06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

நம்மொழி சஞ்சிகையில் வெளியாகிய பேட்டி

கனடா சென்ற போது பி.இரயாகரனிடம் எடுக்கப்பட்ட பேட்டி, நம்மொழி சஞ்சிகையில் வெளியாகியது.

 

 

கேள்வி 1: ((நம்மொழி ஆசிரியர் உமா.பாஸ்கரன்)

(பதில் : பி.இராயகரன்)

 

உங்களைப் பற்றி....

என்னைப் பற்றி விபரமான பதில் அவசியமற்றது. குறிப்பாக தமிழ் தேசியம் என்பதே புலிகள் என அனைத்தையும் குறுக்கி அந்த எல்லைக்குள் முடக்கிய போது, புலியெதிர்ப்பே முற்போக்கானது என்ற போக்கும் உருவானது. இந்த நிலையில் நாம் இந்த இரண்டு போக்கையும் எதிர்த்து தனித்துவமாக தனித்து போராடியவர்கள். இந்த அடிப்படையில் சில நூறு கட்டுரைகளை எழுதியுள்ளேன். மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் வரை பல நூறு கட்டுரைகளை எழுதியவன். பல நூல்களையும் வெளியிட்டுள்ளேன். இன்று றறற.வயஅடைஉசைஉடந.நெவ என்ற இணையத்தையும் நடத்துகின்றோம். இது புலியெதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரண்டுக்கும் எதிராக, மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னிலைப்படுத்தி இயங்குகின்றது. தமிழ் மக்களுக்கு ஜனநாயகமும் தேவை, தேசியமும் தேவை. இரண்டுக்குமாக நாம் போராடுகின்றோம்.

 

கேள்வி 2:

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் நிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வட அமெரிக்க, அய்ரோப்பிய நிலங்களில் வாழும் தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரம், அரசியல், தாயகம், பெண் விடுதலை என்ற சொற்பதங்களின் பிரயோகம் பற்றி உங்கள் பார்வை?

 

இது தொடர்பாக பேசுவோர் பலரும் தத்தம் இருப்பு சார்ந்து, வாழ்வு சார்ந்து பேசுகின்றனர். இது போன்று புலிகள் மற்றும் புலிகள் அல்லாத தளத்தில், இவை பற்றி தமது குறுகிய அரசியல் நோக்கில் இவர்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். மக்கள் நலன் நோக்கில் இருந்து இவை மிகக் கணிசமாகவே பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இதுபற்றிய புரிதல் இன்றி பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இவை ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை. மக்களின் மொத்த விடுதலையின்றி, அதற்கான முயற்சியின்றி இந்த சொற்கள் படுபிற்போக்கான மோசமான அரசியல் வடிவில் தான் உயிர் வாழ்கின்றது.

 

கேள்வி 3:

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் பரப்பில் காணப்படும் அரசியல் தலைமைகளின் போக்கும், அமைப்புகளின் உட்கட்டமைப்புகளும் செயற்பாடுகளும் தான் சகோதர அமைப்புகள் மீதான கொலைகளுக்கும் தடைகளுக்கும் காரணமாக இருக்கிறதென்பது சரியாகுமா? இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 

இல்லை. இந்தக் குழுக்களின் அரசியல் தான் காரணமாகும். தலைமை என்பது காரணமல்ல. எந்த அரசியலுக்கு இவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பதே தலைமை பற்றிய பிரச்சனையாகும். யாரும் கொல்ல வேண்டும் என்று பிறப்பதில்லை, தலைமை தாங்குவதுமில்லை. மாறாக அவர்கள் கொண்டுள்ள அரசியல், அது சார்ந்த வர்க்க நிலையைத் தக்கவைக்க கொலைகள் அவசியமாகின்றது. சர்வாதிகார பாசிச கட்டமைப்புகள் உருவாகின்றது. இதன் மூலம் குறித்த தலைமை அதிகாரத்தை தனதாக்குகின்றது. இன்றைய குறித்த தலைமைக்கு பதில், இதே அரசியல் கொண்ட எந்த மாற்றுத் தலைமையும் இந்தப் பண்பையே கொண்டிருக்கும். மாற்றம் எதுவும் இருக்காது.

 

கேள்வி 4:

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் அதற்கு எதிராக மாற்றுக்கருத்து, மாற்று அமைப்பென இரு வகை போக்கினை இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழ் அரசியல் பரப்பிலும், அதன் தொடர்ச்சியான புலம்பெயர் நிலங்களிலும் காணப்படுகிறது. இச்சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது ஒன்றையொன்று சார்ந்திருப்பதாகவும், ஒன்றின் வாழ்வில் மற்றதின் வாழ்வும் தங்கியிருப்பதாக உணர்கிறேன். இது பற்றி உங்கள் பார்வை?

 

'விடுதலைப்புலிகள் அமைப்பும் அதற்கு எதிராக மாற்றுக்கருத்து, மாற்று அமைப்பென இரு வகை போக்கினை" என்பது தவறானது. மாற்றுக் கருத்து என்பது என்ன? புலியை எதிர்ப்பது மாற்றுக் கருத்தா? இல்லை. மாற்றுக் கருத்து என்பது, புலியைப் போல் மற்றொரு தலைமை அதாவது அதே அரசியல் என்ற இன்றைய பொது கண்ணோட்டம் அடிப்படையில் தவறானது. மாற்றுக் கருத்து என்பது மக்கள் தமது சொந்த வாழ்வு சார்ந்த சமூக பொருளாதார நலன்களைப் பற்றி பேசுவதாகும். இவைகளை மாற்றுக் கருத்தாக கொண்டு யாரும் இலங்கையில் பேசுவது கிடையாது.

 

புலிகளின் கொள்கைக்கு மாறாக புலி அல்லாத புலியெதிர்ப்பு கும்பல் மாற்றாக என்ன அரசியல் கொள்கையை வைத்துள்ளனர்?. சரி புலிகளை மறுக்கும் இவர்கள், மக்கள் நலன் கொள்கை என எதைக் கொண்டுள்ளனர்? ஒரே அரசியல் கொள்கை. மக்கள் பற்றி மாற்றமற்ற ஒரே அரசியல் சிந்தனை முறை.

 

ஆனால் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதில் இவர்களின் எதிர்நிலைப்பாடு உள்ளது. புலிகளின் மக்கள் விரோத நடத்தையை அரசியலில் இருந்து பிரித்து சம்பவமாக புலியெதிர்ப்பு அணி விபரிப்பதும், அதேபோல் புலி எதிர்ப்பின் அரசு சார்பு மக்கள் விரோத நிலையை சம்பவமாக அரசியல் இருந்து பிரிந்து புலி கூறுவதன் மூலமும், இரண்டு தரப்பும் தம்மை எதிர் நிலையில் ஒரே அரசியலுடன் தம்மை தக்கவைக்கின்றனர்.

 

கேள்வி 5:

இலங்கையின் வடக்கு கிழக்குத்தமிழ் அரசியல் பரப்பில் பிரதேசவாதம் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. இது ஆயுதப்போராட்ட அமைப்புகளிடம் மட்டுமல்ல மிதவாத அமைப்புகளிடமும் காணப்பட்டிருக்கிறது. பிரதேசவாதத்தின் தாற்பரியமென்ன?

 

பிரதேசவாதம் என்பது இனவாதத்தை போன்ற ஒன்று. அதாவது எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறையைப் போன்று, மக்களை பிளந்து அதில் குளிர் காயும் ஒரு கும்பலின் குறுகிய அரசியலாகும். சமூகங்களைப் பிளந்து மக்களை மோதவிட்டு, சிலர் தமது சொந்த வர்க்க பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் அரசியல் உள்ளடக்கமாகும்.

 

குறிப்பாக ஆதிக்கம் பெற்ற தமிழரை எடுத்தால் யாழ் மேலாதிக்கம் பலவிதமான பிரதேசவாத உணர்வைக் கொண்டது. இது கிழக்கு மக்களை மட்டும் பிரித்து விடவில்லை. தீவான், வன்னியன் போன்ற பல வடிவத்தில் கூட அது உள்ளடங்கியே உள்ளது. இதுவே குறிப்பாக சாதிய வடிவிலும், குறுகிய இனவாத நோக்கிலும் வௌவேறு வடிவிலும் உள்ளது. உண்மையில் பார்த்தால் இந்த பிரதேசவாதம், யாழ் மேலாதிக்க சாதிகளின் உயர் வர்க்கங்களின் மையமான பொருளாதார நலன்களுடன் பின்னிப்பிணைந்தது. தமிழ் தேசியப் போராட்டம் அப்படித் தான் உருவானது. அது சகலவிதமான பிரதேசவாத உணர்வையும் தக்கவைத்தபடி, யாழ் உயர்சாதிய மேட்டுக்குடிகளின் வாக்க நலன்களுடன் ஒருங்கிணைந்த வகையில் காணப்படுகின்றது.

 

கேள்வி 6:

இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழ் அரசியல் பரப்பில் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமெனக் உரத்துக்குரல் கொடுத்துவரும் நேரத்தில்... இன்று கிழக்கில் இருந்து தனியான நிர்வாகமாக கிழக்கு இருக்க வேண்டுமென கிழக்குத்தமிழ்த்தரப்பிலும் முஸ்லிம் தரப்பிலும் இருந்தும் குரல்கள் எழத்தொடங்கியிருக்கின்றன. இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

 

ஒரு தேசிய இனம் மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரத்தை கோருவது சரியானது. அது தன்னிடத்தில் உள்ள சகல சமூக ஒடுக்குமுறைகளையும் களையத் தவறுகின்ற போது, பிளவுகளும் பூசல்களும் சதா உருவாகின்றது. இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இதை ஒரு மூட்டையில் கட்டிவைத்து விடமுடியாது. மாறாக அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைவதன் மூலம், ஒருமித்த ஒரு சமூகமாக மனிதனாக மாறுவது அவசியமானது.

 

இதை நாம் நிறைவு செய்ய தவறும் போது, ஆதிக்கம் பெற்ற அரசியல் தலைமைகள் அந்த சமூக முரண்பாட்டை பகைமுரண்பாடாக கையாள்வது நிகழ்கின்றது. இதற்கு எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட குரல்களும் நியாயமானவை. அதற்காக நாமும் குரல் கொடுக்கின்றோம். ஆனால் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி இன்னுமொரு பிற்போக்கு கும்பல், அல்லது அரசியல் அந்த மக்களை ஏமாற்றுவதையும் நாம் கடுமையாக எதிர்த்து போராடுகின்றோம்.

 

கேள்வி 7:

இந்தியாவின் உதவியும் ஒத்துழைப்புமின்றி தனிநாடொன்றினைப் பெற்றிட முடியாதென்பதை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும், அதன் தலைமையும் உணர்ந்திருப்பதாக அண்மைய அவ்வமைப்பின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பேட்டி உணர்த்துவதாக நான் கருதுகிறேன். அது பற்றி உங்கள் கருத்து?

 

ஒரு தேசிய இனம் மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரத்தை கோருவது சரியானது. அது தன்னிடத்தில் உள்ள சகல சமூக ஒடுக்குமுறைகளையும் களையத் தவறுகின்ற போது, பிளவுகளும் பூசல்களும் சதா உருவாகின்றது. இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இதை ஒரு மூட்டையில் கட்டிவைத்து விடமுடியாது. மாறாக அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைவதன் மூலம், ஒருமித்த ஒரு சமூகமாக மனிதனாக மாறுவது அவசியமானது.

 

இதை நாம் நிறைவு செய்ய தவறும் போது, ஆதிக்கம் பெற்ற அரசியல் தலைமைகள் அந்த சமூக முரண்பாட்டை பகைமுரண்பாடாக கையாள்வது நிகழ்கின்றது. இதற்கு எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட குரல்களும் நியாயமானவை. அதற்காக நாமும் குரல் கொடுக்கின்றோம். ஆனால் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி இன்னுமொரு பிற்போக்கு கும்பல், அல்லது அரசியல் அந்த மக்களை ஏமாற்றுவதையும் நாம் கடுமையாக எதிர்த்து போராடுகின்றோம்.

 

இதை நிராகரிக்கும் புலிகளும் மற்றக் கும்பல்களும் அடிக்கடி அலட்டுகின்றனர். இந்தியா பற்றி பாலசிங்கத்தின் நிலைப்பாடு, புலிகளின் சுயநல குறுகிய அரசில் நலனை அடிப்படையாக கொண்ட பினாற்றலாகும்

 

கேள்வி 8:

இலங்கையின் வடக்கு கிழக்கு நிலங்களில் 60களின் தொடக்கத்தில் சமூக மாற்றத்தினை உண்டாக்கிய கம்ய+னிச சித்தாந்தம் பின்னான காலப்பகுதியான ஆயுதப்போராட்டச் சூழலில் தோன்றிய அமைப்புகள் பலவற்றில் இருந்தும் பெரும் எழுச்சியினையைப் பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

 

வர்க்கப் போராட்டம் பற்றிய சரியான அரசியலும், அதற்கான சரியான அரசியல் தலைமையும் உருவாகவில்லை. இயக்கங்களுக்குள் இருந்து உருவான சிந்தனையாளர்கள், மக்கள் நலன் விரும்பிகள் அதன் கருவடிவிலேயே முதலில் கொல்லப்பட்டனர். இப்படி குறைந்தபட்சம் 500 பேர் இனம் காணப்பட்டு கொல்லப்பட்டனர். இப்படி உருவானவர்கள் தான் முதலில் உள்ளியக்க, வெளியக்க படுகொலையில் பலியானவர்கள். உருவான ஒரு சில தனித்துவமான இயக்கங்களும் தவறான அரசியல் வழியால் அவர்கள் காணமல் போனதுடன்., பலர் கொல்லப்பட்டனர்.

 

கேள்வி 9:

இன்றைய இலங்கைப்பிரச்சினைக்கான தீர்வாக எம்மாதிரியான ஒர் தீர்வை நீங்கள் முன்மொழிய விரும்புவீர்கள்?

 

இக்கேள்வியைக் கேட்டதும் இக்கேள்வி இடம் மாறி கேட்டதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா? வேண்டாம்... அப்படி எண்ணாதீர்கள். ஒவ்வொருவரும் தங்கள் மனதில்... தங்களால் சரியெனக் கருதும் தீர்வொன்றினை முன் வைக்க வர வேண்டும். அப்பொழுதுதான் எல்லோருடைய கருத்துக்களையும் நம்முடைய அரசியல்வாதிகள் அறிவார்கள். கட்டாயமாக அறிய வேண்டும். தீர்வென்பது எமக்கானது. ?

 

தீர்வு என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அது எந்தத் தீர்வாகவும் இருக்கலாம். தீர்வின் ஒவ்வொரு கூறும் மக்களின் நலனை முன்னிறுத்த வேண்டும் இதை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை தொடங்கிய போது எனது நூல் ஒன்றில் அதை முன்வைத்தேன். அதை பார்வைக்கு தருகின்றேன் அல்லது இந்த குறித்த இணையத்தளத்தில் படிக்கமுடியும்.

 

'இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழகுறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

 

"ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்கு சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ்

 

தமிழ் மக்களின் தம்மை ஒரு தேசியமாக இனம் கண்டு போராடுமளவுக்கு, சிங்கள பெரும் தேசிய இனவாதிகளின் இனவொடுக்குமுறை காணப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் தொடங்கிய இனவாத ஒடுக்குமுறை, சுதந்திரத்தின் பின் வேகம் பெற்றது. இது தமிழ் இனத்துக்கு எதிராக மட்டுமல்ல, மற்றைய சிறுபான்மை இனங்கள் மேலும் கையாளப்பட்டது. இந்த பெருந்தேசிய இன ஒடுக்குமுறைக்கு தமிழ் இனவாதிகளும் காலத்துக்கு காலம் ஒத்துழைத்து, இனவாதத்தை புரையோட வைத்தனர். இந்த இனவாத அரசின் கட்டமைப்புக்கு காலத்துக்கு காலம் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் பல வழிகளில் தூணாகினர். இது இன்று வரை இது ஒரு அரசியலாகவுள்ளது.

 

இந்த நிலையில் இலங்கையில் இனவாதம் வர்க்கப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் ஒரு அரசியலாக வளர்ச்சி பெற்ற போது, அதை இடதுசாரிகள் எதிர்த்து தொடர்ச்சியான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. பராளுமன்ற எல்லைக்குள் ஏது பயன்பட்டதோ அதற்கு அதை எல்லைப்படுத்தினர். அத்துடன் தேசியத்தை மார்க்சிய போராட்டத்தில் இருந்து அன்னியமான ஒரு விடையமாக கருதி கைவிட்டனர். மார்க்சியத்தை ஒரு வர்க்க போராட்ட கோட்பாடாக உள்வாங்கவில்லை. இந்த நிலையில் பிற்போக்கு வலது பிரிவுகள், இந்த தேசியத்துக்கு தலைமை தாங்கும் அவலம் நிகழ்ந்தது. இலங்கையில் தேசியத்தை அடிப்படையாக கொண்ட இரண்டு வலது பிரிவுகள் தமக்குள் மோதிக் கொள்வதன் மூலம், மக்களை பகடைக் காய்களாக்கினர். இந்த தேசியம் மக்களின் அடிப்படை தேவையை அடிப்படையாக கொண்டு அவர்களின் நலன்களை முன்வைக்கவில்லை. மாறாக ஒரு சில பிரிவுகளின் குறுகிய நலன்களையும், யுத்தத்தின் குறிப்பான பிரச்சனைக்குள் தீர்வுகளை முன்வைத்து, அரசியல் மலட்டுத்தனத்தை மேலும் ஆழமாக்குவது இன்றுவரை தொடருகின்றது. இதை அனைத்து தரப்பும் செய்வதில் பொதுவான பண்பைப் பேணுகின்றனர். அதாவது வலது அரசியலுக்கு வாலாக நீடிப்பதையும், அதற்கு விளக்கம் கொடுப்பவர்களாகவும், கொள்கை வகுப்பாளராகவும் மாறிவிடுகின்றனர். இலங்கையில் எல்லா தேசிய இனங்களும் ஒன்றாக வாழ்ந்தாலும் சரி, பிரிந்து வாழ்ந்தாலும் சரி, எப்போதும் அடிப்படையான அரசியல் கோசம் எப்போதும் ஒன்றே. இதை நாம் துல்லியமாகவும் விரிவாகவும் பார்ப்போம்.

 

உடனடியாக யுத்தத்தை நிறுத்து! அமைதியை நிரந்தரமாக்கு! தேசிய பொருளாதாரம் ஒங்குக! மறு காலனியாதிக்க முயற்சி ஒழிக! மக்களின் அதிகாரம் ஒங்குக!

 

● தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தேசிய இனங்கள் தாம் வாழும் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையாளும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.

 

● சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவதையும், ஜக்கியப்பட்டு வாழ்வதையும் அடிப்படையாக கொண்டது என்பதை பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்.

 

● சுயநிர்ணயம் என்பது தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

● தேசியத்துக்கு எதிரான சகல அன்னிய பொருளாதாரத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும். அதாவது உலகமயமாதலை திட்டவட்டமாக எதிர்த்து சுயநிர்ணயத்தை வரையறுக்கவேண்டும்.

 

● சகல வெளிநாட்டு மூலதனங்களையும், சொத்துக்களையும் நட்டஈடு இன்றி தேசிய மயமாக்கி தேசிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்.

 

● மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தேசிய உற்பத்திகளை இனம் கண்டு அதை வளர்த்தெடுக்கவேண்டும்.

 

●ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பணப்பயிர் உற்பத்தி முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.

 

● தேசிய வளங்களை சரியாக அடையாளம் காணவும், அவற்றின் சமூகப் பெறுமானத்தை உயர்த்தி வளர்தெடுக்க வேண்டும்.

 

● தேசியத்தை கூறுபோட்டு ஏலம் போட்டு விற்க கோரும் சகல வெளிநாட்டுக் கடன்களையும், உள்நாட்டு தரகு கடன்களையும் அதற்கான வட்டிகள் கொடுப்பதையும் உடன் நிறுத்தவேண்டும். அதை தேசிய பொருளாதார வளர்ச்சிக்காக திருப்பிவிடவேண்டும்.

 

● சிறுபான்மை தேசிய இனங்களான மலையக, முஸ்லீம் மக்களின் சுயாட்சி பிரதேசங்களை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

 

● சிறுபான்மை இனங்களின் ஜனநாயக பூர்வமான வளர்ச்சியை உறுதி செய்யும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.

 

● சிறுபான்மை இனங்கள் மேலான கடந்தகால, நிகழ்கால இனவாத ஒடுக்கமுறையை தெளிவாக அடையாளம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.

 

● சிறுபான்மை இனங்களும் பெரும்பான்மை இனங்களும் பரஸ்பரம் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து தேசியத்தை உயர்த்தி ஐக்கியத்தை வளர்க்க வேண்டும்.

 

● சகல இனப் பிளவு நடவடிக்கையையும் எதிர்த்து போராடவும், ஐக்கியத்தை வளர்ப்பதும் அடிப்படையான தேசிய கடமையாக ஏற்க வேண்டும்.

 

● மலையக மக்களின் பிரஜாவுரிமை வழங்கப்படுவதுடன், இது வரலாற்று ரீதியாக மனித விரோத குற்றத்தை இனம் காணவேண்டும்.

 

● இனவாத ஒடுக்குமுறைக்கு வௌவேறு பிரிவினர் சிறுபான்மை இனத்தில் தொடங்கி பெரும்பான்மை இனம் வரை எந்த வகையில் இணைந்தும் தனித்தும் நடத்தினர் என்பதை, தெளிவாக அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.

 

● பெரும்பான்மை இன மக்கள் மேல் நடத்திய குறுந்தேசிய இனத் தாக்குதலை இனம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்

 

● திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்து உருவான குடியேற்றங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகள் சிறுபான்மை இனத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.

 

● இங்கு ஆயுதமேந்தியவர்கள் அந்த இடத்தை விட்ட வெளியேற்றப்பட வேண்டும்.

 

● அதே நேரம் அந்த பகுதிகளில் வாழும் பெரும்பான்மை இன மக்களின் பாதுகாப்புக்கு வாழ்க்கைக்கு சிறுபான்மை இனங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

 

● இனயுத்தத்தை நிறுத்தி மக்களின் வாழ்வை மேம்படுத்துவது அவசியமானது.

 

● மூன்றாவது நாட்டின் மத்திஸ்தம் என்ற போர்வையில் நடக்கும், ஏகாதிபத்திய தலையீட்டை உடன் நிறுத்த வேண்டும்.

 

● சகல வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும், எதிர் காலத்தில் இதை கண்காணிக்க தலையிட முயலும் அமைதிப்படை முயற்சியும், உடன் தடுத்து நிறுத்தி வெளியேற்றப்பட வேண்டும்.

 

● அமைதியையும் சமாதானத்தையும் ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில் இனம் கண்டு, பரஸ்பரம் அங்கீகரித்து ஏற்படுத்த வேண்டும். இங்கு ஜனநாயக கோரிக்கை என்பது எந்த இனத்துக்கும் விசேட அதிக சலுகைகளை வழங்குவதை மறுக்கின்றது.

 

● சகல இனவாத படைகளையும் கலைத்து, மக்களை ஆயுதபாணியாக்க வேண்டும்.

 

● சகல நிர்வாக அலகுகளும் கீழ் இருந்து மேல் நோக்கி விரிவுபடுத்த வேண்டும்.

 

● மக்களை தமது சொந்த பிரதேசத்தில் மீள குடியேற்ற வேண்டும்.

 

● பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

 

● உலகளாவில் நாடு திரும்ப விரும்பும் அரசியல் மற்றும் பொருளாதார அகதிகளுக்கான அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்திய அகதிகள் விடையத்தில் விசேட கவனம் செலுத்தவேண்டும்.

 

● கடலிலும் நிலத்திலும் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றி மக்களின் சமூக பொருளாதார மீட்சிக்கு முதலுரிமை வழங்க வேண்டும்

 

● திட்டமிட்ட இனவாத அடிப்படையில் கொண்டு வந்த இரட்டை பிரஜாவுரிமை பறிப்பை ரத்து செய்து, இரட்டைப் பிரஜாவுரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதாவது இலங்கை பிரஜாவுரிமையை வைத்திருக்கும் உரிமையை நாடு கடந்தவர்களுக்கு வழங்கவேண்டும்.

 

● நாடு கடந்து வாழ்பவர்களை கட்டாயப்படுத்தி நாடு கடத்துவதற்கு எதிராக போராட வேண்டும்

 

● யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, கல்விச் சீரழிவுகளை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.

 

● குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்த நிலையில் ஆதரவற்று வாழ்கின்றவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையான வசதிகளை வழங்க வேண்டும்.

 

● யுத்தத்தில் அங்கவீனமானவர்களுக்கு விசேடமான அடிப்படையான வாழ்க்கை ஆதாரங்களை உறுதி செய்யவேண்டும்.

 

● அனைத்து அரசியல் கைதிகளையும், சமூக பொருளாதார கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

 

● கடந்த கால அரசியல் படுகொலைகளை வரலாற்று ரீதியாக இனம் காணப்பட்டு அவற்றை சமூக ஆதாரமாக்க வேண்டும்.

 

● தனிச்சலுகை கொண்ட மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயக விரோத சமூகப் பொருளாதார கூறுகளை உடன் தடை செய்யவேண்டும்.

 

● சகல இனவாத, மதவாத, சாதியக் கட்சிகளையும் தடை செய்யவேண்டும்.

 

● இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், கல்வி, கலை இலக்கியங்கள், அமைப்பு வடிவங்கள், மற்றும் பண்பாட்டு கலாச்சார கூறுகள் அனைத்தும் நீக்கப்படவும், தடை செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் வரலாற்று ரீதியாக அடையாளம் காணவேண்டும்.

 

● அரசில் இருந்து மத ஆதிக்கத்தை, மதத் தன்மையை நீக்கவேண்டும். மாறாக மக்களின் தனிப்பட்ட வழிபாட்டு உரிமைக்குள், மக்களின் சமூக பொருளாதார தேவை ப+ர்த்தி செய்வதன் ஊடாக, வழிபாட்டின் சமூக அறியாமையை படிப்படியாக நீக்கவேண்டும்.

 

● சமூகத்தில் இனம் கடந்து புரையோடிப் போயுள்ள சாதிய கொடுமைகளை முற்றாக நீக்கவும், அதற்கெதிரான அனைத்து முயற்சிகளை முற்றாக தடை செய்யவேண்டும்.

 

● அனைத்து சாதிப்படி நிலைகளும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். பிறப்பை முன்னிறுத்திய உழைப்பை வரையறுக்கும் சாதிய கூறுகள் முற்றாக தடை செய்ய வேண்டும்.

 

● சாதிய ரீதியான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாக அடையாளம் காணவும், இதற்கும் இந்து மதத்துக்கும் உள்ள உறவு தெளிவாக வரலாற்று ரீதியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

 

● தீண்டாமையை ஒரு சமூகக் குற்றமாக பிரகடனம் செய்யவேண்டும்.

 

● சமூக அடிமைப் பிராணியாக வாழும் பெண்களின் மேலான ஆணாதிக்க கொடுரங்களில் இருந்து பெண்களை விடுவிக்கவேண்டும். இதற்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

 

● பெண்ணின் மீதான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாகவே அடையாளம் காணவேண்டும்.

 

● மனிதனை மனிதன் சுரண்டும் ஜனநாயக விரோதத்தை ஒழித்துக்கட்டவேண்டும். இதை மீட்டு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

 

● மக்களை பிளவுபடுத்தும் இனம், பால், சாதி.. சார்ந்து நடத்தும் பிளவு நடவடிக்கைகளான அரசியல், அமைப்பு வடிவங்கள், கல்வி முறைகள், பொருளாதார கூறுகள், கலை இலக்கிய முயற்சிகள், பண்பாட்டு கலாச்சார கூறுகள், மரபுகள் அனைத்தும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் அத்துடன் இதை எதிர்த்து போராட வேண்டும். மக்கள் இயற்கையான உயிரியல் பிராணியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

 

● அனைத்து அரசு சாராத ஏகாதிபத்திய நிதியுதவியில் இயங்கும் நிறுவனங்களையும் (தன்னார்வக் குழுக்களையும்) முற்றாக தடை செய்ய வேண்டும். அத்துடன் இது வெளிநாட்டு நிதியாதாரத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

 

● மக்களின் உழைப்பு, அவர்களின் வாழ்வு, அவர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை உயர்வானதாக மதித்து அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.

 

● சகல வெளிநாட்டு உள்நாட்டு கலாச்சார பண்பாட்டு சீரழிவு தடை செய்யப்பட வேண்டும். மாறாக தேசிய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தேசிய உற்பத்தி மீது வளர்த்தெடுக்க வேண்டும்.

 

● நிலப்பிரபுத்துவ தரகு பண்பாட்டு கலாச்சாரத்தை தடை செய்யவேண்டும். மக்களின் உயர்ந்த சமூக பண்பாட்டு கலாச்சார வாழ்வை மீட்டெடுக்கவேண்டும்

 

● மக்களின் உழைப்பும், வாழ்வும் சார்ந்த பண்பாட்டு கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் அதேநேரம், உலகளாவில் இருந்து இதை வரவேற்க வேண்டும்.

 

● இனவாத இனப்பிளவை அடிப்படையாக கொண்ட தரப்படுத்தல் முறையை எதிர்த்து, பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதியை வழங்கவேண்டும்.

 

● பின்தங்கிய மாவட்டங்களின் (தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் மக்களின்) கல்விக்கான அடிப்படை வசதியை, உயர்த்தவேண்டும்.

 

● இலங்கை தேசிய வளத்துக்கும் அது சார்ந்த உற்பத்திக்கு ஏற்ப கல்வியை முற்றாக மாற்றவும், அதற்கு இசைவான பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை வழங்க வேண்டும்.

 

● உயர் அதிகாரிகளை உருவாக்கவும், உயர் அந்தஸ்துகான கல்விக்கு பதிலாக மக்களின் வாழ்வுடன் இணைந்த, அவர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் கல்வியை வழங்கவேண்டும்.

 

● முன்னேறிய கல்வி அடிப்படையை பெறும் வகையில், பின் தங்கிய மக்கள் கல்வியை பெறும் வகையில், சமுக பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும்.

 

● இலங்கையில் தாய் மொழிக்கு அடுத்ததாக பரஸ்பரம் தமிழ் மற்றும் சிங்களத்தை கட்டாய மொழியாக்க வேண்டும்

 

● பல்கலைக்கழகம் வரை தாய் மொழி கல்வியை அமுல்படுத்தப்பட வேண்டும். ஆங்கில மொழியிலான அடிப்படைக் கல்வியை தடை செய்யப்படவேண்டும்.

 

● கல்வியில் இருந்து மதக் கல்வியை முற்றாக தடை செய்யப்படவேண்டும்.

 

● அனைவருக்கும் பல்கலைகக்கழகம் வரை இலவசக் கல்வியை தாய் மொழியில் வழங்கப்பட வேண்டும்

 

● இன மத அடிப்படையிலான வேலை வாய்ப்புமுறை தடை செய்யப்பட வேண்டும்.

 

● சகல மக்களுக்கும் வேலை வாய்ப்பை தேசிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

● மக்களின் சமூகத் தேவையை முதன்மைப்படுத்தி வேலை வாய்ப்பு உருவாக்கப்படவேண்டும்.

 

● சமூக இழிவாக கருதும் வேலைகளில் சமூக கடமைகளை ஒழித்துக் கட்டவும், சமூக இழிவாகப் பட்ட வேலைகளின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தவேண்டும்.

 

● சிறிலங்கா என்ற இனவாத பெயருக்கு பதில் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடையதாக மாற்றப்பட வேண்டும்

 

● சகல வெளிநாட்டு சார்ந்த இராணுவத்துறை, உளவுத்துறை, சேவைத்துறை, கலை கலாச்சாரத்துறை, பொருளாதாரத் துறை என அனைத்தும் முற்றாக தடை செய்யப்டவேண்டும்.

 

● தேசியத்துக்கு எதிரான தரகு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராக போராடி அந்த வர்க்கத்ததை ஒழிக்க வேண்டும்.

 

● உழைக்கும் மக்களின் தலைமையிலான மக்கள் ஆட்சியை அமைக்க வேண்டும்.

 

● தேசியத்தை அழிக்கும் காட் ஒப்பந்தம் முதல் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் கிழித்தெறிய வேண்டும்.

 

● ஏகாதிபத்தியங்களையும் அதன் பொருளாதார அடிப்படையான உலகமயமயமாதலையும் எதிர்த்து போராடவேண்டும்.

 

● உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை எமது தேசியம் சார்ந்து நிற்கவும், அவர்களின் ஆதரவையும் கோரவேண்டும்.

 

● உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவை தெரிவிக்கவும், அதற்கு ஆதரவாக போராடவும் வேண்டும்.

 

● மறுகாலனித்துவ முயற்சியை எதிர்த்து ஆயுதபாணியாக வேண்டும்.

 

● மக்களின் கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட வேண்டும்

 

● எட்டுமணி நேர உழைப்பு, எட்டுமணி நேர ஒய்வு, எட்டு மணி நேர உறக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். உழையாதவனுக்கு உணவில்லை என்ற சட்டம் அமுல்படுத்த வேண்டும்.

 

● வயோதிபர்கள், அங்கவீனர்கள், குழந்தைகள் சமூக பொறுப்பில் பராமரிக்க வேண்டும்.

 

● அனைவருக்கும் மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

 

● அனைவருக்கும் இருப்பிடம், உணவு, நீர், சுத்தமான காற்று கிடைப்பதை இச் சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

 

● மக்களின் ஒய்வுகள் சமூக வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மக்களின் எழுச்சிக்கான அடிப்படைகளை உறுதி செய்யவேண்டும்.

 

● இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அது சார்ந்து பொருளாதார கட்டமைப்புகளுடன் கூடிய வாழ்வு முறையும் முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.

 

● கற்பு, விதவை, தீண்டாமை போன்ற இழிவுக் கொடுமைக்கான சமூக பண்பாட்டுக் கூறுகளையும், கடமைகளையும் எதிர்த்து அதை முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.

 

● வரைமுறையற்ற நேரடி மற்றும் மறைமுக வரிமுறை நீக்கப்பட்டு நியாயமான சமூக பொருளாதார அடிப்படையில் வரிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும்.

 

மக்களின் அடிப்படைத் தேவையும், அவர்களின் வாழ்க்கையுமே ஒரு தேசத்தின், தேசியத்தின் அடிப்படையான விடையமாகும். மக்களின் வாழ்வைப் பற்றி, அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வையிட்டு அக்கறைப்படாத அனைத்தும், மக்களை சூறையாடுவதுதான். இது சிறுபான்மை பிரிவின் நலன்களுடன் தொடர்புடையதாக, உலகமயமாதல் விரிவாக்கத்துக்கு உட்பட்டதே. இதை யாரும் மறுக்க முடியாது.

 

இடைக்கால தீர்வு, படிப்படியான தீர்வு என்று காட்டும் எல்லா வகையான மோசடியும் மக்களுக்கு எதிரானதே. அதேபோல் ஒரே நாளில் தீர்வும் என்பதும் மோசடியே. உழைக்கும் மக்கள் தமது பிரச்சனையை தாமாகவே தீர்க்கும் ஒரு வரலாற்றுப் பாதையில், பல படிகளைக் கடக்கலாம். ஆனால் அதை நிட்சயமாக உழைக்கும் மக்களின் ஆட்சியாக மட்டுமே இருக்கமுடியும். உழைக்கும் மக்கள் அல்லாத எந்த ஆட்சியும், முன்வைக்கும் படிநிலை தீர்வுகள் எப்போதும் உழைக்கும் மக்கள் மேலான படிமுறை அடக்குமுறைதான். இது எப்போதும் தேசத்தை, தேசியத்தை, தேசிய வளத்தை, இயற்கையை, உழைப்பை, உழைப்பின் வளத்தை, உழைப்புத் திறனை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அழித்து ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு சேவை செய்வதாகவே இருக்கும். இதை நாம் அனுமதிக்க போகின்றோமா! இதை எதிர்த்து நாம் என்ன செய்யப் போகின்றோம்! சரணடைவா! போராட்டமா! நீ நிச்சயமாக இதில் ஒன்றை தெரிவு செய்தாக வேண்டும்.

 

தேசியத்தை பாதுகாப்போம்

ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்!

சர்வதேசியத்தை பாதுகாப்போம்!

உலகமயமாதலை எதிர்ப்போம்!"

 

இது ஒருபுறம். மறுபக்கம் சமாதானம் பேசுபவர்கள் அமைதி பற்றி தமிழ் சிங்கள மக்களுக்கு சதா உபதேசம் செய்பவர்கள், தமது சொந்தத் தீர்வை கட்டாயம் முன்வைக்க வேண்டும். குறிப்பாக அனைத்து அரசியல் கட்சியும் தமது கட்சியின் வேலை திட்டத்தில் இவை தெளிவாக முன்வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இல்லாத அனைவரும் அப்பட்டடான மக்கள் விரோத அரசியல் பொறுக்கியாவர்.

 

நன்றி, நம்மொழிக்காக, அளவை உமா. பாஸ்கரன்


பி.இரயாகரன் - சமர்