Language Selection

புதிய ஜனநாயகம் 2008

திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் நகராட்சிகள் அடுத்தடுத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பெரும் பொருட்செலவில் இவற்றின் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளன. நவீன பாதாளச் சாக்கடைத் திட்டங்கள், சாலைகளை அகலப்படுத்துவது, திடக்கழிவு மேலாண்மை எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசு, நகர்ப்புற மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து மேம்படுத்துவதாக மக்களும் கருதுகின்றனர்.


மாநகராட்சிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதன் பின்னணியைப் புரிந்து கொள்ள முதலில் நாம் "மூன்றாவது தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்' (த.நா.ந.வ.தி.) பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.


47 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழும் தமிழ்நாட்டில்தான் நகரமயமாக்க வேகம் இந்தியாவிலேயே அதிகம் என்பதால், இம்மக்களுக்கு தரமான சேவை செய்திடவும் உள்கட்டுமானங்களை வலுவாக்கிடவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தினை உருவாக்கி அதற்கு 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளில் திருப்பச் செலுத்தும் வகையில் ரூ. 1200 கோடி கடன் தந்திருக்கிறது, மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கி.


2005இல் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, மாநில, மைய அரசுகளின் பிடியில் இருந்து நகர்மன்றங்களை விடுவித்து, அவற்றை வலிமையான நிறுவனங்களாக்குதல்; இரண்டு, எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தனியார் மூலதனங்கள் வாயிலாக நகர உள்ளாட்சியின் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்தல்; மூன்று, உள்ளாட்சியும் தனியாரும் இணைந்து நலத் திட்டங்களை நிறைவேற்றுதல்.


பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்திய நகர வளர்ச்சிக்காகத் தேவைப்பட்ட 28 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வழங்க வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அவை மைய, மாநில அரசுகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டு, உலக நிதி மூலதனத்தை நேரடியாகக் கையாள வகை செய்யப்பட வேண்டும் என உலக வங்கி நிபந்தனை விதித்து, அதன்படி த.நா.ந.வ.தி. வடிவமைக்கப்பட்டது.


இத்திட்டத்தின்படி த.நா.நகர்ப்புற வளர்ச்சி நிதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்புக்கு நேரடியாக உலக வங்கி கடன் தந்தது. வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகமெங்கும் உள்ள நகராட்சிகளில் பாதாளச் சாக்கடைகள், குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கு ரூ. 440 கோடி இந்நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது.


நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் மட்டுமல்லாமல், திட்டத்தை வடிவமைத்துத் தருவதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தூத்துக்குடியின் புதிய பாதாள சாக்கடைத் திட்டத்தை வடிவமைத்தது ""வில்பர்ஸ்மித் அசோசியேட்ஸ்'' எனும் அமெரிக்க நிறுவனம். நாமக்கல்லுக்கான திட்டத்தை வடிவமைத்தது ""தலால்மாட் மெக்டொனால்டு'' எனும் பிரிட்டன் நிறுவனம்.


திண்டுக்கல், விருதுநகர், நீலகிரி, இராமநாதபுரம், கடலூர் ஆகிய நகராட்சிகளுக்கும் இவ்வாறான கழிவுநீர் வடிகால் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வளர்ச்சி நிதியில் இருந்து, வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவர ரூ.10 கோடியும், மதுரையில் திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.11.48 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.


புதிய மாநகராட்சிகளான ஈரோடு, வேலூருக்கு முறையே ரூ.10 கோடியும் ரூ.9 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சிதனியார் கூட்டுத் திட்டங்களுக்காக த.நா.நகர வளர்ச்சி நிதியில் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், ஹெச்.டி.எப்.சி.யும் பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டன. (ஹெச்.டி.எப்.சி. வங்கியில் உள்ள உலக வங்கியின் பங்கு ரூ. 400 கோடி). கரூரில் அமராவதி ஆற்றைக் கடக்க உதவும் பாலம் இக்கூட்டுத் திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்டு, அதனைப் பயன்படுத்துவோரிடமிருந்து சுங்கம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.


இதற்காக தமிழ்நாடு சுங்க வசூல் சட்டம் திருத்தப்பட்டு, உள்ளாட்சிகள் தனியாருடன் இணைந்து சாலைகள், பாலங்கள் கட்டிச் சுங்கம் வசூலிக்க வகை செய்யப்பட்டது. இதன்படி மதுரை புறவழிச்சாலை, சென்னைவளசரவாக்கம் மழை நீர் வடிகால் திட்டம் வடிவமைக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மையிலும் தனியார் கூட்டுத் திட்டம் ஆலந்தூரில் அறிமுகமாகியுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் ரூ.150 தரவேண்டுமென அதன் திட்ட அறிக்கை கூறுகிறது.


முதல் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 1996இலேயே தொடங்கப்பட்டு விட்டது. அதற்கும் உலக வங்கிதான் மூளை. இத்திட்டத்தின் மைய நோக்கமே தாராளமயம் என்பதால், அதற்கு ஏற்றபடி உள்ளாட்சி ஊழியர்களுக்கும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், புதிய முறைக்கு ஏற்றபடி கணினி மென்பொருள், புதிய தொழில்நுட்பம், நிதி வசூல் திட்ட மேம்பாடு போன்றவற்றில் பயிற்சிகள் தொடர்ச்சியாகத் தரப்பட்டு வருகின்றன. 2006–07இல் இதற்காக ரூ. 5.44 கோடி ஒதுக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்குக் கூட அனுப்பப்பட்டனர். 2004இல் பொன்னம்பட்டி ஊராட்சித் தலைவி சல்மா (எழுத்தாளர்) பாகிஸ்தானுக்குப் போய் வந்ததும் இத்தகைய திட்டத்தின்கீழ்தான்.


தற்போது தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் புவியியல் தகவல் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிடல், வருவாய் வகைகள் உயர்த்தப்படல், கட்டிடங்கள், நிலங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மதுரை, கோவை, திருச்சி, இராசபாளையம், கோபிச்செட்டிபாளையம் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், உலகவங்கி மீளாய்வு செய்வதற்கு வசதியாக இணையம் மூலம் இணைக்கப்பட உள்ளன.


கொடுத்த கடன்களை எல்லாம் எவ்வகைகளில் உலக வங்கி திரும்பப் பெறும்? அதற்கான வழிமுறைகளையும் அவ்வங்கியே திட்டத்தில் சொல்லியிருக்கிறது. ரூ.46.4 கோடி மதிப்பிலான தூத்துக்குடி திட்டத்தில் உலக வங்கியின் கடன் ரூ.26 கோடி. இதனை வசூலிக்கும் வகையில், இத்திட்டத்திற்கு ஒவ்வொரு குடும்பமும் ரூ.3 ஆயிரமும், பள்ளி, கடைகள் ரூ.7500மும், தொழிலகங்கள் ரூ. 10 ஆயிரமும் தர வேண்டும்; இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ள மொத்த வீடுகள் 42,955. இவர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ. 26 லட்சம் வசூலிக்கப்பட வேண்டும்; இத்திட்டத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்த பின்னர் நகராட்சி பராமரிப்பையும் கழிவு நீர் சுத்திகரிப்பையும் தனியாரிடம் விட்டுவிடலாம் என்கிறது திட்ட அறிக்கை.


த.நா.ந.வ.தி. அறிக்கையில் ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட நகராட்சிகள் சிறப்புப் பிரிவின்கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றிற்கு வழங்கப்பட்ட கடனும் பிற நகராட்சிகளை விட மிகவும் அதிகம். அப்பட்டியலில் இருக்கும் திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் நகராட்சிகள்தான் தற்போது மாநகராட்சிகளாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தரம் உயர்த்துவதன் மூலம், சொத்து வரி போன்ற மாநகராட்சி வருவாய் பல மடங்கு உயரும். அதாவது, இனி இந்நகரங்களில் குடியிருக்கும் மக்கள் முன்பைவிட அதிகமாக வரி செலுத்த நேரிடும்.


ஆக, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழக நகரங்களின் நிர்வாகங்களைப் பறித்தெடுத்து உலக நிதிமூலதனத்திடம் கொடுக்கும் வேலையைத்தான் மாநில உள்ளாட்சித் துறை செய்துவருகிறது. கடன் வலையில் உள்ளாட்சிகள் சிக்கி உலக வங்கியின் எடுபிடிகளாக அவை மாற்றப்படுவதுதான் நல்லாட்சியா? இந்த "நல்லாட்சியின்' உண்மையான நிர்வாகி யார்? மு.க.ஸ்டாலினா? உலகவங்கியா?
· அசுரன்