05202022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட "நடிப்பு'

புதிய ஜனநாயகத்திற்கு எதிரான மேற்கண்ட அவதூறை நியாயப்படுத்தும் முயற்சியாக மாவோயிஸ்டுகள் தாங்கள் மட்டுமே ஆயுதப் போராட்டப் பாதையில் ஊன்றி நின்று சாதனை புரிந்து வருவதாகவும், நாம் ஆயுதப் போராட்டத்தை கண்காணாத தூரத்திற்குத் தள்ளிப் போட்டுள்ள வலது சந்தர்ப்பவாதிகளாக உள்ளதாகவும் "பெரிய குளத்தில் தெறித்த சிறுபொறி...'' வெளியீட்டில் புளுகித் தள்ளியிருக்கிறார்கள்.


அதேசமயம், இந்த வெளியீட்டில் மாவோயிஸ்டுகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் இன்னொரு முக்கியமான கருத்து (விசயம்) இதுதான்:
* "தமிழகத்தில் ஆயுதப் புரட்சி தொடங்கப்பட்டு விட்டதாகவோ'', "தர்மபுரி மாவட்டம் ஓர் ஆயுதப் போராட்ட முனையாக உருவாகி விட்டதாகவோ'' மாவோயிஸ்டுகள் அறிவிக்கவும் இல்லை. அவ்வாறு அவர்கள் என்றைக்குமே வலிந்து வாதாடியதுமில்லை. (பக்.12, 14).


* தமிழகத்தில் ஆயுதப் புரட்சி தொடங்கப்பட்டு விட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்தார்கள் என்று சொல்வது அரசியல் நேர்மையற்ற செயல்; தர்மபுரி மாவட்டம் ஆயுதப் போராட்ட முனையாக உருவாகிவிட்டது என்று மாவோயிஸ்டுகள் வலிந்து வாதாடுவதாகக் கூறுவது வடிகட்டிய பொய். (பக்.12)


* தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் தயாரிப்புக் கட்டத்தில்தான் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதற்கு மாறாக தமிழகத்தில் அவர்கள் ஆயுதப் புரட்சி தொடங்கி விட்டதாக நவீன கோயபல்ஸ்கள் (புதிய ஜனநாயகம்) கதையளக்கிறார்கள். (பக்.12)
* ஆயுதப் போராட்டத்தின் மூலம்தான் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்ட முடியும் என்ற சூழலில்தான் அதற்கான தயாரிப்புகளில் (அதாவது 199697 ஆண்டு முதல் ஆயுதக் குழுக்களைக் கட்டும் முயற்சியில்) ஈடுபடத் தொடங்கியது மாவோயிஸ்ட் கட்சி. (பக்.13)


* அழித்தொழிப்பு காலத்தின் முதல் தியாகி அப்பு என்றால், போர்க்குணமுள்ள மக்கள் திரள் போராட்டங்களை நடத்திய கட்டத்தின் முதல் தியாகி பாலன் என்றால், ஆயுதப் புரட்சித் தயாரிப்பு காலத்தின் முதல் தியாகி தோழர் இரவீந்திரன். அதேபோல் ஊத்தங்கரையில் தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்ட தோழர் சிவா சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது பெரிய குளத்தில் நடந்துள்ளது, ஆயுதப் போராட்ட தயாரிப்பு நடவடிக்கைகளுக்கிடையேயான ஒரு சிறிய நிகழ்வு. (பக். 1314)


ஆக, "பெரிய குளத்தில் தெறித்த சிறு பொறி!...'' என்ற வெளியீட்டின் மூலம் மாவோயிஸ்ட்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு முக்கியமான கருத்து: "தமிழகத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கி விட்டது,'' "ஆயுதப் போராட்ட முனை உருவாகியுள்ளது'' என்பது கிடையாது. தமிழகத்தில் மாவோயிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டத்திற்கான தயாரிப்புக் கட்டத்தில்தான் உள்ளது. ஆயுதப் போராட்டத் தயாரிப்பு நடவடிக்கைகளில்தான் அக்கட்சி ஈடுபட்டது. 2001 இரவீந்திரன் கொல்லப்பட்டது தயாரிப்புக் காலம்; 2003 ஊத்தங்கரை போலீசு சுற்றிவளைப்பு தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்ட காலம். 2007 பெரியகுளத்தில் ஆயுதங்களுடன் தோழர்கள் கைது செய்யப்பட்டது ஆயுதப் போராட்ட தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட காலம்.


இவையோ, இந்த காலகட்டத்தில் நடந்த வேறு எந்த நடவடிக்கைகளோ ஆயுதப் போராட்டம் தொடங்கி விட்டதாகக் கொள்ளக் கூடாது. இவையெல்லாமே தயாரிப்பு நடவடிக்கைகள், முயற்சிகள் என்றுதான் கருதவேண்டும். இவ்வாறு இப்போது மாவோயிஸ்ட் கட்சி கூறுகிறது. சரி, இப்படியே எடுத்துக் கொள்வோம், ஏனென்றால், இதுதான் உண்மை!


அதாவது மாவோயிஸ்ட் கட்சியோ, அதன் முன்னோடியான மக்கள் யுத்தக் குழுவோ இதுவரை தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவோ, தமிழகத்தில் ஒரு ஆயுத போராட்ட முனையை உருவாக்கவோ இல்லை என்பதுதான் உண்மை.


ஆனால், அப்படிச் செய்துவிட்டதாக நம்பிக்கை கொண்டு அல்லது நம்ப வைத்துக் கொண்டு கற்பித்துக் கொண்டு ஆயுதக் குழுக்களைக் கட்டி, சில சாகசவாதச் செயல்களில் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டார்கள் என்பதுதானே புதிய ஜனநாயகத்தின் விமர்சனம்!


இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாது மறுக்கும் அதேசமயம், மாவோயிஸ்ட் கட்சி இதுவரை தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவோ, தமிழகத்தில் ஒரு ஆயுதப் போராட்ட முனையை உருவாக்கவோ இல்லை என்கிற உண்மையை இப்போது முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. அதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில், முயற்சிகளில்தான் ஈடுபட்டது. அதைத்தான் தீவிரவாதம் என்று காட்டி ஒடுக்குகிறார்கள், பஞ்சமா பாதகர்களான ஆளும் வர்க்கப் பாதந்தாங்கிகளான காக்கிச் சட்டை ரவுடிகள் என்கிறார்கள், மாவோயிஸ்ட்கள்.


மாவோயிஸ்ட்களால் இப்போது முதன்முறையாக ஒப்புக் கொள்ளப்படும் இந்த உண்மை இன்னுமொரு உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விடுகிறது.
அதாவது "நாங்கள் தாம் ஆயுதப் போராட்டப் பாதையை நடைமுறைப்படுத்தி சாதித்துக் காட்டியவர்கள், நக்சல்பாரி என்ற பட்டம் தங்களுக்கே உரியது; இதற்கு மாறாக புதிய ஜனநாயகம் அமைப்பினர் 30 ஆண்டுகளாகியும் ஆயுதப் போராட்டத்தைக் கண்காணாத தூரத்திற்கு தள்ளி வைத்துவிட்ட வலது சந்தர்ப்பவாதிகள்'' என்ற மக்கள் யுத்தக் குழு மாவோயிஸ்டுகளின் வரையறுப்பு வெறும் அண்டப்புளுகு ஆகாசப் புளுகு என்ற உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதையே முதலில் சொன்ன உண்மை நிரூபிக்கிறது.


அதாவது சாருமஜும்தார் தலைமையிலான ஒன்றுபட்ட இ.க.க.(மாலெ) கட்சியாக இருந்த காலத்திலிருந்து, கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கான முயற்சிதான் நடைபெறுகிறது. ஆனாலும், இன்னமும் ஆயுதப் போராட்டம் தொடங்கிவிடவில்லை.


தங்களுடைய வழிதான் ஆயுதப் போராட்டத்துக்கான மிகச் சரியானது, ஆந்திராபீகார் நடைமுறையில் நிரூபித்துக் காட்டப்பட்ட வழி என்று கூறிக் கொள்ளும் தமிழக மாவோயிஸ்டுகளும், அவர்கள் பரம்பரை உரிமை பாராட்டும் கூட்டக்குழு மக்கள் யுத்தம் மாவோயிஸ்ட் பரம்பரையின் 32 ஆண்டு கால வரலாற்றிலும், தமிழகத்தில் எப்போதும் எங்கேயும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கி விடவில்லை. ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் தயாரிப்பு நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வருகிறார்கள்.


"புதிய ஜனநாயகம்'' அமைப்புக்கு எதிரான தங்களுடைய ஒவ்வொரு பிரசுரத்திலும் மாவோயிஸ்ட்கள் தவறாது முக்கியமாகக் கூறிவரும் பிரச்சாரம்: "புதிய ஜனநாயகம் அமைப்பினர் ஆயுதப் போராட்டத்தைக் கண்காணாத தூரத்துக்குத் தள்ளி போட்டுள்ள வலது சந்தர்ப்பவாதிகள்; அவர்களுடைய அரசியல்கோட்பாடே அப்படிப்பட்டதுதான்; அதனால்தான் இவ்வளவு ஆண்டுகளாகியும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்காமல், சட்டவாதப் போராட்டங்களை மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.''


சரி. "புதிய ஜனநாயகம்''தான் இப்படி இருக்கிறது என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதைவிட அதிக ஆண்டுகளாக ஆயுதப் போராட்ட முயற்சியிலும் தயாரிப்பிலும் உள்ள மாவோயிஸ்டுகள் இன்னமும் ஆயுதப் போராட்டத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் இல்லாவிட்டாலும் கண்ணுக்கெட்டிய தூரத்திற்காவது கொண்டு வந்து விட்டார்களா? கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடத்தப் போவதாகக் காட்டிப் பார்வையாளர்களை ஏய்க்கும் மோடி வித்தைக்காரனைப் போல புரட்சியை ஆதரிக்கும் பார்வையாளர்களிடம் ஆயுதப் போராட்ட "நடிப்பு''க் காட்டிக் கொண்டு தானே இருக்கிறார்கள். அது ஏன்?


இதன் மூலம் உண்மையில் ஆயுதப் போராட்டத்தைக் கண்காணாத தூரத்திற்குத் தள்ளிப் போட்டிருப்பவர்கள் தமிழக மாவோயிஸ்டுகள்தாம் என்பது தெளிவாகிறது! அதாவது, ஆயுதப் போராட்டத் தயாரிப்பு நடவடிக்கைகள் முயற்சிகளிலேயே நிரந்தரமாக இருப்பõர்கள்; ஆனால், ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க மாட்டார்கள். இந்த நிலைக்கான காரணத்தைக் கண்டறிய மறுப்பதோடு, ஆந்திரா, பீகாரைக் காட்டியே இங்கே சவடால் அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆந்திரா, பீகாரில் மாவோயிஸ்டுகள் நடத்தும் "ஆயுதப்போராட்டமும்''கூட மாவோவின் மக்கள் யுத்தப் பாதையிலானது அல்ல. சேகுவாராவின் குட்டி முதலாளிய இராணுவவாதம்தான் என்பதைப் பிறகு பார்ப்போம்.


இவ்வளவு ஒரு நீண்டகாலத்துக்கு ஆயுதப் போராட்டத் தயாரிப்புகளில் ஈடுபடுவதை ஆயுதப் போராட்டம் நடத்தப் போகிறோம் என்று "நடிப்புக் காட்டிக் கொண்டு'' ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு அலைவதை புரட்சியாளர்களைப் "பலி'' கொடுக்கும் செயல் என்று சொல்வதா, "ஆத்திரமூட்டி எதிரியின் தாக்குதலை வரவழைக்கும் வேலை'' என்று சொல்வதா, மாவோயிச மக்கள் யுத்தைப் பாதை என்பதா?


இத்தகைய அரைகுறை ஆயுதப் போராட்ட முயற்சிகளின் விபரீதங்கள் எதிர்விளைவுகள் குறித்து லெனினியம் நிறையவே எச்சரித்திருக்கிறது. அதற்கு மாவோயிஸ்டுகள் நடைமுறை அனுபவ ரீதியிலான ஒரு எதிர்மறை சாட்சியமாக விளங்குகிறார்கள்.


ஏழாண்டுகளுக்கு முன்பே புதிய ஜனநாயகம் எழுதியிருந்தது: "பு.ஜ. அமைப்பு துவங்குவதற்கு முன்பிருந்தே, "ஆயுத''ப் போராட்டத்தை துவங்கி விட்டதாகப் பீற்றிக் கொண்டிருந்த இந்த கூட்டக் குழு, ம.யு.வாரிசுகள் இவ்வளவு ஆண்டுகளில் அதைச் சாதித்தார்களா? தமிழ்நாட்டின் யதார்த்த நிலைமையைப் புரிந்து கொள்ளாத இவர்கள் திரும்பத் திரும்ப "ஆயுத'' முயற்சி செய்வது கருக்கலைப்பிலேயே முடிந்தது. ஆந்திராவைக் காப்பி அடிக்க முயலுபவர்களுக்கு பு.ஜ.வின் வழிமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாதுதான்'' (பு.ஜ. வெளியீடு, குறுக்குவழி தேடி... குழுசாகச வழிபாடு, பக்: 45).