தப்பியவர்களைப் பிடிப்பதற்கு மதுரை மற்றும் பிற நகரங்களிலும் "கியூ'' பிரிவு உளவுத்துறைப் போலீசு வீடுவீடாகச் சோதனை நடத்தியிருக்கிறது.
வீரப்பனின் பிணத்தைச் சுட்டுக் கைப்பற்றிய விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் எங்கும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
"தமிழகமெங்கும் 70 பேர் கொண்ட 70 ஆயுதக் குழுக்கள்!'', "பெரியகுளத்தில் ஏ.கே47 துப்பாக்கிகள், ஆயுதப் புதையல்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள்'', "ஆயுதப்படையில் சேருவதற்குத் தயாராக 600 மாணவர்கள்'' என்று விஜயகாந்த் சினிமாவை விஞ்சும் வகையில் திரைக்கதை எழுதுகின்றன, பத்திரிகைகள். "நக்சல் வேட்டை' என்று போலீசு அராஜகத்தைக் கொண்டாடுவது, விஜயகுமாரையும் உளவுத் துறை போலீசு அதிகாரிகளையும் ஏதோ உயிருக்குத் துணிந்த வீர சாகச நாயகர்களாகச் சித்தரிப்பது, கைது செய்யப்பட்ட தோழர்களை "அவன், இவன்' என்று ஏகவசனத்தில் எழுதுவது என நாலாந்தரமான போலீசு எடுபிடிகளாகவும் பரபரப்புக்காகப் பச்சைப் பொய்களைப் புனைந்து எழுதும் பேனாத்தரகர்களாகவுமே பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
மாவோயிஸ்டுகள் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் அபாயம் போல ஒரு சித்திரம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. எனினும் இந்தத் "தேடுதல் வேட்டை'க்குத் தலைமை தாங்கும் விஜயகுமார், நாஞ்சில் குமரன் போன்ற போலீசு அதிகாரிகள் "அச்சப்படும் அளவுக்கு தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் வளர்ந்துவிடவில்லை'' என்று கூறுகின்றனர். கியூ பிரிவு எஸ்.பி. அசோக்குமார் "தமிழகத்தில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 25 முதல் 35 வரை இருக்கலாம் என்பது எங்கள் கணக்கு'' என்று பேட்டி கொடுக்கிறார். "கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் மிகச் சாதாரணமானவை'' என்றும் போலீசே கூறுகிறது.
பிறகு ஏன் இந்த ஆரவாரம்? பெரியகுளத்தில் வேட்டை, குற்றாலத்தில் வேட்டை, கொடைக்கானலில் வேட்டை, தருமபுரியில் வேட்டை என்று விஜயகுமாரின் காட்டு சீன் ஸ்டில்கள், சினிமா ஸ்டில்களைப் போல அன்றாடம் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுவது ஏன்? பெரியகுளத்தில் நிரந்தரமான அதிரடிப்படை முகாம் எதற்கு?
இது போலீசின் வழக்கமான விளம்பர மோகம் அல்ல; மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் அரச பயங்கரவாதம். "நக்சல்பாரி' என்ற சொல்லைக் கேட்டாலே மக்களுக்கு அதிரடிப் படையின் கொடூரமுகம் நினைவுக்கு வரவேண்டும் என்பதும், அவர்கள் அஞ்சி நடுங்கி ஒதுங்க வேண்டும் என்பதும்தான் இந்த நடவடிக்கையின் முதல் நோக்கம்.
இரண்டாவதாக, இது தீவிரவாத ஒழிப்பில் மன்னனை விஞ்சிய ராஜவிசுவாசியாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ள கருணாநிதி மேற்கொள்ளும் முயற்சி. "தமிழகத்தைத் தீவிரவாத அபாயத்திலிருந்து காப்பாற்றி அமைதியான வாழ்க்கையை அளிக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு. கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதுடன், சட்டம்ஒழுங்கு சீர்குலைந்துவிடும்'' என்பது ஜெயலலிதா நிரந்தரமாக முன்வைத்துவரும் பாசிச அரசியல். துக்ளக் முதல் இந்து வரையிலான பார்ப்பனப் பத்திரிகைகளால் வழிமொழியப்படும் பிரச்சாரமும் இதுதான்.
தற்போது ஜெயலலிதாவின் ஆசி பெற்ற விஜயகுமாரை "நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின்' தலைவராக நியமித்திருப்பதன் மூலம் "வசிட்டன் வாயால் பிரம்மரிஷிப் பட்டம்' வாங்கத் துடிக்கிறார், கருணாநிதி. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக தமிழகத்தைப் பேணுவதற்கும், ஆளும் வர்க்கங்களின் மனம் கவர்ந்த அமைதிப் பூங்காவாக மாநிலத்தை "மார்க்கெட்டிங்' செய்வதற்கும் நக்சல் வேட்டை என்னும் இந்த ஊதிப்பெருக்கப்பட்ட நடவடிக்கை தி.மு.க. அரசுக்குத் தேவைப்படுகிறது.
போலீசைப் பொறுத்தவரை தனது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தனது கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. மிகவும் அபாயகரமான பணியில் இராப்பகலாக ஈடுபட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே, காடுகளிலும் மலைகளிலும் "அவுட்டோர் ஷூட்டிங்'' நடத்துகிறது. தான் நடத்திய, நடத்தப் போகிற எல்லா "போலி மோதல்' கொலைகளையும் மறைப்பதற்கான திரைச்சீலைகளாக இவற்றைப் பயன்படுத்துகிறது.
இத்தனை பயங்கரமாகச் சித்தரிக்கப்படும் பெரியகுளம் சம்பவத்தில் நடந்திருப்பது என்ன? 3 பேர் சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குண்டு வெடிப்பு, போலீசுடன் மோதல், உயிரிழப்பு என்று எதுவும் நிகழவில்லை. கைது செய்த போலீசாருக்கோ ஒரு சிராய்ப்புக் காயம் கூட ஏற்படவில்லை. போலீசின் சட்டம் ஒழுங்கு பார்வையின் படியேகூட இது மிகவும் சாதாரணமான குற்றம்தான்.
தினகரன் பத்திரிகை மீது பட்டப்பகலில் போலீசின் முன்னிலையில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். 3 ஊழியர்கள் கொல்லப்பட்டிருந்தும், அந்த வன்முறை வெறியாட்டம் மறுக்க முடியாதவண்ணம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தும், "தாக்குதலுக்குக் கருத்துக் கணிப்புதான் காரணம்'' என்று கூறி, சட்டமன்றத்திலேயே அதனை நியாயப்படுத்தினார், கருணாநிதி.
அண்ணன் அழகிரிக்கு 2% தான் ஆதரவு என்று எழுதியதற்காக ஒரு பத்திரிகை அலுவலகத்தை ஊழியர்களுடன் சேர்த்துக் கொளுத்தலாமாம். அழகிரி ஆதரவாளர்களின் கோபத்துக்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். ஆனால், ஒரு இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக்கும், பல ஆயிரம் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் படுகொலைக்கும், கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிக்கும் தள்ளும் இந்த அரசமைப்புக்கு எதிராக ஆயுதமேந்துவது தீவிரவாதமாம்!
மூன்று இளைஞர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள் என்ற குற்றத்துக்காகத் தமிழகமெங்கும் மாவோயிஸ்டு அமைப்பினர் மீது தேடுதல் வேட்டை நடத்துகிறது போலீசு. சிவகங்கையில் நட்ட நடுவீதியில் ரிமோட் குண்டு வைத்து தி.மு.க. நகராட்சித் தலைவரை தி.மு.க.காரனே கொலை செய்கிறானே, அந்தப் படுகொலைக்கு என்ன காரணம்? அன்று உள்ளாட்சித் தேர்தலையும், இன்று கூட்டுறவுத் தேர்தலையும் ரத்து செய்ய வைத்த வன்முறைக்கான காரணம் என்ன? தமிழ் நாட்டையே கொள்ளைக் காடாக்கி வரும் கழக வீரப்பன்கள் மீது எந்த அதிரடிப்படை ஏவப்பட்டிருக்கிறது?
"நக்சல் ஒழிப்பு' நடவடிக்கையில் காட்டப்படும் இந்தத் தீவிரத்தில் ஒரு சதவீதமாவது "தீண்டாமை ஒழிப்பு', "லஞ்ச ஒழிப்பு', "மதவெறி ஒழிப்பு' நடவடிக்கைகளில் காட்டப்பட்டதுண்டா? காடு மலையெல்லாம் தேடி அலைய வேண்டிய தேவையே இல்லாமல் கண்முன்னால் காட்சி தரும் இந்தக் கிரிமினல் குற்றங்களை ஒழிக்க ஒரு அமைதிப்படையாவது ஏவப்பட்டதுண்டா?
"வன்முறையா மென்முறையா' என்பதல்ல பிரச்சினை. இந்த அரசமைப்பில் ஐக்கியமாகி, அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரகு வேலை செய்யவும், மக்கள் சொத்தைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டுக் கொள்ளவும் ஆயுதம் ஏந்தி மோதிக்கொள்வதில் ஆளும் வர்க்கத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. மக்கள் யுத்தக் குழுவினர் சந்திரபாபு நாயுடுவுக்கு வைத்த குண்டைக் காட்டிலும், சிவகங்கையில் வைக்கப்பட்ட ரிமோட் குண்டுதான் நவீன தொழில்நுட்பம். அவ்வாறிருந்தும் சிவகங்கையில் தேடுதல் வேட்டை கிடையாது, காரணம், இது தி.மு.க. ஆட்சி என்பது மட்டுமல்ல; இத்தகைய வன்முறைகள் எதுவும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானவையல்ல என்பதுதான் அடிப்படைக் காரணம்.
மாறாக, "இந்த கொள்ளைக்கார அரசமைப்பைத் தூக்கியெறிவதற்காக ஆயுதம் ஏந்தவேண்டும்'' என்று கூறுவதனால்தான், ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களும் "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்தி நக்சல்பாரிகள் மீது பாய்ந்து பிடுங்குகின்றன.
குறிப்பாக, தனியார்மயதாராளமயக் கொள்கைகளை எதிர்த்துக் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள், நாளை கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்டு விடுவார்களோ என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கங்களை நடுங்கச் செய்கிறது. துப்பாக்கிகாடுபயிற்சி என்பதல்ல எதிரிகளின் அச்சத்துக்குக் காரணம். மார்க்சியம்லெனினியம்மாசேதுங் சிந்தனை என்ற கம்யூனிசச் சித்தாந்தம்தான் அவர்களை அச்சுறுத்துகிறது. கம்யூனிசப் புரட்சியாளர்களின் உறுதியும் விடாப்பிடியான முயற்சியும் அவர்களுக்குப் பீதியூட்டுகிறது.
இதனை மறைத்துக் கொண்டு, "வேலையில்லாத பட்டதாரிகளும் விரக்தியுற்ற இளைஞர்களும்தான் நக்சல்பாரிகளாக மாறிவிடுவதாக'க் கதையளக்கிறார்கள். "இந்த சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் நக்சலியம் ஒழிந்துவிடும்' என்று கனாக் காண்கிறார்கள். வேலையின்மை, வறுமை காரணமாக நக்சலியம் பரவுகிறது (திருட்டு, விபச்சாரம் போன்ற கிரிமினல் குற்றங்கள் பரவுவதைப் போல) என்று கூறுவதன் மூலம் நக்சல்பாரி அரசியலையே கிரிமினல் குற்றமாகச் சித்தரிக்கிறார்கள்.
விரக்தியுற்றவர்கள்தான் நக்சல்பாரிகளாகிறார்கள் என்ற கூற்று உண்மையாயிருப்பின், தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சம் விவசாயிகளும் நக்சல்பாரிகளாகியிருக்க வேண்டும். நக்சல்பாரிகளை உந்தித் தள்ளும் உணர்ச்சி, விரக்தி அல்ல; அது சமூக அநீதிகளுக்கு எதிரான ஆவேசம். அவர்களை வழிநடத்துவது மார்க்சியம்லெனினியம் என்ற அறிவியல் பார்வை. நக்சல்பாரிகள் சமூகத்தைத் தம் தோளில் சுமப்பவர்கள், மக்கள் நலனுக்காகத் தம் சொந்த வாழ்வின் இன்பங்களைத் தாமே முன்வந்து துறப்பவர்கள். நக்சல்பாரிகள் விரக்தியுற்ற இளைஞர்களுமல்ல, கம்யூனிசம் சோற்றால் அடித்தால் செத்துவிழும் கொள்கையுமல்ல.
நக்சல்பாரிகளின் அரசியலைத் தவறு என்று யாராலும் வாதாட முடியாது. நக்சல்பாரி இயக்கத்தின் ஒரு சாதாரணத் தொண்டன் எழுப்பும் அரசியல் கேள்விக்கு எந்த ஓட்டுப் பொறுக்கித் தலைவனாலும் பதில் சொல்ல முடியாது. நக்சல்பாரிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. எனவேதான் அச்சுறுத்துகிறது, அவதூறு செய்கிறது, மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சி செய்கிறது.
பெரியகுளம் சம்பவத்தையொட்டி நக்சல்பாரிகளுக்கு எதிராக அரசும் ஊடகங்களும் மேற்கொண்டு வரும் பொய்ப்பிரச்சாரத்தை நாம் முறியடிக்க முடியும். ஆனால், மேற்கூறிய பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லையென்றோ, மாவோயிஸ்டுகளின் "ஆயுதப் போராட்டத்துக்கான' நியாயத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றோ அதற்குப் பொருள் அல்ல. பெரியகுளம் சம்பவத்தையொட்டி மாவோயிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையே இதற்குச் சான்று கூறுகிறது.
"மாவோயிஸ்டுகளின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் மறைத்து விட்டு அவர்களை வெறும் ஆயுத மோகம் கொண்ட தீவிரவாதிகளாகக் காட்ட ஊடகங்கள் முயற்சிக்கின்றன''... "ஆயுதப் போராட்டத்திற்கான சிறிய தயாரிப்புகளையே பெரும் பயங்கரவாதமெனச் சித்தரித்துப் பயங்கரவாத பீதியை உருவாக்கி வருகிறது கருணாநிதி அரசு'' என்று கூறும் அந்த அறிக்கை, "மாவோயிஸ்டுகள் யார், அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்?'' என்று சுருக்கமாக விளக்குகிறது.
"மாவோயிஸ்டுகள் யார், அவர்களுடைய கொள்கை என்ன, அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்' என்பதையே மக்களுக்கு விளக்கிப் புரியவைக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஒரு அமைப்பு, ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டதாகக் கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்பதை விளக்கத் தேவையில்லை. தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் இவர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை.
பேருந்து எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக சனவரி, 2000இல் தோழர் ரவீந்திரனை போலீசு காவலில் வைத்து சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று விட்டு, அதனை மோதல் கொலை என்று புளுகியது போலீசு. அது தி.மு.க. ஆட்சிக்காலம். பின்னர், நவம்பர், 2002இல் தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் 26 தோழர்கள் கைது செய்யப்பட்டு பொடாவில் சிறை வைக்கப்பட்டனர். தோழர் சிவா சுட்டுக் கொல்லப்பட்டார் அது ஜெயலலிதா ஆட்சிக் காலம். இப்போது பெரியகுளம் சம்பவம்.
பெரியகுளத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி மாவோயிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை எதுவும் கூறவில்லை. ஆனால், முன்னர் ரவீந்திரன் கொலை செய்யப்பட்டபோதும், ஊத்தங்கரையில் 26 பேர் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட போதும், மக்கள் ஆதரவு அடித்தளம் கூட இல்லாமல் ஆயுதக் குழுக்களைக் கட்டும் இவர்களுடைய சாகசவாதம் பற்றி நாம் விமரிசித்தோம். மாவோயிஸ்டுகள் கோபப்பட்டார்கள். தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான மக்களைத் திரட்டியிருப்பதாகவும், அம்மாவட்டம் ஒரு ஆயுதப்போராட்ட முனையாக உருவாகியிருப்பதாகவும் வலிந்து வாதாடினார்கள்.
தற்போது பெரியகுளம் பகுதி! இங்கே மாவோயிஸ்டு அமைப்பிற்கு மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான செல்வாக்கு ஏதும் இல்லை. அன்றைய சம்பவத்தில் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததற்காக அந்த வட்டாரத்து மக்கள் யாரும் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி இல்லை.
"மலைத்தொடர்கள், காட்டுப் பகுதிகள், பாதுகாப்பான மறைவிடங்கள் கொண்ட காட்டுப்பகுதிகளாக இருந்தால் போதும்; அங்கே ஆயுதக்குழுக்களைக் கட்டிவிடலாம், ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கிவிடலாம்'' என்று சிந்திக்கும் அளவுக்கு புவியியல்தான் இவர்களை வழிநடத்துகிறது; அரசியல் வழிநடத்துவதாகத் தெரியவில்லை. அரசியல் கண்ணோட்டம் ஏதுமற்ற இந்த அசட்டுத்தனமான நடவடிக்கையை இவர்கள் தம்முடைய சொந்த விவகாரமாகக் கருதிக் கொள்கிறார்கள். "நாங்கள் போராடுகிறோம், நாங்கள் தியாகம் செய்கிறோம், உனக்கென்ன நட்டம்?'' என்ற சாகசவாதிகளுக்கே உரித்தான மனோபாவம்தான் இவர்களுடைய சிந்தனையை வழிநடத்துகிறது.
"கம்யூனிஸ்டுகள் தம்முடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டவர்கள்'' என்ற மிக எளிய உண்மை கூட, எதிரிகளின் அவதூறுப் பிரச்சாரம் தொடங்கிய பின்னர்தான் இலேசாக இவர்களுக்குப் புரியத் தொடங்குகிறது.
எனவேதான் "மாவோயிஸ்டுகள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்?'' என்று தங்களுடைய அறிக்கையில் மக்களுக்கு விளக்கம் தருகிறார்கள். "சிறப்புப் பொருளாதார மண்டலம், கோக், பெப்சி, ரிலையன்சு, குஜராத் படுகொலைகள்..'' என்று ஒரு நீண்ட பட்டியலைக் கூறி "இத்தகைய பயங்கரவாதங்களை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதம் ஏந்துவது பயங்கரவாதமல்ல. அத்தகைய மக்கள் புரட்சிக்குத் தலைமை ஏற்கவே மாவோயிஸ்டுகள் ஆயுதம் ஏந்துகிறார்கள்'' என்கிறது அவர்களது அறிக்கை.
மேற்கூறிய பிரச்சினைகளுக்காக ஏற்கெனவே மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கிறதாம்! அதற்கு இவர்கள் தலைமை தாங்குகிறார்களாம்! புரட்சிக்குத் தலைமை தாங்கும் கம்யூனிஸ்டுகள், புரட்சியில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குத் "தன்னிலை விளக்கம்' தந்து புரிய வைப்பதை நாம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.
சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கட்டும், பிற தனியார்மய நடவடிக்கைகளாக இருக்கட்டும், அவற்றுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அரசமைப்பின் வரம்புக்குள்ளேயே தத்தம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பல்வேறு மக்கட்பிரிவினர் நடத்தும் இத்தகைய போராட்டங்கள் அவை போர்க்குணமிக்கவையாக இருப்பினும் பொருளாதாரப் போராட்டங்களே. மறுகாலனியாக்க எதிர்ப்பு என்ற அரசியல் கண்ணோட்டமோ, இந்த அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்ற இலட்சியமோ அத்தகைய போராட்டங்களுக்கு இல்லை. அத்தகைய அரசியல் முழக்கங்களை முன்வைத்து மக்களைத் திரட்டுவதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமை. புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவது என்பதன் பொருள் இதுதான். இப்படிப்பட்ட புரிதலோ, இவ்வாறு மக்களைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கையோ மாவோயிஸ்டுகளுக்கு இல்லை.
மாறாக, மக்களை அரசியல்படுத்த ஒரு விபரீதமான முறையைக் கடைப்பிடிக்கிறார்கள், மாவோயிஸ்டுகள். தத்தம் கோரிக்கைகளுக்காக மக்கள் போராடும்போது அவற்றில் கலந்து கொண்டு, அப்போராட்டங்களையே போலீசுடனான மோதலாக மாற்றினால், நிராயுதபாணிகளான மக்களோ போலீசின் அடக்குமுறையை எதிர்கொண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்பார்கள்; இப்படியாக "அரசு என்பது அடக்குமுறைக் கருவி' என்ற உண்மையை மக்களுக்கு அனுபவபூர்வமாக புரிய வைத்து விடலாம் என்று நம்புகிறார்கள். இப்படியான செயல்கள் மூலம் அவர்கள் மத்தியிலிருந்து முன்னணியாளர்கள் சிலரைத் தமது "ஆயுதக் குழுக்களுக்கு' வென்றெடுக்கிறார்கள். இதுதான் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்ட மாவோயிஸ்டுகள் வகுத்திருக்கும் வழிமுறை.
சில சிறப்பான நிலைமைகளில் ஆந்திரம் மற்றும் தண்டகாரண்யாவின் பழங்குடி மக்கள் மத்தியில் தாங்கள் பெற்றிருக்கும் ஆதரவைக் காட்டி, அதனை மக்களின் ஆயுதப் போராட்டம் என்று சித்தரிக்கிறார்கள் மாவோயிஸ்டுகள். இதையே நாடு முழுவதற்கும் விரிவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
அந்த மக்கள் ஆதரவின் தன்மை என்ன? அது அரசியல் ரீதியான ஆதரவல்ல. "நம்முடைய கோரிக்கைகளுக்காக நக்சல்பாரிகள் உயிரைக் கொடுக்கிறார்கள்'' என்ற அறவுணர்வின் அடிப்படையில் பழங்குடி மக்கள் வழங்கும் ஆதரவு. இத்தகைய ஆதரவு மக்களிடம் அரசியல் உணர்வை வளர்ப்பதில்லை. மாறாக, அதனை இல்லாமல் செய்து, மக்களை வெறும் பார்வையாளர்களாக்கி விடுகிறது.
சமீபத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் அறிவித்த "பந்த்'இல் ஆந்திரத்தில் எவ்வித சம்பவமும் இல்லை என்கின்றன பத்திரிகைச் செய்திகள். சட்டிஸ்காரிலோ தொலைபேசி கோபுரம் தகர்ப்பு, மின் கோபுரம் தகர்ப்பு என்பன போன்ற சில இராணுவ நடவடிக்கைகள்தான் நடந்துள்ளன. மக்களின் அரசியல் உணர்வை அமைப்பாக்கிக் காட்டுகின்ற போராட்ட வடிவமான "பந்த்' என்ற நடவடிக்கை, செயலூக்கமிக்க பங்கேற்பின் மூலம் அவர்களுடைய வர்க்க உணர்வை இன்னும் மேம்பட்ட தளத்துக்கு உயர்த்தவேண்டிய ஒரு அரசியல் நடவடிக்கை, அதன் பொருளை இழந்து ஆளும் வர்க்கத்துக்கு "தொந்திரவு தரும் நடவடிக்கையாக'ச் சுருங்கிவிட்டதை நாம் காண்கிறோம்.
ஆந்திரத்தில் தங்கள் அமைப்பிற்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக ஒப்புக் கொள்கிறார் மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், தோழர் சோனு. (பீப்பிள்ஸ் மார்ச், ஜூலை, 2007) ஆனால், இந்தப் பின்னடைவு குறித்தும்கூட அவர்கள் இராணுவ ரீதியாகப் பரிசீலிக்கிறார்களேயன்றி, அரசியல்ரீதியாகப் பரிசீலிப்பதில்லை.
"அங்கே மாவோயிஸ்டுகள் ஏற்கெனவே நிலைநாட்டியிருப்பதாகக் கூறிக் கொள்ளும் "மக்கள் அதிகாரத்தைப்' பாதுகாத்துக் கொள்ள மக்கள் போராடுகிறார்களா? ராஜசேகர் ரெட்டி அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தபோது இலட்சக்கணக்கில் திரண்ட மக்கள், பேச்சு வார்த்தையின்போதே போலி மோதல் கொலைகளை அரசு தொடங்கியபோது, அதனை எதிர்த்து அவ்வாறு மக்கள் அணிதிரளாதது ஏன்? மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த ஆந்திரத்துக்கு, கடுமையான மக்கள் எதிர்ப்புகள் இன்றி புஷ் விஜயம் செய்ய முடிவது எப்படி? சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஆந்திரம் முன்னிலை வகிப்பதும், நாயுடுவைக் காட்டிலும் தீவிரமாகப் புதிய தாராளவாதக் கொள்கைகளை ரெட்டி அமல்படுத்த முடிவதும், இவற்றுக்கெல்லாம் எதிராக நந்திக்கிராமுடன் ஒப்பிடத்தக்க வகையிலான மக்கள் போராட்டங்கள் எதுவும் ஆந்திரத்தில் நடைபெறாமல் இருப்பதும் ஏன்?'' என்பன போன்ற கேள்விகளை அவர்கள் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்வதில்லை.
"அடக்குமுறை இருப்பதால் மக்கள் திரளவில்லை, இல்லையென்றால் மக்கள் திரளுவார்கள்'' என்ற எளிய சூத்திரத்தைச் சொல்லி ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். வரலாறு நெடுகிலும் நடந்திருக்கின்ற மக்களின் அரசியல் ரீதியான எழுச்சிகளோ, நம் கண் முன்னே காஷ்மீரிலும், மணிப்பூரிலும் ஏன், நந்திக்கிராமிலும் அடக்குமுறைகளை மீறிக் கிளர்ந்தெழும் மக்கள் எழுச்சிகளோ கூட (அவை வேறு யார் தலைமையிலானவையாக இருந்தாலும்) மாவோயிஸ்டுகளுடைய கண்களைத் திறக்கவில்லை. ஏனெனில், அவர்களுடைய சுத்த இராணுவக் கண்ணோட்டம், மக்களின் அரசியல் முன்முயற்சி பற்றிக் கவலைப்படுவதில்லை. "தமது ஆயுத நடவடிக்கைகளுக்கு உதவுவது' என்ற கோணத்தில் மட்டுமே மக்களின் ஆதரவு குறித்துக் கவலைப்படுகிறார்கள்.
"மாவோயிஸ்டுகளின் கொள்கைகளை மறைத்து விட்டு அவர்களை வெறும் ஆயுத மோகம் கொண்ட தீவிரவாதிகளாகக் காட்ட ஊடகங்கள் முயல்கின்றன'' என்று மாவோயிஸ்டு தமிழ் மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஊடகங்கள் அவதூறு செய்வது இருக்கட்டும், உண்மை நிலவரமென்ன? " ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதுதான் ஒரு அமைப்பை புரட்சிகர அமைப்பு என்று மதிப்பிடுவதற்கான முன் நிபந்தனை'' என்று மாவோயிஸ்டு அமைப்பினர் கொண்டிருக்கும் கருத்துக்கும், சிறுபிள்ளைத்தனமான பெரியகுளம் ஆயுதப்போராட்டத் தயாரிப்புக்கும் வேறென்ன பொருள்? "புரட்சிகர அரசியலின் பௌதிக வடிவமே துப்பாக்கிதான்' என்று கருதும் சிந்தனைதானே இதில் வெளிப்படுகிறது!
"அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப்போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்ய வேண்டும்'' என்று நாம் கூறுவதையும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஏளனத்துடன் மறுக்கிறார்கள். "மக்கள் ஆயுதப்போராட்டத்துக்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். சும்மா எத்தனை நாள் பேசிக்கொண்டே இருக்க முடியும்? நாம்தான் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்'' என்று அரசியலையே வீர வசனமாகச் சுருக்குகிறார்கள்.
மக்களைப் புரட்சிக்கு அணியமாக்குவதும், தலைமை தாங்குவதும்தான் கம்யூனிஸ்டுகளுக்குரிய பணியே அன்றி, மக்களின் சார்பாகப் புரட்சி செய்வதல்ல. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களுடன் புரட்சியாளர்கள் "ஒண்டிக்கு ஒண்டி' நடத்தும் சண்டையும் அல்ல. ஆனால், மக்களுக்கு விடுதலையை "வழங்கப் பொறுப்பேற்றிருக்கும்' இடது சாகசவாதம் இப்படித்தான் கருதிக் கொள்கிறது.
வலது சந்தர்ப்பவாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் புரட்சிக்கு இழைக்கும் துரோகம் எளிதில் அம்பலமாகிவிடுகிறது. ஆனால், இடது சாகசவாதமும் புரட்சிக்கு இழப்பைத்தான் ஏற்படுத்துகிறது என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. சிறையையும் சித்திரவதையையும் சந்திக்கும் அந்தத் தோழர்களின் தனிப்பட்ட இழப்பாக மட்டுமே இது புரிந்து கொள்ளப்படுகிறது.
"பயங்கரவாதப் படையான அதிரடிப்படையை அனுப்புவதன் மூலம் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை மட்டுமல்ல, இச்சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் அனைவரையும் மிரட்ட முயற்சிக்கிறார் கருணாநிதி'' என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது, மாவோயிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு.
உண்மைதான். ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையான அரசு எந்திரமும் அதிரடிப்படையும் மக்கள் அனைவரின் பொது எதிரி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், அந்த எதிரிப்படை தன்னை நாயகனாகச் சித்தரித்துக்கொள்ளவும், தன்னுடைய பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்ளவும், புரட்சியாளர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் மாவோயிஸ்டுகளின் இந்த நடவடிக்கை எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இது புரட்சிக்கு ஏற்படும் இழப்பு என்பதை இனிமேலாவது அவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களா என்பதுதான் கேள்வி.