09222023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை ஏன்?

என்ன சாதி என்றே தெரியாத பருவத்தில் பள்ளிக்குச் சென்றால் முதலில் சாதியைத்தான் கேட்கிறார்கள். சாதியைத் தூண்டுவது ஒரு வேடிக்கையாகிவிட்டது. மதம் பரப்புபவர்கள், புதுக்கட்சி ஆரம்பிப்பவர்கள், சாதிச் சங்கங்கள் அமைப்பவர் வரை இந்த ஆதிதிராவிடர்களை ஏன் முதன்மைப்படுத்துகிறார்கள்? இந்த நாட்டில் இவர்கள்தான் ஏழைகளா? ஏன் அனைத்து சாதியினருக்கும் சராசரியாக பொருளாதார அடிப்படையில் உதவலாமே? அதில் என்ன பிரச்சினை? ஏன் இந்த அரசாங்கம் முன் வருவதில்லை? இந்தச் சாதிப் பிரச்சினையில் என்ன அதிசயம் அடங்கியிருக்கிறது? ஒட்டுமொத்தமான உங்களின் கருத்தென்ன?
ஏ.எஸ். இராஜாமணி, தருமபுரி.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரப்படுவதுதான் நியாயமானது, அவசியமானது. அவர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதால் தமக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், சமஉரிமை கோரியும் மற்ற சாதியினர் யாரானாலும் போராடுவது தவறானது, ஏற்கமுடியாது.


ஆனால், ஒழிக்கப்பட வேண்டிய இந்த சாதி அமைப்பை கட்டிக் காக்கும் தரகு அதிகார முதலாளிகள்நிலப்பிரபுக்களைத் தூக்கி எறிந்து உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பொருளாதாரம், சமூகம், கல்விகலாச்சாரம் ஆகிய எந்தத் துறையிலும் உண்மையான முன்னேற்றம் காண முடியாது. அப்படிப்பட்ட புரட்சி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அடக்கி ஒடுக்கப்படும் சாதியினரும் இந்த அரசியல் அமைப்பில் பங்கேற்பதாகவும், பொருளாதார சமூக முன்னேற்றம் இதனால் அடைந்துவிட முடியும் என்று பிரமையை உருவாக்குவதற்காகவும் சில தனிநபர்களுக்குத் தரப்படும் சலுகை, சீர்திருத்தம்தான் இட ஒதுக்கீடு. பிற்பட்டவர் இட ஒதுக்கீட்டிற்காக வலிந்து நிற்கும் மண்டல் கமிஷனும் வீரமணியுமே இதை ஒப்புக் கொள்கின்றனர். உழைக்கும் மக்களுக்குத் தற்காலிக, குறைந்தபட்ச நன்மை தருவதாக இருக்கும் சலுகைகள் சீர்த்திருத்தங்களை நாம் எதிர்க்கவில்லை. அதேசமயம், அவையே ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலை, முன்னேற்றத்திற்கான தீர்வாக வழியாக அமையும் என்கிற மோசடியை எதிர்த்து அம்பலப்படுத்துவோம்.


மற்ற பிற சாதியினர், குறிப்பாக பிற்பட்ட சாதியினரிடையே கூலி ஏழை விவசாயிகள் தொழிலாளர்கள் முதல் நிலப்பிரபுக்கள் முதலாளிகள் வரை பல்வேறு பிரிவினரும் உள்ளனர். அவர்களில் நடுத்தரமேட்டுக்குடிப் பிரிவினர், தம்முடைய சாதி உழைக்கும் மக்களை முன்னிறுத்தி பலியிட்டு அரசு பதவிகளைப் பிடித்துக் கொள்வதற்காகப் போட்டி போடுகின்றனர். இட ஒதுக்கீடு ஆதரவுக்கு தலைமை ஏற்கும் திராவிட இயக்கங்களும் சரி; இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனமேல்சாதி இயக்கங்களும் சரி; அவரவர் தரப்புக்குப் பலத்தைக் கூட்டிக் கொள்வதற்காகத்தான் தாழ்த்தப்பட்டமலைவாழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். ஒட்டு மொத்தமாக வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருவதற்கான காரணத்தையும் தீர்வையும் காணவிடாமல், இட ஒதுக்கீடு இல்லாததனால்தான் வேலை கிடைப்பதில்லை என்றும் இளைஞர்களைத் திசைதிருப்பி மோதிவிட்டு ஆதாயம் தேடுகிறார்கள். ஒரு அழுகிய பிணத்தைக் கூறு போட்டுக் கொள்வதற்காக மூர்க்கமான கழுதைப் புலிகளைப் போல சாதிச் சண்டைகளை வளர்க்கிறார்கள்.


(115 ஏப்ரல் 1990 இதழில் வெளியான கேள்விபதில் பகுதியிலிருந்து)