யூனியன் இராணுவம் நுழைந்தவுடன், நிஜாம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒப்புக்காகக் கலந்து கொண்ட பணக்கார விவசாயிகளும் சிறிய நிலப்பிரபுக்களும் இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டனர். தெலுங்கானாவை காங்கிரசு அரசாங்கம் விடுவித்து விட்டது என்று கூறி மக்களை ஏமாற்ற ஆரம்பித்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர் சில தலைவர்கள் மக்கள் துரோகியாக மாறிவிட்டனர்.

 

இதையொட்டி திரிபுவாத சரணாகதி மனப்போக்கு கட்சிக்குள்ளேயே தலைதூக்கியது. போராட்டத்தை நிறுத்துமாறு அவர்கள் கோரினர். அவர்கள் பின்வருமாறு விவரித்தனர்: "நிஜாம் எதிர்ப்பு உணர்வுகளை மக்கள் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் காங்கிரசு எதிர்ப்பு உணர்வுகளைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் காங்கிரசை எதிர்க்கவில்லை. அதனால் அவர்கள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் காங்கிரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டத்தை எதிர்க்கின்றனர். சட்டத்திற்குட்பட்ட கிளர்ச்சிகளின்மூலம் சலுகைகளை அடைய விரும்புகின்றனர். நிலப்பங்கீட்டைப் பற்றி கட்சி மிகைப்படுத்திக் கூறுகின்றது. குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களும், நிலப்பிரபுக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே விநியோகிக்கப்பட்டுள்ளன. உபரி நிலங்கள் (Surplus Lands)  விநியோகிக்கப்பட்டதைப் பற்றிய அறிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் நிலப்பிரச்சினை என்பது இனி இல்லை. நிலங்களைத் தற்காத்தல் என்பது பற்றிய பிரச்சினை எழவில்லை.''


— இதுவே ரவிநாராயண ரெட்டி மற்றும் அவரைப் போன்றவர்களுடைய பேச்சின் சாரம். இங்கு நாம் ஒரு விசயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். போங்கீர் பகுதியில் ஜமீன்தார் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற போதிலும், அப்போது நிலப்பங்கீடு அளவிற்கு இயக்கம் வளரவில்லை. மொத்தத்தில் ரவிநாராயண ரெட்டி போன்றவர்கள், யூனியன் இராணுவத்திடம் சரணடைந்த பணக்கார விவசாயிகள் மற்றும் சிறிய நிலப்பிரபுக்கள் ஆகியோரின் கருத்துக்களையே ஆதரித்துப் பேசினர்.


ஆனால் மக்களுடைய கருத்து முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது. முக்கியமாக சுரண்டப்பட்ட மக்கள் பிரிவினர் சரணடையத் தயாராக இருக்கவில்லை. கிராமங்களிலிருந்து ஓடிச் சென்ற மக்களின் எதிரிகள், யூனியன் இராணுவத்துடன் கிராமங்களுக்குத் திரும்பியதை தங்கள் கண்களாலேயே பார்த்துவிட்டனர். அதனால் யூனியன் இராணுவத்தின் குணத்தைச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் சரணடைய மறுத்தனர். ஆயுதங்களை ஒப்படைக்க ÷வண்டõமென்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்தச் சமயத்தில் "ஓ, கிஸான்! சமரசம் செய்து கொள்ளாதே, பூனைக்கும் எலிக்கும் இடையிலான சமரசமே இது'' என்ற பாடல் மக்களிடையில் மிகவும் புகழ் பெற்றதாயிருந்தது. இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிராமமும் இந்தப் பாட்டைப் பாடியது. போராட்டத்தைத் தொடருமாறு மக்களைக் கோரியது. இயக்கத்தின் வெற்றிகளைத் தற்காத்துக் கொள்ள மக்கள் தயாராயினர். இந்த நிலைமைகள் எல்லாவற்றையும் பரிசீலித்த பின்னர், கட்சியின் மாகாணக் கமிட்டி போராட்டத்தைத் தொடர முடிவு செய்தது.