Language Selection

புதிய ஜனநாயகம் 2008

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவர், அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் மேற்படிப்புப் படித்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர் 2001இல் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் முசுலிம்கள் நிம்மதியாய் வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் குடும்பத்துடன் கராச்சி திரும்பினார்.

 தனது கணவர் தன்னை விவாகரத்து செய்ததால், வேலை தேட மீண்டும் அமெரிக்கா சென்று வேலை கிடைக்காமல் 2003இல் நாடு திரும்பிய சித்திகி, அந்த ஆண்டே காணாமல் போய்விட்டார். 2004இல் இருந்து சித்திகி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க சித்திரவதைக் கூடமான பக்ராம் விமானதளத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக பிரிட்டன் பத்திரிக்கையாளர் ரிட்லீ அண்மையில் சொல்லி இருந்தார். கைதி எண் 650 எனும் பெயரில் அடைபட்டிருந்த சித்திகியை பக்ராம் சிறையில் இருக்கும் எவருமே கண்ணால் பார்க்கக்கூட அனுமதிக்கப்பட்டதில்லை. பெண் அழுகைக்குரல் ஒன்றால் மட்டுமே அவர் அக்கொட்டடியில் அடைபட்டிருந்தது பிற கைதிகளுக்குத் தெரிய வந்தது. பலமுறை அவர் அச்சிறையில் அமெரிக்க இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். 2004இல் அமெரிக்க உளவுத்துறையின் தேடப்படுவோர் பட்டியலில், அல்கொய்தாவிற்காக வைரம் கடத்தினார் என்று டாக்டர் சித்திகியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.


கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் சித்திரவதைக் கொடுமை அனுபவித்த டாக்டர் சித்திகியை 2008 ஜூலை 17இல் தான் ஆப்கன் போலீசார் கைது செய்ததாகக் கூறி நியூயார்க் நீதி மன்றத்தில் நிறுத்தினர். அவர் மீதான அல்கொய்தா தொடர்பேதும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. வைரம் கடத்திய கதைக்கும் ஆதாரம் காட்ட முடியவில்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் சந்தேகப்படும்படியான வேதியல் திரவம் அடங்கிய பாட்டில், குண்டு தயாரிக்கும் செய்முறைப் புத்தகம் முதலானவற்றை வைத்திருந்ததாகக் கைது செய்ததாகவும், ஜூலை 18 அன்று கேட்பாரற்றுக் கிடந்த ரைபிள் ஒன்றை எடுத்து அமெரிக்க இராணுவ வீரர்களை நோக்கிச் சுட முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 50 கிலோவுக்கும் குறைவான மெலிந்த உடம்பை வைத்துக்கொண்டு துப்பாக்கியைத் தூக்கிச் சுட முடியாது என்பது ஒருபுறமிருக்க, ஐந்து ஆண்டுகள் அவரை வெளி உலகே தெரியாமல் அடைத்து வைத்ததற்கும், கொட்டடியில் வைத்துப் பாலியல் வன்முறை செய்ததற்கும், சித்திகி செய்த குற்றம்தான் என்ன? முசுலீமாகப் பிறந்ததுதான் அவரின் ஒரே குற்றமா? அவர் கைதானபோது அவர் பொறுப்பிலிருந்த அவரது மூன்று குழந்தைகளின் கதி என்ன என்ற கேள்விக்கு அமெரிக்காவோ ஆப்கானிஸ்தானோ இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை.


"டாக்டர் சித்திகியை விடுதலை செய்!'' என்ற முழக்கத்துடன் கராச்சியில் மனித உரிமை அமைப்புகளும் பெண்கள் அமைப்புகளும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.


அமெரிக்க பயங்கரவாத கொடூரத்திற்கு இதைவிட வேறென்ன சாட்சியம் வேண்டும்?