ம ண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்று, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியே பிற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்வதாக ஜனதாதள தேசிய முன்னணி அரசாங்கம் அறிவித்துள்ளது. விதிவிலக்கின்றி எல்லா அரசியல் கட்சிகளும் இதை வரவேற்றுள்ளன. அம்பேத்கார் நூற்றாண்டு கொண்டாடும் சமூக நீதி ஆண்டில் எடுக்கப்படும் பெருஞ்சிறப்பு வாய்ந்த முடிவெனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்,

 பிரதமர் வி.பி.சிங். ஆனால், பல்வேறு சாக்குப் போக்குகள் சொல்லி இதுவரை இழுத்தடிக்கப்பட்டு வந்தது; ஜனதாதள அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்திய தேவிலால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விவசாயிகள் புறக்கணிப்பை எதிர்த்தும், இட ஒதுக்கீட்டுக்காகவும் "கவர்ச்சி' முழக்கங்களை எழுப்பி ஆதரவு திரட்டியது; அதற்கு எதிர் நடவடிக்கையாக தொடர்ந்து சில சலுகைகளை அரசு அறிவித்து வருவது; மண்டல் கமிஷன் அறிக்கையை அமலாக்குவது, விவசாயக் கடன்கள் ரத்து செய்வது, 1990களை விவசாயிகளின் பத்தாண்டுகளாக்கி முன்னுரிமை தருவது இவையெல்லாம் நாட்டுமக்கள் அறிவர்.


தி.க., தி.மு.க. மற்றும் பல சாதிச் சங்கங்களும், பிற்பட்ட சாதிப் பிரமுகர்களும் மண்டல் கமிஷன் அறிக்கை மீதான முடிவானது தமது கோரிக்கைக்கு, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றியெனக் கொண்டாடுகின்றனர்; தேசிய முன்னணி அரசுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கின்றனர். ஆனால், இட ஒதுக்கீடு எதிர்ப்பு மேல்சாதி கலவரங்கள் பீகாரைக் குலுக்குகின்றன. தடியடி, துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொட்டுள்ள இக்கலவரங்கள் வடநாடு முழுவதும், ஆந்திரா, கர்நாடகாவுக்கும் பரவும்; அரசு எதிர்ப்புக் கலவரங்களாக இருந்து சாதிக் கலவரங்களாக வெடிக்கும் அபாயம் நிலவுகிறது.


பார்ப்பன பனியா மற்றும் பிற மேல்சாதி ஆதிக்கத்தில் உள்ள இந்தியப் பத்திரிக்கைகள் அனைத்தும் இட ஒதுக்கீடு முடிவுக்கு எதிராக நெருப்பைக் கொட்டுகின்றன. இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டுள்ள பாரதிய ஜனதா, அதை அமலாக்கும் ஜனதாதள அரசு ஆகியவற்றின் ஊதுகுழலான இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா அருண்ஷோரி கும்பல் இன்னும் ஒருபடி மேலே போயுள்ளது. "மத்திய அரசின் இந்த பொறுப்பற்ற சந்தர்ப்பவாத, அழிவுத்தன்மையுள்ள முடிவானது தேசிய நலன்களுக்கே ஆபத்தானது. இப்போது பரவிவரும் இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கிளர்ச்சி தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கானது. தேசத்தைப் பேரழிவிலிருந்து காக்க வேண்டுமானால் இந்தக் கிளர்ச்சியை மாணவர்களும் மற்றவர்களும் மேலும் ஆழமாகப் பரப்பிட வேண்டும்'' என்று ஆத்திரத்தோடு கூச்சல் போடுகிறது.


மண்டல் அறிக்கையின் ஒரு பகுதி மீதுதான் இப்போது முடிவு செய்துள்ளனர். கல்வி வசதிக்கான இட ஒதுக்கீடு பற்றி முடிவாகவில்லை. எவையெவை பிற்பட்ட சாதிகள் என்பதற்கான மாநில அரசுகளின் பட்டியலும், மண்டல் அறிக்கைப் பட்டியலும் வேறுவேறானவையாக உள்ளன. இப்போதைக்கு இரண்டிலும் பொதுவாக உள்ள சாதிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்படும். மண்டல் அறிக்கையின்படி 3,743 சாதிகள் பிற்பட்டவை. ஏற்கெனவே மாநில அரசுகள் அறிவித்துள்ள சாதிப் பட்டியல்களின்படி 7090% மக்கள் இட ஒதுக்கீட்டிற்கான தகுதியுடையவர் என்றாகி இட ஒதுக்கீடு முறையையே செல்லுபடியாகாமல் செய்து விட்டனர். இனி இட ஒதுக்கீட்டை எதிர்த்து மட்டுமல்ல; அந்தப் பட்டியலில் சேர்க்கும்படி பல மேல் சாதியினர் கோரிப் போராடுவர். ஓட்டுப் பொறுக்குவதற்காக இந்தப் பட்டியலும் நீளும். அதோடு இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படியும், மக்கள் தொகை அடிப்படையில் தனித்தனிச் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யும்படியும் கோரிப் போராடுவர். இவற்றுக்காக சாதிச் சங்கங்களும், கலவரங்களும் பெருகும். இதைத்தான் 40 ஆண்டுகளாகப் பார்த்தும் வருகிறோம்.


சமூக உரிமை, கல்வி உரிமை, சொத்துரிமை மறுக்கப்பட்டு தீண்டாமை போன்ற காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைசுரண்டல் சமுதாய அமைப்பினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள், "சூத்திர மற்றும் சண்டாள'' வர்ணங்களின் வழிவந்த தாழ்த்தப்பட்டபழங்குடி சாதிகள் மட்டும்தான். சாதி என்கிற முறையில் தனிச்சிறப்பான முக்கியத்துவம் பெற்று முன்னேற்றப்பட வேண்டிய உரிமை உடையவர்கள் இவர்கள் மட்டும் தான். தாழ்த்தப்பட்டபழங்குடி மக்களுக்கு எதிரான எல்லா சமூக அநீதிகளுக்கும் காரணமாயிருந்து ஆதாயம் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல; இப்போது சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்டவை என இட ஒதுக்கீடு உரிமை கோரும் சத்திரிய, வைசிய வர்ண வழிவந்த சாதிகளும்தான் அவ்வாறு செய்தன. இன்னமும் சமூக அநீதிகள் தொடரவும், அதனால் ஆதாயம் அடைபவர்களும் இந்தச் சாதிகள்தான். இப்போதும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டங்களின் எதிரிகளாக அச்சாதிகளின் நிலப்பிரபுக்கள் இருப்பதோடு, சாதிய ரீதியில் மற்றவர்களையும் திரட்டி அவற்றை ஒடுக்குகின்றனர்.


இவ்வாறு சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் இன்னொரு பிரிவை அடக்கி ஒடுக்கிவரும் சாதிகளே தமக்கும் சமூக நீதி தரவேண்டும், தமக்கும் இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிமை உண்டெனக் கோருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள் என்கிற சாதித் தகுதிக்காக மட்டும் தனிச் சிறப்பான முக்கியத்துவம் பெற்று முன்னேற்றப்பட வேண்டிய உரிமை, பார்ப்பனர்களைப் போலவே, சத்திரியவைசிய வழிவந்த சாதிகள் எதற்குமே கிடையாது. மேலும், எந்த அரசு எந்திரத்தை அடித்து நொறுக்கித் தூக்கி எறிந்துவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்ட முடியுமோ, முக்கியமாக அதிலே பங்கேற்று எதிரிக்குச் சேவை செய்வதற்காகத்தான் இந்தச் சண்டை நடக்கிறது. ஆகவே, பார்ப்பன, சத்திரிய, வைசிய வழிவந்த சாதிகளே இருபிரிவாக நின்று இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் நடத்தும் இந்தச் சண்டையில் எதையும் ஆதரிக்க முடியாது; இதனால் சமூக நீதியும் கிட்டாது.


(1631 ஆகஸ்ட் 1990 இதழின் தலையங்கம்)