அறிவு, நாணயம், வாய்மை, நேர்மை ஆகிய புரட்சியாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவிடம் கிடையாது என்பதை இதன் மூலம் நிரூபித்து விட்டார்கள். இந்த உண்மையை அவர்களின் "பெரிய குளத்தில் தெறித்த சிறுபொறி! அரசின் அலறலும் புதிய ஜனநாயகத்தின் புலம்பலும்!'' என்ற வெளியீடும் "ஆயுதப் போராட்ட அரசியலும் நடைமுறையும்'' என்ற போராளி வெளியீடும் காட்டிக் கொடுத்துள்ளன.


புதிய ஜனநாயகத்தைப் பார்த்து இ.க.க. (மாவோயிஸ்ட்) எழுதுகிறது, "இவர்களிடம் நாம் கேட்பதெல்லாம் எங்கே, எப்போது தமிழகத்தில் ஆயுதப் புரட்சி தொடங்கப்பட்டு விட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்தார்கள் என்பதைத்தான். இதனை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டும் அரசியல் நேர்மை இவர்களுக்கு இருக்கிறதா? வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மாவோயிஸ்டுகள் கூட இவ்வாறுதான் குறிப்பிட்டுள்ளனர். "இக்கேடு கெட்ட சமூக அமைப்பை ஒழிக்க மக்கள் படை கட்டுவதும், மக்கள் யுத்தத்தை தொடுப்பதும் நியாயமானது, நீதியானது! இது தமிழகத்திலும் தொடுக்கப்படுவது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அவசர அவசியமானதும் கூட! தமிழகத்தில் இத்தகைய மக்கள் யுத்தத்திற்கான தயாரிப்பில்தான் மாவோயிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதைத்தான் தீவிரவாதம் எனக் காட்டி மக்களை ஏய்க்க நினைக்கிறது கருணாநிதி அரசு'. இவ்வாறு தமிழகத்தில் தயாரிப்புக் கட்டத்தில்தான் இருப்பதாக கூறும்போது தமிழகத்தில் ஆயுதப் புரட்சி தொடங்கி விட்டதாக கதையளக்கிறார்கள் இந்த நவீன கோயபல்ஸ்கள்.'' (பெரிய குளத்தில் தெறித்த சிறுபொறி..., பக். 12)


"தர்மபுரி மக்கள் செல்வாக்கு பெருகியுள்ள பகுதியாக மதிப்பிடப்படுகிறதே தவிர, அம்மாவட்டம் ஓர் ஆயுதப் போராட்ட முனையாக உருவாகிவிட்டது என்று மாவோயிஸ்ட்கள் வலிந்து என்றைக்குமே வாதாடியதில்லை. ஆனால் அப்படி வாதாடுவதாக ஒரு வடிகட்டிய பொய்யை இவர்கள் பரப்புவதின் நோக்கம் அரசின் ஊதுகுழலாகச் செயல்டும் இழிவான செயலே ஆகும்.'' (பெரிய குளத்தில்..., பக். 14)
மேற்கண்ட பத்திகளில் அவர்கள் கூறுவது என்ன?


* தமிழகத்தில் ஆயுதப் புரட்சி தொடங்கப்பட்டு விட்டதாக மாவோயிஸ்டுகள் எங்கே, எப்போது அறிவித்தார்கள்? இதனை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டும் அரசியல் நேர்மை புதிய ஜனநாயகம் அமைப்பினருக்கு இருக்கிறதா?


* தமிழகத்தில் தயாரிப்புக் கட்டத்தில்தான் இருப்பதாக மாவோயிஸ்ட்கள் கூறும்போது, தமிழகத்தில் ஆயுதப் புரட்சி தொடங்கிவிட்டதாக இந்த (புதிய ஜனநாயகம்) நவீன கோயபல்ஸ்கள் கதையளக்கிறார்கள்.


* தர்மபுரி மாவட்டம் ஓர் ஆயுதப் போராட்ட முனையாக உருவாகிவிட்டது என்று மாவோயிஸ்ட்கள் வலிந்து என்றைக்குமே வாதாடியதில்லை. ஆனால் அப்படி வாதாடுவதாக ஒரு வடிகட்டிய பொய்யை இவர்கள் (புதிய ஜனநாயகம்) பரப்புவதின் நோக்கம் அரசின் ஊதுகுழலாகச் செயல்படும் இழிவான செயலே ஆகும் என்கிறது இ.க.க. (மாவோயிஸ்ட்).


யார் அரசியல் நேர்மையுள்ளவர்கள்? யார் நவீன கோயபல்சுகள்? யார் வடிகட்டிய பொய்யைப் பரப்புகிறார்கள்? யார் இழிவான செயலில் ஈடுபடுகிறார்கள்? இ.க.க.(மாவோயிஸ்ட்) மாநிலக் குழுவா, புதிய ஜனநாயகமா என்பதைக் கீழ்க்கண்ட ஆதாரத்தைப் படித்துவிட்டுத் தோழர்களே முடிவு செய்து கொள்ளட்டும்!


இ.க.க.(மாவோயிஸ்ட்) மக்கள் யுத்தக் குழுவாக இருந்தபோது, அதன் 1995 சிறப்பு மாநாட்டின் தீர்மானத்தின் அடிப்படையில் 1996 அக்டோபரில் நடத்தப்பட்ட பிளீனத்தில் "தமிழகத்தில் ஆயுதப் போராட்ட முனையை உருவாக்குவோம்'', "உழவர் போராட்ட முனையை உருவாக்குவோம், உள்ளூர் ஆதிக்க சக்திகளை வீழ்த்துவோம்'', கிராம ஆட்சி மன்றங்களுக்கே அதிகாரம், கொரில்லா மண்டலத்தை நோக்கி முன்னேறுவோம்'' என்கிற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த முடிவின் அடிப்படையில்தான் தோழர்கள் இரவீந்தர், சிவா போன்ற நகர்புறத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தோழர்களை வைத்து ஆயுதக் குழுக்கள் கட்டப்பட்டன.


அதன்பிறகு 2000, ஜனவரியில் தமிழ்நாடு ஆயுதப் போராட்ட முனைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.


"வடதெலுங்கானா தண்டகாரண்யா பகுதிகள் (மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம்) இன்று கொரில்லா மண்டலத்தின் உயர்ந்த கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மேலும் தென் தெலுங்கானா, கிழக்கு மண்டலம் (ஆந்திரா, ஒரிசாவின் பகுதிகள்), இராயலசீமா தெற்கு கடற்கரை மண்டலம் (ஆந்திரா) கோயல்கெய்மூர் மண்டலம் (பீகார்) ஆகியன கொரில்லா மண்டலத் தயாரிப்புக் கட்டத்தில் உள்ளன. மேற்கு பெங்கால், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் ஆயுதப் போராட்ட முனைகள் உருவாகி உள்ளன.'' (மக்கள் யுத்தக் குழுவின் போராளி, ஜனபிப் 2000, பக் 34.)


2000 ஜனவரியில் தோழர் இரவீந்தர் கொல்லப்பட்டதும், 2002 நவம்பரில் தோழர் சிவா கொல்லப்பட்ட ஊத்தங்கரை சுற்றி வளைப்பு நிகழ்வும் தற்காலிகப் பின்னடைவுகள்தாம் என்று கருதிய மக்கள் யுத்தக் குழு, ஆயுதக் குழுக்களைப் புதுப்பித்து ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் புரிதலிலேயே இருந்தது.
அதனால்தான், அக்குழு 2006ஆம் ஆண்டு நடத்திய தனது 6வது மாநில மாநாட்டில் பின்வருமாறு முடிவு செய்தது.


"ஆயுதப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி தளப் பிரதேசங்களை அமைக்கும் கண்ணோட்டத்துடன் கொரில்லா மண்டலத்தை நோக்கி முன்னேறுவோம்.''


"ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கி அனைத்துத் தயாரிப்புகளையும் விரைந்து நிறைவேற்றுவோம்'' (2006இல் நடந்த 6வது மாநில மாநாடு அரசியல் அமைப்பு மீளாய்வு, பக்.12)


மாநில மாநாட்டு முடிவுகளில் காணப்படும் உடனடிக் கடமைகளில் ஒன்றாக, "தமிழகத்தில் மீண்டும் "மக்கள் யுத்தத்தைத் தொடங்குவோம்' (பக். 62) என்பது முன் வைக்கப்பட்டிருக்கிறது. "ஆயுதப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்'' என்று ஒரு இடத்திலும், "ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம்'' என்று மற்றொரு இடத்திலும் இ.க.க.(மாவோயிஸ்ட்), மாநிலக் குழுவின் அரசியல் அமைப்பு மீளாய்வில் முரண்பாடாக இருப்பதற்கு அவர்கள் தாம் விளக்கம் சொல்ல வேண்டும். ஆனால், ஆயுதப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்றாலும் சரி, மீண்டும் தொடங்குவோம் என்றாலும் சரி, இரண்டுமே தமிழகத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கியதாக இ.க.க.(மாவோயிஸ்ட்) மாநிலக் குழு பிரகடனப்படுத்தியதை உறுதி செய்கிறது.


ஆக, தமிழகத்தில் ஆயுதப் புரட்சி தொடங்கப்பட்டு விட்டதாகவும், தமிழகம் ஓர் ஆயுதப் போராட்ட முனையாக உருவாகி விட்டதாகவும் மாவோயிஸ்டுகள் எப்போது, எங்கே அறிவித்தார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டி நாம் நமது அரசியல் நேர்மையை நிரூபித்துள்ளோம். இப்போது அவர்கள் சொல்லட்டும். யார் அரசியல் நேர்மையற்றவர்கள்? யார் நவீன கோயபல்ஸ்கள்? யார் வடிகட்டிய பொய்யைப் பரப்புபவர்கள்? ஓர் உண்மையைச் சொன்னதற்காக, நாம் அரசின் ஊதுகுழலாக செயல்படும் இழிசெயலைச் செய்வதாக உள்நோக்கம் கற்பிப்பதும் அவதூறு செய்வதும்தான் அரசியல் நேர்மையான செயலா?