மனிதவினம் தன்னைத்தான் கற்றுக் கொள்ளவும், தனக்காக போராடவும், அதை எப்படி போராடுவது என்பதையும், நேபாள மாவோயிஸ்டடுகள் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட்டுகள்) நடைமுறையில் உலகிற்கே நடைமுறைப்படுத்தி காட்டுகின்றனர். உலகமே அதிரும் வண்ணமும், ஏகாதிபத்தியங்களை பதைபதைக்க வைத்தும்,
இந்திய பிராந்திய விஸ்தரிப்புவாதிகள் பீதிகலந்து மிரள வைக்கின்றார்கள், அடுத்த நேரக் கஞ்சிக்கே வழியற்ற நேபாள ஏழைக் கிராமவாசிகள். ஒரு வரலாற்று புகழ்மிக்க ஒரு வர்க்கப் போராட்டத்தையே நடத்திக் காட்டுகின்றனர்.
பார்ப்பான இந்து பாசிட்டுகளின் இந்து இராச்சியமாக, இந்து வெறியர்களால் பாதுகாக்கப்பட்ட நேபாள மன்னனின் ஆட்சி உழைக்கும்மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றது. நேபாள மக்களை சாதிகளாக பிளந்து, வர்க்கங்களாக அடக்கியாண்ட இந்து பார்ப்பான பாசிட்டுகளின் கோட்டைகள் கொத்தளங்கள் இந்திய துணைக்கண்டத்தினையே அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது. இது ஈழத்தில் நடக்கவில்லை தான். இராணுவமும் பொலிஸ்சும் இணைந்த அதிகார வர்க்க குண்டர் படையைக் கொண்டு, நேபாள மக்களையே ஒடுக்கியாள நினைக்கும் இந்து மன்னனின் அதிகாரம் இன்று மாவோயிஸ்ட்டுகளின் ஒவ்வொரு நகர்விலும் ஆட்டம் காண்கின்றது.
மிக குறுகிய காலத்தில் எதிரியை தனிமைப்படுத்தி, மாபெரும் மக்கள் சக்;தியை திரட்டுவதில் மாவோயிஸ்ட்டுகள் கையாண்ட யுத்ததந்திரம், எதிரியை துல்லியமாக தனிமைப்படுத்தியதில் வெற்றி கண்டது. எதிரிக்கு எதிராக எதிரியின் போக்கில் நெழிவு சுழிவான போக்கையே கையாண்டு, எதிரியின் உள்நாட்டு நண்பர்களையே எதிரிக்கு எதிராகவே நிறுத்தினர். எதிரியை திட்டமிட்ட வகையில் தனிமைப்படுத்துவதில், மிக நுட்பமான யுத்ததந்திரத்தை கையாண்டு, பொது எதிரிகளுக்கு இடையிலுள்ள முரண்பாட்டைக் கூட கையாள்வதில் முரணற்ற வகையில் மக்களைச் சார்ந்து இருந்தனர்.
மக்கள் சக்தி என்ற அடிப்படையில், மக்களின் நலன்களை கையாள்வதில், அவர்களுக்கு இடையிலான சமூக முரண்பாட்டைக் கையாள்வதில், மாவோயிஸ்ட்டுகளின் யுத்ததந்திரம் புரட்சிகர வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னுதாரணமாக மாறிவிட்டது. குறுகிய இராணுவ வாதங்கள் அற்ற, இராணுவம் அரசியல் அதிகாரத்துகான ஒரு கருவி என்ற வகையில் அதை நுட்பமாகவே கையாண்டனர். இந்த கல்வியை குறிப்பாக பீகார் மாவோயிஸ்ட்டுகளும், ஆந்திரா மக்கள் யுத்த குழுவும் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படையான அரசியல்பாடமாக அவர்கள் முன்னுள்ளது. வெற்றிகரமான மக்கள் திரளை மக்களின் சொந்த நடவடிக்கைக்கு ஊடாகவே, ஒரு சமூகப் புரட்சியாக உருவாக்கி, ஆயுதம் ஏந்திய ஒரு மக்கள் போராட்டமாக மாற்றுவது அவர்கள் முன்னுள்ள அரசியல் கடமையாகவுள்ளது.
அனைத்து அரசியல் அதிகாரத்தையும் கையில் குவித்து வைத்திருந்த இந்து பார்ப்பனிய மன்னர் ஆட்சியை, தூக்கியெறிவது என்ற குறைந்தபட்ச அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தினர் மாவோயிஸ்ட்டுகள். எதிரிகளுக்கு இடையில் உள்ள இந்த அரசியல் முரண்பாட்டையும், அரசியல் அதிகாரம் சார்ந்த இழுபறியையும், ஒரு மக்கள் போராட்டமாக மாற்றியதன் மூலம், எதிரிகளையும் எதிரிக்கு எதிராக திருப்பினர். மொத்த மக்களையும் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு மாவோயிஸ்ட்டுகள் இட்டுச் சென்றனர். வழிபாட்டுக்குரிய புனிதமாக போற்றப்பட்ட மன்னனை எதிர்த்து, மக்களை வீதியில் அரசியல் உணர்வுடன் இறங்க வைத்தனர். மேற்கு அல்லாத நாடுகளில், இது புதியதொரு அத்தியாயமாகும்.
மிகக் கடுமையான அடக்குமுறையை மீறி ஏழை எளிய மக்கள் நடாத்திய போராட்டம் நேபாள எதிரியை மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களையும் இந்திய வல்லரசையுமே பீதிக்குள்ளாக்கியுள்ளது. அவசரமான இந்தியாவின் தலையீட்டுடன் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை; வேறுவழியின்றி ஏற்ற மன்னன் தான் பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவதாக கூறி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் பிளவை ஏற்படுத்த முனைந்தார். ஆனால் மன்னர் ஆட்சி ஒழிக, புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் பதிலடியாக உறுதியாக வைத்ததன் மூலம், எதிரியின் மோசடியை தகர்த்தனர், தகர்த்து வருகின்றனர். இதன் மூலம் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றது. மன்னர் ஆட்சியை இல்லாது ஒழித்தல், புதிய அரசியல் சட்டவமைப்பை உருவாக்குதல் என்ற அடிப்படையிலான மாவோயிஸ்ட்டுகளின் யுத்ததந்திரம், எதிரி வர்க்கத்தின் அனைத்து சமரசப்பாதைகளையும்; தவுடுபொடியாக்கி வருகின்றது.
ஆளும் அதிகார வர்க்கங்களும், சுரண்டு வர்க்கங்களும் செய்யும் மக்கள் விரோத சூழச்சிகளே இந்த ஜனநாயக அமைப்பின் அரசியல் உள்ளடக்கம் என்பதை, மக்கள் சொந்தமாக புரிந்து கொள்ளும் வகையில் மாவோயிஸ்ட்டுகள் போராட்டத்தை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த ஜனநாயக அமைப்பின் ஊடாக மக்களின் நலனைப் பேணமுடியும் என்ற மாயையை, மாவோயிஸ்ட்டுகள் அவர்கள் விரும்பும் அரசியல் வழியில் நகர்த்தி தகர்க்க முற்படுகின்றனர். யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை என போலி ஜனநாயகத்தின் அனைத்து வகையான மூகமுடியையும் சந்திக்கு இழுத்து, மக்களின் சொந்த ஆட்சியை நிறுவும் வாக்கப் போராட்டத்தை நடைமுறையில் நகர்த்துகின்றனர்.
நோர்வே தன்னை நடுநிலையாளனாக காட்டி, கட்டிவிடும் கோவணமும் சாக்கடையில் இருந்து பெறப்பட்டதே
இந்த நிலையில் தான் நோர்வே பேச்சுவார்த்தையின் மதியஸ்த்தராக ஈடுபடவுள்ளதாக அறிக்கைள் வெளிவந்துள்ளது. உலகமயமாதலில் நோர்வேயின் பாத்திரம் என்பது சமாதான வேஷம் போட்டு, கறைபடியாத நடுநிலையாளனாக நடிப்பதே. இங்கு நோர்வேயின் உலகமயமாதல் வேஷம், அரசுக்கு எதிரான குழுக்களை ஆதரிப்பது போன்ற பொதுநிலை எடுத்து அவர்களை கருவறுப்பதேயாகும்;. அரசுக்கு எதிரான ஆயுமேந்திய ஒரு குழுவாக இருப்பதை இல்லாதாக்குவதாகும்;. இதற்கு ஏற்ப சலுகைளை வாரிவழங்கி, அரசியல் ரீதியாக சிதைந்து போவதை பலவழிகளில் கையாள்வதையே அடிப்படையாக கொண்டது. புதிதாக தனது கோவணத்தில் ஒன்றை, அவர்களுக்கு கட்டிவிடுவது தான்.
இன்று உலகமயமாதலின் சர்வதேச நிகழ்ச்சி போக்குகள் இயல்பிலேயே ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாக மாறி வருகின்றது. மோதல்கள் படிப்படியாக ஏகாதிபத்திய எதிர்ப்பாக உள்ளடகத்தில் மாறுவதினால் அல்லது ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு இடைஞ்சலாக இருப்பதால், ஏகாதிபத்தியங்களின் மத்தியஸ்தம் என்ற பெயரில் அரசை ஆதரித்தபடி தலையிட முடியாதுள்ளது. இந்த நிலையில் தான் நோர்வேயின் அரசியல் பாத்திரம் ஏகாதிபத்தியத்தால் திடட்மிட்டு உருவாக்கப்பட்டது.
இது ஒப்பீட்டளவில் தன்னார்வக் குழுக்களின் அரசியல் பாத்திரத்தையே, ஒரு அரசாக வகிக்கின்றது. அரசு சாராத தன்னார்வக் குழுக்கள் திட்டமிட்டு ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, அதற்கு தாராளமாக பணம் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு, அதன் மூலம் மக்களின் சொந்தமான சுயாதீனமான போராட்டங்களை சிதைக்கின்றனர். இதையொத்த அரசியல் பாத்திரத்தையே, சமாதான வேஷம் போட்டு சிதைக்க, ஏகாதிபத்தியத்தால் நோர்வே உருவாக்கப்பட்டுள்ளது. தன்னார்வக் குழுக்களை எடு;த்தால் ஏகாதிபத்தியம் வழங்கும் பணத்தில், அரசுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் போராடுவதாக கூறி, மக்களின் சொந்தப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் அழிவின்றி போராட வழிகாட்டுவது இதன் யுத்த தந்திரம் தான் ஏகாதிபத்தியத்துக்கு தேவையானது.
இதையும் மீறி போராட்டம் வளரும் போது தான், நோர்வேயின் தலையீடு ஏகாதிபத்தியத்தால் புகுத்தப்படுகின்றது. உலகளாவிய மோதல்களில் நோர்வேயின் தலையீடு என்பது, போராடுபவர் பக்கத்தில் தான் இருப்பதாக காட்டி அதை சீரழிப்பது தான்;. தலையீடு முதல் அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் திட்டமிடல் மற்றும் ஆலோசனையின்றி நோர்வே சுயாதீனமாக செயற்படுவதில்லை. நோர்வே செய்ய வேண்டியது போராடும் குழுவுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டி, சலுகையை வாரிவழங்கி, அரசுக்கு எதிராக நியாயமாக தான் நடப்பதாக காட்டி, போராட்ட குழுவையும் அதன் அரசியல் நோக்கையும் சீரழிப்பது தான்.
இவர்கள் போராட்டம் தொடங்க முன் உள்ள சமூக நெருக்கடிகளில் தலையிடுவதில்லை. அங்கு தன்னார்வக் குழுக்களே நோர்வேயின் பிந்திய அரசியல் பாத்திரத்தை செய்கின்றன. ஏகாதிபத்தியம் செய்ய விரும்புவது, அரசு எப்படி தனது உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயற்படுகின்றதோ, அதேபோல் அரசை எதிர்க்கும் குழுக்களையும் தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான்.
நோர்வே மத்தியஸ்தம் பல வகைப்பட்டது. போராட்டத்தை சிதைக்கும் வகையில் இழுபறியான பேச்சுவார்த்தைகளை நீடிக்க வைப்பது, போராட்ட குழுவில் உடைவையும் சிதைவையும் உண்டாக்குவது, நிலவும் சமூக அமைப்பில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அரசியல் ரீதியான மக்கள் நோக்கங்களை இல்லாதாக்குவதாகும். நீண்ட இழுபறியான அரசியல் சீரழிவை உண்டாக்குவதற்கு பலவழி யுத்த தந்திரத்தை கையாளுகின்றனர். மக்கள் விரோத போக்கை இதற்காகவே ஊக்குவிக்கின்றனர். இதற்கு தேவையான பணம் மற்றும் பொருள் வகை உதவிகளை வாரிவழங்குவது அதன் குறிப்பான பாத்திரமாக உள்ளது. இது ஏகாதிபத்திய வழிகாட்டலினால் திட்டமிட்டு கையாளப்படுகின்றது. இதன் போது அரசு தரப்பு மற்றும் இந்த ஜனநாயக அமைப்பில் அரசியல் பிழைப்பு நடத்தும் எதிர்தரப்பின் எதிர்ப்புகள், அதிருப்த்திகள், அவர்கள் தமது சொந்த அதிகாரத்தை நிறுவும் உள்ளடகத்தில் உருவாகின்றன. ஆனால் இதை அரசு மீறமுடியாத வகையில், ஏகாதிபத்தியம் தாம் செய்வதை அரசுக்கு தெளிவுபடுத்திவிடுகின்றது. நடக்கப் போவது நீண்டகால ஏகாதிபத்திய அரசியல் திட்டம் என்பதையும், அரசுக்கு எதிரான குழுவின் சீரழிவு நோர்வேயால் உறுதி செய்யப்படுகின்றது.
இலங்கையில் புலிக்கும் அரசுக்குமிடையிலான நோர்வேயின் முயற்சசிகள் இதற்கு உட்பட்டது தான். நோர்வே புலிக்கு அதிக சலுகை வழங்குவதாக காட்டுவது, அதை நோர்வே தனது கொள்கை வழியாக உறுதி செய்வது, அனைத்தும் இதற்கு உட்பட்டது தான். நோர்வேயின் அணுகுமுறை, இந்தியா உள்ளிட்ட அனைத்து ஏகாதிபத்தியத்தினதும் வழிகாட்டலின் கீழ், புலிக்குள் அரசியல் ரீதியாக ஊடுருவி சிதைப்பது தான்;. புலிக்கும் அரசுக்குமிடையில் ஏற்படும் கடும் நெருக்கடியின் போது, நோர்வே தனது அரசியல் வழிகாட்டிகளான ஏகாதிபத்தியங்களுடன் கூடி வழிகாட்டலை தொடருகின்றது. இலங்கையில் நோர்வே பலமுறை அப்பட்டமாகவே ஏகாதிபத்திய சதித்திட்டங்களுக்காக கூடி கதைத்ததும் அனைவரும் அறிய பகிரங்கமானதே. நோர்வே எந்தவிதத்திலும் சுயாதீனமாக தானாக முடிவெடுத்து செயற்படவில்லை.
நோர்வே சுயாதீனமாகவும் தனித்துவமாகவும் மனித நலனை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை. மாறாக ஏகாதிபத்திய உலகமயமாதல் அரசியல் நோக்கத்தை, உலகின் ஒவ்வொரு மோதலிலும் செய்வதே நோர்வேயின் உலகமயமாதல் பணியாகவுள்ளது.
இந்த நிலையில் தான் நோர்வேயை நேபாளம் நோக்கி ஏகாதிபத்தியங்கள் நகர்த்துகின்றனர். அதுவும் புலிகளை கையாண்ட அனுபவமும் தேர்ச்சியும் கொண்டவரே, அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை கம்யூனிஸ்ட்டுகள், தமது சொந்த வர்க்க அணுகுமுறையில் அம்பலப்படுத்தும் சர்வதேச நிகழ்ச்சி போக்கை நோக்கி இது நகருகின்றது.
மக்கள் விரோத புலிகள் அல்ல கம்யூனிஸ்ட்டுகள்;. கம்ய+னிஸ்ட்டுகள் எதிரியை, எதிரியின் அரசியல் சூழ்ச்சியை மக்கள் பலத்தால் எதிர்கொண்டு, உலகமறிய அம்பலப்படுத்துவார்கள். மக்கள் சக்;தி அவர்களின் அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு, நோர்வே உலகமயமாதல் திட்டத்தை அம்பலப்படுத்துவர். அவாகளின் கடந்தகாலத்திய முரணற்ற அணுகுமுறைகள், உலகக் கொள்ளைகாரர்களை தனிமைப்படுத்துவதில் தீர்க்கமான அரசியல் முன்முயற்சியை எடுத்து, அதையும் செய்து முடிப்பார்கள்.
புலிகளும் மாவோயிஸ்ட்டுகளும் ஒரு ஒப்பீடு
இந்தியாவின் மேலும் கீழுமாக இரண்டு நாட்டில் ஆயுதப் போராட்டங்கள் நடக்கின்றன. ஒன்று மக்களின் சமூக பொருளாதார நலன்களை உயர்த்தி நடக்கின்றது. மற்றது மக்களை சமூக பொருளாதார நலன்களை மறுத்து அதை வேட்டையாடி நடத்தப்படுகின்றது. இங்கும் இரண்டு தளத்திலும் பேச்சுவார்த்தைகள் முதல், அரசியல் இயக்கம் வரை நடத்தப்படுகின்றன. ஆனால் ஒன்றில் மக்கள் இல்லை, அரசியலில் மக்கள் விரோதப் போக்கு கையாளப்படுகின்றது.
மாவோயிஸ்ட்டுகள் மக்களின் நலனை உயர்த்தி, அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகள் மீது போராடுகின்றனர். சமூக முரண்பாடுகளை ஜனநாயக கோரிக்கைக்குள் உள்ளடக்கியபடி போராடுகின்றனர். இந்தியச் சமூகங்களுக்கேயுரிய சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களையும், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களையும், இந்து பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டங்களையும் கூட ஒருங்கே நடத்துகின்றனர். நேபாள மக்களின் தேசிய அபிலாஷைகளை, மக்களின் சனநாயக வழிகளில் அணிதிரட்டி, அவர்களை தமது சொந்த போராட்டத்தில் அழைத்துச் செல்லுகின்றனர். அந்த மக்களின் உழைப்பைச் சார்ந்து, நில சீர்த்திருத்தங்களையும் அவர்களைக் கொண்டே நடத்துகின்றனர். உண்மையில் இங்கு மக்கள் தமது சமூக பொருளாதார விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி நிற்கின்றனர். அதாவது தமது சொந்த வாழ்வு சார்ந்து, வாழ்வதற்காக மக்களே தமது வாழ்வை அழிப்பவர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி நிற்கின்றனர்.
உலகையே சூறையாடி சுரண்டிக் குவிக்கும் ஏகாதிபத்தியத்தை நேபாள மக்களின் எதிரியாக காண்கின்றனர். சொந்த ஆளும் வர்க்கத்தை எதிரியாக காண்கின்றனர். அதாவது மக்களை சுரண்டி சூறையாடி சமூகப் பிளவுகளை ஏற்படுத்தி, சமூகத்தின் உழைப்பை சமூகத்துக்கு மறுத்து வாழ்வோருக்கு எதிராக அவர்கள் போராடுகின்றனர். சுரண்டும் வர்க்கம் தமது சொந்த அதிகாரத்தை தக்கவைக்க கட்டமைத்த சாதியம், ஆணாதிக்கம், இந்துமதம் என சமூகத்தின் பிளவுகளை உருவாக்கும் அனைத்தையும் எதிரியாக காண்கின்றனர். சொந்த வாழ்வு சார்ந்த போராட்டத்தில், அனுபவத்தில் இதை தமது வாழ்வாக கற்றுக் கொள்கின்றனர். விமர்சனம், சுயவிமர்சனத்தை ஆதாரமாக கொள்கின்றனர். மக்கள் வேறு மாவோயிஸ்ட்டுகள் வேறு அல்ல என்ற ஒரு நிலையில், அப்போராட்டம நடக்கின்றது. இதைத் தலைமை தாங்கிச் செல்லும் கம்யூனிஸ்ட்டுகள் எதிரியைத் தனிமைப்படுத்துவதில், எதிரிக்கு எதிராக அனைத்து சக்திகளையும் தம் பின்னாலும், தமக்கு சமமாகவும் அங்கீகரித்து, அவர்களையும் வழிநடத்துகின்றனர். முரண்பாடுகளை பகை முரண்பாடாகா வகையில் நெழிவு சுழிவான வழியில், அரசியலை முன்னிறுத்தி முரண்பாடுகளை கையாள்வதில் மிகவும் நுட்பமாக செயற்படுகின்றனர். தமக்கு எதிர்காலத்தில் எதிரியாக, தம்மை எதிர்க்கும் ஆளும் வர்க்கமாக வரக் கூடியவர்களையும், வர்க்க ரீதியாக அடையாளம் கண்டவர்களைக் கூட, பிரதான எதிரிக்கு எதிராக திருப்பிவிடுவதில் வெற்றி பெற்றுள்ளனர். எதிரி அஞ்சி நடுங்கும் வகையில், இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியான வேட்டுகள் இன்றி பல வெற்றிகளை தொடாச்சியாக சந்திக்கின்றனர்.
சர்வதேச மட்டத்தில் சர்வதேச சமூகங்கள் கூட, நேபாள மாவோயிஸ்ட்டுகளை தாமாகவே முன்னிறுத்தி ஆதரித்து சென்றதை இந்த மே தினம் உணர்த்தியது. உலக மக்கள் நேபாள மக்களின் போராட்டத்தின் பக்கம் தமது உணர்வுபூர்வமான இணைவை வெளிப்படுத்தி வருகின்றனர். நேபாளத்தில் 90 சதவீதமான மக்களின் நன் மதிப்பை, சமூகங்கள்pன் பங்களிப்புடன் கூடிய ஆதரவை வென்றுள்ளனர். இதில் மேலும் முன்னேறிச் செல்லுகின்றனர்.
புலிகளை எடுத்தால் என்னதான் நடக்கின்றது. ஒரு போராட்ட இயக்கம் எதைச் செய்யக் கூடாதோ, அதையே தனது ஆணையில் வைத்துச் செய்கின்றனர். மக்களை தனது சொந்த எதிரியாக, அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் காண்கின்றனர். மக்களை தமக்கு தொல்லை தரும் மந்தைக் கூட்டமாக காண்கின்றனர். மக்களின் அறியாமையில், அவர்களின் அடிமைத்தனத்தில் தமது சுபீட்சம் உண்டு என்று காண்கின்றார்கள். மக்களை சதா பீதியுடன் அணுகி, அவர்களை கண்காணித்தபடி புலிகள் அசைகின்றனர். மக்களில் உள்ளவர்களை இனம் கண்டு, சதா வேட்டையாடுகின்றனர்.. முரண்பாடுகளை பகை முரண்பாடாகவே அணுகி, அதை வேட்டுகளால் மட்டுமே அணுகுகின்றனர். முரண்பாடுகளற்ற சமூகமாக காட்டி, தாம் மட்டுமே அனைத்தும் என்ற அடிப்படையில், ஒரு வன்முறையை கையாளுகின்றனர்.
விமர்சனம் சுயவிமர்சனமற்ற, தமது சொந்த மக்கள் விரோத வக்கிரத்தை கொண்ட தம்மைத் தாம் கவர்ச்சியாக பல்லைக்காட்டி அலங்காரம் செய்கின்றனர். எதிரிகளை புளுத்துப் போகும் வண்ணம், அன்றாடம் பெருக்கியபடி கொலைகள் மூலம் தமது இயக்கத்தை கட்டமைக்கினறனர். சமூகத்தை வெறுத்தொதுக்கி அவர்களை சதா வேட்டையாடுகின்றனர். லும்பன்களாக தாம் மட்டும் வாழ்ந்தபடி, தமக்காக மட்டும் போராடும் இவர்கள், மாபியாத்தனத்தை ஆதாரமாக கொள்கின்றனர். தமது இராணுவத்தையும் அது நடத்தும் தாக்குதலையுமே தேசிய விடுதலைப் போராட்டம் என்கின்றனர். கோடானுகோடி பணத்தைக் கையாளும் ஒரு பணக்கார இயக்கமாகவே புலிகள் உள்ளனர். இதற்கு கிட்ட ஏழை எளிய மக்கள் நெருங்கவே முடியாது. அந்த பணத்தில் இருந்து தமக்குத்தாமே சொகுசான வாழ்க்கை முறையையும், மேற்கத்தைய களவுகளையும், மேற்கத்தைய வாழ்க்கை முறைகளையும் அடிப்படையாக கொண்டு புலித்தலைமை சொகுசாக ஆடம்பரமாக வாழ்கின்றது. அன்னியனுக்கு சேவை செய்யும் பொருளாதாரக் கொள்கைகள், என்று அனைத்து சமூகக் கூறுகளிலும் மக்கள் விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றனர்.
சமூக முரண்பாடுகளின் ஏகப்பிரதிநிதிகளாக, அதை அமுல்படுத்தி பாதுகாப்பதில் வக்கிரம் கொண்டவராகவே அவர்கள் உள்ளனர். மனித விரோத சாதியத்தை பாதுகாப்பதில், அதை உருவாக்கிய இந்து மதத்தை பாதுகாப்பதில், ஆணாதிக்கத்தை பாதுகாத்து பேணுவதில், சுரண்டலை பாதுகாப்பதுடன் அதை தாமே செய்வதிலும் உள்ள அடங்கா வெறியையே தமிழ் தேசியம் என்கின்றனர். மற்றைய இனங்களை எதிரியாக காட்டி, அவர்களை இழிவாடி வேட்டையாடுகின்றனர். சிங்கள மக்களை எதிரியாக, முஸ்லீம் மக்களை அடிமைகளாக இழிவுபடுத்தி வேட்டையாடுவதே தமிழ் தேசியம் என்கின்றனர்.
முரண்பாட்டை கையாள வக்கற்றவர்கள்;. கொலை கொள்ளை மூலம் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆள நினைப்பவர்கள். சமூக முரண்பாடுகளை தீர்க்க மறுத்து, தீர்க்க முனைவதை தேசத்துரோகமாக காட்டி, அதன் ஏக பிரதிநிதிகளாக உள்ளவர்கள் புலிகள். ஏகாதிபத்திய விசுவாசிகளாக, அவர்களின் பொருளாதாரக் கொள்கையின் தரகர்களாக, அவர்களின் அரசியல் இராணுவ எடுபிடிகளாக உள்ளனர்.
நேபாள மாவோயிஸ்ட்டுகள் இதில் மாறுபட்ட வகையில் மக்களின் நலனை உயர்த்துபவர்கள். புலிகள் அதையே வேர் அறுத்து மறுப்பவர்கள்;. தேசியம் என்பது குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவ அடிப்படையிலானது என்றால், அது புதிய ஜனநாயகப் புரட்சியை அடிப்படையாக கொண்டது. இதையே மாவோயிஸ்ட்டுகள் தமது குறைந்தபட்ச திட்டமாக முன்வைத்து போராடுகின்றனர். புலிகள் அதை மறுத்து, முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையைக் கூட ஏற்றுக் கொள்வது கிடையாது. மாறாக சர்வாதிகாரிகளாக மக்களை அடிமைப்படுத்தி பாசிட்டுகளாக மக்களின் விரோதிகளாகவே உள்ளனர்.
பி.இரயாகரன்
04.05.2006