Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


புதிய ஜனநாயகம், கேடயம் இரண்டினது நிலைப்பாடுகளையும் ஒப்பிட்டு வாசகர்களே முடிவு செய்து கொள்ள முடியும் என்று நாம் நம்பினோம். இருப்பினும் சில வாசகர்கள் நமது விளக்கத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. மண்டல் அறிக்கை விவகாரத்தில் கேடயத்தின் சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரத்தை முதலில் புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியிருந்தது. அதாவது, 90 செப்டம்பர் 115 கேடயம் இதழில் சீர்திருத்தக் கோரிக்கை என்ற அளவுக்கு மண்டல் அறிக்கையை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல வாதங்களை எழுதியிருந்தது. 90 அக்டோர் 115 கேடயம் இதழில், அதற்கு மாறான வாதங்களை வைத்து இன்றைய பிற்போக்கான சமூக அமைப்பில் இத்தகைய முன்னுரிமைகள் உண்மையிலேயே நசுக்கப்பட்டவர்களுக்கானதாக அமையாது; அப்படி அமைவது புரட்சிகர அரசின் கீழ்தான் சாத்தியம் என்று எழுதியது. இந்தச் சந்தர்ப்பவாதத்தைத் தகுந்த மேற்கோள்களுடன் ஒப்பிட்டு புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது. இதை நேர்மையோடு ஒப்புக் கொள்வதற்கு பதில், தனது நிலைப்பாட்டிற்கு முரணாக முதல் கட்டுரையில் "சீர்திருத்தக் கோரிக்கை என்ற அளவுக்கு ஆதரிப்பதாக குறிப்பிட்டிருந்த தவறை வாசகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். ஆனால் பு.ஜ.வோ முதலாளித்துவ சீர்திருத்தங்களை அம்பலப்படுத்தி கேடயம் எழுதியுள்ளவற்றை மறைத்து அவதூறு செய்திருக்கிறது'' என்கின்றனர். புதிய ஜனநாயகம், கேடயத்தின் சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்திய பிறகுதான், அதற்குப் பதில் சொல்லும் போதுதான் வாசகர்கள் சுட்டிக் காட்டியதாக கேடயம் எழுதியது.


பு.ஜ. எதையோ மறைத்து கேடயத்தின் மீது அவதூறு செய்து விட்டதாக எதிர்க் குற்றச்சாட்டு வைக்கிறது. இதுவும் பொய். கேடயத்தின் முதல் கட்டுரையில் மண்டல் கமிஷன் அறிக்கையை அம்பலப்படுத்தி விமர்சனப்படுத்தி எதுவும் இல்லை (இட ஒதுக்கீடுகளின் வரம்பு பயன்பாடு யாருக்கானது என்பது பற்றியும், தி.க., தி.மு.க. தலைமையிலான அரைப் பார்ப்பனர்களின் "சமூக நீதி' நிலைப்பாடு மீதான விமர்சனமும்தான் உள்ளன); மண்டல் கமிஷனுக்கு ஆதரவாக மட்டுமே உள்ளது. கேடயத்தின் இரண்டாவது கட்டுரையில் மண்டல் கமிஷன் அறிக்கை பற்றிய விமர்சனங்கள்தான் உள்ளன. (கூடவே அதை எதிர்ப்பவர்களையும் சாடுகிறது); மண்டல் கமிஷன் அறிக்கையை சீர்திருத்தம் என்ற அளவுக்கு ஆதரிப்பதாகவும் இல்லை. இந்த முரண்பாட்டை, சந்தர்ப்பவாதத்தைத்தான் பு.ஜ. சுட்டிக் காட்டியது. ஆனால், கேடயம் வாசகர்கள் சுட்டிக் காட்டியதாகக் கூறப்படுவது வேறொன்று. கேடயத்தின் நிலைப்பாட்டிற்கு முரணாக மண்டல் கமிஷன் அறிக்கையை சீர்திருத்தம் என்ற அளவுக்கு முதல் கட்டுரையில் ஓரிடத்தில் குறிப்பிடுவது தவறு என்கிறார்கள்! அப்படியானால் சீர்திருத்தம் என்ற அளவுக்குக் கூட கேடயம் அதை ஏற்கவில்லையா? கேடயத்தின் நிலைப்பாடு என அவர்கள் "மீண்டும்' தொகுத்து எழுதியிருப்பது மேலும் சந்தர்ப்பவாதமாகத்தான் உள்ளது. "இட ஒதுக்கீடு போன்ற முதலாளித்துவ சீர்திருத்த நடவடிக்கைகளை சமூகப் புரட்சி என சித்தரிக்கும் சீர்திருத்தவாதிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பது இட ஒதுக்கீடு போன்ற முதலாளித்துவ சீர்திருத்த நடவடிக்கைகளைக் கூட அனுமதிக்க மறுக்கும் பிற்போக்கு சக்திகளை எதிர்த்து முறியடிப்பது.'' இதுதான் கேடயத்தின் நிலைப்பாடு (90 நவம். 1630 கேடயம், பக்.17) இதில் கூட இட ஒதுக்கீடு மண்டல் கமிஷன் அறிக்கையை சமூகப் புரட்சி எனச் சித்தரிப்பவர்கள், அதை அனுமதிக்க மறுப்பவர்கள் ஆகிய இரண்டு சக்திகளிடம் கேடயத்தின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதுதான் உள்ளது. அதாவது, இட ஒதுக்கீடு மண்டல் கமிஷன் ஒரு சீர்திருத்தக் கோரிக்கை என்ற அளவுக்கு ஆதரிப்பதாக எழுதியதும் தவறு என்கிறது; ஆனால், அது பார்ப்பன சத்திரிய வைசிய ஏகபோகத்துக்கு எதிரானதாக, அதைப் பலவீனப்படுத்துவதாக, நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களுக்கு எதிரானதாக உள்ள அதன் போராட்ட அம்சத்தை அங்கீகரிக்கிறது.


கேடயத்தின் மேற்கண்ட சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்தும் புதிய ஜனநாயகத்தின் மீது அது அவதூறு செய்கிறது. முதலாளித்துவ சீர்திருத்தமாகிய இட ஒதுக்கீட்டை மேல் சாதி சண்டை எனக் கூறுவதன் மூலம் பார்ப்பனரையும் சூத்திரரையும் சரிசமமாக்குகிறோமாம்! சங்கராச்சாரியின் கருத்தைப் பிரச்சாரம் செய்கிறோமாம்! சாதி அடிப்படையில் முன்னுரிமைகள் தரப்படக்கூடாது; பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதுதான் பா.ஜ.க. காங்கிரசு, சங்கராச்சாரி நிலைப்பாடு. இதையும், இதற்குக் காரணமாக அவர்கள் கூறுவதையும் பு.ஜ. எதிர்த்து அம்பலப்படுத்தி வருகிறது.


மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி இந்தியா முழுவதும் 4378 சாதிகள், தமிழ்நாட்டில் 256 சாதிகள் பிற்பட்டவை; இவை 3000 ஆண்டுகளாக சொத்துரிமை, மத உரிமை, கல்வி உரிமை மறுக்கப்பட்டு சமூக ரீதியில் அடக்கி ஒடுக்கப்பட்டதால் பின்தங்கியவை எனக் கூறப்படுகிறது. தேசிய முன்னணி "இடது' சாரி கூட்டணி கட்சிகளும் அதன் ஆதரவு இயக்கங்கள் மட்டுமல்ல; கேடயம், முன்னோடி போன்றவர்களும் இதை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். பார்ப்பனர், தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் தவிர அனைவருமே சூத்திரர்கள் தன் என்பது தி.க.வின் நிலைப்பாடாக இருக்கையில் கேடயம், முன்னோடி குழுக்களோ மேற்படி சாதிகளுக்குள்ளாகவே பொருளாதார ரீதியில் வர்க்க ரீதியில் பின் தங்கியவர்களே உண்மையாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கின்றன. இந்த நிலைப்பாடுகளில் இருந்து நாம் மாறுபடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. என்ன மாறுபாடு என்பதை அங்கீகரிக்காது சங்கராச்சாரி, காங்கிரசு, பா.ஜ.க. நிலைப்பாடு என்றும், இட ஒதுக்கீடு எதிர்ப்பு பார்ப்பன நிலைப்பாடுகள் என்றும் இவர்கள் அனைவரும் நம்மீது முத்திரை குத்துகின்றனர்.


முதலாவதாக, பிற்படுத்தப்பட்டவை என்று வரையறுப்பதற்காக மண்டல் கமிஷனே வகுத்துக் கொண்ட 11 அம்சங்கள் அதன் பட்டியலில் உள்ள 4378 சாதிகளுக்கும் எவ்வாறு பொருந்துகின்றன என்பதற்கான ஆதாரமோ, ஆவணமோ மண்டல் கமிஷனிடமே கிடையாது. இரண்டாவதாக, இந்த 4378 சாதிகளும் 3000 ஆண்டுகளாக சமூக ரீதியில் அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திர வருண வழி வந்த சாதிகள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமோ, வாதமோ எதுவுமே மண்டல் கமிஷனிடமும், அதன் பட்டியலை ஏற்றுக் கொண்ட மேற்படி அமைப்புகளிடமும் கிடையவே கிடையாது! தான்தோன்றித்தனமாகவும், மொட்டையாகவும், திடலடியாகவும் தீர்மானிக்கப்பட்டவைதாம். மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள் என்று கூறிக் கொள்ளும் கேடயம், முன்னோடி போன்ற குழுக்களும் திராவிடக் கட்சிகளும் மண்டலின் மேற்கண்ட முடிவைக் குருட்டுத்தனமாக ஏற்றுக் கொண்டுள்ளன.


இதற்கு மாறாக, மண்டல் பட்டியலில் உள்ள 4378 சாதிகளில் கணிசமான எண்ணிக்கையிலானவை சத்திரிய, வைசிய வழிவந்தவை. உதாரணமாக வேளாள கவுண்டர், மறவர், அகமுடையார், வன்னியர், துளுவ சோழிய வேளாளர், சில செட்டியார் சாதிகள்; சூத்திரர்களுக்கான வரையறுப்புகளாக பெரியார், அம்பேத்கார் மற்றும் பிற சமூக ஆய்வாளர்கள் தொகுத்துள்ளவை இந்த சாதிகளுக்குப் பொருந்தவே பொருந்தாது. அதாவது, இந்த சாதிகள் 3000 ஆண்டுகளாக சொத்துரிமை, மதஉரிமை, கல்வி உரிமை மறுக்கப்பட்டு சமூக ரீதியில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள், அதனால்தான் பின்தங்கிப் போய் விட்டார்கள் என்பதற்கான எவ்வித ஆதாரமும் யாராலும் தரப்படவில்லை. ஆனால், பார்ப்பனர்கள் மற்றும் பிற முற்பட்ட சாதிகளுடன் சேர்ந்து கொண்டு உண்மையில் சூத்திர வழிவந்த சாதிகளையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மேற்படி சாதியினர் ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கி வருவதை இன்னமும் பார்க்கிறோம். இந்தச் சாதிகளில் நிலமற்ற கூலி, ஏழை, நடுத்தர விவசாயிகள் பெரும்பான்மையினராக இருந்தாலும், இச்சாதிகள் சமூக ரீதியில் ஒடுக்கப்படுவதாகக் கூற முடியாது. சமூக ரீதியில் ஒடுக்குமுறை சாதிகளான இவை அரசியல் சமூக செல்வாக்கை வைத்துக் கொண்டு தாமும் பின்தங்கிய சாதிகள் என்று கூறி இட ஒதுக்கீடு பெறுவதோடு, அதிலும் மிகமிகப் பெரும்பான்மையை சுருட்டிக் கொண்டு உண்மையில் சூத்திர சாதிகள் மீது மேலும் ஆதிக்கம் செலுத்துகினறன.


பார்ப்பனர், பஞ்சமர் தவிர அனைவரும் சூத்திரர்தாம் என்கிற நாடகமாடி வேளாள சாதிகள், நாயுடு, ரெட்டி, செட்டியார் சாதிகள் பதவி அதிகார வேட்டையில் பார்ப்பனரோடு மோதியதை திராவிட நீதிக்கட்சி இயக்கங்கள் முன்பு நியாயப்படுத்தின. இதையே வொக்கலிகா, லிங்காயத்து சாதிகள் கர்நாடகாவிலும், மராத்தா சாதியினர் மராட்டியத்திலும் செய்தனர். இச்சாதிகளில் சிலவும், மண்டல் அறிக்கையில் உள்ள சத்திரிய வைசிய சாதிகளில் சிலவும், தாமும் பிற்பட்டோர் பட்டியலில் சேரத் துடிக்கும் சாதிகளில் சிலவும் சேர்ந்து கொண்டு பிற மேல்சாதிகளான பார்ப்பன பனியாக்களோடு மோதுகின்றன. தமது பலத்தைக் கூட்டிக் கொண்டு ஆதாயம் தேடுவதற்காக மட்டுமே உண்மையில் சூத்திர வருண வழிவந்த சாதிகளையும் சேர்த்துக் கொள்கின்றன. ஆகவேதான், இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும் மேல் சாதிகளுக்கிடையிலான சண்டை என்று நாம் கூறுகிறோம். இட ஒதுக்கீடு மண்டல் விவகாரத்தில் நாம் எழுப்பும் அடிப்படையான கேள்வி யார் சூத்திரன் என்பதுதான்! நம்மீது முத்திரை குத்தத் துடிக்கும் எவருமே இந்தக் கேள்விக்கு விடை கூறவில்லை; நழுவி விடவே முயலுகிறார்கள்!


இட ஒதுக்கீடு மண்டல் அமலாக்கம் என்பது அதிகாரப் பங்கீட்டிற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் சண்டை மட்டுமின்றி, அதன் சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தவும் (அரசு எந்திரத்தைப் பலப்படுத்தவும்) கொண்டு வரப்படும் சீர்திருத்தமாகும். பு.ஜ.வின் இந்தக் கருத்தை மறுக்க முடியாத கேடயம் கும்பல், இவ்வாறு கருதுவது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் நாம் மறுப்பதாகிறது என்று அவதூறு செய்கிறது. சூத்திர, பஞ்சம சாதிகளைத் தவிர மற்ற பிற சாதியினருக்கு ஏற்öகனவே சமூக அதிகாரம் உள்ளது; இத்துடன் இட ஒதுக்கீட்டின் மூலம் அச்சாதிகள் அரசியல் அதிகாரத்தையும் பெற்று சூத்திர, பஞ்சம சாதியினரை ஒடுக்குவர்; அதற்கு மாறாக, சமூக ரீதியில் ஏற்கெனவே ஒடுக்கப்படும் சூத்திர, பஞ்சம சாதியினர் முன்னுரிமை பெறுவதால், அதாவது இட ஒதுக்கீடு மூலம் கல்வி, வேலை வாய்ப்புகள் பெறுவதால் அவர்களும் ஒடுக்கும் நிலைக்கு உயர்ந்துவிட முடியாது; ஆகவே, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் நமது நிலைப்பாடு. இது, இட ஒதுக்கீடு மண்டல் அமலாக்கத்தின் துணை விளைவுதான் என்கிறோம். ஆனால், பிரதான விளைவு முதலில் சொன்னதுதான். உதாரணமாக, 1969இல் 14 பெரிய வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன. தனியார் தரகு ஏகபோக முதலாளிகளிடமிருந்து பெரிய வங்கிகளைக் கைப்பற்றி அரசு அதிகார வர்க்க ஏகபோகத்திடம் ஒப்படைப்பதன் மூலம் மூலதன ஒன்றுகுவிப்புதான் அதன் பிரதான நோக்கம். ஆனால், அதன் துணை விளைவாக கூடை முடைவது, கயிறு நூற்பது, தறிநெய்வது, செருப்புத் தைப்பது ஆகியவற்றுக்குக் கூட, சந்தையை விரிவாக்கும் நோக்குடன் கடனளிக்கப்பட்டது. இச்சிறுதொழிற் கடன்களைப் பயன்படுத்துவதை நாம் எதிர்ப்பதில்லை. அதேசமயம், வங்கிகளை அரசுடைமையாக்கியது முற்போக்கானதென்றும் வரவேற்கவில்லை. மேற்படி நோக்கத்தை அம்பலப்படுத்துவதுதான் நமது கடமை. இப்படிப்பட்ட எதிர்மறையான அணுகுமுறையைத்தான் இட ஒதுக்கீடு மண்டல் அமலாக்கத்திலும் நாம் மேற்கொண்டுள்ளோம்.


அயோத்தி விவகாரத்தில், பாபரி மசூதி உள்ள இடம்தான் ராமஜென்ம பூமி என்பதும், அங்கு ராமன் கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதும் அப்பட்டமான பொய்; ஆதாரமற்றது. எனவே, முசுலீம்களுக்குச் சொந்தமான மசூதியை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கூறியதில்லை. ஆனால், நாம் அப்படிக் கூறுவதாகக் கேடயம் இட்டுக் கட்டி அவதூறு செய்கிறது.


"அயோத்தியில் பிரச்சினைக்குள்ளான பகுதியை இந்து முசுலீம் ஒற்றுமையின் தேசிய சின்னமாக்குவதே சிறந்த தீர்மாக அமையுமென்பதை நாடெங்குமுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வலியுறுத்துகின்றன'' என்றுவேறு கேடயம் கும்பல் புளுகுகிறது. அகில இந்திய புரட்சிகரப் பண்பாட்டுக் கழகத்தில் பங்கேற்கும் புரட்சிக் குழுக்கள் அனைத்தும் "பாபரி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இக்கழகத்தில் பங்கேற்காத கேடயம் கும்பல் உட்பட பிற குழுக்கள், ஓரிரு மாதங்களுக்கு முன்பு டில்லியில் வகுப்புவாத எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தின. அதிலும் "பிரச்சினைக்குள்ளான பகுதியை'' தேசியச் சின்னமாக்கும்படி கோராமல் பொதுவான "தீர்மானமே'' நிறைவேற்றப்பட்டது. அதாவது ஒத்தகருத்து தீர்மானம் எதையும் அக்குழுக்கள் நிறைவேற்ற முடியவில்லை. அப்படி இருக்கும்போது "நாடெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகள்'' இக்கருத்தையே வலியுறுத்துவதாகக் கேடயம் எழுதுகிறது. இனி, எது உண்மை என வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள முடியும்.


(115 ஜூன் 1991 இதழில் வெளியான கேள்விபதில் பகுதியிலிருந்து)