ரஜாக்கர் குண்டர்கள், போலீசு, இராணுவம் ஆகியவைகளை எதிர்ப்பதற்கு தடி, ஈட்டி, மிளகாய்ப் பொடி ஆகியவை போதுமானதாக இருக்கவில்லை. நவீன ஆயுதங்களின் தேவையை மக்கள் உணர்ந்தனர். இதற்கான முயற்சிகளை மக்களே மேற்கொண்டனர். கட்சிக்கும், ஆந்திர மகாசபைக்கும் மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு தங்களுடைய துப்பாக்கிகள், கத்திகள், ஈட்டிகள் போன்றவற்றைத் தந்தனர். நிலப்பிரபுக்களிடமிருந்து துப்பாக்கிகளை மக்களே பறித்துக் கொண்டனர்.
கிராமங்களின் தற்காப்பும், ஆயுதங்களைச் சேகரிப்பதும் உடனுக்குடன் நடந்தேறின. தானிய வரியைக் கொடுக்க மறுப்பதும், வரிகொடா இயக்கமும், நில வினியோகமும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. மக்களின் எதிரிகள், அவர்களின் குற்றங்களுக்கேற்றவாறு தண்டிக்கப்பட்டனர்.