Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


மக்கள் நீண்டகாலத்துக்கு இத்தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இராணுவத் தாக்குதல்கள் தீவிரமாக இருந்த கிராமங்களில் மக்கள் சரணடையத் தொடங்கினர். இராணுவத் தாக்குதல்களிலிருந்து தப்ப சரணடைந்தனர். முன்னர் தங்கள் கிராமங்களை விட்டு ஓடிப்போன மிராசுதாரர்கள் மீண்டும் திரும்பி வந்து மக்களை ஒடுக்கத் தொடங்கினர். அவர்கள் சரணடைந்தவர்களை, கட்சி மற்றும் ஆந்திர மகாசபை ஊழியர்களைத் தேடுவதற்குத் தங்களுடன் வரக் கட்டாயப்படுத்தினர். மிராசுதாரர்கள் யாராவது கட்சி அல்லது ஆந்திர மகாசபை ஊழியரைப் பிடித்துவிட்டால் அவரை மனிதத் தன்மையற்ற சித்திரவதைக்கு உள்ளாக்கினர். மக்கள், அரசிடம் தற்காலிகமாக சரணடைந்தாலும், கட்சி மற்றும் மகாசபையின் தலைவர்களிடமும், ஊழியர்களிடமும் இன்னமும் பெரிய அளவில் அனுதாபம் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பளித்து உணவளிக்கவும் செய்தனர். ஆனால் மற்றொரு பக்கம் தற்காலிக நம்பிக்கையின்மை தோன்ற ஆரம்பித்தது.


கடுமையான அடக்குமுறையுள்ள இச்சமயத்தில், தற்காலிக நம்பிக்கையின்மை ஏற்பட ஆரம்பித்த கிராமங்களிலிருந்து கட்சி மற்றும் ஆந்திர மகாசபை ஊழியர்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டியிருந்தது. அவர்கள் குறைவான அடக்குமுறையுள்ள இதர கிராமங்களுக்குச் சென்று போராட்டங்களுக்கு மக்களைத் திரட்ட முனைந்தனர். இங்ஙனம் இயக்கம் புதிய பகுதிகளுக்குப் பரவியது.


சில கிராமங்களில் தற்காலிக நம்பிக்கையின்மை தோன்றியவுடன், வெளித் தோற்றத்தைக் கண்டு நிஜாம் அரசு, இயக்கத்தைத் தான் நசுக்கி விட்டதாக நினைத்து கிராமங்களிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றி விட்டது. இந்நிலைமைகளில், கட்சியும் சங்கமும், பேர்போன குண்டர்கள் மற்றும் மிகவும் கொடிய மிராசுதாரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியது. கட்சித் தொண்டர்கள் அத்தகைய குண்டர்களைப் பிடித்து கடுமையாக அடித்தனர். இப்பணி கிராமத் தொண்டர்களாலேயே எங்கும் நிறைவேற்றப்பட்டது.


இதில் மக்கள் தாங்களே முன்முயற்சி எடுத்துக் கொண்டனர். மக்கள் எதிரிகளை எச்சரித்து வீடுகளில் கைப்பிரசுரங்களை ஒட்டினர். மிராசுதாரர்களின் வீடுகளில் இம்மாதிரியான பிரசுரங்களை எறியவும் மக்கள் எதிரிகளின் வீடுகளில் அவற்றை ஒட்டவும் செய்தனர். அவர்கள் கூடி மக்கள் எதிரிகளை அடித்து விட்டு ஒன்றுமறியாதது போல் மக்களுடன் மக்களாகக் கலந்துவிடுவர். இந்தக் கைப்பிரசுரங்கள் போலீசு மற்றும் இராணுவ முகாம்களில் கூட எறியப்பட்டன. இந்நடவடிக்கைகள் அதிகரித்தவுடன் மிராசுதாரர்கள் திரும்பவும் பீதியுற்று இராணுவப் பாதுகாப்பிற்காக மீண்டும் நகரங்களுக்கு ஓட ஆரம்பித்தனர். கோழைகள்! இதனால் மக்கள் மீண்டும் தன்னம்பிக்கை பெற்றனர். அவர்கள் சங்கம் திரும்பவும் உயிர் பெற்று விட்டதென உணர்ந்தனர்.