Language Selection

புதிய ஜனநாயகம் 2008

காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடன் உறவு இல்லாதவர்களுடன்தான் கூட்டணி என்ற முடிவை தமிழகத்தின் இடது, வலது போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தாங்கள் நீடிக்கவில்லை என்று இக்கட்சிகள் உணர்த்தியுள்ளதோடு, ""காங்கிரசா, இடதுசாரிகளா? யாருடன் கூட்டணி என்பதை இனி முடிவெடுக்க வேண்டியது தி.மு.க.தான்'' என்றும் கூறிவிட்டன. பா.ஜ.க. பக்கம் அ.தி.மு.க. சாய்ந்துவிடாமல் கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கும்விதமாக இக்கட்சிகள் இம்முடிவை அறிவித்துள்ளன.

 பார்ப்பனபாசிச ஜெயாவும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்குக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, ""நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூடச் சிரிக்குமப்பா'' என்று கவிதை எழுதி இப்போலி கம்யூனிஸ்டுகளைச் சாடியுள்ளார்.


அணுசக்தி ஒப்பந்தத்தையொட்டி காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொண்ட பிறகு, நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசு அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் போலி கம்யூனிஸ்டுகளும் இணைந்தனர். அதைத் தொடர்ந்து இடதுசாரி கூட்டணிக் கட்சிகளும் தேவேகவுடா, அஜித்சிங், சௌதாலா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையிலான கட்சிகளும் மாயாவதி கட்சியோடு கூட்டணி கட்டிக் கொண்டு, மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என்றும் பேச்சு வார்த்தைகள் நடத்தின. இதனை காங்கிரசு, பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற மூன்றாவது அணி என்னும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்றும் போலி கம்யூனிஸ்டுகள் நாமகரணம் சூட்டியுள்ளனர். "உ.பி.யில் மாயாவதி அஜித்சிங் கூட்டணி 50 தொகுதிகளைக் கைப்பற்றும்; இடதுசாரி கூட்டணி மே.வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் ஏறத்தாழ 50 தொகுதிகளை கைப்பற்றி விடும். சந்திரபாபு நாயுடு, சௌதாலா முதலானோரின் கட்சிகள் 10 இடங்களையாவது பிடித்து விடும்; இதோடு தமிழகத்தில் பாசிச ஜெயா கூட்டணி சேர்ந்தால் இன்னும் 20 இடங்களில் வெற்றி பெற்று, மொத்தத்தில் இக்கூட்டணி 130 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால், இந்த அணியின் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியில் அமர முடியாத நிலை ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் உருவாகும் புதிய கூட்டணியால் இந்த அணியே ஆட்சியில் அமரும்' என்று ஓட்டுக்கட்சிகள் தேர்தலில் பெறும் சதவீதக் கணக்கு அடிப்படையில் போலி கம்யூனிஸ்டுகள் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டக் கிளம்பியுள்ளனர்.


மறுபுறம், போலி கம்யூனிஸ்டுகள் உருவாக்கத் துடிக்கும் மூன்றாவது அணியில் பங்கேற்கும் கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்துவெறி பா.ஜ.க.வுடன் மாறி மாறி கூட்டுச் சேர்ந்தவைதான். தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாக நிற்பவைதான். அதிலும் பாசிச ஜெயாவோ, அயோத்திகர சேவைக்கு ஆளனுப்பியது, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், பயங்கரவாத மோடியின் முடிசூட்டு விழாவில் பங்கேற்றது, சேது சமுத்திரத் திட்டம், அமர்நாத் விவகாரம் என வெளிப்படையாகவே பார்ப்பன பாசிசத்தை ஆதரித்து நிற்பவர். புதிய மொந்தையில் பழைய கள்ளு என்ற கதையாக, இத்தகைய கழிசடைகளைக் கூட்டணிக் கட்டிக் கொண்டு அதையே மதச்சார்பற்ற மூன்றாவது அணியாகக் காட்டி ஏய்க்கக் கிளம்பியுள்ளனர் இப்போலிகள்.


தேசியக் கட்சிகள் என்றழைக்கப்படும் பா.ஜ.க., காங்கிரசு மற்றும் போலி கம்யூனிஸ்டுகளிடையே கொள்கைகோட்பாடு அடிப்படையிலான பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. காங்கிரசும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் இந்துத்துவ சக்திகளுடன் சமரசம் செய்து கொள்பவையாகவே உள்ளன. தனியார்மய தாராளமயத் துரோகக் கொள்கையை எல்லா ஓட்டுக் கட்சிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கின்றன. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பெற்றுத் தரும் கூட்டணி அரசியலுக்கு இடமளிக்காதவாறு விஜயகாந்த், சரத்குமார், சிரஞ்சீவி போன்ற நடிகர் கட்சிகள், சாதியக் கட்சிகள், பிழைப்புவாதிகளின் கட்சிகள் வாக்கு வங்கிகளைச் சிதறடித்து வருகின்றன. அனைத்திந்திய அளவிலும், தமிழகத்திலும் ஒரு கட்சியின் பெரும்பான்மை ஆட்சி என்பது பழங்கதையாகி விட்டது. இந்நிலையில், ஓட்டுக் கட்சிகள் தேர்தல்களில் பெறும் வாக்கு சதவீத கணக்குகளே கூட்டணியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. இந்த அடிப்படையிலேயே புதியதொரு சந்தர்ப்பவாத கூட்டணி கட்டி ஓட்டுப் பொறுக்க போலி கம்யூனிஸ்டுகள் கிளம்பியுள்ளனர்.