11292022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

குதர்க்கவாதமே கோட்பாடாக!

மாவோயிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் மீதும் அதன் மையத் தலைமை மீதும் புதிய ஜனநாயகம் அமைப்பு முன்வைக்கும் விமர்சனங்களைப் புரிந்து கொண்டு பொறுப்பான பதில் கூறாமல், அவற்றைத் திரித்துக் கூறி தவறான வியாக்கியானம் செய்து அறிவொளியும் போராளியும் பல விதண்டாவாதங்கள் புரிகின்றனர்.


சான்றாக, பெரியகுளம் முருகமலை சம்பவத்தை ஒட்டி பு.ஜ. எழுதிய கட்டுரையின் தலைப்பு "நக்சல்பாரி "அபாயம்': அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?'' என்று இருந்தது. அதை, "இவ்வாறு வினாவைத் தொடுத்து ஆயுதத்தையும் அரசியலையும் ஒன்றுக்கொன்று எதிரானதாக இயக்கவியல் பார்வையின்றி நிறுத்தியுள்ளனர்'' என்றும் "நக்சல்பாரியால் முன்வைக்கப்பட்ட ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து விலகி, ஆயுதப் போராட்டப் பாதைக்கு எதிராக வெறும் அரசியல் அணிதிரட்டலை மட்டுமே முன்வைப்பது வடிகட்டிய வலது சந்தர்ப்பவாதமே ஆகும்'' (பெரியகுளத்தில்..., பக்.8) என்றும் மாவோயிஸ்டுகள் குதர்க்கமாக வியாக்கியானம் செய்துள்ளார்கள்.


இந்தக் குதர்க்கத்தையே கோட்பாடாக்கித் தருகிறது, போராளி வெளியீடு. "நக்சல்பாரி அபாயம் அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா' எனத் தலைப்பிட்டு இருப்பதே மிகவும் சதித்தனமானது. இது அரசியலுக்கும் ஆயுதத்திற்கும் இடையிலுள்ள உறவை, ஒன்றிற்கெதிராக மற்றொன்றை நிறுத்தும் இயந்திரகதியான அணுகுமுறை. இந்தியப் புரட்சியின் அரசியல் வழியே ஆயுதப் போராட்டத்தின் மூலம், புரட்சிகர யுத்தத்தின் மூலம், மக்களை அணிதிரட்டி அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதுதான். இதில் ஆயுதப் போராட்டம் இல்லாத அரசியல் என ஒன்றில்லை. மேலும், இந்தியப் புரட்சியின் முதன்மையான போராட்ட வடிவமே ஆயுதப் போராட்டம் தான். புரட்சிகர யுத்தம் தான். அப்படியிருக்கும்போது, ஒன்றுக்கெதிராக மற்றொன்றை நிறுத்துவது மோசடியாகும். (போராளி வெளியீடு, பக்.19)


இது வெறுமனே குதர்க்கமான, விதண்டாவாதம் மட்டுமல்ல. இதிலும் தமது இடது சந்தர்ப்பவாதக் கண்ணோட்டத்தைத்தான் மாவோயிஸ்டு கட்சியினர் வெளிப்படுத்தியுள்ளனர்.


"பெரிய குளத்தில் நடந்தது ஒரு மிகச் சிறிய நிகழ்வு'' என்றுகூறும் அறிவொளி, அதையொட்டி தமிழகத்திற்கே ஏதோ ஆபத்து ஏற்பட்டுவிட்டதைப் போன்று பீதியைக் கிளப்பி, தமிழகம் முழுவதும் ஓர் பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதிரடிப்படை சிறப்பு முகாம்களை நிறுவி, குற்றாலம் முதல் தர்மபுரி வரை மலைகள் காடுகளில் எல்லாம் நக்சல் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கிராமம் கிராமமாக, வீடுவீடாகச் சென்று மிரட்டி, மக்களை அச்சத்தில் உறைய வைக்கின்றனர், என்கிறார்.


"தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் பெரிய அளவில் வளர்ந்து விடவில்லை. எண்ணிக்கையில் சிலரே உள்ளனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் சுடுவதற்குப் பயன்படாத சாதாரண ஆயுதங்கள். இப்படியெல்லாம் மதிப்பீடு செய்யும் இந்தக் காவல் துறை ஏன் இப்படி மாவோயிஸ்டுகளால் மிகப்பெரிய ஆபத்து என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு லட்சக்கணக்கில் விலை வைத்து சட்ட விரோதமாக அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு மக்களுக்காகப் போராடும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள அத்தோழர்களைக் கொடிய குற்றவாளிகளைப் போல படம் போட்டுக் காட்டி அவர்களை கோர முகத்துடன் சித்தரிப்பது ஏன்? '' (பெரிய குளத்தில்..., பக். 56)


பெரியகுளம்முருகமலை சம்பவத்தையொட்டி அரசும் போலீசும் செய்தி ஊடகங்களும் பீதியூட்டி ஊதிப் பெருக்கிச் செய்யும் இந்தப் பிரச்சாரங்களைப் பற்றி மாவோயிஸ்டுகள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்குத்தான் "நக்சல்பாரி அபாயம்: அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?'' என்றவாறான கேள்வி எழுப்பி புதிய ஜனநாயகம் விளக்கமளித்திருந்தது.


புதிய ஜனநாயகம் அந்தக் கட்டுரையில் எங்கேயும் தனது அமைப்பைப் பற்றியோ, இதன் அரசியல்சித்தாந்த நிலைப்பாடுகள் பற்றியோ, இவற்றைப் பார்த்துத்தான் அரசு அச்சப்படுவதாகவோ குறிப்பிடவேயில்லை. இருந்தபோதும், "நக்சல்பாரி "அபாயம்': அரசை அச்சுறுத்துவது மாவோயிஸ்டு கட்சியினரின் ஆயுதமா, புதிய ஜனநாயகம் அமைப்பினரின் அரசியலா?'' என்று பொருள்படும் வகையில் பு.ஜ. எழுதியிருப்பதாக அறிவொளிகளும் போராளிகளும் தாமே வியாக்கியானம் செய்து கொண்டுள்ளார்கள்; புதிய ஜனநாயகம் அமைப்பையோ, அரசியலையோ பார்த்து அரசு அச்சப்படவில்லை என்றும் தங்கள் "ஆயுதப் போரட்ட அரசியலும் நடைமுறையும் அச்சுறுத்துவது, அரசை மட்டுமல்ல, மா.அ.க.வையும்தான்...'' என்றும் போராளி வெளியீடு போட்டிருக்கிறது.


பெரியகுளம்முருகமலை சம்பத்தையொட்டி பீதியூட்டி ஊதிப் பெருக்கிச் செய்யப்படும் பிரச்சாரத்தில் போலீசு, கருணாநிதி அரசு, ஆளும் வர்க்கங்கள், செய்தி ஊடகங்களின் நோக்கங்களையும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் அராஜக வன்முறைகளையும் எடுத்துச் சொன்ன புதிய ஜனநாயகம், "மாறாக இந்த கொள்ளைக்கார அரசமைப்பைத் தூக்கியெறிவதற்காக ஆயுதம் ஏந்த வேண்டும்'' என்று கூறுவதனால்தான், ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களும் "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்தி நக்சல்பாரிகள் மீது பாய்ந்து பிடுங்குகின்றன. குறிப்பாக, தனியார்மயதாராளமயக் கொள்கைகளை எதிர்த்துக் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள், நாளை கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்டு விடுவார்களோ என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கங்களை நடுங்கச் செய்கிறது. துப்பாக்கி காடு பயிற்சி என்பதல்ல எதிரிகளின் அச்சத்துக்குக் காரணம். மார்க்சியம் லெனினியம் மாசேதுங் சிந்தனை என்ற கம்யூனிசச் சித்தாந்தம்தான் அவர்களை அச்சுறுத்துகிறது. கம்யூனிசப் புரட்சியாளர்களின் உறுதியும் விடாப்பிடியான முயற்சியும் அவர்களுக்குப் பீதியூட்டுகிறது'' என்று எழுதியது. (பு.ஜ. ஆக. 2007, பக்.5)
இவ்வாறு "ஆயுதப் போராட்ட அரசியலையும்' நக்சல்பாரிகள் கம்யூனிசப் புரட்சியாளர்களையும் பற்றித்தான் புதிய ஜனநாயகம் எழுதியிருந்தது.


இதை மறுக்கும் மாவோயிஸ்டுகள், போலீசின் சட்டம் ஒழுங்கு முறைக்கு உட்பட்டு அரசியல் போராட்டம் நடத்தும், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நக்சல்பாரியையும் ஆயுதப் போராட்டத்தை ஜெபித்துக் கொண்டும் ஆனால் நடைமுறையில் அதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்காததும், வெறும் பிரச்சாரத்தைத்தவிர வேறெதுவும் செய்யாததுமான புதிய ஜனநாயகம் அமைப்பைப் பார்த்து இந்திய அரசு அச்சப்படவில்லை; இந்திய அரசுக்கு அது மிகப்பெரிய அபாயம் என்று கூறவும் இல்லை, தடை செய்யவும் இல்லை, அதனை ஒழிக்கும் நோக்கத்துடன் மத்தியமாநில ஆயுதப் படைகளைக் களமிறக்கவுமில்லை என்கின்றனர்.


இதற்கு மாறாக, ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசியல் அதிகாரம் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதை நாற்பதாண்டு காலமாக நடைமுறைப்படுத்திக் கொண்டு, மக்கள் விடுதலை கொரில்லா இராணுவத்தைக் கட்டியமைத்து, மத்தியமாநில ஆயுதப் படைகளுடன் கடுமையான யுத்தத்தை நடத்திக் கொண்டு, கொரில்லா மண்டலங்களை உருவாக்கி, தண்டகாரண்யாவில் மக்களின் அரசியல் அதிகார அலகுகளை நிறுவி, விடுதலைப் பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதுடன் இந்தியாவின் இதர பகுதிகளில் கொரில்லா யுத்தத்தை தீவிரப்படுத்துவதற்கான செயல்பாடுகளில் இறங்கியுள்ள மாவோயிஸ்டுகள்தாம் அரசுக்கு அச்சுறுத்தல்களாக இருக்கின்றனர்; அவர்களைத்தான் இந்திய அரசுக்கு மிகப் பெரிய அபாயம் என்று கூறி, அதனை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் மத்தியமாநில ஆயுதப் படைகளைக் களமிறக்கியுள்ளனர் என்கின்றனர்.


உண்மைதான், மாவோயிஸ்டுக் கட்சியின் இந்த வாதம் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மைதான், ஒரே ஒரு நிபந்தனையுடன்! அதாவது வண்டியில் பூட்டப்படும் குதிரையைப் போல கண்பட்டை அணிந்து கொண்டு அரசியல்சித்தாந்த விசயங்கள் எதையும் கண்டுகொள்ளாதவாறு பார்வையைக் குறுக்கிக் கொள்ள வேண்டும்; சுத்த இராணுவவாதம் என்ற ஒரு வழிப்பாதையில் விரைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆயுதபலம், ஆயுதப் போராட்டம் என்ற வகையில் புதிய ஜனநாயகம் அமைப்பு இந்திய அரசுக்கு உடனடி அச்சுறுத்தலாக இல்லை என்பது உண்மைதான்! அதேபோல, ஆயுதபலம், ஆயுதப் போராட்டம் என்ற இராணுவ ரீதியில் இந்திய அரசுக்கு மாவோயிஸ்டு கட்சி உடனடி அச்சுறுத்தலாக உள்ளது; அக்கட்சியைத்தான் மிகப்பெரிய அபõயமாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் ஆயுதப் படைகளைக் களமிறக்கியுள்ளனர் என்பதும் உண்மைதான்.


ஆனால், இவற்றையே தனது உண்மையான இயக்க வளர்ச்சி, செயல்பாடு, மக்கள் ஆதரவு ஆகியவற்றுக்கான அளவுகோலாக வைத்து மாவோயிஸ்டு கட்சி நம்புமானால், வாதிடுமானால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. 2000ஆம் ஆண்டு பாலக்கோட்டில் இரவீந்திரன் படுகொலை; 2002 நவம்பர், சிவா படுகொலை ஊத்தங்கரை சம்பவம்; 2007 பெரிய குளம் முருகமலை சம்பவம் மற்றும் வருசநாடு கைதுகள் ஆகியவற்றை வைத்து அரசும், போலீசும், செய்தி ஊடகங்களும் எவ்வாறு ஊதிப் பெருக்கி, பீதியூட்டி வருகின்றன என்பதை மாவோயிஸ்டு கட்சியினரே ஒப்புக் கொண்டுள்ளனர். அதைப்போல முன்பு ஆந்திரா மகாராட்டிரா, இப்போது சட்டிஸ்கர், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அக்கட்சியினர் நடத்தும் சில தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து எதிரிகள் மிகைப்படுத்தி ஊதிப் பெருக்காமல் யதார்த்தமாக, உள்ளபடிக்கே கூறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?


சில இலகுவான எதிரி இலக்குகளைத் தாக்குவது, அதைத் தொடர்ந்து அரசின் ஆயுதப் படைகள் நடத்தும் வேட்டை, அரசும் செய்தி ஊடகங்களும் ஊதிப் பெருக்கிச் செய்யும் பிரச்சாரம் ஆகியவற்றை மட்டும் அடிப்படையாக வைத்து முடிவு செய்வது என்றால் இசுலாமியப் பயங்கரவாதிகள், தமிழினத் தீவிரவாதக் குழுக்கள், ஏன் வீரப்பன் போன்ற கிரிமினல்கள் கூட தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியும்.


இப்படிச் சொல்லுவதால் மாவோயிஸ்டு கட்சியினர் ஆத்திரப்படக் கூடும். மார்க்சிய லெனினிய மாவோயிச சித்தாந்த அடிப்படையில் உயர்ந்த நோக்கத்துக்கும் இலட்சியத்துக்கும் இரத்தம் சிந்தி தியாகங்கள் புரிந்து ஆயுதப் போராட்டம் நடத்தும் தங்களை எப்படி அவர்களோடு ஒப்பிட்டு எழுதலாம் என்று கேட்கவும், பாயவும் கூடும். ஆனால் உண்மை இதுதான். அரசு தடை செய்திருக்கிறது,


அரசு அனுமதிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி தமது அரசியல் சித்தாந்தத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் இலட்சியத்தையும் இரகசியமாக வைத்துக் கொண்டு, சில இராணுவ ரீதியிலான தயாரிப்பு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு, அரசின், ஆளும் வர்க்க செய்தி ஊடகங்களின் பிரச்சாரங்களுக்கு ஏகபோக ஒழுங்கும் உரிமையும் வழங்கி விட்டு, அரசு பயங்கரவாதத்தை ஏவிவிட்ட பிறகு விளக்கமளிக்கும் "புரட்சிகர' கடமையை நிறைவேற்றுபவர்களை மக்கள் வேறுமாதிரிப் பார்க்கமாட்டார்கள் என்பதைத்தான் கூறுகிறோம்.


அரசியல் ரீதியில் மக்கள் மத்தியில் வேரூன்றாது, இராணுவ ரீதியிலான தாக்குதல்களில் மட்டும் ஈடுபடும் இயக்கம் மகாராட்டிரம், ஆந்திராவில் செய்ததைப் போல அரசுக்கு கையாள முடியாததல்ல; தாமே ஊதிப் பெருக்கிச் சொல்லும் ஒரு இயக்கத்தின் ஆயுதபலம், ஆட்பலம் ஆகியவற்றைப் பார்த்து அஞ்சுவதை விடவும், அந்த இயக்கத்தின் அரசியல்சித்தாந்த இலட்சியங்களும் நோக்கங்களும் மக்கள் மத்தியில் வேரூன்றி விடுவதைக் கண்டுதான் அரசு அஞ்சுகிறது. இதைத்தான் புதிய ஜனநாயகம் வலியுறுத்துகிறது.


இந்த உண்மை மாவோயிஸ்டு கட்சிக்கும் தெரியும். ஆனாலும், மக்கள் திரள் அடித்தளம் இல்லாமல், அதைப் பெறுவதற்கான வகையிலான நடைமுறையில்லாமல், சுத்த இராணுவக் கண்ணோட்டத்தில் சாகச செயல்களில் ஈடுபடுவதை பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி நியாயப்படுத்துகின்றனர்.

 

 " தமது செயல்கள் மக்கள் திரள் அடித்தளமில்லாத, இரகசிய கொரில்லாக் குழுக்களின் சாகசச் செயல்கள்தாம்'' என்கிற உண்மையை மூடி மறைப்பதற்காக ஒவ்வொரு தாக்குதல்களிலும் நூற்றுக்கணக்கான கொரில்லாக்கள் பங்கேற்பதாகவும், ஆயிரக்கணக்கான கொரில்லா வீரர்களைக் கொண்ட மக்கள் விடுதலை கொரில்லா இராணுவத்தைக் கட்டியிருப்பதாகவும் எண்ணிக்கைக் கணக்குக் காட்டுகிறார்கள். இந்தக் கணக்கு இன்னும் ஆயிரம், இட்சம் என்று பெருகினால்கூட அவை மக்கள் திரள் அடித்தளத்தைப் பெற்றதாகிவிடாது என்பதுதான் உண்மை!


மேலும் இந்த உண்மைக்கு ஈடுவைப்பதற்காக அரசின் கொடூரமான அடக்குமுறை, பயங்கரவாத நடவடிக்கைகள், தோழர்களின் இரத்தம் சிந்தும் உயிர்த்தியாகங்கள் பற்றி திரும்பத் திரும்ப எழுதிச் சமாளிக்கிறார்கள். அவை அப்படித்தான் இருக்கும், வேறுமாதிரி இருக்குமா, என்ன? ஆனால் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்துவதற்கான மக்கள் திரள் அடித்தளத்தைப் பெற்றதற்கான, பெறுவதற்கான நடைமுறை அவர்களிடம் இருக்கிறதா என்பதுதான் பிரச்சினை.