இந்திய யூனியனுடன் சேர்வதற்கான இயக்கமானது நிஜாம் அரசில் பெரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மாநில காங்கிரசு இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டது. "பொறுப்புள்ள அரசாங்கம்'', "விசாலாந்திரா'' போன்ற முழக்கங்களுடன் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை தயார் செய்தது.
இது நடந்துகொண்டிருந்த சமயத்தில், மாணவர்கள் மிகப் பரந்த அளவில் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல மறுத்தல், நீதிமன்றங்களைப் புறக்கணித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கிராமங்களில் இயக்கமானது மற்றொரு திருப்பத்தை எதிர்கொண்டது. பட்டேல்களின் — பட்வாரிகளின் ஆவணங்களை எரிப்பது, எல்லைப் பகுதிகளில் இருந்த சுங்கச் சாவடிகளை அழிப்பது ஆகிய செயல்களில் இயக்கம் ஈடுபட்டது. மேலும் வரிகொடா இயக்கமும் நடத்தப்பட்டது. கிராமங்களில் நில வருவாய் தடைபட்டதோடு கிராம மட்டத்தில் நிஜாம் அரசின் அதிகாரச் சின்னமும் அழிக்கப்பட்டது.
மேலும், மக்கள் இயக்கமானது பீடுநடையுடன் முன்னேறியது. பாதசூரியபேட்டா, பாலமுலா, தேவருபுலா, மல்லாரெட்டி கூடம் ஆகிய கிராமங்களில் நடந்த மக்கள் போராட்டங்களைப் போலவே, இச்சமயமும் மக்கள் இயக்கத்தில் பேரலைகள் இருந்தன. மீண்டும் கூத்தப்பாலா சங்கம் வளர ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான கிராமங்களில் பட்டேல்களின் பட்வாரிகளின் ஆவணங்கள், பதிவேடுகள் எரிக்கப்பட்டன. இது மட்டுமல்ல; நிலப்பிரபுக்கள், வியாபாரிகள், பணக்காரர்கள் ஆகியோரிடமிருந்த கடன் பத்திரங்களும் கொளுத்தப்பட்டன. இவ்வாறாக, நிஜாமுக்கு எதிரான போராட்டமானது நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட்டது.
எல்லாக் கிராமங்களும் இம்மாதிரியான போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டன. கிராமங்களில் தேசியக் கொடிகளும், செங்கொடிகளும் தடையின்றிப் பறந்து கொண்டிருந்தன. நிலப்பிரபுக்களின் பெரிய மாளிகைகளைத் தாக்கி, அதிக அளவில் தானியங்களை அவர்களாகவே விநியோகம் செய்து கொண்டனர். இவ்வாறாக இயக்கமானது ஒரு புதிய நிலைக்கு உயர்ந்தது.
இச்சமயத்தில், நிப்பிரபுக்களின் நிலங்களைப் பறிக்கும் போராட்டமானது ஒரு புதிய நிலைக்கு உயர்ந்தது. அதுவரை சட்டங்களின்மூலமாகவும் மற்ற வழிகளின்மூலமாகவும் நிலப்பிரபுக்கள் ஆக்கிரமித்துக் கொண்ட நிலங்களைக் கைப்பற்றுவதில் மட்டுமே இயக்கம் சுற்றிக் கொண்டிருந்தது. நலகொண்டா மாவட்டத்திலுள்ள சூரியபேட்டா, ஹுசூர் நகர் ஆகிய தாலுகாகளில் போராட்டங்கள் மிகப் பரந்த அளவில் நடத்தப்பட்டு வந்தன.
இப்பொழுது இயக்கமானது இத்துடன் நின்று விடவில்லை. வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து விட்ட நிஜாம் நவாபை ஆதரித்துவந்த, கொடுமையான நிலப்பிரபுக்களின் நிலங்களை விநியோகிப்பது பற்றிய கேள்வியானது முன்னணிக்கு வந்தது. மக்கள் அந்நிலங்களைப் பறிக்க வேண்டுமென முழங்கினர். அவர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர்களை வைத்துக் கொண்டிருந்த நிலப்பிரபுக்களைத் தாக்கினர். அவர்களது நிலங்கள் மக்களுக்கிடையே விநியோகிக்கப்பட்டன. மக்கள் ஊர்வலமாகச் சென்று, வறிய மக்களுக்கு இந்நிலங்களை விநியோகம் செய்தனர்.
ஆனால் இயக்கமானது இத்துடன் கூட நின்றுவிடவில்லை. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நிலப்பிரபுக்கள் வைத்துக் கொண்டு பரம்பரை பரம்பரையாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். நிலப்பிரபுக்களுக்கான உச்சவரம்பு பற்றியும், மீதி நிலங்களை வறிய மக்களுக்கு விநியோகம் செய்வது பற்றியதுமான கேள்வி இச்சமயத்தில் எழுப்பப்பட்டது. ஆரம்பத்தில் 500 ஏக்கராக உச்சவரம்பு விதிக்கப்பட்டது. உபரி நிலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால் விநியோகம் செய்வதற்கு நிலங்கள் போதுமானதாக இல்லை. பின்பு உச்சவரம்பு 200 ஏக்கராகக் குறைக்கப்பட்டு மீதி நிலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்தச் சமயத்தில் நிலப்பிரபுக்களிடமிருந்து இலட்சக்கணக்கான பன்சார் (நன்செய்) நிலங்களும், பன்சராய் (மேய்ச்சல் நிலங்களும்) விநியோகம் செய்யப்பட்டன.
நில விநியோகத்தில், கிராம ஐக்கிய முன்னணியானது வளர்க்கப்பட்டது; பாதுகாக்கப்பட்டது. மக்களுடைய எதிரிகள் அல்லாத பணக்கார விவசாயிகள் சிறிய நிலப்பிரபுக்களின் நிலங்கள் தொடப்படவில்லை. முதலில் விவசாயத் தொழிலாளிகளுக்கும், வறிய விவசாயிகளுக்கும், அதற்குப் பின்னர் நடுத்தர விவசாயிகளுக்கும் என்ற முறையில் நிலமானது விநியோகம் செய்யப்பட்டது. நில விநியோகத் திட்டத்தின்மூலம் நிலம் கிடைக்கப் பெற்ற விவசாயத் தொழிலாளிகளும், விவசாயிகளும் ரஜாக்கர் குண்டர்களினதும் நிஜாம் இராணுவத்தினதும் நிலப்பிரபுக்களின் குண்டர்களினதுமான தாக்குதல்களைத் தடுக்க உறுதியாக, தீர்மானமாக முன்வந்தனர். நில விநியோகமானது எங்கெல்லாம் வெற்றிகரமாக செயல்பட்டதோ அங்கெல்லாம், எதிர்க்கும் போராட்டங்கள் வெற்றி பெற்றன. இன்றும் கூட இப்பகுதிகளில் இயக்கமானது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.