அண்மையில் ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தின் ஜட்செர்லா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 விவசாயிகள் சுயேச்சைகளாகக் களமிறங்கினர். அவர்கள் தேர்தலில் நின்றது சட்டசபைக்குச் செல்வதற்கு அல்ல. சிறப்புப்பொருளாதார மண்டலம் எனும் பேரால் தங்கள் நிலம் பறிக்கப்பட்டதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவே இத்தேர்தலில் நின்றனர். 8 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளைப் பிரித்து இதற்கு முந்தைய தேர்தலில் வென்ற தெலுங்கானா ராஷ்டிர சமிதியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியுள்ளனர்.


ஜட்செர்லா தொகுதியில் இருக்கும் போலபள்ளி, முதுரெட்டிபள்ளி ஆகிய இரண்டு ஊர்களில் கிட்டத்தட்ட 1,000 ஏக்கர் வரை மருந்து ஆலைகளுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ அரசே நிலத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டது.


2003ஆம் ஆண்டில் "பசுமைப்பூங்கா' அமைப்பது என்ற பெயரில் நில அளவை ஆரம்பிக்கப்பட்டதும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் திரண்டெழுந்து சாலைமறியல் செய்தனர். தலைநகர் வரை போராட்டத்தை எடுத்துச் சென்று சட்டசபை முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 2005ஆம் ஆண்டில், "பசுமைப்பூங்கா' என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரோபந்தோ பார்மா எனும் மருந்துக் கம்பெனிக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் போலபள்ளி கிராம நிலத்தின் சந்தை மதிப்போ ரூ. 20 லட்சத்தும் மேல். ஆனால், இழப்பீடாக ஏக்கருக்கு வெறும் 18 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் அதிகார வர்க்கம் மோசடி செய்து ஏய்த்தது போக, பாதிக்கும் குறைவான தொகைதான் பலருக்கு கிடைத்துள்ளது.


போலபள்ளியில் மட்டும் 300 குடும்பங்கள் அரோபந்தோ மருந்து ஆலைக்காக தாங்கள் குடியிருக்கும் வீட்டைத் தவிர, அனைத்து நிலங்களையும் இழந்து விட்டன. இக்குடும்பங்களில் யாராவது இறந்தால் புதைக்கக் கூட அவர்களுக்கு அங்கே இடமில்லை.


1966ஆம் ஆண்டிலிருந்து இது வரை 42 லட்சம் ஏக்கர் நிலங்களை நிலமில்லாத ஏழை மக்களுக்கு வழங்கி இருப்பதாக ஆந்திர அரசு சொல்லி வந்துள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட நிலம் விற்கப்பட முடியாதது என்பதை மையமாகக் கொண்டு 1977ஆம் ஆண்டு "சட்டவிதி 9''ஐக் கொண்டுவந்தது. தமிழ்நாட்டின் பஞ்சமி நிலங்களைப்போல ஆந்திர விவசாயிகளுக்கு இச்சட்டப்பாதுகாப்பு அமைந்திருந்தது.
ஆனால், வலக்கையால் கொடுத்து இடக்கையால் பிடுங்கிக் கொண்ட கதையாக, "சட்டவிதி 9'' ஐயும் அவசரமாகத் திருத்தி, சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பெயரால் தடையின்றி நிலங்களை பறிக்க ஆளும் காங்கிரசு அரசு வகை செய்து விட்டது. இந்தத் திருத்தத்தின்படி அரசு வழங்கிய நிலங்களில் நெடுநாள் பயனின்றிக் கிடக்கும் நிலங்களையும், வேறொருவருக்குக் கைமாற்றப்பட்ட நிலங்களையும் வாங்கவும் விற்கவும் முடியும்.


இப்படித் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு நிலங்கள் வழங்கிவிட்டதாகப் பெருமை பேசிவந்த அரசே அந்நிலங்களைப் படுங்கவும் வழி செய்துள்ளது. போலபள்ளியில் நெல், கம்பு, மிளகாய், கொள்ளு ஆகிய பயிர்கள் எல்லாம் விளைந்து கொண்டிருந்த நிலங்களை பயனில்லாத நிலங்கள் என்று அரசு மோசடியாக அறிவித்துத்தான், நிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குக் கைமாற்றப்பட்டன.


நிலங்களை இழந்தவர்கள் அற்ப சொற்ப தொகையை மட்டுமே இழப்பீடாகப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாற்றிடமும் தரப்படவில்லை. இழப்பீட்டை அதிகமாக்கித் தர அவர்கள் கோரியபோது, "கொடுக்கும் காசோலைகளை இப்போதே வாங்கினால் உண்டு. தாமதித்தால் இதுவும் கிடைக்காது'' என்று அச்சுறுத்தப்பட்டனர். பதினைந்து ஆண்டுகாலமாக, கிடைத்த நிலத்தை வைத்து ஏதோ வாழ்க்கைப்பாட்டை ஒப்பேற்றி வந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இன்று நிலமற்ற கூலிகளாக வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர்.


நேற்றுவரை தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தை இழந்து, இன்று அதே நிலத்தில் அவர்கள் சிறப்புப் பொருளாதார மண்டல திட்டப் பணிகளுக்காகக் கூலி வேலை செய்கின்றனர். கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு அவர்களுக்கு அங்கு கூலி வேலை கிடைக்கவும் வாய்ப்பல்லை. சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் நிலங்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலை கொடுக்கப்படும் என்ற உறுதிமொழிகூட இன்றுவரை பின்பற்றப்படவில்லை. 2005க்குப் பின்னர் 41 பேர் வரை அக்குடும்பங்களில் இயற்கைக்கு மாறான மரணத்தைத் தழுவியுள்ளனர். இதுவரை மாரடைப்பென்றால் என்னவென்றே அறியாத அந்த உழைப்பாளிகள் மாரடைப்பாலும், நிலம் பறிக்கப்பட்டதைச் சகிக்க முடியாமல் தற்கொலை செய்தும் மாண்டுள்ளனர். அவர்களின் பிணங்களைப் புதைக்க ஆறடி நிலம் கூட அவர்களிடம் இல்லை.


"போலபள்ளி சிறப்புப் பொருளாதார மண்டல வியாதிரேகா அய்க்கிய சங்காதனா'' எனும் அமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்த நிலமிழந்த குடும்பங்கள், தங்கள் பிரச்சினையை இந்தியாவெங்கும் தெரிவிக்கத் தேர்தலும் ஒரு வழி என்று கருதினர். அவர்களில், தேர்தல் முன்தொகைப் பணம் (ரூ. 10 ஆயிரம்) கட்ட வாய்ப்பு வசதி கொண்ட 13 பேர்கள் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்து, நிலம் பறிக்கப்பட்ட விசயத்தையே தேர்தல் பிரச்சாரமாக்கினர்.


தேர்தல் முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் போலபள்ளி மக்களுக்கு 10 ஏக்கர் நிலத்தை மட்டும் திருப்பித் தந்திருக்கிறார். அந்த நிலத்தில்தான் இப்போது இறப்பவர்களைப் புதைக்கின்றனர்.


தேர்தலில் நின்றதால் மக்களிடையே அனுதாபம் மட்டுமே உருவானது. அந்த அனுதாபமும் 8,000 வாக்குகளாக மாற்றப்பட்ட பின்னர் கரைந்து போனது. தங்களை வாழவைக்கும் நிலத்தை மீட்கப் போராடினால், இறந்தவர்களைப் புதைக்க மட்டும் நிலம் கொடுக்கிறது அரசு.


போலி ஜனநாயகத் தேர்தல்களைப் புறக்கணித்துப் போராடி வரும் நக்சல்பாரிகள் உட்பட பல அமைப்புகளையும், தேசிய நீரோட்டத்திற்கு அழைக்கின்றன ஓட்டுக்கட்சிகள். போலபள்ளி மக்களும் அந்த நீரோட்டத்தின் கையாலாகாத்தனத்தை தங்கள் அனுபவத்தால் உணர்ந்து விட்டனர். இனி அவர்களுக்கு இருப்பது ஒரே வழிதான். அதுதான் சிறப்புப்பொருளாதார மண்டலத்தையும், அதனைக் கொண்டுவந்த தனியார்மயம் தாராளமயத்தையும் துரோக ஆட்சியாளர்களையும் விரட்டியடிக்கும் புரட்சிகர போராட்டப் பாதை!


· செங்கதிர்