கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், அரசும் தனியார் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு ஒரு மாற்றுப் பாதையை காட்டுவதாகப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள், பாரம்பரிய உணவு மற்றும் தானிய உற்பத்தியில் உள்ள நிலங்களில் இம்மண்ணுக்கே அறிமுகம் இல்லாத புதிய பயிர்களையும் மற்றும் ஏற்றுமதிக்கான பயிர்களையும் விவசாயம் செய்ய வழிகாட்டுதல் கொடுக்கின்றன.
இதை விவசாய விஞ்ஞானிகள் பன்முகப் பயிர் (Crop diversification) விவசாயம் என்கிறார்கள். பன்முக விவசாயத்தை மேற்கொள்வதே விவசாயிகளை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள். இதனடிப்படையில் மைய விவசாய அமைச்சர் சரத்பவார், "கோதுமை, அரிசி உற்பத்தியைக் குறையுங்கள்; மாற்றுப் பயிர்களைப் பயிரிடுங்கள்'' என விவசாயிகளைப் பார்த்து அறிவுரை கூறி வருகிறார்.
இந்த மாற்றுப் பயிர் விவசாயத்திற்கு அடிக்கல் நாட்டியது பா.ஜ.க. கூட்டணி அரசு. மாற்றுப்பயிர் விவசாயத்தை ஜூலை 8, 2004 அன்று தேசியத் தோட்டகலைத் திட்டத்தின் ஊடாக (National horiculture Mission-NHM) அமல்படுத்தியது. இத்திட்டத்தின் அடிப்படையில் பழங்கள், காய்கள், வாசனைப் பொருட்கள், மருத்துவச் செடிகள், மலர்கள், தென்னை, பாக்கு, முந்திரி, கோக்கோ, ஹெர்கின், நெல்லி, காட்டாமணக்கு, சர்க்கரைச் சோளம், மற்றும் பல்வேறு புதிய வகைப் பயிர்கள் பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இத்தகைய பயிர்களை வல்லுனர்கள் "தோட்டப்பயிர்'' என்று வரையறுத்துள்ளனர். மேலும் இந்தப் புதிய திட்டத்தைத் தவிர, கடந்த 20 ஆண்டுகளாக ஏற்றுமதிக்கான விவசாயத்தையும் அரசு முன்னுக்குத் தள்ளி வருகிறது.
இவற்றின் விளைவாக 1990 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் உணவு மற்றும் சிறு தானிய உற்பத்தியிலிருந்த 72.7 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் மாற்றுப் பயிர் தோட்டப்பயிர் விவசாயத்திற்காகத் திருப்பப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 7.6 லட்சம் ஹெக்டேர் நிலம் தோட்டப் பயிர்களுக்கென மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 1991இல் 1.02 லட்சம் டன் பழங்களை ஏற்றுமதி செய்த இந்தியா இப்பொழுது 5 லட்சம் டன்னுக்கு மேல் ஏற்றுமதி செய்கிறது.
இதைத் தவிர, ஏற்றுமதிக்கு என்றே உருளை, கத்திரி, வெங்காயம், தக்காளி, பூசணி போன்றவையும் உற்பத்தி செய்யப்பட்டு, மேலை நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் தற்சமயம் உற்பத்தியாகும் 1,570 லட்சம் டன் தோட்டப் பயிர்களை 2011இல் 3,000 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நிறைவு செய்வதற்காக தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் 1,100 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 18 மாநிலங்களில் (தமிழகம் உட்பட) 418 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேலும் பல இலட்சக்கணக்கான விவசாய நிலங்கள் தோட்டப்பயிர்களின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.
இன்னொரு பக்கம், கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் ஏற்படும் இடுபொருட்களின் விலையேற்றம், தொடர்ச்சியான நட்டம் மற்றும் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக, பெரிய விவசாயிகள், சிறிய விவசாயிகள் என்ற வேறுபாடின்றி எல்லோரும் தோட்டப்பயிர் விவசாயத்தில் இறங்கியுள்ளனர். இன்னும் குறிப்பாகக் கூறினால், மூன்று மாத அல்லது 6 மாத குறுகிய காலப் பயிரை விட்டுவிட்டு, நிலத்தில் ஆண்டாண்டு காலமாய் நிற்கும் பயிர்களைத் தேர்வு செய்கின்றனர். இப்பயிர்களுக்கு ஆரம்பத்தில் மட்டும் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது; அதேசமயம், அன்றாடப் பராமரிப்புக்கு விவசாயக் கூலியாட்கள் தேவைப்படுவதில்லை. இந்த பின்னணியில் மா, சப்போட்டா, நெல்லி, தென்னை, பாக்கு, தேக்கு, சவுக்கு, மூங்கில், அகத்தி, தீக்குச்சி மரம், யூகலிப்டஸ் மற்றும் சந்தன மரம் போன்ற பயிர்கள், உணவு மற்றும் சிறுதானிய உற்பத்திக்கான விளைநிலங்களையும், எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைக்கான உற்பத்தி நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றன.
ஒரு பக்கம் ஏற்றுமதிக்கான தேசிய தோட்டக்கலைத் திட்டம்; மறுபுறம் உலகமயமாக்கலால் விவசாயத்தில் ஏற்படும் நெருக்கடியினால் விவசாயத்தில் (குறிப்பாக பயிர்களில்) ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், உணவுப் பற்றாக்குறையை நோக்கி நாட்டைத் தள்ளி வருகின்றன.
1993-94இல் மலர் சாகுபடி வெறும் 53,000 ஹெக்டேர் நிலத்தில் நடந்து வந்தது. இது தற்சமயம் 1,16,000 ஹெக்டராக விரிவடைந்துள்ளது. தற்சமயம் ஒட்டு மொத்த மலர் சாகுபடியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் கொய் மலரை ஏற்றுமதி செய்வதற்காக 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. 1993-94இல் 18.83 கோடி ரூபாயாக இருந்த கொய் மலர் ஏற்றுமதி, 200607இல் 400 கோடி ரூபாயாக விரிவடைந்துள்ளது. ஓசூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கொய்மலர் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் கொய் மலர்கள் பெங்களூரு வழியாக ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
'90களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹெர்கின் (வெள்ளரிக்காயைப் போன்றது), கர்நாடக மாநிலத்தில் மட்டும் 41,600 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. இந்த ஹெர்கின் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதில்லை. முழுக்க முழுக்க ஏற்றுமதிக்குத்தான். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் ஹெர்கினை ""வினிகர்'' என்றழைக்கப்படும் திரவத்தில் ஊற வைத்து ஊறுகாய் போல் சாப்பிடுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாமக்கல், சேலம் மற்றும் துறையூர் போன்ற பகுதிகளில் ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையில் ஹெர்கின் பயிரிடப்பட்டது. இந்த பகுதிகளில் செயல்பட்ட ஒப்பந்த விவசாய நிறுவனம் கொள்முதல் செய்து கொள்வதாக வாய்மொழி உத்தரவாதம் கொடுத்திருந்தது. ஆனால், உற்பத்தியான ஹெர்கினை கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நட்டமடைந்தனர்.
இந்திய அளவில் 80களின் ஆரம்பத்தில் வெறும் 3,000 ஹெக்டேராக இருந்த நெல்லி விவசாயம், தற்சமயம் 50,000 ஹெக்டேருக்கு மேல் விரிவடைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 5,500 ஹெக்டேர் நிலம் நெல்லி உற்பத்தியின் கீழ் உள்ளது. வீட்டுத் தேவைக்காக வளர்க்கப்பட்ட சப்போட்டா செடி இன்று 2,800 ஹெக்டேருக்கு மேல் பயிரிடப்படுகிறது. இதைத்தவிர தான்தோன்றித்தனமாக சில நிறுவனங்கள் பேரிச்சம்பழம் பயிரிட விவசாயிகளை வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் சுமார் 2000 ஏக்கர் பரப்பில் பேரிச்சம்பழம் பயிரிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மல்லசமுத்திரம் மற்றும் அதனை ஒட்டிய கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் இப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.
காட்டாமணக்கு, சக்கரைச் சோளம் போன்ற பயிர்கள் பயோ டீசலுக்காக நாடெங்கும் பரவலாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. மத்தியமாநில அரசுகள் பல லட்சக்கணக்கான விவசாய நிலங்களை மேற்குறிப்பிட்ட பயிர்களுக்குத் திருப்பி விடத் திட்டம் போட்டுள்ளன. பொதுவாக இந்தத் தோட்டப்பயிர்கள் விவசாயத்தில், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பான்மையான தோட்டப்பயிர் விவசாயம், ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. நெஸ்ட்லே, ஐடிசி, பெப்சிகோ, பாரதி ரிலையன்ஸ், டாடா மற்றும் பல நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தை மேற்கொள்கின்றன. ஒப்பந்த விவசாயத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு இந்நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைகளைக் கொடுப்பதில்லை என்பது நாடறிந்த உண்மையாகும். இதைத் தவிர ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் அதிக இலாபத்தைச் சுருட்டுவதற்காக, ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வட்டாரத்தில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஒரு குறிப்பிட்ட பயிரைப் பயிரிட விவசாயிகளை நிர்பந்திக்கின்றன. இதனால் விவசாயத்தின் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு, நிலம் சத்தின்றி மலடாகிப் போவதும் நிலத்தடி நீர் வரையின்றி உறிஞ்சப்படுவதும் தொடர்கிறது. மேலும் அளவுக்கு மீறிப் பூச்சி மருந்து, களைக்கொல்லி மருந்து, பூ பூக்க மருந்து, காய் கனியாக மருந்து மற்றும் இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நிலமானது உடனடியாகச் சீரமைக்க முடியாத அளவுக்கு நஞ்சாகிப் போகின்றது.
இப்படிப்பட்ட ஒப்பந்த விவசாய நிறுவனங்களுக்கு தேசியத் தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் 26.91 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவும் குளிர்சாதன வசதியும் கொண்ட 596 கிடங்குகளை அமைக்க 192 கோடி ரூபாயை மத்திய அரசு மானியமாகக் கொடுத்துள்ளது. இதைத் தவிர, தோட்டபயிர் விவசாயத்தில் கிடைக்கும் கொள்ளை இலாபத்தைக் கண்ட பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் 800 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
உலகமயமாக்கலின் பின்னணியில் விவசாயத்திற்கு வந்த தொடர் நெருக்கடிகள், இந்திய அரசின் ஏற்றுமதிக்கான விவசாயக் கொள்கை மற்றும் அதன் தொடர்ச்சியாக தேசிய தோட்டக்கலை திட்டம் ஆகியவை நெல், கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, மொக்கை சோளம் போன்ற பெருந்தானியங்களையும், தினை, வரகு, குதிரை வாலி, பனி வரகு, சாமை போன்ற சிறுதானியங்களையும் அவரை, துவரை, மொச்சை, காராமணி, கொத்தவரை, கொள்ளு, நரிப்பயிறு, குத்துகடலை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களையும் பெரும்பான்மையான எண்ணெய் வித்துக்களையும் விவசாயிகளிடமிருந்தும், நிலங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி விட்டன.
இப்பொழுது இந்திய அரசால் முன்வைக்கப்படும் திட்டம் நகரத்தின் மேட்டுக்குடிகளுக்கும், மேலை நாடுகளின் உணவு மற்றும் நுகர்வுக்கும் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் தற்போதைய அரைகுறையான உணவுப் பாதுகாப்பை மேலும் சிக்கலாக்கும். இந்திய மக்கள், தமது உணவுக்காக அந்நிய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படும் அபாயத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
· சுடர்