"வெளிப்படையான செயல்பாடுகளை அனுமதிக்காமல் புரட்சிகர அமைப்பின் மீதும், மக்களின் மீதும் கொடூரமான அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்துவிடும்போது, இதனை இரகசியமாக செய்ய வேண்டியுள்ளது. அதற்கான செயலுத்திகளையும், வழிமுறைகளையும் கடைப்பிடித்து மக்களை ஆயுதப் போராட்டத்திற்கு அணிதிரட்ட வேண்டியுள்ளது. இத்தகைய செயலுத்தியையும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்திய சிறப்பான அனுபவம் மாவோயிஸ்ட் கட்சிக்கு இருக்கின்றது. சட்டவாத நடைமுறையைத்தவிர, அரசியல் பிரச்சாரத்தைத் தவிர வேறெதுவும் அறியாத, அனுபவமில்லாத மா.அ.க.வின் தலைமைக்கு இதையெல்லாம் புரிந்து கொள்வது அவர்களின் கற்பனைக்கும் எட்டாத விசயமாகும்.''


"புரட்சிகர மக்கள் திரள் அமைப்புகளும், கட்சியும் தடை செய்யப்பட்டு, வெளிப்படையாக செயல்பட முடியாத சூழலில் ஆயுதப் போராட்டத்திற்கு தேவையான மக்கள் அடித்தளம், மற்றும் இதர தயாரிப்புகள் இரகசியமாக செய்யப்பட வேண்டும். இது ஒரு கலைவிழாவிற்கோ அல்லது ஊர்வலத்திற்கோ அணிதிரளுவதைப் போல வெளிப்படையாக இருக்காது. இருக்கவும் கூடாது. புரட்சிகர அமைப்புகளில் செயல்படும் செயல் வீரர்களையும், ஆதரவு சக்திகளையும் அம்பலப்படுத்தும் வகையில் செயல்படுவது மிகவும் தவறானதாகும். இது நிராயுதபாணியாக இருக்கும் அணிகள் மற்றும் ஆதரவு சக்திகளை போலீஸ் அரக்கர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாக்கும். மேலும், ஆயுதப் போராட்ட தயாரிப்பு பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்தும். இவ்வாறு உருவாக்கப்படும் மக்கள் அடித்தளம், ஆதரவு ஒப்பீட்டளவில் குறைவானதாக இருக்கும். அது ஆயுதந்தாங்கிய வர்க்கப் போராட்டத்தினூடே உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளின் மூலமாக மேன்மேலும் அதிகரிக்கும். மக்கள் அடித்தளம், ஆதரவு என்பது அருவமானது கிடையாது. அது வெறுமனே ஆர்ப்பாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளும் ஆதரவல்ல. மாறாக, ஆயுதப் போராட்டத்தை வளர்த்தெடுப்பதற்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உணர்வுப்பூர்வமாக அளிக்கப்படும் பங்களிப்பாகும்.'' (ஆயுதப் போராட்ட அரசியலும் நடைமுறையும், பக். 33, 34)


சரி! புரட்சிகர அமைப்பின்மீதும், மக்களின் மீதும் கொடூரமான அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்து விடும்போது எத்தகைய செயலுத்தியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது "சட்டவாத நடைமுறையைத் தவிர, அரசியல் பிரச்சாரத்தைத் தவிர வேறெதுவும் அறியாத அனுபவமில்லாத, மா.அ.க.விற்கு இதையெல்லாம் புரிந்து கொள்வது கற்பனைக்கெட்டாத விசயமாக இருப்பதாக''வே இருக்கட்டும். இவ்வளவுதூரம் உபதேசிக்கும் மாவோயிஸ்ட் கட்சி, கொடூரமான அரசு அடக்குமுறை சூழலில் ஆயுதப் போராட்டத்திற்கு மக்களைத் திரட்டுவது, அணிகளை திரட்டி பயிற்றுவிப்பது போன்றவற்றில் மிகச் சரியான செயலுத்தியை தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்திய சிறப்பான அனுபவம் பெற்ற மாவோயிஸ்ட் கட்சி, 1996 முதல் ஆந்திராவில் சந்தித்து வரும் இழப்புகள், பின்னடைவுகளைச் சரிசெய்து முன்னேற்ற முடியாமல் இருப்பது ஏன்? 2002 நவம்பரில் ஊத்தங்கரை சம்பவத்திற்கு பின்னர் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பினால், தர்மபுரியில் இயக்க வேலைகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது ஏன்? அதையும் சரிசெய்யமுடியாமல் இடத்தை மாற்றிக்கொண்டுபோவது ஏன்?


எதிரி இரண்டு கரங்களிலும் வாள்களை ஏந்தி, மக்கள் மீது யுத்தத்தை திணிக்கும்போது அவனுடைய வழியைப் பின்பற்றி நாமும் வாள்களை எடுக்க வேண்டும் என்ற மாவோவின் கூற்றை எடுத்துக் காட்டி "இத்தகைய புரட்சிகரப் பாதையில் முன்னேறும்போது சில நேரங்களில் பின்னடைவுகள், தியாகங்கள் தவிர்க்க முடியாதவை! புரட்சியாளர்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; பாடங்களைப் பயின்று ஒவ்வொரு தோல்வியையும் வெற்றியாக மாற்றுவார்கள். இது புத்தகப் புழுக்களுக்குப் புரியாது!'' (பெரியகுளத்தில் தெறித்த சிறு பொறி, பக். 15)


சரி! இவர்கள் ஒப்பாரி வைக்காத புரட்சியாளர்களாகவே இருக்கட்டும். 2002 நவம்பர் ஊத்தங்கரை சம்பவத்தால் ஏற்பட்ட "தவிர்க்க முடியாத(!)'' பின்னடைவுகள் தியாகங்கள், இழப்புகளில் இருந்து இவர்கள் பாடங்கள் கற்றுக் கொண்டார்களா? அதை வெற்றியாக மாற்றினார்களா? அவர்கள் நமக்கு உபதேசிப்பதைப் போல பாடங்களைக் கற்றுக் கொண்டு, அந்தப் பின்னடைவை வெற்றியாக மாற்றாமல், கட்சிக்கு ஏற்பட்ட இழப்பினால் தருமபுரியில் இயக்க வேலைகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்று முடிவு செய்து, வேறு இடத்துக்குப் புறப்பட்டு விட்டார்கள்.


உண்மையில் தருமபுரிஊத்தங்கரை பின்னடைவுகள் இழப்புகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாமல், புதிய பகுதியைத் தெரிவு செய்ததோடு, பழைய செயலுத்தி அடிப்படையிலேயே இயக்க வேலைகளையும் செயல்பாடுகளையும் தொடங்கினார்கள். அதனால்தான் மீண்டும் ஒரு ஊத்தங்கரையை பெரியகுளம் முருகமலையிலும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இதிலிருந்தாவது அவர்கள் உபதேசித்தவாறு புரட்சியாளர்களுக்கேயுரிய முறையில் பாடங்களைக் கற்கிறார்களா?


"மீண்டும் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டு மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள மூலஉத்தி ரீதியான பகுதியில் இயக்க வேலைகள் தொடங்குவதற்கான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்தான் இச்சம்பவம் (முருகமலை சம்பவம்) நடந்துள்ளது. மக்களை அணிதிரட்டி புரட்சிகர யுத்தத்தையும் மக்கள் படையையும் கட்டுவதை முதன்மையாகக் கொண்டுள்ள எந்தவொரு அமைப்பிற்கும், அவற்றை செய்வதற்கு சாதகமான நிலப்பரப்பும், ஆயுதங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெறும் வாய்ச் சொல்லாலும், புத்தகத்திலும் புரட்சியைப் பற்றிப் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் "காற்றடைத்த பைகளுக்கு' அதன் முக்கியத்துவம் புரியாது. தேவையும் இராது.'' (ஆயுதப் போராட்ட அரசியலும் நடைமுறையும், போராளி வெளியீடு, பக்.22)


முருகமலை சம்பவம் குறித்த "பு.ஜ.'' கட்டுரைக்குப் பதிலுரையாக "பெரிய குளத்தில் தெறித்த சிறுபொறி'' என்ற வெளியீட்டை எழுதிய அறிவொளி உண்மையில் பெயருக்கு பொருத்தமாக சிந்திப்பவராக இருந்தால், "மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூலஉத்தி ரீதியான பகுதியில் இயக்க வேலைகள் தொடங்குவதற்கான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது'' என்ற போராளி வெளியீட்டின் வாசகத்தைக் கவனிக்க வேண்டும்.


முருகமலை சம்பவம் நடக்கும்போது அந்தப் பகுதியில் இயக்க வேலைகள் தொடங்குவதற்கான செயற்பாடுகள் தாம் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இயக்க வேலைகள் தொடங்குவதற்கான செயற்பாடுகள் என்று மாவோயிஸ்ட்கள் குறிப்பிடுவது எந்த வேலைகளை? மக்களைத் திரட்டுவது, மக்கள் ஆதரவைப் பெறுவதா? ஆட்களையும் ஆயுதங்களையும் சேர்ப்பதும் ஆயுதப் பயிற்சி பெறுவதையுமா?


நிலப்பரப்பு மற்றும் ஆயுதங்களின் முக்கியத்துவத்தை தங்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், புதிய ஜனநாயகம் அமைப்புக்கு அது புரியாது, அதன் தேவையும் இராது என்று சாடுவதன் மூலம் ஆட்களையும் ஆயுதங்களையும் சேர்ப்பதும், ஆயுதப் பயிற்சி எடுப்பதையும் தான் இயக்க வேலைகள் தொடங்குவதற்கான செயற்பாடுகள் என்று மாவோயிஸ்ட் போராளிகள் குறிப்பிடுகிறார்கள் என்பது தெளிவு. அதைத்தான் பெரியகுளம் முருகமலையில் அவர்கள் செய்தார்கள்.


அப்படி இல்லாவிட்டாலும், இயக்க வேலைகள் தொடங்குவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன என்கிறபோது, பெரியகுளம் பகுதியில் அவர்கள் எப்படி ஏற்கெனவே மக்கள் ஆதரவைப் பெற்றிருக்க முடியும்? இதைத்தான் "பெரியகுளம் பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பிற்கு மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான செல்வாக்கு ஏதும் இல்லை'' என்ற வகையில் புதிய ஜனநாயகம் விமர்சித்திருந்தது. இந்த விமர்சனத்தை மறுக்க முடியாத நிலையில் போராளி, இதுபற்றி நேரடியாக மறுப்பு எழுதுவதற்குப் பதில் மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கே ஆயுதப் போராட்ட அவசியத்தைப் பற்றி நீட்டி முழங்கியிருக்கிறது.