாது. இந்தக் காரணிகளே பிராமணரல்லாத பல்வேறு சாதிகளுக்கிடையில் ஒரு நெருக்கம் தொடர்வதற்கானதாக இருக்கின்றன. குறிப்பாக, தி.மு.க. தலைவர்கள் தமிழ் இயக்கத்தின் இனப்பண்பைப் பலவீனப்படுத்தி விடும் எதிலும் நாட்டம் கொண்டவர்கள் அல்ல'' என்கிறது ஆய்வறிக்கை.


···


நீதிக் கட்சியும் அதன் வாரிசுகளான திராவிடக் கட்சிகளும் உண்மையில் மேல்சாதிமேட்டுக்குடியின் நலன்களுக்காகவே இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை அணுகி வந்திருப்பதை மண்டல் கமிசன் அறிக்கையில் உள்ள டாடா சமூக அறிவியல் கழக இணைப்பு அறிக்கை மேற்கண்டவாறு அம்பலப்படுத்துவதால்தான் அக்கட்சிகள் அந்த அறிக்கையை முழுவதுமாக வெளியிடவில்லை என்று நாம் கருதுகிறோம். அதேசமயம், இன்னொன்றையும் நாம் கூறுகிறோம். மேல்சாதி மேட்டுக்குடியின் நலன்களுக்காகப் பாடுபடுவதை மூடிமறைப்பதற்காக திராவிடக் கட்சிகள் எழுப்பும் இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு என்பதும் கூட தமிழ் இனப் பண்பாட்டைக் காத்து வளர்ப்பதில்லை. இந்த எதிர்ப்புகளும் கூட அவ்வப்போது பயன்படுத்தப்படும் "பெருங்காய டப்பா'' போன்றதுதான். இந்த விவகாரங்களிலும் அக்கட்சிகள் தேவையான போது சமரசம் செய்து கொண்டு வருவதையும் திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் காண முடியும். ஆகவே, திராவிடக் கட்சிகளின் "தமிழ் பண்பாட்டு மீட்பு வாதம்' என்பதும் அதன் மீதான திராவிடக் கட்சிகளின் உறுதி என்பதும் கூட ஒரு மோசடிதான்!


(1630 நவம்பர் 1991 மற்றும் 1631 டிசம்பர் 1991 இதழ்களில் வெளியான தொடர் கட்டுரை)