இந்தத் திட்டத்தின்படி 20லிருந்து 30 பேர் கொண்ட கோயா மக்களை சித்திரவதை முகாம்களில் (Concentration Camps) கூட்டி இராணுவத்தினரின் நேரடிப் பார்வையின் கீழ் வைத்தனர். இந்த முகாம்களில் 50 மைல்களுக்கு அப்பாலிருந்த கிராம மக்களும் அடைக்கப்பட்டனர். காட்டுப்பகுதி மக்கள் முழுமையும் 4 அல்லது 5 சித்திரவதை முகாம்களில் வைக்கப்பட்டனர். இதுதான் பிரிக்குனுடைய திட்டம். இவைகளை மனமாற்ற மையங்கள் (Rehabilitation centres) என்று காங்கிரசு அரசாங்கம் அழைத்தது. உண்மையில் இங்கு ஏகப்பட்ட கொடூரங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான கிராமங்களை அவர்கள் எரித்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். கணவனுக்கு முன்னாலேயே மனைவியை நாசப்படுத்துவது என்பது சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. இச்சித்திரவதை முகாம்களில் நூற்றுக்கணக்கானோர் பசியினாலும், தனிமையினாலும், தொற்று நோய்களினாலும் இறந்தனர். சிறிது கூட வெட்கமில்லாமல் இந்த நரகங்களை "காந்திநகர்', "நேரு நகர்', "வல்லபாய் நகர்' என்று காங்கிரசு தலைவர்கள் அழைத்தனர்.
ஆனாலும் காங்கிரசு அரசாங்கத்திடம் மக்கள் சரணடையவில்லை. போலியான மாற்றங்களைக் கண்டு அவர்கள் ஏமாறவில்லை. சித்திரவதை முகாம்களில் இருந்து கொண்டே அவர்கள் படைகளுக்கு உதவி வந்தனர். சில கிராமங்கள், சித்திரவதை முகாம்களுக்குச் செல்ல மறுத்துவிட்டன; கிராம மக்கள் முழுவதும் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். அங்கு அவர்கள் தங்களுடைய சிறிய, தட்டுமுட்டுச் சாமான்களை மறைத்து வைத்துக் கொண்டனர். குடும்பங்கள் முழுவதும் காட்டுப்பகுதிக்குள் சென்று வாழ ஆரம்பித்தன. இப்படி இருந்தாலும் அவர்கள் இன்னமும் படைகளுக்கு உதவினர். இயக்கமானது புதிய பகுதிகளுக்கும் பரவியது. இவ்வாறாக பிரிக்குனுடைய திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
சாதாரண விவசாயத் தொழிலாளிகள், வறிய விவசாயிகள் ஆகியோரின் மகன்களும், மகள்களும் சாதாரண ஆயுதங்களை வைத்துக் கொண்டே, நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த இராணுவத்தினருடன் தீரமாகப் போரிட்டனர். பலவழிகளில் அவர்கள் இராணுவத்தினரைத் தொந்தரவு செய்து, பல வெற்றிகளை ஈட்டினர். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், அவர்கள் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்ததுதான்; அவர்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை உணர்ந்திருந்தனர். அவர்கள் சரியான காரணத்திற்காகப் போரிட்டனர்; இதனாலேயே அவர்கள் தீரமாகப் போரிட்டுப் பல வெற்றிகளை அடைய முடிந்தது.
இராணுவத்தினரால் ஒட்டு மொத்தமாகக் கொடுமைப்படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டாலும், தெலுங்கானா இயக்கம் புதிய இடங்களுக்குப் பரவியது. நலகொண்டா மாவட்டத்தில் ஆரம்பித்த இயக்கம் அடிலாபாத், மேடக், குண்டூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களுக்கும், மத்திய பிரதேசத்திலுள்ள (இன்றைய சட்டிஸ்கார் மாநிலத்திலுள்ள) பஸ்தார் பகுதிகளுக்கும் பரவியது. சமவெளிகளிலேயே மக்கள் படைகள் இராணுவ முகாம்களின் மீதும், மக்கள் எதிரிகளின் மீதும் மறைந்திருந்து திடீர்த் தாக்குதல்களைத் தொடுத்தன.
இவ்வாறாக, 1951க்குள்ளாக புதிய பகுதிகளுக்கு இயக்கம் பரவியது. நேரு அரசாங்கம் 50,000 இராணுவத்தினரை அனுப்பியும், 10 கோடி ரூபாய்களைச் செலவு செய்தும் தெலுங்கானா இயக்கத்தை ஒடுக்க முடியவில்லை. கணக்கற்ற இடர்ப்பாடுகள், இழப்புக்கள் ஏற்பட்டாலும் இயக்கம் முன்னேறியது; மிகுதியான தியாகங்களினூடே புதிய பகுதிகளுக்குப் பரவியது.