Language Selection

புதிய ஜனநாயகம் 2008

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஆசியாவில் உள்ள ஜெட்டா நகரில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகள் பங்கு கொண்ட மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உருப்படியான யோசனைகள் கூட வைக்கப்படவில்லை என்ற போதும், இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எண்ணெய் விலைக்குக் காரணமான உண்மையைப் போட்டு உடைத்தார்.

 "கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகச் சூதாடிகள்தான் காரணமே ஒழிய, சந்தைக்கும் விலை உயர்வுக்கும் சம்பந்தமேயில்லை'' என்றார், ப.சிதம்பரம். அவரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், திருட்டு வழக்கில் "அப்ரூவர்'' ஆகிவிட்ட குற்றவாளியின் சாட்சியத்திற்கு நிகரானது. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும்.


ப.சிதம்பரம் மட்டுமல்ல, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியாவும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வள அமைச்சர் இன்னும் ஒருபடி மேலே போய், "மேற்காசிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் ஏகாதிபத்திய நாடுகளிடையே நடந்துவரும் போட்டியும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்'' எனக் கூறியிருக்கிறார். (பிசினஸ்லைன், ஜூலை 4).


இவ்வளவு ஏன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிரந்தர துணைக் குழுவொன்று எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை உயர்வுக்கும் சந்தை சூதாட்டத்திற்கும் இடையேயுள்ள உள்ள தொடர்பை ஆராய்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இணைய தளம் வழியாக நடைபெறும் சூதாட்ட வர்த்தகம், எண்ணெய் விலையைக் கணிசமான அளவு உயர்த்தியிருப்பதை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியம் இருப்பதாக''க் குறிப்பிட்டுள்ளது. (ஃபிரண்ட்லைன், ஜூலை 4, பக்:19)


திருடனுக்குத் தேள் கொட்டினால் அலறவா முடியும்? அதனால் அமெரிக்க அரசும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும் இந்த அறிக்கை பற்றி மூச்சு விடாமல் மூடி மறைத்துவிட்டனர். "எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் சந்தையின் தேவையைவிடக் குறைவாகக் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருவதும்; இந்தியா மற்றும் சீனாவின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருவதும்தான் விலை உயர்வுக்குக் காரணம்'' என்பதுதான் அமெரிக்காவின் வாதம். இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள் அமெரிக்காவிற்குப் பின்பாட்டு பாடி வருகின்றன.


ஒரு முழுப் பொய்யைவிட அரைகுறை உண்மை ஆபத்தானது என்பார்கள். அமெரிக்கா, கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து அளித்துவரும் விளக்கம் அந்த ரகத்தைச் சேர்ந்தது.


2007ஆம் ஆண்டில், இந்தியாவும் சீனாவும் இறக்குமதி செய்த கச்சா எண்ணெயின் அளவு, 2006ஆம் ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்தது உண்மைதான் என்றாலும், அமெரிக்காவோடு ஒப்பிட்டால், இந்தியா, சீனாவின் கச்சா எண்ணெய் நுகர்வு குறைவானதுதான். உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில், இந்தியா ஏறத்தாழ 3 சதவீதமும்; சீனா 8 சதவீதமும்தான் பயன்படுத்துகின்றன. அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இதற்கு மேல் கச்சா எண்ணெய் நுகர்வைக் கோரவில்லை. ஆனால் பொருளாதார மந்தத்தில் சிக்கிக் கொண்டுள்ள அமெரிக்காவோ உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 24 சதவீதப் பங்கை நுகர்ந்து தள்ளுகிறது.


அமெரிக்க அரசின் எரிசக்தித் தகவல் நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008ஆம் ஆண்டில் சர்வதேச கச்சா எண்ணெய் தேவை, உற்பத்தியைவிட 1.2 சதவீதம்தான் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. தேவை இவ்வளவு குறைவாக உயரும் என எதிர்பார்க்கப்படும் பொழுது, 2008ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள்ளாகவே கச்சா எண்ணெயின் விலை 140 சதவீதம் அதிகரித்துவிட்டது.


இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, தேவையைவிட உற்பத்தியைக் குறைத்துவிடுவது முதலாளித்துவ பொருளாதாரத்தில் புதிய விசயமல்ல. குறிப்பாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 200 அமெரிக்க டாலரைத் தாண்டிப் போகும் எனப் பீதி கிளப்பப்படுவதால், கச்சா எண்ணெயைத் தோண்டியெடுக்கும் நாடுகள் அனைத்துமே இந்தத் தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்தத் தில்லுமுல்லைக் கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இருப்பதைப் போல அமெரிக்கா தன்னைக் காட்டிக் கொள்வதுதான் வேடிக்கையானது.


கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியா, அமெரிக்காவின் அடியாள் என்பது உலகமே அறிந்த உண்மை. ஆனாலும், அமெரிக்கா தேவைக்கு ஏற்ப உற்பத்தியைக் கூட்டச் சொல்லி சவூதி அரேபியாவிற்குக் கட்டளை போட மறுக்கிறது. இப்படிக் கட்டளை போடுவது சுதந்திர வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றால், அமெரிக்கா தனது சொந்த நாட்டில் இதுவரை தோண்டி எடுக்காமல் இருக்கும் கச்சா எண்ணெயை எடுத்து, சந்தையில் கொட்டப் போவதாக ஒரு மிரட்டலாவது விட்டிருக்கலாம். அதையும் செய்ய மறுக்கிறது, அமெரிக்கா.


டாலர் மதிப்புச் சரிவு, பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு இன்னுமொரு தலைவலியாகத் தானே இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அமெரிக்க ஆளும் கும்பலோ கச்சா எண்ணெய் விலை உயர்வை வாராது வந்த மாமணியாகத்தான் பார்க்கிறது; வீட்டுக் கடன் பிரச்சினையால் நட்டமடைந்துள்ள அமெரிக்க வங்கிகளும், நிதி ஆதிக்கக் கும்பலும் கச்சா எண்ணெய் விலை உயர்வைப் பயன்படுத்திக் கொண்டுக் கரையேறிவிட முயலுவதால், கச்சா எண்ணெய் விலை சரிந்துவிடக் கூடாது என்றே அமெரிக்கா விரும்புகிறது.


சொல்லப் போனால், இந்த விலை உயர்வைத் தொடங்கி வைத்ததே அமெரிக்காவின் ஈராக் மீதான மேலாதிக்கப்போர்தான். ஈராக் ஆக்கிரமிப்புப் போருக்கு முன்பாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 25 டாலராக இருந்தது. இது, சனவரி 2004க்கும் ஏப்ரல் 2007க்கும் இடைபட்ட காலத்தில் 65 டாலராக உயர்ந்தது. அடுத்த ஒரே ஆண்டிற்குள் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 145 டாலரைத் தொட்டது. இவ்விலை உயர்வினால் சவூதி அரேபியா, ஈரான், ரசியா, நைஜீரியா, குவைத் உள்ளிட்ட எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மட்டுமல்ல, எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும் கொழுத்த இலாபம் அடைந்து வருகின்றன.


உலக எண்ணெய் வளத்தில் ஏறத்தாழ 25 சதவீதப் பங்குகள் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் எக்ஸான்மொபில் என்ற நிறுவனத்திற்கு மட்டும், உலகின் 21 நாடுகளில் எண்ணெய் வயல்கள் சொந்தமாக உள்ளன. சவூதி அரேபியா ஒவ்வொரு நாளும் 1 கோடி பீப்பாய் எண்ணெயைத் தோண்டி எடுக்கிறது என்றால், எக்ஸான்மொபில் பல்வேறு நாடுகளில் உள்ள தனது எண்ணெய் வயல்களில் இருந்து ஏறத்தாழ 68 இலட்சம் பீப்பாய் எண்ணெயை உறிஞ்சிக் கொட்டுகிறது. எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவின் ஆதிக்கம் நிலவுவதைச் சுட்டிக் காட்டும் சிறிய உதாரணம் இது. எதிர்காலப் பயன்பாட்டுக்காக, அமெரிக்கா, தனது நாட்டிலுள்ள எண்ணெய் வயல்களைப் பயன்படுத்தாமல், பாதுகாத்து வருவது தனிக்கதை.


எண்ணெய் விலையேற்றத்தால், எக்ஸான்மொபிலின் கடந்த ஆண்டு இலாபம் நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. எக்ஸான்மொபில், செவ்ரான்க்ராப், கோங்கோபிலிப்ஸ் உள்ளிட்ட அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்க அரசிற்கு கடந்த ஆண்டு வரியாக மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாயைக் கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.


சவூதி அரேபியாவிற்கு அடுத்து எண்ணெய் வளம் நிறைந்த நாடு ஈராக்தான். ஈராக்கில், இன்னும் கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் வளம் ஏராளம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சதாம் ஆட்சியின்பொழுது, நாட்டுமையாக்கப்பட்டிருந்த எண்ணெய் வயல்கள், ஈராக் ஆக்கிரமிப்புப் போருக்குப் பிறகு அமெரிக்கமயமாக்கப்படுகின்றன. போரில் சதாமை வீழ்த்தி பாக்தாத் நகருக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள், சதாம் பதுக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்பட்ட பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தேடி அலையவில்லை. மாறாக, ஈராக்கின் எண்ணெய் அமைச்சரவை அலுவலகத்திற்குள் நுழைந்து அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டன. "ஷெல்'' எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிலிப் கரோலை எண்ணெய் அமைச்சரவையின் ஆலோசகராக நியமித்தது, அமெரிக்கா.


ஈராக்கில், குர்து இன மக்கள் வாழும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக 20 ஒப்பந்தங்களை அமெரிக்கா போட்டுக் கொண்டுள்ளது. தற்பொழுது ஈராக்கின் தெற்கே, சன்னி மற்றும் ஷியா முசுலீம்கள் வாழும் பகுதிகளில் உள்ள மிகப் பெரும் எண்ணெய் வயல்கள், அமெரிக்காவின் எக்ஸான்மொபில், ஷெல்; பிரிட்டனின் பிரிட்டிஷ் பெட்ரோலியம்; அமெரிக்கபிரான்சு கூட்டு நிறுவனமான டோட்டல் ஆகிய நான்கு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன.


இந்த எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுக்க ரசியா, சீனா, இந்தியா உள்ளிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 46 நிறுவனங்கள் ஈராக் பொம்மை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தன. ஆனால், இந்த நான்கு நிறுவனங்களைத் தவிர்த்து, பிற நாட்டு நிறுவனங்கள் போட்டியிட அனு மதிக்கப்படாமல், குத்தகை முடிவு செய்யப்பட்டது. ஈராக் பொம்மை அரசு இந்த நான்கு நிறுவனங்களுக்குத் தர வேண்டிய இலாப ஈவுத் தொகை, தொழில்நுட்ப ராயல்டி தொகை ஆகியவற்றைப் பணமாக இல்லாமல், கச்சா எண்ணெயாகத் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


இப்படிப்பட்ட நிலையில், கச்சா எண்ணெயின் விலை மீண்டும் பழைய நிலைக்கு — ஒரு பீப்பாய் 25 அமெரிக்க டாலருக்கு உடனடியாகச் சரிந்துவிட அமெரிக்கா அனுமதிக்குமா? "தற்பொழுது புழக்கத்திலுள்ள எண்ணெய் வயல்கள் அனைத்தும் வயது முதிர்ந்து விட்டன; அதனால் உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமில்லை'', "உலகின் எண்ணெய்த் தேவையும் உற்பத்தியும் உச்சத்தை எட்டிவிட்டன; அதனால் உற்பத்தியை இதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை'', "புதிய எண்ணெய் வயல்களைக் கண்டுபிடிப்பதும், உருவாக்குவதும் உடனடியாக சாத்தியமில்லை'', எனப் பல்வேறான ஆய்வு அறிக்கைகளை மாற்றி மாற்றி வெளியிடுவதன் மூலம், கச்சா எண்ணெய் சந்தை ஒரு பரபரப்பு நிலையிலேயே இயங்க வைக்கப்படுகிறது. இதன் மூலம், கச்சா எண்ணெயின் விலை தடாலடியாகச் சரிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது.


குறிப்பாக, கச்சா எண்ணெய் மீது நடைபெற்று வரும் முன்பேர ஊக வாணிபம் இரண்டு வழிகளில் அமெரிக்காவுக்குப் பயன்படுகிறது. செயற்கையாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயின் விலை, தடாலடியாகச் சரிந்து விடாமல், ஊக வாணிபம் மூலம் முட்டுக் கொடுக்கப்படுகிறது. இரண்டாவதாக, வீட்டுக் கடன் பிரச்சினையில் சிக்கி நட்டமடைந்துள்ள அமெரிக்க வங்கிகளும், பல்வேறு நிதி நிறுவனங்களும் உடனடி இலாபம் ஈட்டுவதற்கான வழியாக இதனைத் தேர்ந்து எடுத்துள்ளன.


எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மீது நடைபெறும் முன்பேர வர்த்தகத்தின் மதிப்பு ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை 1,300 கோடி அமெரிக்க டாலராக (ரூ. 62,000 கோடி) இருந்தது. அது, இன்று ரூ. 10,40,000 கோடி ரூபாயாக வீங்கிப் போய் விட்டது. இந்த வீக்கம்தான், 60 சதவீத கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. (தி ஹிந்து, 3.7.08)


அத்தியாவசியப் பண்டங்களின் மீது நடைபெறும் இந்த முன்பேர வர்த்தகம், அமெரிக்காவின் நியூயார்க் வாணிபச் சந்தையிலும்; இலண்டனில் உள்ள "இண்டர்காண்டினேன்டல் சந்தையிலும்'' தான் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு சந்தைகளும் கடுமையான கண்காணிப்புக்கு உட்படாமல், "சுதந்திரமாக'' இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், எந்தெந்த நிறுவனங்கள் ஊக வாணிபத்தில் பங்கு பெறுகின்றன? எவ்வளவு இலாபம் சம்பாதிக்கின்றன? என்பதெல்லாம் மர்மமாகவே இருப்பதாக முதலாளித்துவ பத்திரிகைகளே புலம்புகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, சிட்டி குரூப், ஜே.பி.மார்கன் சேஸ் ஆகிய நான்கு நிதி நிறுவனங்கள்தான் இந்தச் சூதாட்டத்தில் பெரும் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.


இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே நடைபெற்று வருவது, அமெரிக்காவுக்கு மிகவும் சாதகமான அம்சம். எண்ணெய் வர்த்தகம் மூலம் அரபு ஷேக்குகளுக்குக் கிடைக்கும் அமெரிக்க டாலரின் பெரும்பகுதி, அமெரிக்க வங்கிகளிலும், அமெரிக்க அரசு வெளியிடும் பத்திரங்களிலும் தான் முதலீடு செய்யப்படுகிறது. "பெட்ரோ டாலர்'' என்று அழைக்கப்படும் இந்த முதலீடு, அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் கேடயமாகப் பயன்படுவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. எனவே, அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்துப் புலம்புவதெல்லாம் வெறும் நாடகம்தான். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையை 200 அமெரிக்க டாலராக ஊதிப் பெருக்க வைப்பதுதான் அமெரிக்காவின் உள்ளார்ந்த நோக்கம்!


· ரஹீம்