Language Selection

இ ட ஒதுக்கீடு பிரச்சினையை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கின்றன, சாதிச் சங்கங்களும் ஓட்டுக் கட்சிகளும். கடந்த மாதம் திருச்சியிலே கூடிய தமிழ்நாடு பிராமணர் சங்கம் "பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு' கோரியுள்ளது. பாசிச ஜெயலலிதா ராஜீவ் கும்பல்களின் ஆதரவு; ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதா, சங்கராச்சாரிகள் போன்ற மதவெறி சக்திகளின் ஆதரவு; சமீபத்தில் வடமாநிலங்களில் வெடித்துப் பரவிய இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கலவரங்கள் ஆகியன அதற்குப் புது வீரியத்தைக் கொடுத்திருக்கின்றன. அவற்றோடு ஜனதாதள தலைவர் சந்திரசேகர் மற்றும் ஜனதா அரசின் துணைப்பிரதமர் தேவிலால் ஆகிய "எதிர்பாராத' தரப்பில் இருந்தும் அவர்களுக்கு ஆதரவு கிட்டியிருக்கிறுது.


அதே நாட்களில், அதே நகரில் "பார்ப்பன எதிர்ப்பு இட ஒதுக்கீடு ஆதரவு'' மாநாட்டைக் கூட்டிய திராவிடர் கழகம் வீரமணி குழுவினர் பூணூல் அறுப்பு இயக்கத்தை மீண்டும் துவங்கும் அளவு வேகத்துடன் நடத்தியுள்ளனர். பூணூல் அறுப்பு இயக்கத்தை தஞ்சை மன்னார்குடி என்று விரிவுபடுத்தியும் உள்ளனர். இந்தப் புதுவேகத்துக்கும் காரணங்கள் உண்டு. "பிற்பட்ட' சாதிகளுக்கு இட ஒதுக்கீடு செய்வதை வலிந்து சிபாரிசு செய்யும் மண்டல் கமிஷன் அறிக்கை; அதை அமல் நடத்துவதாகத் தமது தேர்தல் அறிக்கையிலேயே ஒப்புக் கொண்டுள்ள "சூத்திர' அரசுகள் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் உள்ளன. இன்னும் சொல்வதானால் நீதிக் கட்சியைப் போன்றதொரு சாதிக் கூட்டணிதான் தேசிய முன்னணி.


ஆனால் வீரமணி குழுவினர் கனவு காண்பதைப் போல, தேசிய முன்னணி ஜனதா தளம் வாக்குறுதி அளித்தபடி இட ஒதுக்கீடு குறித்த மண்டல் கமிஷன் சிபாரிசை அவ்வளவு சுலபமாக அமல்படுத்தி விட முடியாது; பிற மேல்சாதி இந்துக்கள் கடந்த மாதம் நடத்திய இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கலவரங்கள் இதையே காட்டுகின்றன.


உத்திரப்பிரதேசம், அலகாபாத் பல்கலைக் கழகத்தில் ஒரு சிறுபொறியாகக் கிளம்பியது இட ஒதுக்கீடு எதிர்ப்பு கலவரம். ஒரு சில நாட்களிலேயே அம்மாநிலத்தின் 62 மாவட்டங்களில் 52ஐப் பற்றிக் கொண்டது. உடனேயே பீகார், மத்தியப்பிரதேசம், ஜம்முகாஷ்மீர், ராஜஸ்தான், ஒரிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரியத் துவங்கிவிட்டது.


அம்பேத்கார் காந்தி சிலைகள் தகர்க்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு, போலீசு தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கி சூடுவரை போய் பத்து பேருக்கு மேல் மாண்டனர்.


இட ஒதுக்கீடு எதிர்ப்பு என்று கிளம்பியது விரைவிலேயே நாடு தழுவிய மிகப்பெரும் சாதிக் கலவரமாக வெடித்துப் பரவி விடும் ஆபத்து தலைதூக்கியது. தற்காலிகமாக அது தணிந்து நீறுபூத்த நெருப்பாகியுள்ளது. ஆனால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடித்துப் பரவும் அபாயம் நீடிக்கவே செய்கிறது.


ஏனெனில், குறிப்பிடத்தகுந்த காரணம் எதுவுமின்றி, மண்டல் கமிஷன் அறிக்கை ஆதரவு பிற்பட்ட சாதியினருக்கு ஒரு எச்சரிக்கை என்பதாகத் துவங்கப்பட்டதுதான் இந்த இட ஒதுக்கு எதிர்ப்புக் கலவரம். அதுவே இவ்வளவு தீவிரமாக, வேகமாகப் பரவிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!


தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டுகள் நீட்டிக்கப் போவதாக தேர்தலின் போதே ராஜீவ் வாக்குறுதியளித்தார். வி.பி.சிங் பதவியேற்றதும் அதை உறுதி செய்து, அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். உண்மையில் இந்த இட ஒதுக்கீடு என்பது நாடாளுமன்ற, சட்டமன்றப் பதவிகளுக்கானது தானே தவிர வேலை மற்றும் கல்விக்கானதே கிடையாது. இந்தப் பதவிகளுக்கான இட ஒதுக்கீடுதான் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தவணை முறையில் நீட்டித்து வருகிறார்கள். கல்வி, வேலைக்கான இட ஒதுக்கீடு காலவரையறையற்றது. எனவே, இப்போதைய சட்டத் திருத்தத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதோடு இதுவரை "பிற்பட்ட'' சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை மட்டும் எதிர்த்து வந்த "முற்பட்ட'' சாதியினர் இப்போது தாழ்த்தப்பட்டமலைவாழ் மக்களுக்கான இட ஒதுக்கீட்டையும் எதிர்க்கின்றனர்.


இட ஒதுக்கீடு ஆதரவு எதிர்ப்பு என்ற விவகாரத்துக்குள் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் நலன்கள் எதுவும் சம்பந்தப்படவே இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், இவர்களுக்கான இட ஒதுக்கீட்டை எந்தச் சாதிச் சங்கங்களும் கட்சிகளுமே பகிரங்கமாக எதிர்க்கவில்லை; ஆதரிக்கவே செய்கின்றன. வேண்டுமென்றே தமது தரப்புக்கு பலம் சேர்த்துக் கொள்ளும் சுயநலத்தோடு முற்பட்ட, பிற்பட்ட சாதிப் பிரிவினர்கள் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களையும் இழுத்துப் போட்டுக் கொள்கின்றனர். அதே சமயம், இவர்களில் எந்தச் சாதியினரும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களை உயிரோடு கொளுத்துவது வரை அடக்கி ஒடுக்கவும் சுரண்டவும் தவறுவதில்லை.


எனவே, இப்போதைய இட ஒதுக்கீடு ஆதரவு எதிர்ப்பு என்ற தகராறு மேல்சாதி இந்துக்களிலேயே ஒருபிரிவான முற்பட்டவர்களுக்கும், மற்றொரு பிரிவான பிற்பட்டவர்களுக்கும் இடையிலும் பிற்பட்ட சாதிகளுக்குள்ளேயும் நடக்கும் விவகாரம்தான்! தென்மாநிலங்களைப் பொருத்தவரை ஏற்கெனவே மண்டல் கமிஷன் அறிக்கையின் சிபாரிசு அமலுக்கு வந்துவிட்டது; இங்கே நடப்பது பிற்பட்ட சாதிகளுக்குள்ளாகவே யார் பிற்பட்டவர், யார் மிகவும் பிற்பட்டவர், எவ்வளவு இட ஒதுக்கீடு என்பதுதான் விவகாரம். இதைத்தான் வன்னியர் சங்கம் பெரிதாகக் கிளப்புகிறது. தவிரவும், தமிழ்நாட்டில் வெள்ளாளக் கவுண்டர்கள் உட்பட 80 சதவிகிதத்தினரும்; கர்நாடகாவில் லிங்காயத், வொக்கலிகா சாதியினரும் என்று ஆளும் சாதிகளே "பிற்பட்ட'வர்களுக்குரிய இட ஒதுக்கீடு சலுகைகள் பெறுகின்றனர். தென்மாநிலங்களில் உள்ள பார்ப்பனர் முதலிய மேல்சாதியினர் மண்டல் கமிஷன் அறிக்கை அமலாவதைத் தடுக்கும் பலம் வாய்ந்தவர்களும் கிடையாது. இருந்தாலும், பிற்பட்ட சாதிகளுக்குள்ளே நடக்கும் சண்டை தகராறை மூடி மறைத்து திசை திருப்புவதற்காகவே வீரமணி கும்பல் பெருங்கூச்சல் போடுகிறது.


உண்மையில் இட ஒதுக்கீடு விவகாரம் தீர்க்க முடியாத சிக்கலாக உருவாகியிருப்பது வடமாநிலங்களில் — அதுவும் பிற்பட்ட, முற்பட்ட சாதியினரிடையேதான். மொத்தம் 3,743 சாதிப் பிரிவுகளைப் பிற்பட்ட பிரிவினராக மண்டல் கமிசன் வரையறுத்துள்ளது. அவற்றிலே யாதவர் (அகிர்), குஜ்ஜார், குர்மி, ஷைலன்வார் ஆகியன வடமாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள பிற்பட்ட சாதிகள். ராஜபுத்திரர்கள், ஜாட்கள், பிராமணர்கள், பூமிகார்கள், பனியாக்கள், கயஸ்தாக்கள் ஆகியன அங்கே பெரும்பான்மையாக முற்பட்ட சாதிகள். இவர்களிலே ஜாட்கள் தவிர மற்றபிற முற்பட்ட சாதியினர்தான் அரசு பதவிகளைப் பெரும்பான்மையாகக் கைப்பற்றிக் கொண்டுள்ளவர்கள். இதுவரை கிராமப்புறத்திலும் விவசாயத்திலும் ஆதிக்கம் செலுத்தி வந்த யாதவர், குஜ்ஜார், ஷைலன்வார் மற்றும் ஜாட்டுக்கள் நவீன உற்பத்தியிலே ஈடுபட்டு பொருளாதார ரீதியிலும் முன்னேறிவிட்டவர்கள்; இப்போது அரசுப் பதவிகளிலும் முற்பட்ட சாதியினருக்குப் போட்டியாக பலம் பெற முயலுகிறார்கள். இதுதான் இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும் என்ற விவகாரம் முற்றுவதற்கு அடிப்படை.


இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள தேசிய முன்னணிக்கு தலைமையேற்கும் ஜனதா தளம் என்பதே ஜாட்டுக்கள், ராஜபுத்திரர்கள் என்ற முற்பட்ட சாதியினர் யாதவர்கள், குஜ்ஜார்கள் என்ற பிற்பட்ட சாதியினரோடு அமைத்துக் கொண்டுள்ள சாதிக் கூட்டணிதான். இந்தி பேசும் மாநிலங்களில் பெரும்பான்மையினரான இச்சாதிக் கூட்டணி, முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் கணிசமான ஆதரவைப் பெறுவதன் மூலம் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான். இதை முன்பே பலமுறை எழுதியுள்ளோம்.


தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்காக சாதிக் கூட்டணிகள் அமைப்பதும், இட ஒதுக்கீடு என்ற தூண்டில் இரையை வீசி பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை வளைத்துப் போட முயல்வதும் புதியது அல்ல. ஏற்கெனவே நிறையவே சான்றுகள் உள்ளன.


திராவிடக் கட்சிகளின் தாய்க் கட்சியான நீதிக் கட்சியே இந்த விதத்தில் நாட்டில் முன்னோடியானது. 1985 மாநில சட்டமன்றத் தேர்தல்களில், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசு வகுத்துக் கொண்ட தேர்தல் உத்தியும் இதுதான். சத்திரியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஆதிவாசிகளைக் கொண்ட கூட்டணி அமைத்து இட ஒதுக்கீடு எதிர்ப்பு, சாதிக் கலவரங்கள் வெடித்து பல நூறுபேர் உயிரைக் குடித்தன. தேர்தல்களில் வெற்றியைச் சாதித்துக் கொண்ட பின் சாதிக் கலவரங்களை இந்துமுஸ்லீம் கலவரங்களாகத் திசைதிருப்பி மேலும் பல நூறு பேரைக் கொன்று முடிவுக்குக் கொண்டு வந்தனர்.


மத்தியிலே 40 ஆண்டுகால நேரு இந்திரா ராஜீவ் பரம்பரை ஆட்சியே பிராமணர், பனியா, பூமிகார், ராஜபுத்திரர், கயஸ்தாஸ் ஆகிய முற்பட்ட சாதிகளின் கூட்டணிதான். மொத்தத்தில் சிறுபான்மையினராக இச்சாதியினர் இருந்ததால் முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு சலுகைகளைக் காட்டி தேர்தல் வெற்றிகளை ஈட்டி வந்தனர்.


"சூத்திரர்களின் ஆட்சி' என்று வீரமணி கும்பல் சித்தரிக்கும் ஜனதா தளத்திலேயும் தலைமை தாங்கும் ராஜபுத்திரர்களும் (வி.பி.சிங், சந்திரசேகர்) ஜாட்டுக்களும் (தேவிலால், அஜித்சிங்) ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் பிற்பட்டவர்களின் ஆதரவு கூட்டு வேண்டி மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஆட்சியைப் பிடித்தாகி விட்டது; இனி தமது சொந்தச் சாதிப் பிடிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்; எனவே, மண்டல் கமிஷன் அறிக்கையைக் கிடப்பில் போடுவதற்கான முகாந்திரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


இதிலே முந்திக் கொண்ட ஜாட் தலைவர் தேவிலாலும், ராஜபுத்திர (தாகூர்) தலைவர் சந்திரசேகரும் மண்டல் கமிஷன் அறிக்கையை சாராம்சத்தில் நிராகரிக்கும் நிலைப்பாடு எடுத்து விட்டனர். இட ஒதுக்கீடு செய்வதற்கான தகுதிகளாக சமூக, கல்வி நிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மண்டல் கமிஷன் சிபாரிசு. அதற்கு மாறாக, பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்பது பார்ப்பனபனியா, பூமிகார் முதலிய முற்பட்ட சாதியினரது கோரிக்கை. இந்தக் கோரிக்கையை இப்போது தேவிலாலும் சந்திரசேகரும் ஆதரிக்கின்றனர்.


ஆகவே, பார்ப்பனரல்லாத அனைவரும் "சூத்திரர்கள் பிற்பட்டவர்கள்' என்கிற திராவிட இயக்கத்தினரின் வரலாற்றுப் புரட்டையும், தேசிய முன்னணி அரசு "சூத்திரர் அரசு' என்ற இன்றைய அரசியல் புரட்டையும் அம்பலப்படுத்துகிறது, இட ஒதுக்கீடு பற்றிய ராஜபுத்திரர் மற்றும் ஜாட்டுக்களின் நிலைப்பாடு. இதே பிரச்சினையை எழுப்பும் வன்னிய சங்கத்துக்கும் பதில் சொல்ல முடியாமல் மழுப்புகின்றனர், திராவிட இயக்கத்தினர்.


தற்போதைய இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கலவரங்களைத் தூண்டிவிட்டதாக காங்கிரசு, ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியன ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டுகின்றன. உண்மையில், இந்த மூன்று கட்சிகளையும் சேர்ந்த முற்பட்ட சாதித் தலைவர்கள் இக்கலவரங்களை உள்ளூரளவில் தலைமையேற்று நடத்தியுள்ளனர். இது பற்றிய ஆதாரங்களும் உள்ளன.


பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளின் உண்மையான பிரதிநிதி என்று திராவிட இயக்கத்தினர் — குறிப்பாக வீரமணி கும்பல் சான்றிதழ் வழங்கியுள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் அதன் தலைவர் கன்ஷிராமும் "வி.பி.சிங் திட்டமிட்டுத் தூண்டி விட்டதுதான் இந்தக் கலவரங்கள்; ஜனதா தள தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு பற்றி ஏராளமான வாக்குறுதிகளைத் தந்துள்ளனர். ஆனால் தமது வர்க்க, சாதி நலன்களுக்கு எதிரான அவ்வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்கள் தயாராக இல்லை. எனவே, இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கலவரங்களைத் தூண்டி விடுகின்றனர்'' என்கிறார். ஆனால் அடிமைச் சேவகம் புரிந்து, அடிவருடியே ஆதாயம் கண்டு வரும் திராவிட இயக்கம் இன்னமும் சூத்திரர் அரசு என்று சித்தரிக்கிறது.


இட ஒதுக்கீட்டை இதுவரை அடியோடு எதிர்த்து வந்த மேல்சாதியினர், இப்போது பொருளாதார அடிப்படையை வைக்க வேண்டும் என்கின்றனர். பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினரோ 2000 ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கி சுரண்டப்பட்ட சமூக மக்கள் முன்னேற சமூக, கல்வித் தகுதிகளைத்தான் பார்க்க வேண்டும் என்கின்றனர்.


பொருளாதாரமோ, சமூக கல்வித் தகுதியோ எதுவானாலும், இரண்டுமேயானாலும் சாதி ரீதியில் 2000 ஆண்டுகளாகவும் இன்னமும் அடக்கி ஒடுக்கி சுரண்டப்படுவர்கள் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் மட்டும்தான். "பக்கத்து இலைக்குப் பாயசம் போடுங்கள்'' என்று கேட்டு ஆதாயம் அடைவதுதான் மற்ற சாதிகளின் நோக்கமாக இருக்கிறது.


அதேசமயம், இட ஒதுக்கீடு மூலமாக தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களோ, வேறு பிற சாதிகளின் ஒடுக்கப்பட்ட மக்களோ ஒருபோதும் முழுமையாக அடக்குமுறை, சுரண்டலில் இருந்துவிட முடியாது என்றே 40 ஆண்டு கால அனுபவங்கள் காட்டுகின்றன.


* 198788 புள்ளி விவரங்களின்படியே, நாட்டிலுள்ள 78.7 சதவிகித முற்பட்ட மற்றும் பிற்பட்ட சாதியினர், 83 சதவிகிதம் வளமான நிலத்தை உடமையாக வைத்துள்ளனர். எஞ்சியவை அரசுக்குச் சொந்தம். அற்பஅளவு நிலமும், மோசமான உழுபடை கருவிகளுமே தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களிடம் உள்ளன.


* தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களிடம் படிப்பு அதிகரித்திருந்தாலும், மற்ற சாதியினரின் வளர்ச்சி வேகத்தோடு ஒப்பிடும் போது குறைந்து கொண்டே போகிறது. ஆரம்பப் பள்ளியில் நுழையும் குழந்தைகளில் பாதிப் பேர் கூட ஐந்தாம் வகுப்பை எட்டுவதில்லை; உழைக்கப் போய்விடுகின்றன.


* 37 மத்தியப் பள்ளிகளில் உள்ள 2133 பேராசிரியர்களில் 13 பேர்தான் உண்மையான சூத்திரர்கள். மொத்தம் 23% இட ஒதுக்கீடு இருந்தும் 48% தான் அரசு வேலைகளில், அதிலும் பெரும்பான்மையாக நாலாந்தர ஊழியர்களாக உள்ளனர்.


* தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களில் 70%த்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழுகின்றனர்.


* இவர்களுக்கு எதிரான கிரிமினல் தாக்குதல்கள் மட்டும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. 198889இல் மட்டும், இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை 18,000 ஆகும். அரசுதான் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு எதிரான மிக பெரும் அளவிலான கிரிமினல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.


இட ஒதுக்கீடு ஆதரவும் சரி, எதிர்ப்பும் சரி தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் உட்பட மற்ற சகலபிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதில் தரகு அதிகார முதலாளிகள், நிலப்பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் இடம் பிடிப்பதற்கான போட்டிதான். எந்தச் சாதியினர் இடம் பெற்றாலும், இந்த எந்திரத்தைப் புரட்சியின் மூலம் அடித்து நொறுக்கி வீசிவிட்டு, உழைக்கும் மக்கள் அனைவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் இவர்களை அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூகத் துறையில் விடுவிக்கும் செயலாகும்.


அப்படிப் புரட்சிப் பாதைக்கு மக்கள் திரும்பி விடாதபடி தடுத்து, இப்போதைய அரசியல் அமைப்பிலேயே தாமும் பங்கேற்கும் உணர்வை தாழ்த்தப்பட்ட மலைவாழ், பிற்பட்ட சாதிக்கு ஏற்படுத்துவதற்கானதுதான் இட ஒதுக்கீடு என்று மண்டல் கமிஷன் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆக, புரட்சியைத் தடுக்கவும், வந்தால் ஒடுக்கவும் அரசு எந்திரத்தில் பங்கேற்பதற்காக நடக்கும் போட்டிதான் இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும் என்பதுதான் அப்பட்டமான உண்மை!


(1631 ஜனவரி 1990 இதழிலிருந்து)