Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 மேலும், ஒரு பிரச்சினையில் மார்க்சிய லெனினியவாதிகள் நடுநிலைமை வகிக்க முடியுமா? (சாருமஜும்தாரின் மேற்கோள்: "நாம் யார் பக்கம்? யார் பக்கம் இல்லை? நாம் வறுமையிலுள்ள நிலமற்ற விவசாயிகள் பக்கம்தான். சிறுவிவசாயிகளுக்கும் நிலமற்ற விவசாயிகளுக்கும் இடையிலான நலன்களில் மோதல்கள் உருவாகும்போது, கட்டாயமாக நிலமற்ற விவசாயிகளின் பக்கம் நிற்க வேண்டும். ஆனால், சிறு விவசாயிகளுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் இடையிலான நலன்களில் மோதல்கள் உருவாகும்போது, நாம் சிறு விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டும்''). மஜும்தாரின் கூற்றுப்படி பார்ப்பனர்களுக்கும் இடைச் சாதியினருக்கும் இடையே நடக்கும் சண்டையில் நாம் இடைச் சாதியினரை ஆதரிக்க வேண்டும் அல்லவா?
விஜயக்குமார், பம்பாய்.


வாசகர் குறிப்பிடுவதைப் போல இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் இந்தச் சண்டையில் நமது நிலைப்பாட்டை "நடுநிலை'' என்று எடுத்துக் கொள்வது சரியாகாது. உலக நாடுகளைப் பங்கீடு மறுபங்கீடு செய்வதற்காக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலே நடக்கும் சண்டையில் போர்களில் எந்தத் தரப்பையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியாது. ஏகாதிபத்திய அரசுகளுள் எது கூடுதலான நாடுகளை ஏற்கெனவே பிடித்துள்ளது, எது முதலில் தாக்குதலைத் தொடுக்கிறது என்றும், எது குறைவான நாடுகளை வைத்திருக்கிறது, எது தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறது என்றும் பாகுபடுத்தி, பிந்தியதை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அப்படி ஏகாதிபத்தியங்களுக்குள் போர் மூளும்போது அதை உள்நாட்டுப் போராக மாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முயல வேண்டும் என்கிறார் லெனின். இவ்வாறு நிலைப்பாடு எடுப்பது நடுநிலையாகுமா? இரண்டு தரப்புகளையும் நிராகரித்து, எதிர்த்து நின்று மூன்றாவது ஒரு நிலை எடுப்பதாகாதா?


இன்னொரு உதாரணம். இப்போது நடக்கும் வளைகுடா நாடுகளின் பிரச்சினையில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு ஏகாதிபத்தியங்கள் ஒரு அணியாகவும், ஈராக் ஒரு அணியாகவும் நின்று மோதுகின்றன. ஒன்று, உலக மேலாதிக்க ஆக்கிரமிப்பு சக்தி; இன்னொன்று, பிராந்திய மேலாதிக்க ஆக்கிரமிப்பு சக்தி. இதில் இடைநிலைச் சக்தி குறைந்த அடாவடிக்காரன் என்று எதையாவது ஆதரிக்க முடியுமா? இல்லை என்றால் நடுநிலை வகிப்பதாகுமா?


இங்கேயே ஒரு உதாரணம். பஞ்சாபில் அரசு பயங்கரவாதம், சீக்கிய மதவெறி பயங்கரவாதம்இரண்டுக்கும் இடையிலான சண்டை நடக்கிறது. இரண்டினாலும் "அப்பாவி' பஞ்சாப் மக்கள் பலர் கொல்லப்படுகின்றனர். அதேசமயம் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை ஆதரிக்க முடியுமா?


முடியாது; இரண்டுமே எதிர்த்து முறியடிக்க வேண்டிய சக்திகள் என்று நாம்தான் ஆரம்பத்திலிருந்தே எழுதி வருகிறோம். அரசு பயங்கரவாதம் தான் கொடியது; நவீன ஆயுதங்கள், அதிகார பலம் வாய்ந்தது; அதை எதிர்த்துக் கிளம்பிய மதவெறி பயங்கரவாதம் ஒப்பீட்டு ரீதியில் பலவீனமானது என்றும் பாதிக்கப்படும் மக்கள் சார்பாக அவர்கள் ஆதரவு பெற்றது என்றும், தேசிய இனப்பிரச்சினை, தேசிய இனவிடுதலை சக்தி என்றும் கூறி சில குழுக்கள் ஆதரவு தெரிவித்தன; இன்னும் கூட சில குழுக்கள் சீக்கிய மதவெறி பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. ஆனால், எது சரியானது என்று நிரூபிக்கப்பட்டது? ஆகவே, இரண்டு ஆதிக்க சக்திகள் தமது நலன்களுக்காக மோதிக் கொள்ளும்போது ஏதாவது ஒன்றை ஆதரிப்பது சரியானதும் ஆகாது! அவற்றில் எதையும் ஆதரிக்கக் கூடாது என்பது நடுநிலையும் ஆகாது!


தற்போதைய மக்கள் விரோத, தேசவிரோத, ஜனநாயக விரோத அரசு எந்திரம் முழுவதையும் ஒரு வன்முறைப் புரட்சியின் மூலம் அடித்து நொறுக்கித் தூக்கி எறிவதற்காகவே மார்க்சிய லெனினியவாதிகளாகிய நாம் நாளும் பாடுபடுகிறோம். அரசு எந்திரம் என்பது ஆட்சியைக் கைப்பற்றுபவர்கள் தமக்குக் கிடைத்த வெற்றியின் சன்மானங்களாகக் கருதி அரசு பதவிகளைத் தம்மிடையே பகிர்ந்து கொள்கின்றனர்; நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கத்தினரின் மிகப்பெரிய பதவி வேட்டைக்கான தளமாக விளங்கும் அரசு எந்திரம் தனி ஒரு "சாதி'யாக வளர்க்கப்பட்டு, ஊதிப் பெருக்கப்பட்டு புரட்சியின் தாக்குதலுக்கான தனிப்பெரும் இலக்காகிறது, என்கிறது அரசு பற்றிய மார்க்சியம். இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல.


இன்றைய இந்தியாவில் அரசு ஆதிக்கத்தின் தனிப்பெரும் "சாதி'யாக பார்ப்பனர், முதலியார், பிள்ளைமார், மறவர், கயஸ்தாஸ், ராஜபுத்திரர் போன்ற மேல்சாதியினர் இருக்கின்றனர். இதை நாம் மறுப்பதில்லை என்பது மட்டுமல்ல, அரசு அதிகாரத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலவுவதை நேரடியாகக் குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டி ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவது, மார்க்சிய லெனினிய குழுக்களுக்குள்ளேயே நாம் மட்டும்தான். பிறகுதான் மற்ற பிற குழுக்கள் இதைப் பின்பற்றின. அதோடு அரசு ஆதிக்கத்தில் இருப்பவர்களின் லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள்,அக்கிரமம் அட்டூழியங்களை சமரசமின்றி எதிர்த்து போராடி வருகிறோம். இவர்களின் இந்தக் குற்றங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும், திருத்த முடியும் என்றா நாம் போராடி வருகிறோம்? இவர்கள் திருந்தவே மாட்டார்கள், திருத்தவே முடியாது; தூக்கி எறிய வேண்டியவர்கள்; அதாவது, புரட்சியின் எதிரிகள் என்றுதானே போராடுகிறோம்.


ஆகவே புரட்சியின் தனிப்பெரும் எதிரியாக, இலக்காக அரசு எந்திரத்தைக் கருதிப் போராடுகிறோம் என்றால், அதில் ஆதிக்கம் வகிக்கும் மேற்கண்ட மேல்சாதியினர் அனைவரையும் தூக்கி எறிவதற்காகத்தான் அவ்வாறு செய்கிறோம். அப்படி இருக்கும்போது அரசுப் பணியில் மேலாதிக்கம் செலுத்தி வரும் மேல்சாதியினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த எப்படி நாம் அனுமதிப்பது போன்றதாகும்? அதேசமயம் பிற மேல்சாதி மேட்டுக் குடிக்கான இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுபவர்களின் கோரிக்கை என்ன? புரட்சியின், தனிப்பெரும் எதிரியாக, இலக்காகிய அரசு எந்திரத்தில் தனக்குரிய பங்கைக் கோருவது தானே! அதாவது லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், அக்கிர அட்டூழியங்களில் ஈடுபட்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையிட்டு அடக்கி ஒடுக்கும் அரசு அதிகாரத்தில் பார்ப்பன பனியா சாதிகள் மட்டும் ஆதிக்கம் வகிப்பதா? அவற்றிலே எங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதுதானே!


பிற மேல்சாதி, மேட்டுக்குடிக்கான இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுபவர்கள் தமது கவனத்தை எங்கே குவிக்கிறார்கள் பாருங்கள். மந்திரிகள், உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்; பொதுத்துறைத் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், அரசு முதல்நிலை அதிகாரிகள் இந்தப் பதவிகளுக்குத் தமது சாதியினரின் நியமனங்களிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் வாதிடுவது போல கல்வி மற்றும் வாழ்வுக்கான வேலை வாய்ப்புதான் கோரிக்கை என்றால் அடிப்படைக் கல்வியை கட்டாயமாக்குவது, பல்கலைக் கழகக் கல்வியை இலவசமாக்குவது, வேலை தருவதை அடிப்படை உரிமையாக்குவது என்பதற்காக அல்லவா போராட வேண்டும்? அவ்வாறின்றி புரட்சியின் தனிப்பெரும் எதிரியாகிய அரசு எந்திரத்தில் பங்கு கோரிப் போராடுபவர்கள், அதை எதிர்த்துத் தூக்கி எறியப் போராடும் நம்மை பார்ப்பன பனியா கைக்கூலிகள் என்று ஏசுகின்றனர்.


அடுத்து, இட ஒதுக்கீடு பற்றி நமது நிலைப்பாட்டைப் பலமுறை எழுதியுள்ளோம். அது ஒரு சீர்திருத்தம். ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறை, சுரண்டல் நீடிப்பதற்காக, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தனது சமூக அடித்தள ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காகச் செய்யப்படும் நில உச்சவரம்பு, சத்துணவு, தீண்டாமை "சதி'' ஒழிப்புச் சட்டங்கள் போன்று, இட ஒதுக்கீடு என்பதும் சீர்திருத்தம். ஆட்சியாளர்கள் கூறிக் கொள்வதைப் போல சமூக நீதியோ, சமூக புரட்சியோ, வகுப்புரிமையோ கிடையாது. இட ஒதுக்கீடு போன்ற முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு நாம் எதிரானவர்கள் அல்ல; அதேசமயம் இத்தகைய சீர்திருத்தங்களால் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுவிடும் என்கிற வாதத்தை, மாய்மாலத்தை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போராடுகிறோம். அரசாங்கம் ஏதாவது ஒரு சீர்திருத்தத்தை எப்போதும் கொண்டு வரும் (ஆளும் வர்க்கங்கள் இதை மகிழ்வுடனே செய்வார்கள் என்கிறார் லெனின்). அவற்றில் முற்போக்கு அம்சங்களைத் தேடி வலியுறுத்துவதும், மேலும் கூடுதலான சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதும், இதையே வேலைமுறையாகக் கொள்வதும் பாட்டாளிகள் வர்க்க அமைப்பை சீர்திருத்தக் கட்சியாக சீரழித்துவிடும். இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளும், முன்பு "இடது' சந்தர்ப்பவாதம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது வலது திரிபுவாதச் சகதிக்குள் வீழ்ந்து விட்ட போலிப் புரட்சிக் குழுக்களும் இப்படித்தான் சீரழிந்து போயின.


இப்போது பார்ப்பன மற்றும் பிற மேல்சாதிகளுக்கு எதிரான இட ஒதுக்கீடு கோரும் சாதிகள் அனைத்தையும் இடைநிலைச் சாதிகளாகக் கருதி ஆதரிக்க முடியாது. மிகவும் பிற்பட்ட, பிற்பட்ட சாதிகள் என்று கூறப்படும் சாதிகளில் கூலிஏழை விவசாயிகள் முதல் நிலப்பிரபுக்கள் வரை எல்லா வர்க்கத்தினரும் உள்ளனர். உதாரணமாக, தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள கள்ளர், வன்னியர், வெள்ளாளக் கவுண்டர் சாதிகளைப் பாருங்கள். இவற்றிலே பெரும்பான்மையோர் கூலி, ஏழை, நடுத்தர விவசாயிகள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதே சாதிகளின் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள்தான் தாழ்த்தப்பட்ட மக்களோடு தமது சாதி கூலிஏழை விவசாயிகளையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டுகின்றனர். இருந்த போதும் இவ்வாறு பொருளாதார ரீதியிலும் வர்க்க ரீதியிலும் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது; பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளில் உள்ள அனைவரும் சூத்திரர்களாக நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கல்வி ரீதியிலும் சமூக ரீதியிலும் பிற்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான் மண்டல் கமிஷன் மற்றும் அதன் ஆதரவு போராட்டக்காரர்களின் வாதம்.


இது உண்மையா? பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளின் கூலி ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டபழங்குடி மக்கள் ஆகிய நமது நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கல்வி ரீதியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கி, அடக்கி ஒடுக்கப்பட்டிருப்பதால் ஆதாயம் அடைபவர்கள் அந்த நிலைமையைப் பாதுகாத்து வருபவர்கள் முற்பட்ட சாதியினர் மட்டுமா? பிற்பட்ட மிகவும் பிற்பட்ட சாதிகளின் நிலப்பிரபுக்கள்பணக்கார விவசாயிகள் இந்த நிலையைக் காத்து வருவதோடு ஆதாயம் அடைவதில்லையா? குறிப்பாக, சமூக ரீதியிலான பின்தங்கிய நிலை என்றால் என்ன? கல்வி உரிமை, சொத்துரிமை, சமூக உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதுதானே! முற்பட்ட சாதிகள் மட்டுமல்ல, அவர்களின் சார்பாகவும் நின்று இத்தகைய சமூக ஒடுக்குமுறையை மூர்க்கமாக, காட்டுமிராண்டித்தனமான வெறியோடு கட்டவிழ்த்து விடுபவர்கள் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளின் நிலப்பிரபுக்கள் பணக்கார விவசாயிகள்தான்.
இவ்வாறு சமூக ஒடுக்குமுறையில் முன்னணியில் நிற்பவர்களே சமூக ஒடுக்குமுறைக்குப் பலியானவர்களாகவும் சமூக ரீதியில் பிற்பட்டவர்களாகவும் கூறிக் கொண்டு இட ஒதுக்கீடு உரிமை கோருகின்றனர். எதற்காக? சமூக ஆதிக்கத்தோடு, மேலும் மேலும் அரசியல் ஆதிக்கம் பெறுவதற்காகத்தான்! ஒரு உதாரணம் சொல்வோம். கிராமப்புறத்தில் நிலப்பிரபுவாகவோ, பணக்கார விவசாயியாகவோ இருப்பவன் உழைக்கும் மக்களை உயிரோடு கொளுத்துவான், வெட்டிப் போடுவான்; அதற்கு வலுக்கூட்டும் வகையிலே "நம்ம ஆள் கலெக்டராக இருக்கார், சூப்பிரண்டெண்டா இருக்கார்' என்று சமூகப் பிற்பட்ட நிலைமையைக் காட்டி இட ஒதுக்கீடு பெற்ற அதிகாரியின் பலத்தையும் சேர்த்துக் கொள்வான்.


இதையே வேறு மாதிரிக் கேட்கிறோம். சமூக ஒடுக்குமுறை, சமூக ரீதியில் பிற்பட்ட நிலையைக் காட்டி இட ஒதுக்கீடு பெறும் சாதிகள்நபர்கள் இன்னொரு சாதியை இன்னொரு நபரை சமூக ஒடுக்குமுறை செய்ய மாட்டோம் என்று உத்திரவாதம் தர முடியுமா? பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளின் உழைக்கும் மக்களே கூட வர்க்க ரீதியில் திரட்டப்படும்போது தான் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி மக்களுடன் சேர்ந்து போராடுகிறார்கள். கூலிஏழை விவசாயிகளே கூட சாதி உணர்வில், சாதிய ரீதியில் திரட்டப்படும்போது அவர்களுக்கு எதிராக இவர்களே சமூக ஒடுக்குமுறைச் சக்திகளாக நிற்கின்றனர்; சாதிய ரீதியில் திரட்டப்பட்டு பிற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து நின்று போராடியதாக வரலாறோ, அனுபவமோ கிடையவே கிடையாது; அப்படியே இருந்தாலும் வேறு மதச் சிறுபான்மையினருக்கு எதிராகவே இணைந்து நின்றிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? தீண்டாமை போன்ற "சூத்திர, சண்டாள' வர்ணங்களுக்குரிய சமூகக் கொடுமைகள் கூலிஏழை விவசாயிகளாக இருந்தாலும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகள் அனைத்திற்கும் இருப்பதாகக் கூற முடியாது. எனவேதான் இவர்களுக்கும் மேல் சாதி என்கிற சாதி வெறியூட்டித் தேவையான போது தாழ்த்தப்பட்ட மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகளால் இவர்களைத் திரட்டிக் கொள்ள முடிகிறது. அதே மாதிரித்தான் இப்போது சாதிவெறியூட்டி மற்றபிற மேல்சாதிகளுக்குப் போட்டியாக அரசியல் அதிகாரத்தில் பங்கு கோரி இட ஒதுக்கீடு சண்டைக்கும் இவர்களைப் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதி நிலப்பிரபுக்களும்பணக்கார விவசாயிகளும் பிறமேட்டுக் குடியினரும் திரட்டிக் கொண்டுள்ளனர். எனவேதான் இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் ஆதரித்தும் நடக்கும் இந்தச் சண்டையில் எதையும் ஆதரிக்க முடியாது என்கிறோம்.


(1630 செப்டம்பர் 1990 இதழில் வெளியான கேள்விபதில் பகுதியிலிருந்து)