இந்தச் சரணடைதல் கொள்கையை கட்சி நிராகரித்து, போராட்டத்தைத் தொடர முடிவு செய்தது. இதனால் ரவி நாராயணரெட்டியும், அவரைப் பின்பற்றுபவர்களும் இயக்கத்திலிருந்து மெதுவாக விலக ஆரம்பித்தனர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். தன்னுடைய சரணடைதல் கொள்கையை மறைப்பதற்காக ரவி நாராயண ரெட்டி "தெலுங்கானாவின் வெளிப்படையான உண்மைகள்'' என்ற புத்தகத்தை வெளியிட்டு, மக்களிடத்தில் வெட்கமில்லாமல் விநியோகம் செய்தார். தெலுங்கானா இயக்கம் முழுமையும் சூறையாடும் இயக்கமென்றும், மக்களுடைய பொருளைத் திருடும் இயக்கமென்றும் அந்தப் புத்தகம் கண்டனம் தெரிவித்தது. அவர் நம்பிக்கை துரோகம் செய்து தெலுங்கானா இயக்கத்தின் முதுகிலே குத்திவிட்டார். இவ்வாறாக மக்களின் கண் முன்னாலேயே மாபெரும் தெலுங்கானா இயக்கத்தைக் குலைக்க இத்துரோகிகள் அரசாங்கத்திற்கு நேரிடையாக உதவினர்.
சரியாக இந்தச் சமயத்தில், டாங்கே, அஜாய் குமார் கோஷ், காட்டே ஆகியோர் கட்சியை எதிர்த்துக் கலகம் செய்து மக்கள் யுத்த வழியை எதிர்ப்பதில் ரவி நாராயணரெட்டியுடன் சேர்ந்து கொண்டனர். தெலுங்கானா இயக்கத்திற்கு ஏற்பட்ட இந்தப் புதிய எதிர்ப்போடு, தெலுங்கானா இயக்கம் உட்பிரச்சினைகளைச் சந்தித்தது.
இவ்வளர்ச்சிகளின் காரணமாக, நேரு அரசாங்கத்தின் வர்க்கக் குணங்களைப் பற்றியும் இந்தியப் புரட்சிக் கட்டத்தைப் பற்றியும், போராட்டத்தின் வழியைப் பற்றியும் ஒரு பெரிய சித்தாந்தப் போராட்டம் கட்சி முழுவதிலும் வெடித்தது. இந்த சித்தாந்தப் போராட்டத்தின் விளைவாக 1951இல் கட்சித் திட்டம், நடைமுறைத் தந்திரம் ஆகியவை உருவாக்கப்பட்டன.
இந்த மாபெரும் சித்தாந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கானா இயக்கத்தின் தீரர்கள், மத்திய அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதலை எதிர்த்துப் போராடி, இயக்கத்தை முன்னுக்கு கொண்டு சென்றனர். 1951ஆம் ஆண்டுத் திட்டம் அல்லது நடைமுறைத் தந்திரம் (இயக்கத்தின் நிலைமைகளைப் பரிசீலிப்பது) கூறுவதைப் போல, தெலுங்கானா இயக்கத்தை நிறுத்துவதற்கோ அல்லது புதிதாக நிறுவுவதற்கோ அவசியமே ஏற்படவில்லை.
அந்தச் சமயத்தில் எல்லா இடையூறுகளையும் கடந்து இயக்கம் புதிய பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்தது. சமவெளியில் இருந்த மக்கள் பல்வேறு வடிவங்களில் இயக்கத்திற்கு உதவி வந்தனர். மக்கள் எதிரிகள் தங்களுடைய கிராமங்களிலேயே தங்க முடியவில்லை. இராணுவ முகாம்களில் பாதுகாப்பை நாடினர். இராணுவத்தினராலும் கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அவர்கள் பகலில் சுதந்திரமாகச் சுற்றினாலும் இரவில் தங்களுடைய முகாம்களிலேயே தங்க வேண்டி வந்தது.
இந்த நிலைமைகளில், தங்களுடைய சொந்த அனுபவங்களைக் கொண்டு படைகளின் உறுப்பினர்கள், இயக்கம் தொடர்ந்து நடக்க வேண்டுமென்று கோரினர். இந்தச் சமயத்தில் மத்திய கமிட்டியின் தலைவர்கள், புதிய திட்டத்தை சாக்காக வைத்துக் கொண்டு இயக்கத்தை நிறுத்த வேண்டுமென்று ஒருதலைச் சார்பாக முடிவு செய்தனர்; இயக்கத்தின் நிலைமைகளைப் பரிசீலனை செய்தும், படை உறுப்பினர்களின் கருத்தைக் கேட்ட பிறகும் இறுதியான முடிவை எடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மத்தியக் கமிட்டித் தலைவர்கள், பிரதேசத் தலைவர்கள் ஆகியோர் இந்த முடிவையும் மீறி, ஆயுதங்களைத் தங்களுடைய பொறுப்பிலேயே கீழே வைக்கவேண்டுமென்று படை உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறாக, இயக்கம் பின்வாங்கப்பட்டது. மத்திய கமிட்டித் தலைமையானது, ஆந்திரத் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே தெலுங்கானா இயக்கத்தைப் பகிரங்கமாகப் பின்வாங்கச் செய்தது.
இரத்தத்தின்மூலமும், தியாகங்களின்மூலமும் சுமார் 4000 மக்கள் வீரர்களின் உயிர்களைத் தியாகம் செய்ததன்மூலமும் வளர்ந்த தெலுங்கானா இயக்கம், கடுமையான போராட்டங்களினிடையில் பல வெற்றிகளை அடைந்தது. போராட்ட வெற்றிகளைப் பாதுகாக்க மத்திய கமிட்டி எந்தவித முயற்சியும் செய்யவில்லை. விநியோகிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடமே இருக்க வேண்டுமென்றும் கிராம ராஜ்ஜியம் அங்கீகரிக்கப்படவேண்டுமென்றும், கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனையில்லாமல் விடுவிக்கப்படவேண்டுமென்றும் கட்சித் தலைமை மத்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினாலும், உறுதியாக அவற்றை வலியுறுத்தவில்லை. மத்திய அரசாங்கம் இந்த நிபந்தனைகளை நிராகரித்தது. கட்சித் தலைமையானது, இயக்கத்தை நிபந்தனையின்றி பின்வாங்க முயற்சிக்கிறது என்று மத்திய அரசாங்கத்திற்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் அது உறுதியாக நிராகரித்தது.
தேர்தல்களில் கலந்து கொள்வதற்குக் கட்சிக்கு அனுமதியளிப்பதாக மத்திய அரசாங்கம் உறுதி கூறியது. தேர்தல்களுக்குப் பின்னர், ஹைதராபாத் நிலச் சட்டத்தை மாற்றுவதற்கு உறுதியளித்தது. ஆயுதங்களைச் சரண்டையச் செய்தவர்களின் மீது வழக்குகள் போடமாட்டோமென்றும், முக்கியமான வழக்குகளில் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்போமென்றும் எல்லா கிராமங்களிலும் பஞ்சாயத்துகளை அமைக்கவும் உறுதி கூறியது.
மத்திய கமிட்டித் தலைமை இந்த ஏமாற்று உறுதிகளை ஏற்றுக் கொண்டது. தெலுங்கானா இயக்கத்தின் வெற்றிகளைப் பாதுகாக்க போராட வேண்டுமென்று அது நினைக்கவேயில்லை. தேர்தல்களில் கலந்து கொள்ள அனுமதி கிடைத்தால், அதுவே எல்லாவற்றையும் அடைந்துவிட்டதாகப் பொருள் என்று நினைத்தது. வரப்போகும் தேர்தல்களின் மீது கண் வைத்துக் கொண்டு இயக்கத்தை ஒருதலைச் சார்பாக நிறுத்தி, ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்தது.