Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


ஆனால், அங்குள்ள உண்மை நிலைமையோ வேறானதென்று கட்சி ஆவணங்களில் பின்வருமாறு இரகசியமாக எழுதி வைத்துக் கொண்டுள்ளார்கள்.


"வடதெலுங்கானாவில் இன்று இயக்கம் தீவிரமான சிக்கல்களை எதிர்கொண்டு பின்னடைவுக்கு (ஞீஞுஞிடூடிணஞு) உள்ளாகியுள்ளது. இந்த நிலை திடீரெனத் தோன்றியதல்ல. 1996யில் மூன்றாவது சுற்று பன்முகத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஆரம்பமானது. அடக்குமுறை வடிவத்தைப் புரிந்துக் கொள்வதும் அதற்கேற்ற குறிப்பான செயலுத்திகளை சரியான தருணத்தில் கடைபிடிப்பதிலும் இருந்த தவறுகள் மற்றும் நம்மிடமுள்ள தவறான போக்குகளின் செல்வாக்கினாலும் தீவிரமான இழப்புகளை சந்திக்க நேரிட்டது. நாம் ஏற்கெனவே விவரித்தபடி மூலஉத்தி ரீதியிலான பகுதிகளான வடதெலுங்கானாவின் வனப்பகுதியில் கொரில்லா தளம் அமைப்பதை நோக்கி கொரில்லா யுத்தம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதே பேராயத்தின் முடிவாக இருந்தது. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான புறச்சூழல், எதிரியின் பன்முகத்தாக்குதல், மக்கள் போராட்டங்களின் தாழ்வுநிலை, எதிரி மேற்கொண்ட சீர்திருத்தங்களின் தாக்கம் போன்றவை மற்றும் அகநிலைச் சக்திகளின் வளர்ச்சி போதுமானதாக இல்லாததால் நாம் அந்த இலக்குகளை எட்டவில்லை. இதில் புறநிலை யதார்த்தத்தை புரிந்து கொள்வதிலுள்ள அகநிலைவாதமும், பருண்மையான செயலுத்திகள் வகுத்து இயக்கத்தை முன்கொண்டு செல்வதிலும் உள்ள குறைபாடுகளே முதன்மையானது. எதிரியின் அடக்குமுறை புதிய, உயர்ந்த மட்டத்தில் நடப்பதையும், அவன் கையாளும் புதிய வடிவங்களை புரிந்துக் கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டது. அரசுப் படைகளின் புதிய வடிவிலான அடக்குமுறை மட்டுமின்றி, அதற்கு துணையாக ஆயுதந்தரித்த குண்டர்படை (ஙடிஞ்டிடூச்ணtஞுண்) என அழைக்கப்படும் பச்சைப் புலிகள், நல்லமல்லா கோப்ராஸ் போன்ற ஆயுதபாணியான குண்டர் படைகளின் அடக்குமுறையும் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, உளவாளிகளின் ஊடுருவல், கருங்காலிகளின் வலைப்பின்னல் போன்றவைகளாலும் இயக்கம் பெரும் இழப்புக்குள்ளானது. நமது தோழர்கள் கூறுவதைப் போல "இந்தியாவின் பொதுதன்மையான வழக்கு தொடுத்து நீதிமன்றங்களின் மூலம் முரண்பாட்டை தீர்த்துக் கொள்வது' என்பதில்லாமல் புரட்சிகர இயக்கத்தை நீர்த்துப் போக செய்வதே அடக்குமுறையின் நோக்கமாக உள்ளது.''


"நமது கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், கொரில்லா வீரர்கள், ம.தி. அமைப்பின் தலைவர்கள், செயல்வீரர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவது மிக அரிதே. மாறாக, அனைவரும் குரூரமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இது ஏதோ "மிகவும் பின்தங்கிய பீகார் ஜார்கண்டு மாநிலத்தில் நடைபெறவில்லை. ஐ.கூ. யுகத்தில் ராக்கெட் வேகத்தில் போய் கொண்டிருக்கும் "வளர்ச்சியடைந்த' ஆந்திர மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது. இது அங்கு மட்டுமின்றி புரட்சிகர இயக்கம் வளர்ச்சி வெறும் அனைத்துப் பகுதிகளுக்கும் இதே "ஆந்திர மாதிரியை' நடைமுறைப்படுத்த மைய அரசு தீர்மானித்துள்ளது. இந்த சிக்கல்களை பருண்மையாக எதிர்கொள்வதில் தவறு இழைத்ததினால் இன்று ஆந்திராவின் இயக்கம் மிகத் தீவிரமான இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. மற்ற இடங்களிலும் புரட்சிகர இயக்கம் இந்த, இத்தகைய சிக்கல்களை பருண்மையாக தீர்க்கவில்லையென்றால் அங்கும் இயக்கம் முன்னேற்றம் அடைவதில் சிக்கல்கள் உண்டாகும்.'' ங்ஆதாரம்: "வலது சந்தர்ப்பவாதக் கருத்துக்களை முறியடிப்போம்! நீண்டகால மக்கள் யுத்தப் பாதையை உயர்த்திப் பிடிப்போம்!'' பக் 4647, இ.க.க. (மாவோயிஸ்ட்), தமிழ்நாடு மாநிலக் குழு வெளியீடு. தேதி குறிப்பிடவில்லை. அனேகமாக 2007ஆம் ஆண்டு மத்தியில் வெளியிடப்பட்டது.)


2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ம.யு. குழுவாக இருந்தபோது "போராளி'' பத்திரிக்கையில் அவர்கள் குறிப்பிட்டதன்படி வட தெலுங்கானா கொரில்லா மண்டலத்தின் உயர்ந்த கட்டத்தை நோக்கியும், பிற பகுதிகள் ஏறத்தாழ ஆந்திரா முழுமையும் கொரில்லா மண்டலத் தயாரிப்பிலும் இருந்தன என்றனர்.


இப்படி அவர்கள் இங்கே புளுகிக் கொண்டிருந்தபோதே, ஆந்திராவில் உண்மையில் அவர்களின் இயக்கம் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அதுவும் இந்தப் பின்னடைவு 1996 முதற்கொண்டு நீடித்திருக்கிறது. இந்த உண்மையை 2001ஆம் ஆண்டு அக்கட்சி நடத்திய 9வது பேராயத்தின் அரசியல் அமைப்பு மீளாய்வு அறிக்கையின் அடிப்படையில் இப்போது தமிழ்நாடு மாநிலக் குழுவே தொகுத்திருக்கிறது.


2001ஆம் ஆண்டு மக்கள் யுத்தக் கட்சியின் 9வது பேராயத்திற்குப் பிறகாவது மேற்கண்ட பின்னடைவுகளைச் சரிசெய்து கொண்டு ஆந்திர இயக்கம் முன்னேறியதாக அவர்களின் உட்கட்சி ஆவணங்களோ, அதிகாரபூர்வ அறிக்கைகளோ எதுவுமே கூறவில்லை. இந்தப் பின்னணியில்தான் ஆந்திர அரசுடன் போர்நிறுத்தம், பேச்சு வார்த்தை, பிறகு அவற்றின் முறிவு ஆகியனவெல்லாம் நடந்தன. ஆந்திராவில் நீடித்துவந்த இழப்புகள், பின்னடைவுகள் தேக்கம் காரணமாகவும், அணிகள் மற்றும் மக்கள் நிர்பந்தம் காரணமாகவும்தான் போர் நிறுத்தம், பேச்சு வார்த்தைக்கு மக்கள் யுத்தக் கட்சி போனது என்ற உண்மையை புதிய ஜனநாயகம் அமைப்பு சொன்னபோது அவர்கள் ஆத்திரத்துடன் அதன்மீது பாய்ந்தனர். ஆந்திராவில் இயக்கம் முன்னேறி வருவதாக வெளி உலகுக்குக் காட்டிக் கொள்ளும் வகையில் "கொரில்லாக் குழுக்களின்'' ஆயுதந்தாங்கிய தாக்குதல்களை ஆங்காங்கே அவ்வப்பொழுது நடத்தினர்.


மக்கள் யுத்தக் கட்சியும் மாவோயிஸ்ட் மையமும் இணைந்த பிறகு 2007ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நடந்த மாவோயிஸ்ட் கட்சியின் இணைப்புப் பேராயத்தில் ஆழமான அரசியல் அமைப்பு மீளாய்வு நடத்தப்படவில்லை என்றாலும் மேற்கண்ட பின்னடைவைப் பேராயம் உறுதி செய்தது. "எதிரியின் இந்த அழித்தொழிப்பு யுத்தத்தை எதிர்கொண்டு, பேராய / மாநாட்டு அறைகூவல்களை நிறைவேற்ற, ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட தோழர்கள் தங்கள் இன்னுயிரை விலையாகத் தந்து, இன்னும் ஏராளமானோர் சித்திரவதைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். புரட்சிகர இயக்கம் இக்கொடுமைகளையெல்லாம் மீறி முன்னேறி வருகிறது.'' (ஆதாரம்: "கட்சிக் கலைப்புவாதத்தை முறியடிப்போம்!'' 29.9.07 தேதியிட்ட இ.க.க.(மாவோயிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழுவின் உட்கட்சி ஆவணம். )


புரட்சிகர இயக்கம் முன்னேறி வருவதாகக் கூறினாலும் 2007 பேராயத்துக்குப் பிறகு "ஏறக்குறைய எட்டு மாதங்களில் 200 பேரை இயக்கம் இழந்திருப்பதோடு'' மேலும் பலரது கைதுகளாலும் துரோகங்களாலும் பிளவுகளாலும் இயக்கம் பின்னடைவுக்குள்ளானது என்பதுதான் உண்மை. இதை அவர்களது உட்கட்சி ஆவணங்களே உறுதி செய்கின்றன.


இ.க.க.(மாவோயிஸ்ட்)இன் இன்றைய நிலை மற்றும் நெருக்கடிகள் குறித்து, அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற "கர்நாடகா மாவோயிஸ்ட் சுதந்திர மையம்'' பின்வருமாறு கூறுகிறது.


"இ.க.க.(மாவோயிஸ்ட்) ஒரு பெரிய புரட்சிச் சக்தியாக வளர்ந்திருப்பினும், அதே அளவு அது பாரிய சித்தாந்த மற்றும் நடைமுறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அது ஆயுதப் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பகுதிகளிலேயே கூட சரியான மக்கள் திரள் பாதை அடிப்படையில் நான்கு நட்பு வர்க்கங்களின் கூட்டணியை கட்டுவதற்கு பலமான அடித்தளத்தை நிறுவுவதிலும், மக்கள் யுத்தத்தை முன்னெடுப்பதிலும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஏறக்குறைய 40 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகும்கூட அதன் ஆயுதப் போராட்டம் ஆந்திரா, ஒரிசா, சட்டிஸ்கார், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் மிகவும் பின்தங்கிய மலைப்பிரதேசங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. பஞ்சாப், அரியானா, மகாராட்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் கடந்த 2025 ஆண்டுகளாக வேலை நடந்து வருகிறது; இங்கெல்லாம் ஆயுதப் போராட்டங்களைத் தொடங்க பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; இருந்தபோதும் எங்கேயும் ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேலே முன்னெடுத்துச் செல்வது சாத்தியமற்றதாகவே இருக்கிறது.


198090களில் இந்தியப் புரட்சியாளர்களின் உத்வேக மையமாக விளங்கிய வடதெலுங்கானா ஆயுதப் போராட்டம் இன்று ஒரு பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. ஆந்திராவின் நல்லமலா மற்றும் பிற பகுதிகளில் கூட இயக்கம் இறங்குமுகமாகவுள்ளது. நகர்ப்புற மக்களை, குறிப்பாக, தொழிலாளர்கள், மாணவர்கள்இளைஞர்களை கணிசமான அளவு கூட கட்சியின் தலைமையில் அமைப்பாக்குவதில் நாடெங்கும் பின் தங்கிவிட்டது. ஏகாதிபத்தியம் அல்லது தரகு முதலாளித்துவம் அல்லது அரசு அல்லது வகுப்புவாதம் அல்லது புரட்சிகர இயக்கத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஒடுக்குமுறைக்கு எதிராக நாடு தழுவிய சக்தி வாய்ந்த மக்கள் இயக்கத்தை கட்டியமைப்பதில் தோல்வியுற்று விட்டது. இதன் விளைவாக, இராணுவ ரீதியிலான சக்தியாக கணிசமான அளவு வளர்ந்து விட்டபோதும் நாட்டின் விவகாரங்களில் ஒரு குறிப்பிடத் தகுந்த பாத்திரமாற்றும் ஒரு அரசியல் சக்தியாகத் தோற்றமெடுக்க முடியவில்லை.''


ஆனால், ஆந்திராவில் அவர்களது இயக்கம் இலட்சக்கணக்கான மக்கள் ஆதரவைப் பெற்று, தொடர்ந்து முன்னேறி வருவதாக இங்கே பிரசுரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே தமிழகத்தில் நம் கண் முன்னே உள்ள நிலைமைகளைக் கூட இப்படித்தான் அவர்கள் மூடி மறைத்துச் சவடால் அடித்து வருகிறார்கள்; அதற்கும் அவர்களது உட்கட்சி ஆவணங்கள் ஆதாரங்களாக உள்ளன.