அதுநாள்வரை மக்களின் எதிரிகள் தங்கள் சுரண்டல் சாம்ராஜ்ஜியத்தை சுதந்திரமாக நடத்திவர நிஜாமின் ரஜாக்கர் குண்டர் படைகளைச் சார்ந்திருந்தனர். ஆனால் நிஜாம் இராணுவம் இந்திய யூனியனிடம் ஒரு வாரத்திற்குள் சரணடைந்தது. ரஜாக்கர் குண்டர்கள் மக்களிடம் சரணடைந்து ஆயுதங்களை ஒப்படைத்தனர். இந்தச் செயல்களின்மூலமாக மக்களைச் சுரண்டியவர்களுக்கு நடுக்கம் கண்டது. எதிரிகளின் தவறான செயல்களுக்குப் பழிவாங்க எல்லா மக்களும் ஒன்றாகத் திரண்டதைக் கண்ட சுரண்டல்காரர்கள் அச்சம் கொண்டனர். ஒரு பகுதியினர் தங்களுடைய வைக்கோல் போர்களுக்குள் ஒளிந்து கொண்டனர்.


ஆனால் கொடியவர்கள் புரிந்த அந்தக் கொலைகளை மக்கள் மறக்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் எல்லா இடங்களிலும் பல்வேறு நிலப்பிரபுக்களின் வீடுகளைத் தாக்கி முழுமையாக அழித்தனர். அவற்றைப் பரந்தவெளியாக மாற்றினர். அதனிடத்தில் நடைபாதையை அமைத்தனர். இதன்மூலம் காலாங்காலமாக இருந்து வந்த அவர்கள் வெறுப்பு தணிந்தது.


மாபெரும் தியாகி கொமரய்யாவைக் கொலை செய்த பாபுராவ் படேல் (விஷ்ணூ<ர் தேஷ்முக்கின் மகன்) என்பவன் போலீசு உதவியால் சரக்கு ரயில் வண்டியில் ஏறி மக்களின் சீற்றங்களிலிருந்து தப்ப முயன்றான். ஆனால் ஜனகோன் ரயில் நிலையத்தில் மக்கள் அவனைக் கண்டுபிடித்து விட்டனர். அவனைக் கீழே வீழ்த்தினர். அவன் சாகும்வரை அவன் உடலின் மீது ஏறிக் குதித்தனர். ஆனாலும் மக்களின் வெறுப்பு தணியவில்லை. ஒரு வயதான லம்பாடிப் பெண் அவன் முகத்தில்மூத்திரம் பெய்தாள். வழிவழியாக வந்த அடிமை முறையின் பாதிப்புகள், சித்திரவதைகள், கொள்ளையடித்தல், பெண்கள் மீதான பாலியல் வன்முறை ஆகியவற்றால் அவதியுற்ற மக்களின் வெறுப்பே இது. தலைமுறை தலைமுறையாக வந்த வெறுப்புகள் எல்லாம் எதிரிகளின் மீது பழிதீர்க்க வெடித்தன.


மக்கள் புயல்போல் எழுந்து ரஜாக்கர் குண்டர்களை ஆயுதமிழக்கச் செய்தனர். அவர்கள் நிலப்பிரபுக்களின் சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். ஆனால் மக்களின் சீற்றங்களிலிருந்து ரஜாக்கர் குண்டர்களை விடுவிக்க, காங்கிரசு அரசாங்கத்தின் இராணுவம் முன்வந்தது.


மறுபுறத்தில், காங்கிரசின் தொண்டர்களும் நுழைந்தனர். தெலுங்கானா மக்களால் நடத்தப்பட்டு வந்த நிஜாம் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த போதெல்லாம் இந்த "மாபெரும் வீரர்கள்' யூனியன் பகுதிகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்தனர். யூனியன் இராணுவம் நுழைந்தவுடன் இந்த வீரர்களும் தெலுங்கானா பகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் முசுலீம் ஏழைகளுக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய பொருட்களைக் கொள்ளையிட ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கான முசுலீம் ஏழைப் பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டனர். ஆயுதந்தரித்த மக்கள் படைகள் முசுலீம் பெண்களை காங்கிரசு ரஜாக்கர்களிடமிருந்து பாதுகாத்தது. முன்பு நிஜாம் நவாபின் முசுலீம் ரஜாக்கர்கள் இந்து மக்களை கொடுமைப்படுத்திக் கொலை செய்தனர். இப்போது காங்கிரசு ரஜாக்கர்கள் முசுலீம் மக்களை கொடுமைப்படுத்திக் கொலை செய்ய ஆரம்பித்தனர். முன்பு செங்கிஸ்கான், தமர்÷சன் நிஜாம் நவாப்; இப்போது காங்கிரசு ஆட்சியாளர்கள் — இவ்விரு சாராருமே கொலைகாரர்கள்.


நிஜாம் அரசுக்குள் யூனியன் இராணுவம் நுழைந்தவுடன் தெலுங்கானா மக்களின் போராட்டம் ஓர் உயர்ந்த, புதிய கட்டத்தை அடைந்தது. நகர்புற மையங்களில் மக்களின் எதிரிகள் பாதுகாக்கப்பட்டாலும், கிராமங்களில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம் தடையில்லாத தீச்சுவாலைகள் போல் பரவியது. இது தீவிரப்பட்டுக் கொண்டிருந்தது. யூனியன் இராணுவம் வந்து சேருவதற்கு முன்னரே நிலப்பிரபுக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இலட்சக்கணக்கான தானியமூட்டைகள் மக்களிடையே பங்கிடப்பட்டன. அவர்களுடைய ஆயிரக்கணக்கான கால்நடைகள் மக்களால் பறிமுதல் செய்யப்பட்டு பங்கீடு செய்யப்பட்டன. நிஜாம் இராணுவத்தினரும், ரஜாக்கர் குண்டர்களும் பாசறை போட்டு இருந்த இடங்களில் நிலப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தாலும், இப்போது அது செய்யப்பட்டு புதிய கிராமங்களிலும் முழுமையான கிராம இராஜ்ஜியம் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் பல ஆயுதங்களைக் கைப்பற்றினர்.