இராணுவத்தினர் நவீன ஆயுதங்களை வைத்திருந்தனர். தேவையான போர்த் தந்திரங்களை தெரிந்து வைத்திருந்தனர். மக்கள் படைகள் சாதாரண ஆயுதங்களையே வைத்திருந்தன. மிக ஆரம்பத்திலிருந்தே அவர்கள் போர்த்தந்திர முறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் தீரமுள்ள கொரில்லாக் குழுக்கள் இராணுவத்தைக் கடுமையான சூழ்நிலைகளில் சிக்கவைப்பதில் வெற்றியடைந்தது. இராணுவ முகாம்களின் மீது மறைந்திருந்து திடீரென அவர்கள் தாக்கினர். மணிக்கணக்காக அவர்கள் போரிட்டனர். அவர்கள் மிகக் குறைந்த இழப்புகளுடன் இராணுவத்தின் மீது அதிகளவில் சேதம் விளைவித்தனர். அவர்கள் போர்த் தளவாடங்களைக் கைப்பற்றுவதற்காக தாக்குதல் தொடுத்து வந்தனர். இராணுவத்தின் மீதான இத்தகைய இரகசிய திடீர்த் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தன. மனுகோட்டா என்ற பகுதியில் மட்டும் இவ்வகையான 400 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் போராட்டத்தின் தீவிரத்தினை நாம் புரிந்து கொள்ளலாம்.
வளர்ந்து வரும் இந்த இயக்கத்தை ஒடுக்க, முக்கியமாக காட்டுப்புற இயக்கத்தை ஒடுக்க நேரு இராணுவம் மக்களின் மீதும், படைகளின் மீதும் பாசிச அடக்குமுறைகளைக் கையாண்டது. மிக மோசமான பாசிசக் கொள்ளைக் கூட்டத்தைப் போல் நேரு இராணுவம் நடந்து கொண்டது. இராணுவத்திடமிருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருந்து வந்தாலும், ஹுசூர்நகர் தாலுகாவிலுள்ள ஜன்னபுது கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதிய விவசாயி நிலப்பங்கீடு சமயத்தில், தனக்குக் கிடைத்த நிலத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார். கொடுமைக்கார இராணுவத்தினர் அந்த வயதானவரை பிடித்து எறும்புப் புற்றுக்கு இழுத்துச் சென்று புற்றுக்களின் மீது தண்ணீரைத் தெளித்துவிட்டனர். அவர் மீதும் தண்ணீரைத் தெளித்து சர்க்கரையைப் பூசிவிட்டனர். எறும்புப் புற்றுக்களின் மீது படுக்க வைக்கப்பட்டு நிலத்துடன் உறுதியாகக் கட்டப்பட்டு எறும்புகள் தின்பதற்காக அவரை அங்கே விட்டுவிட்டுச் சென்றனர். இந்த நிலையில் அவர்மூன்று நாட்களுக்கு வைக்கப்பட்டு இருந்தார். சுற்றியிருந்த கிராமத்து மக்களை இந்த இடத்திற்கு வலுக்கட்டாயமாக வரச் செய்து இந்தக் கோரமான நிகழ்ச்சியைப் பார்க்கச் செய்தனர். இந்த வயதான விவசாயி, எறும்புகளாலும், பலவகையான பறவைகளாலும் முழுவதுமாக உண்ணப்பட்டு இறந்தார்.
இந்த அட்டூழியமான செயல் எங்கு நடந்தது? ஹிட்லருடைய ஜெர்மனியிலா? அல்லது முசோலியினுடைய இத்தாலியிலா? அல்லது தெற்கு வியட்நாமிலா? இல்லை! சோவியத் திரிபுவாதிகளால் "ஜனநாயகவாதி'', "சோசலிசவாதி'' என்றெல்லாம் புகழப்பட்ட நேரு ஆட்சியின் கீழ்தான் இது நடந்தது.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகள் மிக வீரத்துடன் போரிட்டனர்; கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை அவர்கள் போராடினர்; போரிட்டவாறே அவர்கள் இறந்தனர். மிக மோசமான சித்திரவதைக்குட்பட்டாலும் அவர்கள் சரணடையவில்லை. ஒரு இரகசியத்தைக்கூட அவர்கள் சொல்ல மறுத்தனர்; இயக்கத்தைக் காப்பதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.
தோழர் இரல்லி மல்லய்யா, சமவெளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது இராணுவத்திடம் பிடிபட்டார். கட்சியின் இரகசியங்களை சொல்ல வேண்டி இராணுவத்தினரால் அவர் மிகவும் கொடுமையான முறையில் கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு எருமை மாட்டு வண்டியுடன் கட்டப்பட்டு கற்களின் மீது இழுத்துச் செல்லப்பட்டார். அவர் உடம்பிலிருந்த தோல் முழுவதும் உரிந்தது. ஆனாலும் அவர் சிறிதும் வளைந்து தரவில்லை. அவர் எஃகு மனத்தைக் கொண்டவர். இராணுவத்தினரால் அவரிடமிருந்து ஒரு இரகசியத்தைக் கூட அறிய முடியவில்லை. கத்தியினால் ஒரே ஒரு வீச்சு; அவர் கை துண்டாக்கப்பட்டது. அவர் இரகசியத்தைக் கூற மறுத்துவிட்டார். அவருடைய மற்றொரு கையும் துண்டாக்கப்பட்டது. இருந்தும் அவர் இரகசியங்களைச் சொல்ல மறுத்துவிட்டார். ஒரு கால் வெட்டப்பட்டது. ஆனால் அவர் இரகசியங்களை சொல்லிவிடவில்லை. மற்றொரு காலும் வெட்டப்பட்டது. ஆனால் ஒன்றைக்கூட அவர் சொல்லவேயில்லை. இறுதியில் அவர் இறந்துவிட்டார். இந்த மக்கள் தலைவனின் இரத்தத்தால் செங்கொடி மேலும் சிவப்பைப் பெற்றது. கம்யூனிஸ்டு தலைமுறைக்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.