மக்கள் எதிரிகளுக்கு, இராணுவ அரசாங்கம் பாதுகாப்பு அளித்தது. இதற்கு முன்னர் ஓடிப்போன ஜமீன்தாரர்கள், ஜாகீர்தாரர்கள், தேஷ்முக்குகள் ஆகியோர் யூனியன் இராணுவத்துடன் கிராமங்களுக்கு திரும்பி வந்து, தங்களை நிலைநாட்டிக் கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரசு குண்டர்கள் நின்றனர். யூனியன் இராணுவம் பல இடங்களில் பல பாசறைகளை நிறுவியது. ஒவ்வொரு முகாமிலும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் இருத்தப்பட்டனர். இந்த முகாம்களின் அருகில் காங்கிரசு தொண்டர்கள் தங்களுடைய அலுவலகங்களைத் திறந்தனர். அவர்களுடைய கொடியானமூவர்ணக் காங்கிரசு கொடி பறக்கவிடப்பட்டது.
காங்கிரசு தொண்டர்களும், நிலப்பிரபுக்களும், மக்களிடையில் ஏமாற்றுமுகமாக ஒன்றைப் பரப்பினர். "நமது எதிரி நவாப்பின் அரசே! இப்பொழுது அவன் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டான். அதனால் நீங்கள் பங்கிட்டுக் கொண்ட நிலங்களையும், கால்நடைகளையும் அதன் சொந்தக்காரர்களுக்குத் திருப்பித் தந்துவிடுங்கள். பின்னர் காங்கிரசே நிலப்பிரபுக்களுக்குரிய நிலங்களைப் பிரித்துத் தரும். கம்யூனிஸ்டுகளை நம்பாதீர்கள். அவர்கள் ரசியாவின் ஏஜெண்டுகள்!'' இதுவே காங்கிரசு தொண்டர்களும், நிலப்பிரபுக்களும் பரப்பியது. அவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். கவர்னர் ஜெனரல் ஜெ.என். சௌத்திரி "கம்யூனிஸ்டுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் சரணடையாவிட்டால் அவர்களை அழிப்பேன்'' என்று பகிரங்கமாக ஹைதராபாத்தில் சொன்னான்.
இத்தகைய பிரச்சாரத்தால் மக்களை ஒருபுறத்தில் ஏமாற்றிக் கொண்டு, மறுபுறத்தில் இராணுவம், காங்கிரசு தொண்டர்களின் உதவியுடன் கட்சி ஊழியர்களையும் ஆந்திர மகாசபை ஊழியர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்தது. அவர்கள் சந்தேகப்படும் ஒவ்வொருவரையும் பிடித்து சித்திரவதை செய்தனர். கிராப்புத் தலையுடையவர்கள் ஒவ்வொருவரும், வெள்ளைச் சட்டை அணிந்த ஒவ்வொருவரும் கம்யூனிஸ்டு என்று சந்தேகிக்கப்பட்டு, கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டனர்.
பங்கிடப்பட்ட நிலங்களை மக்களிடமே விட்டுவிட வேண்டுமென்றும், கிராம ராஜ்ஜியம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும் கட்சி கோரியது. ஓர் உடன்படிக்கை செய்யவேண்டும் என்றே இந்தக் கருத்துகளை கட்சி கூறியது. ஆனால் இந்த நியாயமான கருத்துகள் கூட அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டன.
யூனியன் இராணுவம் மக்களையும் அவர்களுடைய இயக்கத்தையும் தாக்குவதற்குத் தயார் செய்தது. மக்கள் பிரச்சினைகளில் ஒன்று கூட தீர்க்கப்படவில்லை. ஆனால் மக்களால் எதிர்த்தாக்கு தலை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. அதனால் மக்களின் எல்லாப் படைகளும் சமதளத்திலிருந்து காட்டுப் பகுதிகளுக்குப் பின்வாங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. முக்கியமாக மனுகோட்டா, பத்ராசலம், நல்லமலா ஆகிய பகுதிகளிலுள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது. மக்களுடைய ஆலோசனையைக் கேட்ட பின்னரே இம் முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கட்சி விரும்பியது. ஆனால் படைகள் உடனேயே காட்டுப்பகுதிகளுக்குள் செல்லவில்லை. இந்தப் படைகள் கிராமங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருந்தன. இவ்வாறாக மிக முக்கியமான நேரத்தையிழந்தது. இதற்குள்ளாக யூனியன் இராணுவம், மக்கள் வீரர்கள் பலரை பிடித்துக் கொன்றது. மிகச் சீக்கிரத்திலேயே இயக்கம் பலத்த இழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.