11292022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

தர்மபுரி அனுபவம் என்ன? மீளாய்வு எங்கே?

"1990க்குப் பிறகு எதிரியின் அடக்குமுறைக்கு எதிராக, புதிய செயலுத்தியாக இரகசிய மக்கள் திரள் அமைப்புகள், இரகசிய செயல்பாடுகள் மற்றும் சுய பாதுகாப்புக்காக ஆயுதமேந்திய குழுக்களுடன் இயக்கம் வளர்ச்சியடைந்து வந்தது.'' "1996 அக்டேõபர் பிளீனத் தீர்மானத்தின்படி மக்கள் திரள் அமைப்புக் கிளைகளின் எண்ணிக்கையைப் பெருக்கி,

1999 மே தர்மபுரி வட்டாரக் கட்சிப் பிளீனத்தில் கணக்கிட்டபடி உழவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, இளைஞர் அமைப்பு, மாணவர் அமைப்பு, பாலர் சங்கம் ஆகிய அனைத்து அமைப்புகளும் சேர்ந்து 100 கிளைகள் கட்டப்பட்டிருந்தன.'' "மிகக் குறுகிய காலத்தில் சுமார் 100 கிளைகள் கட்டப்பட்டன என்ற உண்மைதான் போலீசை அதிர்ச்சியடைய வைத்தன. அதைவிட மக்கள் கட்சித் தோழர்களுக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது போலீசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.'' (2000ஆம் ஆண்டு ஜனபிப், போராளி, பக்: 1, 21, மற்றும் 32-33)


" ஒரு பக்கம் அரசின் அடக்குமுறையை சந்தித்துக் கொண்டே மறுபக்கம் மக்களின் போராட்டங்களும் ஆதரவும் பெருகி வருகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு தருமபுரியில் புரட்சிகர மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு அதாவது தமிழகத்தில் ஆயுதப் போரட்டத்தை உருவாக்குவதற்கான தொடக்கத்தைக் கொண்டுள்ளது. எதிரியும் தனது நடவடிக்கையின் மூலம் நமக்கு இதை உணர்த்தியுள்ளான். எனவே, தமிழகத்தில் புரட்சிகர மக்கள் இயக்கம் எத்தகைய அடக்குமுறையிலும் சரி, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பது உறுதியாகி விட்டது.'' (மேற்படி போராளி, பக். 38)


இவ்வாறு 2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மக்கள் யுத்தக் குழுவினர் எழுதினர். இப்போது கூட புதிய ஜனநாயகத்துக்கு எதிரான வெளியீடுகளில், "தர்மபுரி வடாற்காடு பகுதிகளில் நக்சல்பாரிகளுக்கு இருக்கும் செல்வாக்கு நாடறிந்த ஒன்று. எதிரிகளுக்குக் கூட இதை மறுக்கத் துணிவு கிடையாது.'' "இன்று தர்மபுரியே அறிவிக்கப்படாத கலவரப் பகுதியாகக் கருதப்பட்டு கிராமம் கிராமமாக மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். அப்புபாலன் சிலை திறப்பு விழாவின்போது கூட 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டு அதை ஒரு புரட்சித் திருவிழாவாக நடத்தியது தர்மரி மக்களிடையே நக்சல்பாரிகளுக்கு இருந்த செல்வாக்கிற்கான சாட்சியமாகும். '' (பெரிய குளத்தில் தெறித்த சிறுபொறி, பக்.14)


இவ்வாறான மதிப்பீடும், எதிர்பார்ப்பும் பற்றி "யதார்த்த நிலைமையை மிகை மதிப்பீடு செய்வதும், அமைப்பு, இயக்க வளர்ச்சியை ஊதிப் பெருக்கி உரிமை பாராட்டுவதும் ம.யு. குழுவினருக்கு வாடிக்கைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன தேவை!'' (குறுக்கு வழி தேடி.... குழுசாகச வழிபாடு!' பு.ஜ. வெளியீடு, பக். 1718) என்று அப்போதே எழுதினோம்.


இப்படி எழுதியதற்காக பு.ஜ. மீது பாய்ந்து குதறியது ம.யு. குழு; இப்போதும் தர்மபுரியை மக்கள் செல்வாக்குப் பெருகியுள்ள பகுதியாக மதிப்பிடும் மாவோயிஸ்ட் கட்சி "ஆயுதப் போராட்ட அரசியலும் நடைமுறையும்'' என்ற போராளி வெளியீட்டில் பின்வருமாறு எழுதியுள்ளது. "1993க்குப் பிறகு புரட்சிகர மக்கள்திரள் அமைப்புகளின் செயல்பாடுகள் அறிவிக்கப்படாமலே தடை செய்யப்பட்டன. சட்டபூர்வ செயல்பாடுகளையே அனுமதிக்காத எதிரியின் இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளுக்குப் பின்னர், 1996-97 முதல் ஆயுதக் குழுக்கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வந்தன. 2002 நவம்பரில் ஊத்தங்கரை சம்பவத்திற்குப் பின்னர் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பினால், தர்மபுரியில் இயக்க வேலைகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூல உத்தி ரீதியான பகுதியில் இயக்க வேலைகள் தொடங்குவதற்கான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்தான் இச்சம்பவம் (பெரிய குளம் முருகமலைச் சம்பவம்) நடந்துள்ளது.'' (போராளி வெளியீடு, பக். 22).


மாவோயிஸ்ட் கட்சியினரே கொடுத்துள்ள இந்த விவரப்படி தர்மபுரியில் (1996-97இல்) ஆயுதக் குழுக்கள் நிறுவப்பட்ட ஏழாண்டுகளுக்குப் பிறகு — அதாவது 2003 ஊத்தங்கரை சம்பவத்திற்குப் பின்னர், கட்சிக்கு ஏற்பட்ட இழப்பினால் இயக்க வேலைகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள். இப்போதும் இதுதான் நிலைமை.


* "1996க்குப் பிறகு எதிரியின் அடக்குமுறைக்கு எதிராக புதிய செயலுத்தியாக இரகசிய மக்கள் திரள் அமைப்புகள், இரகசிய செயல்பாடுகள் மற்றும் சுய பாதுகாப்புக்காக ஆயுதமேந்திய குழுக்களுடன் இயக்கம் வளர்ச்சியடைந்து வந்தது.''
* மிகக் குறுகிய காலத்தில் போலீசே அதிர்ச்சியடையுமாறு சுமார் 100 கிளைகள் கட்டப்பட்டன. அதைவிட மக்கள், கட்சித் தோழர்களுக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது போலீசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.


* இந்த நிகழ்ச்சிப் போக்கு தருமபுரியில் புரட்சிகர மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு, அதாவது தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தை உருவாக்குவதற்கான தொடக்கத்தைக் கொண்டிருந்தது. எத்தகைய அடக்குமுறையிலும் சரி, அது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பது உறுதியாகி விட்டது என்று நம்பினார்கள்.


இப்படியெல்லாம் தருமபுரியில் தங்களுக்கு இருந்ததாகக் கூறிய அமைப்பு பலம், மக்கள் செல்வாக்கு இப்பொழுது என்ன ஆனது? பு.ஜ. அமைப்பினர்தான் முற்றிலும் வெளிப்படையான சட்டபூர்வ அமைப்பும் நடைமுறையும் கொண்டுள்ளார்கள்; ஒரு அடக்குமுறை வந்தாலும் தாங்க மாட்டார்கள்; தங்கள் தான் தலைமறைவு இயக்கத்தைக் கட்டியிருக்கிறோம். தாங்கள்தான் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவதற்குச் சரியான செயலுத்தியைக் கொண்டுள்ளோம் என்று பீற்றிக் கொள்கிறார்கள். 1996இல் இருந்து வகுத்துச் செயல்படுத்தியதாகக் கூறும் அப்படிப்பட்ட புதிய செயலுத்தியைக் கடந்த 10 ஆண்டுகளாக அமல்படுத்திய அனுபவம் என்ன? அரசியல் அமைப்பு மீளாய்வு எங்கே? இன்று தர்மபுரியில் உள்ள நிலைமைதான் என்ன?


இவற்றையெல்லாம் மக்களுக்கும் அணிகளுக்கும் நேர்மையாகவும் பொறுப்பாகவும் முன்வைப்பதற்குப் பதில், "2002 நவம்பரில் ஊத்தங்கரை சம்பவத்திற்குப் பின்னர் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பினால், தருமபுரியில் இயக்க வேலைகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது'' என்று கொஞ்சமும் பொறுப்பும் நேர்மையும் இல்லாமல் இடத்தை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.