Language Selection

மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்று கல்வியிலும் சமூகத்திலும் பின்தங்கி விட்ட பிற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்வதாக தேசிய முன்னணி அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இட ஒதுக்கீடு எதிர்ப்பு கிளர்ச்சிகள் வட மாநிலங்களில் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. அரசு கட்டிடங்கள், ரயில் நிலையங்கள், போக்குவரத்து வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன.

டெல்லியில் பந்த், பாட்னாவில் சாலைமறியல், வாகன எரிப்பு, லக்னோவில் ரயில் மறியல், பட்டங்களைக் கொளுத்துவது, பிரதமர் வி.பி.சிங்கின் கொடும்பாவி எரிப்பு என்று மாணவர்கள் கலவரங்களில் இறங்கியுள்ளனர். இட ஒதுக்கீடு எதிர்ப்பு கிளர்ச்சி தீவிரமானதும் ஆகஸ்ட் இறுதியிலிருந்து ஒரு மாத காலத்துக்கு டெல்லியில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அரசு எதிர்ப்பு போராட்டமாகத் தொடங்கி ஆந்திரா வரை பரவியுள்ள இக்கிளர்ச்சி சாதிக் கலவரமாக வெடித்துப் பரவும் அபாயம் நீடிக்கிறது.


ஓட்டுக் கட்சிகளின் ஆதரவு! பத்திரிகைகளின் தலைமை!


அம்பேத்கார் நூற்றாண்டு விழா கொண்டாடும் சமூகநீதி ஆண்டின் பெருஞ்சிறப்பான நடவடிக்கை என்று அனைத்து ஓட்டுக் கட்சிகளும் அரசின் இட ஒதுக்கீட்டு முடிவை ஆதரிக்கும் அதேசமயம், காங்கிரசு, ஜனதாதளம், பாரதிய ஜனதா கட்சிகளிலுள்ள பார்ப்பன மேல்சாதி வெறியர்கள் பின்னாலிருந்து கொண்டு இக்கலவரத்தைத் தூண்டிவிடுகின்றனர். பார்ப்பனமேல்சாதி வெறியர்கள் பின்னாலிருந்து கொண்டு தூண்டிவிடும் இக்கிளர்ச்சிக்கு பார்ப்பன பத்திரிக்கைகள் இன்று தலைமையேற்று நடத்துகின்றன. இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் நாளேடுகளின் பார்ப்பன கும்பலும் குறிப்பாக எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ஆசிரியரான அருண்ஷோரியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நெருப்பைக் கக்குகின்றனர். எங்காவது விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தால் வன்முறையானது, தேச விரோதமானது என்று கூச்சல் போடும் இக்காந்தியக் கும்பல், இன்று மேல்சாதி மாணவர்களைப் பார்த்து, இட ஒதுக்கீடு எதிர்ப்பு "போராட்டத் தீயில்' குதிக்குமாறு உசுப்பி விடுகிறது. "பாரதிய ஜனதா, மார்க்சிஸ்டு கட்சிகளின் மாணவர் அமைப்புகளான ஏ.பி.வி.பி; எஸ்.எப்.ஐ. ஆகியன இப்போராட்டத்தில் இறங்குவதில் இன்னும் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டு தூண்டுகின்றனர். "நாட்டைப் பேரழிவில் இருந்து காப்பாற்ற'' மாணவர்களும் மற்றவர்களும் இக்கிளர்ச்சியை ஆதரித்து மேலும் ஆழமாக்கி பரப்புமாறு வெறியூட்டுகின்றனர்.


இட ஒதுக்கீட்டினால் சமூகநீதி பிறந்துவிடும் என்று நாம் ஏற்பவர்களல்ல. இது அரசு எந்திரத்தில் "சூத்திரர்'களைப் பங்கேற்ற வைத்து அரசு வன்முறையை நியாயப்படுத்துவதற்கான ஏற்பாடுதான். ஆனால், மண்டல்கமிஷன் பரிந்துரையின் ஒரு பகுதியை மட்டும் இப்போது அமுலாக்க முடிவு செய்த உடனேயே, தமது அதிகாரம் பறிக்கப்படும் ஆத்திரத்தில் பார்ப்பன மேல்சாதி வெறியர்கள் கலவரத்தைத் தூண்டுகின்றனர். மேல்சாதி அறிவுஜீவிகள் நியாயவாதங்களை அடுக்குகின்றனர்.


மேல்சாதியினர் "திறமை'சாலிகளா?


பிற்பட்டவர் என்ற காரணத்துக்காக தகுதியற்ற ஒருவரை அரசு நிர்வாகத்தில் நியமித்தால் நாடு குட்டிச்சுவராகி விடும் என்ற வாதத்தையே இவர்கள் பிரதானமாக முன்வைக்கின்றனர். அதாவது, "தகுதியும் திறமையும் இருந்தும்கூட, ஒருவர் முற்பட்டவர் என்பதால் புறக்கணித்துவிட்டு, இட ஒதுக்கீட்டின்படி திறமையற்ற ஒருவரை அரசு நிர்வாகத்தில் அமர்த்தினால் நிர்வாகம் சீர்குலையும்; ஊழலும் அராஜகமும் தலைவிரித்தாடத் தொடங்கிவிடும். தகுதியும் திறமையுமற்ற ஒருவர் ராணுவத் தளபதியாகிவிட்டால் நாட்டின் பாதுகாப்பு என்னவாகும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். இதை உணர்ந்துதான் நேருவே இட ஒதுக்கீட்டை எதிர்த்தார். இப்போதைய அரசு தகுதியற்றவர்களை அரசு நிர்வாகத்தில் புகுத்துவதோடு அவர்கள் தொடர்ந்து பதவி உயர்வு பெறவும் வாய்ப்பளித்துள்ளது. எனவே சாதியக் கண்ணோட்டத்தை விட்டு விட்டு நாட்டின் நலனை எண்ணிப் பார்த்து, இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து போராட முன்வரவேண்டும்'' என்று உபதேசிக்கின்றனர்.


பிற்பட்ட சாதியினர் அரசு நிர்வாகத்துக்கு தகுதியற்றவர்களா இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். தகுதியும் திறமையும் வாய்ந்த முற்பட்டவர்கள் அரசு அதிகாரத்தில் இருந்து கொண்டு இத்தனை நாளும் என்ன சாதித்தார்கள்? நாட்டை எதிர்திசையில் வழிநடத்திச் சென்றதோடு வறுமையும் வேலையின்மையும் தானே கண்ட பலன். திறமையாக லஞ்ச ஊழலைச் செய்ததைத் தவிர, திறமைமிக்க இந்த மேல்சாதி அதிகாரிகள் வேறென்ன சாதித்தார்கள்?


போபால் விஷவாயுப் படுகொலைக்குக் காரணமான ஏகாதிபத்தியக் கொலைகாரர்கள் எந்த ஆபத்துமின்றி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவிய தேசவிரோதிகள் யார்? திறமைமிக்க முற்பட்ட அதிகாரிகள் தானே!


தகுதி திறமையற்றவர்களை ராணுவ அதிகாரிகளாக நியமித்தால் நாட்டின் பாதுகாப்பு என்னவாகும் என்று பீதியூட்டும் அறிவாளிகளே, போபர்ஸ் பீரங்கி பேரத்திலும், ஹெச்.டி.டபிள்யூ. என்ற ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் பேரத்திலும் கோடிகோடியாய் கமிஷன் அடித்த தரகன் இந்துஜாவுக்கு இராணுவ அதிகாரிகளே உடந்தையாய் இருந்தார்களே, இதுதான் தகுதியா?


போபர்ஸ் பீரங்கி, இங்கிலாந்தின் வெஸ்ட்லாந்து ஹெலிகாப்டர், ஹெர்மஸ் போர்க்கப்பல், ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் முதலான காலாவதியான ஆயுதங்களையே கோடிக்கணக்கில் வாங்கி கமிஷன் கொள்ளையடித்து, தேசநலன்களை அடகுவைக்கும் இத்தகைய "தகுதியும் திறமையும் வாய்ந்த' ராணுவ அதிகாரிகளால்தான் உண்மையில் நாட்டுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. லஞ்சஊழல், அதிகார முறைகேடுகளாலும் தேசவிரோத நாசகார திட்டங்களாலும், நாட்டைச் சீர்குலைத்தது "திறமைமிக்க' மேல்சாதி அதிகாரிகள்தான் என்பதைத்தானே 40 ஆண்டுகால அனுபவம் காட்டுகிறது. இந்த லட்சணத்தில் தகுதியற்றவர்கள் அரசு பதவிகளுக்கு வந்தால் நாடு குட்டிச்சுவராகி விடும் என்று வாதிடுவது அவர்களது மேல்சாதி வெறியைத் தான் காட்டுகிறது.


சமத்துவம் பேசும் சாதிவெறியர்கள்


"தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை மூலம் மொத்தம் 55%60% அரசு பதவிகள் தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்படி தொடர்ந்து ஒதுக்கீட்டை அதிகரித்துக் கொண்டே போனால் என்னாவது? முன்பு தமது முன்னோர்கள் செய்த தவறுக்காக இப்போது முற்பட்ட மாணவர் இளைஞர்கள் ஏன் சிலுவையைச் சுமக்க வேண்டும்? சமத்துவமின்றி ஜனநாயகம் இருக்க முடியாது. ஆனால் இட ஒதுக்கீட்டின் மூலம் இந்தியர் என்ற சமத்துவ நிலை உடைந்து இன்ன சாதிக்காரர் என்ற நிலைமை வந்துவிட்டது. இது ஜனநாயகத்தையே சீரழிப்பதாகும்'' என்று பார்ப்பன மேல்சாதி வெறியர்கள் கூச்சலிடுகின்றனர்.


ஓட்டுப் பொறுக்கும் உத்தியோடு மேலும் மேலும் பிற்பட்டோர் சாதிப் பட்டியலை ஆட்சியாளர்கள் விரிவாக்குகின்றனர் என்பது உண்மைதான். இதன்மூலம் இட ஒதுக்கீட்டு முறையையே செல்லாக்காசாக்கி விட்டனர். ஆனால், முன்பு தமது முன்னோர்கள் கீழ்சாதியினரை அடக்கி தவறு செய்தனர் என்றும் இப்போது அப்படி எதுவுமே இல்லை என்பது போலவும் அப்பாவித்தனமாக வாதிடுவது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும். அரசு அதிகாரத்திலுள்ள பார்ப்பன மேல்சாதியினர் நடத்தும் அட்டூழியங்களை ஏராளமான சான்றுகளோடு நிரூபிக்க முடியும்.


பீகாரைச் சேர்ந்த கீலானந்த்ஜா என்ற பார்ப்பன சாதியைச் சேர்ந்த இளைஞர், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை 1979இல் கலப்பு மணம் செய்து அரசு வழங்கிய பியூன் வேலையைப் பெற்றார். கீழ்சாதியைச் சேர்ந்த பெண்ணை பார்ப்பனர் திருமணம் செய்த "குற்றத்திற்காக' பார்ப்பன மேல்சாதி அதிகாரிகள் அவருக்கு வேலை கொடுக்காமல் விரட்டியடித்தனர். மாநில முதல்வரிலிருந்து பிரதமர் வரை முறையிட்டும், தனது குடும்பத்துடன் டெல்லியில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தியும்கூட அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இது சமத்துவத்தையா காட்டுகிறது? சமத்துவமின்றி ஜனநாயகமில்லை என்று வாதிடும் கனவான்களே, ஜனநாயகத்தை சீரழித்தது யார்? இது முன்னோர்கள் செய்த தவறா அல்லது கீலானந்த்ஜா அரசு பதவிக்குத் தகுதியற்றவரா?


சமத்துவத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் சனாதனிகளே, இட ஒதுக்கீடு எதிர்ப்பு கிளர்ச்சியின்போது டெல்லி நேரு பல்கலைக்கழக மேல்சாதி மாணவர்கள், கீழ் சாதியினரின் குலத்தொழிலைச் செய்யுமளவுக்கு நிலைமை முற்றிவிட்டது என்று செருப்பு துடைக்கும் போராட்டம் நடத்தியதை நீங்கள் வாழ்த்தி வரவேற்கவில்லையா? செருப்பு துடைப்பதை அவமானமாகக் கருதும் உங்களது மேல்சாதி வெறியைத்தானே இது காட்டுகிறது. செருப்பு துடைக்கும் போராட்டத்தை ஆதரிக்கும் நீங்கள், அம்மாணவர்களை மலம் அள்ள அனுப்பத் தயாரா?


முன்னேறியவர்கள் யார்?


அபத்தமான வாதங்களை அடுக்கி பார்ப்பனவெறியை நியாயப்படுத்தும் இந்த அறிவாளிகள் இன்னுமொன்றைக் கூறுகின்றனர். "இட ஒதுக்கீடு சலுகை தரப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட பிற்பட்ட சாதியினர் இன்று எவ்வளவோ முன்னேறிவிட்டனர். எனவே இட ஒதுக்கீட்டுக்கு குறிப்பிட்ட காலவரம்பு வேண்டும். இதுதவிர பிற்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் முதல்வர்களாகியுள்ளனர். தாழ்த்தப்பட்ட பிற்பட்டவர்கள் சமூக, பொருளாதார ரீதியாக மட்டுமின்றி அரசியல் அதிகாரத்திலும் பங்கேற்குமளவுக்கு முன்னேறியுள்ளதைத்தான் இது காட்டுகிறது'' என்று வாதிடுகின்றனர்.


இல்லை; பொருளாதாரமோ, சமூககல்வித் தகுதியோ எதுவானாலும் சாதிரீதியில் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகவும் இன்னமும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டப்படுபவர்கள் தாழ்த்தப்பட்டமலைவாழ் மக்களும் நாவிதர், வண்ணார் போன்ற நிலப்பிரபுத்துவ சேவைத்துறை சார்ந்த பிற்பட்ட சாதியினரும்தான். ஆனால் பக்கத்து இலைக்குப் பாயசம் போடுங்கள் என்று இட ஒதுக்கீட்டு சலுகை கேட்டு ஆதாயமடைவதுதான் மற்ற சாதிகளின் நோக்கமாக இருக்கிறது.


198788 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படியே நாட்டிலுள்ள 77% முற்பட்ட மற்றும் பிற்பட்ட சாதியினர் 83% வளமான நிலத்தை உடைமையாக வைத்துள்ளனர். எஞ்சியவை அரசுக்குச் சொந்தம். அற்ப அளவு நிலம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களிடம் உள்ளது. தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களிடம் படிப்பு சற்றே அதிகரித்திருந்தாலும் மற்ற சாதியினரின் வளர்ச்சி வேகத்தோடு ஒப்பிடும்போது குறைந்து கொண்டே போகிறது. ஆரம்பப் பள்ளியில் நுழையும் தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளில் பாதிப்பேர் கூட ஐந்தாம் வகுப்பைத் தாண்டுவதில்லை. வறுமை காரணமாக உழைக்கப் போய்விடுகின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் உயர்கல்வி கற்றபோதிலும்கூட இட ஒதுக்கீட்டு செய்யப்பட்டு காலியான அரசு பதவிகளில் கூட அவர்கள் நியமிக்கப்படுவதில்லை.


அதேசமயம் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள பல ஆளும் சாதிகள் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளன என்பது உண்மைதான். ஓட்டுக்கட்சி அரசியலிலும் தேர்தலிலும் செல்வாக்கு செலுத்துமளவுக்கு இவர்கள் வளர்ந்துள்ள போதிலும் அரசு பதவிகளில் அதிகாரத்தில் முன்னேறிவிட்டதாக கூறிவிட முடியாது. அதற்காகத்தான் இப்போது இட ஒதுக்கீடு மூலம் பிற்பட்ட சாதிகள் போட்டி சண்டையில் இறங்கியுள்ளன.


பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக இப்படி பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த கட்சிகள் உருவானவுடனேயே பிராந்தியவாதக் கட்சிகள், பிரிவினைவாதம், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்று பார்ப்பன "தேசிய' கட்சிகள் கூப்பாடு போட்டன. இப்போது அரசு பதவிகளிலும் தமது ஆதிக்கத்துக்குப் போட்டியாக வந்துவிட்ட ஆத்திரத்தில், பிற்பட்ட சாதியினர்கூட மாநில முதல்வர்களாக உள்ளதைக் காட்டி, அவர்கள் எல்லா துறைகளிலும் அரசியல் அதிகாரத்திலும் முன்னேறி விட்டதாக அங்கலாய்க்கின்றனர்.


எனவேதான் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஏற்பதாகக் கூறிக் கொண்டே, பிற்பட்டோருக்கு கூடுதலாக இட ஒதுக்கீடு செய்வதை கடுமையாக எதிர்த்தும், அதன்மூலம் எந்தவகையான இட ஒதுக்கீடுமே கூடாது என்றும் மேல்சாதியினர் போராடுகின்றனர். இதேபோல தமது தரப்புக்கு பலம் சேர்க்கும் நோக்கத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரால் பிற்பட்ட சாதியினர் இட ஒதுக்கீட்டை ஆதரித்து எதிர்ப் போராட்டம் நடத்துகின்றனர். அதேசமயம், முற்பட்ட, பிற்பட்ட சாதியினர் எவரும் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கவும் உயிரோடு கொளுத்தவும்கூடத் தயங்குவதில்லை.


அரசு பதவிகளைக் கைப்பற்றுவதற்கான போட்டி


எனவே, அரசு பதவிகளைக் கைப்பற்றுவதற்காக மேல்சாதியினருக்கும் பிற்பட்ட சாதியினருக்கும், பிற்பட்ட சாதிகளுக்கிடையிலேயும் நடக்கும் தகராறுதான் இப்போது நடக்கும் இட ஒதுக்கீடு ஆதரவு எதிர்ப்பு கிளர்ச்சிகள். பார்ப்பனமேல்சாதியினர் சாதிவெறியோடு எதிர்ப்பதாலேயே பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்திவிட முடியாது. உள்ளூர் அளவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சாதிய ஆதிக்கம் செலுத்துவதில் மேல்சாதியினரை விட பிற்பட்டோரில் உள்ள பலசாதிகள்தான் இன்று முன்னிலை வகிக்கின்றன.


குறிப்பாக வடமாநிலங்களில் யாதவர், குஜ்ஜார், குர்மி, ஷைலன்வார் ஆகிய பிற்பட்டோர் பட்டியலில் உள்ள பெரும்பான்மை சாதியினர்தான் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டுகின்றனர். இதேபோல கர்நாடகாவில் லிங்காயத்து, ஒக்கலிகா சாதிகளும், ஆந்திராவில் கம்மா, காபு சாதிகளும்தான் தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கும் முதல் எதிரிகளாக உள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் தாழ்த்தப்பட்ட கூலி ஏழை விவசாயிகள் நடத்தும் வர்க்கப் போராட்டங்கள் கூட இத்தகைய பிற்பட்ட சாதி இந்துக்களுக்கு எதிரான போராட்டமாக பல நேரங்களில் திரும்பியுள்ளது. பிற்பட்ட சாதியைச் சேர்ந்த பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள வறிய விவசாயியாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடக்கும்போது அவர் தமது வர்க்கத்துடன் சேருவதில்லை. தமது சாதிக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு அவரும் சாதிய அடக்குமுறைக்குத் துணையாக நிற்பதைத்தான் நாம் பார்க்கிறோம்.


இதுவரை கிராமப்புறத்திலும் விவசாயத்திலும் ஆதிக்கம் செலுத்திவந்த யாதவர், குர்மி, ஷைலன்வார் மற்றும் கம்மா சாதியினர் நவீன விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு பொருளாதார ரீதியிலும் முன்னேறியுள்ளனர். ஓட்டுக்கட்சி அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இப்போது அரசு பதவிகளிலும் முற்பட்ட சாதியினருக்குப் போட்டியாக பலம்பெற முயலுகிறார்கள். ஏற்கெனவே அரசு பதவிகளில் பெரும்பான்மையாக உள்ள மேல்சாதியினர் தமது ஆதிக்கத்தை இழந்துவிடாதிருக்க எதிர்போராட்டத்தைத் தீவிரமாக்குகின்றனர். இதுதான் இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும் என்ற விவகாரம் முற்றுவதற்கான அடிப்படை. அரசு பதவிகளைக் கைப்பற்றுவதற்கான இந்த நாய்ச்சண்டையை மூடி மறைக்கத்தான் தகுதி திறமை என்று மேல்சாதியினரும், பார்ப்பனவெறி, சமூக அநீதி என்று பிற்பட்ட சாதியினரும் பெருங்கூச்சல் போடுகின்றனர்.


புரட்சிப் பாதைக்கு மக்கள் திரும்பி விடாதபடி தடுத்து, இப்போதைய அரசியல் அமைப்பிலேயே தாமும் பங்கேற்கும் உணர்வை தாழ்த்தப்பட்ட பிற்பட்ட சாதிகளுக்கு ஏற்படுத்துவதற்கானதுதான் இட ஒதுக்கீடு சலுகைகள். புரட்சியைத் தடுக்கவும், புரட்சிகர நிலைமை எழுந்தால் ஒடுக்கவுமான அரசு எந்திரத்தில் பங்கேற்பதற்காக நடக்கும் போட்டிதான் இட ஒதுக்கீடு ஆதரவு எதிர்ப்பு கிளர்ச்சிகள். எனவே இந்தச் சண்டையில் நாம் எந்தப் பிரிவையும் ஆதரிக்க முடியாது. இதனால் சமூக நீதியோ, விடுதலையோ கிடைத்துவிடாது.


(115 செப்டம்பர் 1990 இதழிலிருந்து)