மக்கள் குண்டர்கள் மோதலில் ஆயிரக்கணக்கானவர்களின் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தல், நிலப்பிரபுக்களால் மக்கள் சுடப்படுதல், நிலப்பிரபுக்களால் முறையான குண்டர் படைகள் அமைக்கப்படுதல், மக்களின் மீதான போலீசு குண்டர்கள் கூட்டுத் தாக்குதல், மக்களின் மீதான பாசிசச் சித்திரவதை ஆகியவை தெலுங்கானா இயக்கத்தை மீண்டும் அடக்க, அரசாங்கமும் நிலப்பிரபுக்களும் கையாண்ட முறைகளில் சில.
மக்களை ஒன்று திரட்டுவதன்மூலம் மட்டுமே, வர்க்கப் போராட்டங்களை நடத்துவதன்மூலம் மட்டுமே நாம் இந்தப் பாசிச அடக்குமுறையை முறியடித்து வெற்றி பெற முடியும். இது வரலாற்று உண்மை. ஆனால் நவீன திரிபுவாதிகளின் (சி.பி.எம்.) தலைமை இந்தப் பாதையை நிராகரித்துவிட்டது. காங்கிரசு எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் அது நாடாளுமன்ற முறையையே தொடர்கிறது. அதனால்தான் பாசிச அடக்குமுறையை எதிர்த்து அது மக்களைத் திரட்டுவதில்லை. விண்ணப்பங்கள் (மனு), பிரதிநிதித்துவப்படுத்தல், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றின்மூலம் மக்களை அது ஏமாற்றுவதற்கு முயல்கிறது.
தெலுங்கானா இயக்கத்திற்கு இந்தப் பாதை இழைத்த மிகப்பெரிய தீமை, கம்மம் மாவட்டத்தில் நடந்த விளைவுகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும். புதுத் திரிபுவாதிகளின் (சி.பி.எம்.) ஒரு பிரிவினர் சித்தாரெட்டியைச் சார்ந்த காங்கிரசு பிரிவினரை ஆதரிக்கின்றனர். மற்றொரு பிரிவினர் வெங்கல்ராவைச் சார்ந்த மற்றொரு காங்கிரசு குழுவை ஆதரிக்கின்றனர். (பிறகு இந்தக் குழு திரிபுவாதிகளிடம் — வலது கம்யூனிஸ்டுகளிடம் — சேர்ந்து விட்டது). சில நிலப்பிரபுத்துவ குழுக்களின் உதவியுடன் நகரசபை, பஞ்சாயத்து சமிதி ஆகியவற்றில் தங்களுடைய இடங்களைப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது.
அரசியல் ரீதியாக மக்களைத் திரட்டியும், பாசிச அடக்குமுறையை எதிர்த்தும் வாரங்கல், நலகொண்டா மாவட்டங்களில் ஓரளவிற்கு மக்கள் இயக்கங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நவீன திரிபுவாதிகளின் (சி.பி.எம்.) தலைமை கம்மம் மாவட்டத்தில் பாசிச அடக்குமுறையை எதிர்த்து மக்களைத் திரட்ட மறுத்துவிட்டது. இதன் விளைவாக அங்கு கட்சி உறுப்பினர்களின் மீதும், மக்கள் மீதும் பாசிச அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. சிலர் நிலப்பிரபுக்களிடம் சரணடைய ஆரம்பித்துவிட்டனர். இதுதான் நவீன திரிபுவாதத் தலைமையின் இன்றைய நிலையாகும்.
தற்சமயம் ஆளும் கட்சியில் நிலப்பிரபுக்கள் ஒரு பகுதியாக இருக்கின்றனர். ரஜாக்கர் குண்டர்கள் இடத்தைக் காங்கிரசு குண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். ஒரு சமயத்தில் நமது சிவப்புக் கிராமங்களாக இருந்தவற்றில் குண்டர்களும் நிலப்பிரபுக்களும் கிராமங்களை ஆதிக்கம் புரிய வந்துள்ளனர்.
திரிபுவாத, நவீன திரிபுவாத போலி கம்யூனிஸ்டுகள் தெலுங்கானா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல எள்ளளவும் அக்கறையின்றி நாடாளுமன்றப் பாதையிலே சென்று பதவி சுகத்திலேமூழ்கிக் கிடக்கின்றனர். தெலுங்கானா இயக்கத்தைத் தனிமைப்படுத்தி நசுக்கச் செய்யும் அவர்களின் நோக்கம் தற்காலிகமாகத்தான் வெற்றிபெற முடிந்தது.