"அரசியல் வேறுபாடுகள், விமர்சனங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் மாவோயிஸ்டுகள் அதை வரவேற்கின்றனர். ஆரோக்கியப்பூர்வமான விவாதத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளனர்'' என்று "போராளி'' வெளியீடு கூறுகிறது. ஆனால், அவர்களின் ஆரோக்கியப்பூர்வமான விவாதமும், விமர்சன வரவேற்பும் எத்தகையது என்பதை இந்த இரு வெளியீடுகளும் மிகத் தெளிவாகச் சொல்லி விடுகின்றன.
"ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்'' என்ற அகந்தைஆணவம் காரணமாக நமது அரசியல் விமர்சனங்களை சகித்து கொள்ளவும் எதார்த்தமாக எடுத்துக் கொள்ளவும் மறுக்கும் அவர்கள், "பெரிய குளத்தில் தெறித்த சிறு பொறி!...'' என்ற வெளியீட்டில் புதிய ஜனநாயகத்தினரைப் பார்த்துப் பின்வருமாறு ஆத்திரத்தைக் கொட்டியுள்ளார்கள்.
அரசியல் நேர்மை இல்லாதவர்கள், நவீனகோயாபல்ஸ்கள், அரசியல் பிக்பாக்கெட்டுகள், மோடி மஸ்தான் வேலை செய்பவர்கள், மாப்பிள்ளைமார் போராட்டம் நடத்துபவர்கள், மாவோயிஸ்ட்களின் செயலை அரசு பயங்கரவாதத்துடன் சமன்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், அரசின் ஒடுக்குமுறைக்கு ஒத்தூதும் ஈனத்தனமானவர்கள், சரடு விடுகிறவர்கள், வடிகட்டிய பொய்யைப் பரப்புபவர்கள், அரசின் ஊதுகுழலாக செயல்படும் இழிவான செயலுக்குரியவர்கள், எத்துவேலை செய்பவர்கள், சட்டவாதத்தில் மூழ்கிப் போன காகிதப் புலிகள், புத்தகக்கடை போட்டு வியாபாரம் செய்பவர்கள், மாவோயிஸ்ட்கள் மீது விஷத்தைக் கக்குபவர்கள், எளிய உண்மைக் கூட தெரியாத "மாமேதைகள்', பின்னடைவுகளையும், தியாகங்களையும் கண்டு ஒப்பாரி வைப்பவர்கள், பாடங்களைப் பயின்று ஒவ்வொரு தோல்வியையும் வெற்றியாக மாற்றுபவர்கள் புரட்சியாளர்கள் என்பதைப் புரியாத புத்தகப் புழுக்கள், தமது சந்தர்ப்பவாதத்தை மூடி மறைப்பதற்காகத்தான் மாவோயிஸ்ட்களின் நடைமுறையை விமர்சிக்கிறார்கள், பார்ப்பனர்கள் வேதபாராயணம் செய்வதைப் போல வெறும் மார்க்சியலெனினியமாவோ சிந்தனைகளை உதட்டளவில் பேசுபவர்கள், இவர்களைக் கண்டு அரசு அச்சப்படுவதில்லை, அரசின் அடக்குமுறைகள் இவர்களைத் தீண்டாத அதேசமயம் அரசின் அடக்குமுறை ஏவப்படுமோ என்றஞ்சி புதிய ஜனநாயகம் புலம்புகிறது என்கிறார்கள்.
இவ்வளவு அர்ச்சனைகள் வசைபாடுதல்களுக்கும் ஒருபடி மேலே போய் இ.க.க (மாவோயிஸ்ட்) சார்பாக வெளியிட்டுள்ள "போராளி வெளியீடு'', புதிய ஜனநாயகம் அமைப்பின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பது என்கிற பெயரில் ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்திருக்கிறது. புதிய ஜனநாயகத்தின் விமர்சனங்களை எல்லாம் அவதூறுகள், பொய்கள் என்று நிராகரிக்கும் அதேசமயம், அவையெல்லாம் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசும் ஆளும் வர்க்கமும் அவற்றின் ஏவல்நாய்களான போலீசும் கொடூரமான பயங்கரவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடும்போதெல்லாம் அவற்றுக்குத் துணைபோவதாகவும், அவற்றுக்குச் சமமாகத் தாக்குதல் தொடுத்து, ஒத்துழைப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறது.
"அரசின் / போலீசின் அடக்குமுறைகள், அவதூறுப் பிரச்சாரங்களுக்கு ஒத்திசைவாக, தம்மை நக்சல்பாரிகள், புரட்சியாளர்கள் எனக் கூறிக் கொண்டு வலது சந்தர்ப்பவாத சகதியில் உருண்டு, புரண்டு, நெளிந்து கொண்டிருக்கும் இ.க.க.(மா.லெ) மாநில அமைப்புக் கமிட்டி தனது பங்கிற்கு "அரசியல்தத்துவார்த்த ரீதியில்' மாவோயிஸ்டுகளை எதிர்த்து விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசுவதும் ஒரு தொடர்கதைப் போல் நடைபெறுகின்றது.''
"மாவோயிஸ்ட் கட்சியையும் அதன் செயல்பாடுகளையும் எதிர்ப்பதை, இந்த அமைப்புகள் அனைவரும் (மாநில அமைப்புக் கமிட்டி உட்பட) ஒரு முக்கியமான "கடமையாக' கொண்டுள்ளனர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அந்த "கடமையை' செய்ய இவர்கள் தவறுவதில்லை. பழம்பெரும் திரிபுவாதிகளான சி.பி.எம். சமீபத்திய திரிபுவாதிகளான விடுதலை, செங்கொடி போன்ற "மாலெ' கட்சிகள், திரிபுவாதத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையே ஊசலாடும் மா.அ.க. போன்ற வலது சந்தர்ப்பவாதிகள் போன்ற அனைவரும் மாவோயிஸ்டுகளின் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை, சாகசவாதத்தை எதிர்த்து தாக்குதல்களை நடத்தி வருவது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.''
(பு.ஜ.) "கட்டுரையின் முற்பகுதி அரசின் மற்றும் போலீசின் அடக்கு முறையை எதிர்த்து எழுதப்பட்டிருந்தாலும், அதன் பிற்பகுதி மற்றும் முடிவு மாவோயிஸ்டுகளின் அரசியல் மற்றும் செயலுத்திகளை விமர்சிப்பது என்ற பெயரில் பொய்களையும், அவதூறுகளையும் அள்ளிவீசி, ராமனுக்கு அணில் செய்த சேவையைப்போல ஆளும் வர்க்க அவதூறு பிரச்சாரத்தில் தனது பங்கைச் செலுத்தியுள்ளது. அரசியல் வேறுபாடுகள், விமர்சனங்கள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் மாவோயிஸ்டுகள் அதை வரவேற்கின்றனர். ஆரோக்கியப்பூர்வமான விவாதத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளனர். ஆனால், இ.க.க.(மாலெ) மா.அ.க.வும், புதிய ஜனநாயகமும் அத்தகைய ஆரோக்கியப்பூர்வமான விவாதத்தை மேற்கொள்வதற்கு பதிலாக, தமது அரசியல் ஓட்டாண்டித்தனத்தை மறைத்துக் கொள்ள பொய்களையும், அவதூறுகளையும் கூறி மாவோயிஸ்ட் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.''
"இந்த அமைப்பும், அதன் பத்திரிகையும் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதும், நாம் ஏற்கெனவே கூறியுள்ளபடி முதல் தடவையல்ல. எப்போதெல்லாம் அரசு அடக்குமுறை திட்டமிட்ட வகையில் நமது அமைப்பையும் இயக்கத்தையும் ஒழிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் இவர்களும் தங்களின் பங்கிற்கு வரிந்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி விடுகிறார்கள்................ விமர்சனம் என்ற பெயரில் படுமோசமான, கீழ்தரமான, அவதூறுகளையும், பொய்களையும் கூறியிருந்தனர்......... மீண்டும் அரசு அதன் கொலைப் படையான அதிரடிப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசாரை நிரந்தர அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் முகாமிட்டு தேடுதல் வேட்டையும், அவதூறு பிரச்சார தாக்குதல் நடத்தியும், உளவாளிகளை ஊடுருவச் செய்தும் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தைப் பற்றி மட்டுமல்லாது, அனைத்திந்திய அளவில் பல மாநிலங்களில் முன்னேறிக் கொண்டிருக்கும் இயக்கத்தைப் பற்றியும் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளைக் கூறி கொச்சைப்படுத்தும், சிறுமைப்படுத்தும், கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.'' (போராளி வெளியீடு, பக். 36)
பெரியகுளம் முருகமலை சம்பவத்தைத் தொடர்ந்து "புதிய ஜனநாயகம்'' எழுதிய கட்டுரைக்குப் போராளி, அறிவொளி மூலமாக மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள மேற்கண்ட பதிலுரைகளில் மீண்டும் மீண்டும் அவர்கள் சொல்லுபவை இவைதாம்....
* அரசின் / போலீசின் அடக்குமுறைகள், அவதூறுப் பிரச்சாரங்களுக்கு ஒத்திசைவாக புதிய ஜனநாயகம் அமைப்பினர் தனது பங்கிற்கு "அரசியல் தத்துவார்த்த ரீதியில்' மாவோயிஸ்டுகளை எதிர்த்து விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர்.
* வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மாவோயிஸ்ட் கட்சியையும் அதன் செயல்பாடுகளையும் எதிர்ப்பதை ஒரு முக்கியமான "கடமையாக'க் கொண்டுள்ளனர்.
* மாவோயிஸ்டுகளின் அரசியல் மற்றும் செயலுத்திகளை விமர்சிப்பது என்ற பெயரில் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசி ராமனுக்கு அணில் செய்த சேவையைப் போல் ஆளும் வர்க்க அவதூறுப் பிரச்சாரத்தில் தனது பங்கை செலுத்தியுள்ளது.
* ஆரோக்கியப்பூர்வமான விவாதத்தை மேற்கொள்வதற்குப் பதிலாக, தமது அரசியல் ஓட்டாண்டித்தனத்தை மறைத்துக் கொள்ள பொய்களையும் அவதூறுகளையும் கூறி மாவோயிஸ்ட் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
* எப்போதெல்லாம் அரசு அடக்குமுறை திட்டமிட்ட வகையில் நமது அமைப்பையும் இயக்கத்தையும் ஒழிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் இவர்களும் தங்களின் பங்கிற்கு வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி விடுகிறார்கள். விமர்சனம் என்ற பெயரில் பு.ஜ.வினர் படுமோசமான, கீழ்த்தரமான, அவதூறுகளையும், பொய்களையும் கூறுகின்றனர்.
* தற்போது மீண்டும் தமிழக அரசு அதன் கொலைப் படையான அதிரடிப்படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசாரை நிரந்தர அடிப்படையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் முகாமிட்டு தேடுதல்வேட்டையும் அவதூறு பிரச்சார தாக்குதல் நடத்தியும், உளவாளிகளை ஊடுருவச் செய்தும் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் இயக்கத்தைப் பற்றி மட்டுமல்லாது, அனைத்திந்திய அளவில் பல மாநிலங்களில் முன்னேறிக் கொண்டிருக்கும் இயக்கத்தைப் பற்றிய அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளைக் கூறி கொச்சைப்படுத்தும், சிறுமைப்படுத்தும், கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இ.க.க.(மாவோயிஸ்ட்)வுக்கு எதிரான முந்தைய அல்லது தற்போதைய விமர்சனங்களில் ஏதாவது ஒன்றைக்கூட படுமோசமானது, கீழ்த்தரமானது, கொச்சைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது என்றும் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, அவதூறு, பொய் என்றும் அவர்களால் குறிப்பாக எடுத்துக்காட்டி விளக்கவோ நிரூபிக்கப்படவோ இல்லை. அதற்கு மாறாக அரசியல் பிக்பாக்கெட்டுகள், நவீன கோயபல்ஸ்கள், காற்றடைத்த பைகள் என்ற வசவுகள்; அதைவிட முக்கியமாக நாடாளுமன்ற சகதியில் மூழ்கிப் போயுள்ள போலி புரட்சியாளர்களோடும், அரசு / போலீசின் தாக்குதல்களோடும், எதிர்ப்புரட்சிப் பிரச்சாரத்தோடும் சோ, இந்து, தினமலர் முதலிய பார்ப்பனப் பத்திரிக்கைகளோடும் பு.ஜ.வை அடையாளப்படுத்துவதன் மூலம் மிகவும் மோசமான, கீழ்த்தரமான, கொச்சையான, சிறுமைப்படுத்தும் செயல்களில் இ.க.க. (மாவோயிஸ்ட்)யினர்தாம் ஈடுபட்டுள்ளனர்.