கிராமத்திலுள்ள மக்கள் எல்லோரும் உறுதியாக நின்றனர். அவர்கள் அடிமைத்தளைகளை உடைத்துப் பலவகையான சுரண்டல்களிலிருந்தும் தங்களை விடுதலை செய்து கொண்டனர். நிலப்பிரபுக்களின் ஆதிக்கமானது முடிவுக்கு வந்தது. கிராம அளவிலான நிஜாம் அரசின் உறுப்புச் சக்திகளின் வடிவங்கள் ஒழிக்கப்பட்டன. ஏறக்குறைய 3000 கிராமங்களில் கிராம ராஜ்ஜியம் நிறுவப்பட்டது.
நிஜாம் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்களுக்கெல்லாம் கிராம ராஜ்ஜியத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. மேல்மட்ட வர்க்கங்களைப் பொருத்தவரையில் போர்க்குணமிக்கவர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்தக் கிராமச் சபைகளில் விவசாயத் தொழிலாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமச் சபையும் 5லிருந்து 11 வரையில் உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. தேவையான தகுதிகளைக் கொண்ட பெண்களும் இந்தச் சபைகளில் அங்கம் வகித்தனர். இந்தக் கிராமச் சபைகள் கிராம மக்களுக்கிடையிலான சச்சரவுகளைத் தீர்த்து வைத்தன.