Language Selection

புதிய ஜனநாயகம் 2008

கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதிலிருந்து கேரள மாநிலமெங்கும் கிறித்தவர்களும் முஸ்லீம்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அவர்களது போராட்டத்தை ஆதரித்தும், இடதுசாரி கூட்டணி ஆட்சியை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. காங்கிரசின் மாணவர் சங்கங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை தெருவிலே போட்டுக் கொளுத்தி வருவதோடு, பொதுச் சொத்துக்களையும் நாசப்படுத்துகின்றன.

 தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவோ, அரசின் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகவோ அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. பின், எதற்காக இந்தப் போராட்டம்?


"இளைய தலைமுறையினரின் சிந்தனையை நஞ்சாக்கும் 7ஆம் வகுப்பு (ஆங்கில வழி) சமூக அறிவியல் பாட நூலை ரத்து செய்!'' என்பதே அவர்களது போராட்டத்தின் மைய முழக்கம். வகுப்புகள் புறக்கணிப்பு, 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் கட்டுகட்டாக பறிக்கப்பட்டு தீயிட்டு எரிப்பு, சாலை மறியல், பேருந்துகள் மீது கல்வீச்சு, கண்டனப் பேரணி என கேரளத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்கின்றன. காங்கிரசு ஆதரவு ஆசிரியர் சங்கங்கள் இப்பாடப்புத்தகப்படி நாங்கள் பாடம் நடத்த மாட்டோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. ஜூலை மாதத்திற்குள் இப்பாடபுத்தகத்தை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய கிளர்ச்சி செய்யப் போவதாக முஸ்லிம் லீகும் 12 முஸ்லிம் அமைப்புகளும் அரசுக்குக் கெடு விதித்தன. கேரள அரசியலில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ள 7ஆம் வகுப்பு (ஆங்கில வழி) சமூக அறிவியல் பாட நூலில் அப்படி என்னதான் ஆட்சேபகரமாக இருக்கிறது?


"ஜீவனுக்கு எந்த மதமுமில்லை'' என்ற தலைப்பிலான பாடம் இதோ:


"ஜீவனைப் பள்ளியில் சேர்ப்பதற்காக அவனது பெற்றோர்கள் அழைத்து வருகின்றனர். அப்பெற்றோர்கள் இருக்கையில் அமர, தலைமையாசிரியர் விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்குகிறார்.


"உங்கள் மகனின் பெயர் என்ன?'


"ஜீவன்'


"நல்ல பெயர்; தந்தையின் பெயர் என்ன?'


"அன்வர் ரஷீத்'


"தாயார் பெயர்?'


"இலட்சுமி தேவி'


தலைமையாசிரியர் தலையை உயர்த்தி பெற்றோரைப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்கிறார்.


"இச்சிறுவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன்? அதை நான் குறிப்பிட்டாக வேண்டுமே!'


"அவ்வாறு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்றே குறிப்பிடுங்கள்.'


"சாதி?'


"அதையும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எந்தச் சாதியையும் சேர்ந்தவர்களில்லை.'


தலைமையாசிரியர் நாற்காலியில் சாய்ந்தபடி காட்டமாகக் கேட்கிறார்.


"உங்கள் மகன் பெரியவனாக வளர்ந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தால் என்ன செய்வது?'


"அப்படி அவன் உணர்கிறபோது எந்த மதத்தைத் தெரிவு செய்ய விரும்புகிறானோ அம்மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.'


இதுதான் அந்தப் பாடப்பகுதி. இது, இளைய தலைமுறையினரின் சிந்தனையை நஞ்சாக்கி விடுமாம். மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாம். நாத்திகக் கண்ணோட்டத்தில், கம்யூனிச சித்தாந்தத்தைத் திணிக்கிறதாம். சமூக அமைதியைச் சீர்குலைத்து பிளவையும் வெறுப்பையும் குழந்தைகளின் நெஞ்சில் ஊட்டுகிறதாம். பெற்றோரின் நல்லொழுக்கத்தையும் அறவியலையும் சீர்குலைக்கிறதாம். குழந்தைகளைத் தறுதலைத்தனமாக வளர்க்கத் தூண்டுகிறதாம். எனவேதான் சாதிமத வேறுபாடுகளைக் கடந்து முஸ்லிம்களும் கிறித்தவர்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் திரண்டு போராடுகிறார்களாம்.


இப்பாடப் பகுதி, ஏதோ ஆளும் "இடதுசாரி' கூட்டணி தன்னிச்சையாகவும் தான்தோன்றித்தனமாகவும் உருவாக்கித் திணித்ததைப் போல மதவாத அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இப்பாடப் பகுதியானது, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழு (Nஇஉகீகூ) தயாரித்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேரள அரசின் பாடத்திட்டக் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள மாநில அரசும் கல்விமைச்சரும் விரிவாக விளக்கமளித்த போதிலும், பிற்போக்குவாதிகள் அதனை ஏற்கவில்லை. கேரளத்தின் வலுமிக்க இந்து சாதிய நிறுவனமான நாயர் சொசைட்டி, மற்றும் கிறித்துவ, இஸ்லாமிய நிறுவனங்களே பெரும்பாலான கல்விக் கூடங்களை கையில் வைத்திருப்பதால், அவை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், காங்கிரசு கூட்டணிக் கட்சிகள் இதனை தெருப்போராகத் தீவிரப்படுத்தி அரசியல் ஆதாயமடையத் துடிக்கின்றன.


ஏற்கெனவே ஆட்சி செய்த இந்துவெறி பாரதிய ஜனதா அரசு, வரலாற்றைத் திருத்தி எழுதி கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியில் இறங்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. இன்றும் கூட நாடெங்கும் இந்துவெறி அமைப்புகள் நடத்திவரும் பள்ளிகளில் இந்துத்துவ கல்வி போதனையே தொடர்கிறது. அவையெல்லாம் பிஞ்சு மனங்களை நஞ்சாக்கும் செயலாக கிறித்துவ, இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தெரியவில்லை. சாதிமதமற்றவராக குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதுதான் அபாயகரமானதாம்!


இப்பாடப்பகுதியில் உள்ள கருத்துக்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இல்லை. மதத்தையோ மத நம்பிக்கைகளையோ சாடவுமில்லை. ஆனால், இப்பாடப் பகுதியில், எந்த மதத்தையும் சாதியையும் சாராதவர் என்று குறிப்பிடுவதே மத நம்பிக்கைக்கு எதிரானது என்று குதிக்கிறார்கள் பிற்போக்கு சாதிமதவாதிகள். இப்பிற்போக்குக் கும்பல்களின் போராட்டங்களைக் கண்டு அரண்டு போயுள்ள ஆளும் "இடதுசாரிகள்', அரசு சார்பில் விளக்கம் கலந்தாலோசனை கூட்டம், உயர்மட்டக் கல்வியாளர் குழுவை அமைத்து பரிசீலிப்பது என அரசு ரீதியான நடவடிக்கைகளை அறிவித்து சாந்தப்படுத்த முயற்சிக்கிறதே தவிர, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளைத் திரட்டி மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு பிற்போக்கு சாதிமத சக்திகளைத் தனிமைப்படுத்த முன்வரவில்லை.


மதச் சுதந்திரம் என்பது, ஒரு மதத்தைத் தெரிவு செய்யும் உரிமை மட்டுமல்ல; மதத்தை மறுக்கும் உரிமையும்தான். ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ வாழும் உரிமையும் மத உரிமைதான். இந்தக் கருத்துக்களே இப்பாடப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தில் வாழும் மனிதன் ஒரு மதத்தை, ஒரு சாதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது மனித உரிமைகளை மறுக்கும் மிகப் பெரிய வன்கொடுமை.


படித்தவர்கள் நிறைந்த மாநிலமாக நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் கேரளம், பிற்போக்கு சாதிமத சக்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாவிட்டால், அது இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.


· மனோகரன்