"பகுதியளவில் மக்களின் அரசியல் அதிகார அலகுகளை கட்டியமைத்து விடுதலை தளப் பிரதேசத்தை நிறுவுவதே புரட்சிக்கு தலைமைத் தாங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மையான மையக் கடமையாகும். அதற்காக மக்களை அணிதிரட்டி ஆயுதப் போராட்டத்தை நடத்தி, ஆளும் வர்க்கங்களையும் எதிரியின் ஆயுதப் படைகளையும் பகுதியளவில் வீழ்த்த வேண்டும். இதனை நிறைவேற்ற வேண்டுமெனில் மக்கள் அடித்தளம், ஆதரவு மட்டுமின்றி ஆயுதப் போராட்டத்தில் அவர்களின் நேரடியான பங்களிப்பும் அவசியம்.

 எனவே புரட்சிகர அரசியலின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்திற்காக அணிதிரட்டுவது உடனடியாக செய்யப்பட வேண்டிய கடமையாகும். இதற்கு ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு சாதகமான காடுகளிலும், மலைகளிலும் மக்கள் வாழக்கூடிய மூலஉத்தி ரீதியான பகுதிகளை தேர்வு செய்து அங்குள்ள வர்க்க முரண்பாடுகளின் குறிப்பான வடிவங்களை ஆய்வு செய்வதும், மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தி புரட்சிகர அரசியலின் அடிப்படையில் அவர்களை அமைப்பாக்குவதும், நிலப்பரப்பை ஆய்வு செய்வதும் அவசியம். இதனை வெளிப்படையான புரட்சிகர மக்கள் திரள் அமைப்புகளின் மூலம் செய்வதா அல்லது எதிரிக்கு அம்பலமாகாத வகையில் இரகசியமாக செய்வதா என்பது அந்த குறிப்பான பகுதியில் / மாநிலத்தில் புரட்சிகர அமைப்பின் மீது அரசு எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்கிறது என்பதைப் பொருத்தும் ஒட்டு மொத்தமாக நாட்டில் நிலவும் புரட்சிகர சூழலின் தீவிரத்தன்மையை பொருத்தும் உள்ளது.'' "புரட்சிகர மக்கள் திரள் அமைப்புகளும், கட்சியும் தடை செய்யப்பட்டு, வெளிப்படையாக செயல்பட முடியாத சூழலில் ஆயுதப் போராட்டத்திற்கு தேவையான மக்கள் அடித்தளம், மற்றும் இதர தயாரிப்புகள் இரகசியமாக செய்யப்பட வேண்டும்.'' (போராளி வெளியீடு, பக். 32,33 மற்றும் 34).


இவையெல்லாம் புரட்சிகர அணிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மாவோயிஸ்டு கட்சி தான் வகுத்துக் கொண்டிருக்கும் கோட்பாடும், நடைமுறையும் ஏதோ செம்மையானது, சீரானது, அறிவியல் பூர்வமானது, மாவோவின் மக்கள் யுத்தப் பாதை அடிப்படையிலானது என்று தோன்றுவதற்காக தனது வெளியீட்டில் சொல்லப்பட்டிருப்பன.


ஆனால், அதன் உட்கட்சி ஆவணமோ, மக்களைத் திரட்டுவதற்கும், ஆயுதப் போராட்டத்தை தொடங்குவதற்கும் "தலையால் நடக்கும்'' பின்வரும் கோட்பாட்டையும் வழிமுறையையும் முன் வைக்கிறது:


"சீனத்தைப் போல நமது நாட்டில் யுத்தம் முதன்மை போராட்ட வடிவமாகவும் இராணுவம் முதன்மை அமைப்பு வடிவமாகவும் உள்ளது. ஆகவே இங்கும் தொடக்கத்திலிருந்தே ஆயுதப் போராட்டத்தின் மூலம் மக்களை அணிதிரட்டி, புரட்சிகர யுத்தத்தை வளர்த்தெடுத்து, பகுதியளவில் அதிகாரத்தைக் கைப்பற்றி அதனை பரந்த பகுதிகளுக்கு விரிவுபடுத்தி, நகரங்களை சுற்றி வளைத்து நாடளவில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இங்கு ஆயுதப் போராட்டத்திற்கு மக்கள் திரள் போராட்டங்களையும், மக்கள் படை கட்டுவதற்கு மக்கள் திரள் அமைப்புகளையும் முன் நிபந்தனையாக்குவது கூடாது; பகுதியளவில் எழுச்சிக்கான தயாரிப்புகளை செய்து கொரில்லாப் போரின் மூலம் அதிகாரத்தை வென்றெடுத்து பின்னர் அதைப் போலவே பிற பகுதிகளுக்கு விரிவடைய செய்வதும் தவறானது.


"உள்ளூர் எதிரிகளின் தாக்குதல்கள் மற்றும் அரசின் ஒடுக்குமுறை இயக்கத்திற்கு எதிராக எதிர்ப்பை கொடுக்க, சிவப்பு எதிர்ப்பு போராட்டக் காலத்திலேயே நாம் பகுதி கொரில்லா ஆயுதக் குழுக்களையும், சிறப்பு கொரில்லா குழுக்களையும் மக்கள் குடிபடையையும் அமைப்பதோடு மட்டுமல்ல, கிராம மக்களையும் சாத்தியமான அளவுக்கு ஆயுதபாணியாக்குவதுடன் அவர்களுக்கு பயிற்சி தரவேண்டும்.


"நக்சல்பாரி பேரெழுச்சிக்குப் பின்னர் ஆளும் வர்க்கங்களின் அடித்தளத்தை தகர்த்தெறிவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டுள்ள மக்கள் திரள் இயக்கங்களின் அனுபவம் என்ன? போராட்டம் துவக்கப்பட்டவுடன் அல்லது ஒரு சில மாதங்களுக்குள் அரசின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகின்றது. நக்சல்பாரி முதற்கொண்டு இதுவரையில் இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த மூலையில் நடத்தப்பட்ட போராட்டமாக இருப்பினும் அதன் அனுபவம் இதையே நிரூபிக்கின்றது.


"ஆகவே, ஆயுதப் போராட்டம் முதன்மை வடிவமாகவும் கொள்வதுதான் சரியானது. அம்மாதிரியான சீனா, வியத்நாம், பிலிப்பைன்ஸ், பெரு, நேபாளம் போன்ற நாடுகளின் அனுபவங்களில் இருந்து பார்க்கும்போது சிறிய அலகுகளில் முதலில் ஆயுதக் குழுக்களைக் கட்டி முன்னேறுவதுதான் சரியானதென்று காட்டுகின்றன.


"தொடக்கத்திலிருந்தே ஆயுதக் குழுக்களைக் கட்டி நடத்தப்படும் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் மக்களை ஆயுதப் போராட்ட அரசியலுக்கு அணிதிரட்ட முடியும். மக்கள் யுத்தத்தை நடத்துவதற்கான மக்கள் படையை கட்ட முடியும். கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்தை துவங்கும்போதே பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் மற்றும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதக் குழுக்களை கட்டுவது மிகவும் அவசியமாக உள்ளது.


"இந்தியாவில் நமது கட்சியின் அனுபவத்தை பார்த்தோமேயானால் நாம் ஏற்கெனவே கூறிய ஜகித்யால் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசுப் படைகள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டதை எதிர்த்து 1979இல் நான்கு ஆயுதக் குழுக்கள் கட்டப்பட்டன. இது வளர்ச்சியடைந்து தண்டகாரண்யாவிற்கும் பின்னர் நாட்டின் பல பாகங்களுக்கும் விரிவடைந்தது. கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்து வருவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கொரில்லா வீரர்களையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிப்படையினரை கொண்ட மக்கள் கொரில்லா விடுதலைப் படையாக வளர்ச்சியடைந்துள்ளது.


"இவையனைத்தும் நமக்கு தெளிவுபடுத்தும் விசயம் என்னவெனில் மக்கள் இராணுவம் கட்டப்படும்பொழுது எத்தனை வீரர்களை கொண்டு கட்டப்பட்டாலும், எத்தனை துப்பாக்கிகளைக் கொண்டிருந்தாலும், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் உறுதியாக நின்று, ஆயுதப் போராட்டத்தை உறுதியாக நடத்திக் கொண்டு எத்தனை இழப்புகளும், கொடும் அடக்குமுறைகளும் வந்தாலும் மக்களை அணிதிரட்டி புரட்சிகர இயக்கத்தை முன்நடத்தி வந்தால் அது வளர்ச்சிடையவது நிச்சயம். அந்தந்த நாட்டின் குறிப்பான நிலைகளுக்கேற்றவாறு, ஏற்ற இறக்கங்களை கண்டு இன்று வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டு வருகின்றது.' (ஆதாரம்: "வலது சந்தர்ப்பவாத கருத்துக்களை முறியடிப்போம்! நீண்டகால மக்கள்யுத்தப் பாதையை உயர்த்திப் பிடிப்போம்!'' இ.க.க.(மாவோயிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு வெளியீடு, பக். 3639, சுருக்கப்பட்டது).


கிராமப்புறங்களில் கூலிஏழை விவசாயிகளின் கொரில்லாக் குழுக்களைக் கட்டி வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பதன் மூலம் கொரில்லாப் போரையும் மக்கள் யுத்தத்தையும் தொடங்கி முன்னேற முடியும் என்ற லின்பியாவோ சாருமஜூம்தாரின் கண்டுபிடிப்பின் பரிணாம வளர்ச்சிதான் இந்த இ.க.க.(மாவோயிஸ்ட்) கட்சியின் வழிமுறை. உண்மையில் சேகுவேரா, ரெஜிஸ்தேப்ரே, கார்லோஸ் மாரிகெல்லா போன்ற குட்டி முதலாளிகளின் இந்த கொரில்லாப் போர்முறையை மாவோயிசம் என்ற பெயரில் இவர்கள் முன்மொழிகிறார்கள்.


குட்டி முதலாளித்துவ இராணுவவாதத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு தாங்கள் மாவோவின் மக்கள் யுத்தப் பாதையில் முன்னேறுவதாகவும் தங்களை மாவோயிஸ்ட் கட்சி என்று கூறிக்கொள்வதும்தான் வேடிக்கை, வினோதமாகும்!


மூன்றாண்டுகளுக்கு முன்பே இ.க.க.(மாவோயிஸ்ட்) தமிழ் மாநிலக் குழுவிடம் பின்வருமாறு நாம் கோரியிருந்தோம். "ம.யு. தமிழ்மாநிலக் குழு தமிழகத்தில் தானே செயல்படுகிறது! அது எதற்கெடுத்தாலும் ஆந்திராவைச் சான்று காட்டுவதை தவிர்த்து, தான் போதிக்கும் வழிமுறைகளை, தமிழ்நாட்டில் அமல்படுத்திய அனுபவத்தைச் சொல்லியிருந்தால், மா.அ.க.வுக்கும் புரட்சிக்கும் பயன்படக்கூடியதாக இருந்திருக்கும்.''


மீண்டும் இதையே கோருகிறோம். 1995-96 முதல் இரவீந்திரன், பிறகு சிவா, தற்போது மகாலிங்கம் தலைமையில் ஆயுதக் குழுக்களைக் கட்டி ஆயுதப் போராட்ட அரசியலுக்கு மக்களை அணிதிரட்டவும் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கவும் மக்கள் யுத்தத்தை விரிவுபடுத்தவும் முயன்று வருகிறார்கள். பழைய வரலாறு ஒருபுறம் இருக்கட்டும், இந்த பத்தாண்டுகளாக நடக்கும் ஆயுதப் போராட்டத் தயாரிப்பு நடவடிக்கைகள் கருச்சிதைவாகவே முடிகின்றனவே, அந்த அனுபவத்தைத் தொகுத்துத் தருவீர்களானால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.