Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


1. தெலுங்கானா பேரியக்கமானது சாரத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம். சாகுந் தருவாயிலுள்ள நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம். நிஜாம் நவாபின் மிகக் கொடுமையான ஆட்சிக்கெதிரான போராட்டம். ஜமீன்தாரர்கள், ஜாகிர்தார்கள், தேஷ்முக்குகள், நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிரான மாபெரும் போராட்டம். கொத்தடிமைத்தனத்திற்கும், மக்களிடமிருந்து பல வழிகளில் நிலங்களை பிடுங்கியதற்கும் எதிராக ஆரம்பித்த போராட்டம், நிலத்துக்கான போராட்டமாகவும் பன்சார், பன்சாரி நிலங்கள், நிலப்பிரபுக்களால் பிடுங்கிக் கொள்ளப்பட்ட நிலங்கள், நிலப்பிரபுக்களினுடைய நிலங்கள் ஆகியவற்றைப் பங்கிடுவதற்கான போராட்டமாகவும் முன்னேறியது.


2. இந்தப் போராட்டம், நிலப்பிரபுக்களுக்கெதிரான போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. நிஜாம் அரசின் ஆட்சியிலிருந்தும், நேரு அரசாங்கத்தின் இராணுவ ஆட்சியிலிருந்தும் தெலுங்கானா மக்களை விடுவிக்கும் போராட்டமாகவும் இருந்தது.


புதிய ஜனநாயகப் புரட்சியே, இந்திய மக்களின் ச­க, பொருளாதார அரசியல் விடுதலையைக் கொடுக்கும். இந்தப் புரட்சி மட்டுமே, இந்திய மக்களின் அடிமைத்தளைகளை உடைத்தெறியும். புதிய ஜனநாயகப் புரட்சியை அடைவதற்கான வழியை தெலுங்கானா இயக்கம் காட்டியது.


3. மாபெரும் தெலுங்கானாப் போராட்டமானது, எல்லாத் தெலுங்கு மக்களின் தேசியக் கோரிக்கையுடன் சம்பந்தப்பட்ட போராட்டமாகும். தங்களுடைய தாய் மொழியைக் காப்பதும், விசாலாந்திராவை நிறுவுவதற்கான, நவாப் நிஜாமின் ஆட்சிக்கெதிரானதுமான எல்லாத் தெலுங்கு மக்களினுடைய போராட்டமாகும். தேசியப் போராட்டமானது வர்க்கப் போராட்டத்துடன் இணைக்கப்பட்டது. "விசாலாந்திராவில் மக்களாட்சி'' என்ற முழக்கமானது, ஆந்திர மக்கள் முழுமையின் தேசியக் கோரிக்கையாகும்.


4. இது கம்யூனிஸ்டுக் கட்சித் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட மிகப் பெரிய சுயேச்சையான மக்கள் இயக்கமாகும்.


5. இது உண்மையான மக்கள் போராட்டம் ஆகும்; இந்த இயக்கத்தில் இலட்சக்கணக்கான சுரண்டப்பட்ட மக்கள் நேரடியாகப் பங்கேற்றனர். அடிமைத்தளையை உடைத்தெறிந்து முன்னேறினர். சிறிய கூட்டங்கள், கிளர்ச்சிகள் ஆகியவற்றுடன் ஆரம்பித்து, மக்கள் கொதித்தெழுந்து கூட்டமாகத் தடுத்து நிறுத்துவது, ஆயுதப் போராட்டம், படைகளைக் கட்டுதல் என்ற கட்டத்திற்கு உயர்ந்தது.


தெலுங்கானா மக்கள் எல்லோரும், போராட்டப் பேரலைகளை எழுப்பினர். இந்தப் பேரியக்கம் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டதாகஇருந்தது. ஆனாலும் போராட்டங்களில் மக்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் பல கட்டங்களிலும், பல வடிவங்களில் பங்கேற்றனர். அவர்கள் எதிரிகளின் ஆணிவேர்களை அறுத்தனர். கட்சிப் பிரசுரங்களை அவர்கள் இரகசியமாக விநியோகித்தனர். இவ்வாறாக, போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் இயக்கத்துடன் மக்கள் தொடர்பு கொண்டிருந்தனர். இயக்கத்தின் எந்தக் கட்டத்திலும் மக்களிடமிருந்து இயக்கம் தொடர்புகளை விட்டுவிடவில்லை. மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும், படைகளும் கட்சியும் மக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டே இருந்தன. மீன் தண்ணீரிலிருப்பதைப் போல அவர்கள் மக்களுடன் இருந்தனர். இதனால் 50,000 இராணுவத்தினரின் அடக்குமுறை இருந்தபோதிலும், கிராமங்களை முழுமையாக எரித்தபோதிலும், கூட்டம் கூட்டமாக மக்கள் கொலை செய்யப்பட்ட போதிலும் மாநிலத்தின் ஒருமூலையில் ஆரம்பிக்கப்பட்ட தெலுங்கானா இயக்கமானது மாநிலம் முழுவதும் பரவியது.


6. சாதாரண பிரச்சினைகளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், ஒவ்வொரு கட்டமாக உயர்ந்தது. ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது. இந்த இயக்கம் நேருவின் போலித்தனமான சோசலிசத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அம்பலப்படுத்தியது. ஆட்சியின் அடித்தளத்தை அசைத்து இடிக்கும் புரட்சிகரமான இயக்கத்தை சந்தித்தவுடன், அழிந்து கொண்டிருக்கும் வர்க்கங்களும் அவர்களின் வர்க்க அரசாங்கமும் எத்தகைய கொடுமைகளை எல்லாம் செய்யும் என்று இந்த இயக்கம் காட்டியுள்ளது. இத்தகைய நிலைமைகளில் ஒட்டு மொத்தமான எதிர்ப்புகளின்மூலம் முன்னேற முடியும் என்றும் இயக்கம் காட்டியுள்ளது.


7. முதன்முறையாக இந்தியாவில் 3000 கிராமங்கள் விடுதலை செய்யப்பட்டு, கிராம ராஜ்ஜியம் நிறுவப்பட்டது. ரசியாவின் நவம்பர் புரட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட "சோவியத்''களைப் போலவே இவை இருந்தன. விடுதலை செய்யப்பட்ட பகுதி பரந்த அளவில் இந்தியாவில் நிறுவப்பட்டது, இதுவே முதல் தடவையாகும்.


8. முதன் முறையாக, கிரிஜன் (மலைவாழ்) மக்களும் கோயா மக்களும் பரந்த அளவில் இயக்கத்திற்குள் இழுக்கப்பட்டனர். அவர்கள் உணர்வு பெற்று, கம்யூனிஸ்டுக் கட்சியைத் தங்களுடைய தலைமையாக ஏற்றுக் கொண்டனர். இன்றைக்குக் கூட காங்கிரசு ஆட்சியில் கோயா மக்கள் பலவீனமான இணைப்பாகத்தான் உள்ளனர்.


9. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக தெலுங்கானா இயக்கம் வளர்ந்தது. மலேயா, பர்மா, இந்தோனேஷியா, இந்தோசீனா, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளைவாக, பிரிட்டிசு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய தேசிய எழுச்சி வந்தது. தெலுங்கானாப் போராட்டமானது இந்தத் தேசிய எழுச்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக வளர்ந்தது.


மாபெரும் தெலுங்கானா இயக்கமானது, இந்திய மக்களின் ஜனநாயகப் புரட்சிக்கு மிக முக்கியமான பாடங்கள் கொண்ட நூலகம் ஆகும்.