பரம்பரை பரம்பரையாக ஒடுக்கப்பட்டு வந்த தெலுங்கானா பகுதி மக்கள் புதிய உணர்வு பெறத் தொடங்கினர். தங்களைத் தாங்களே திரட்டி, அமைப்பாகி மிராசுதாரர்களின் கொடுமைகளுக்கு எதிராகப் புரட்சி செய்யத் தொடங்கினர். ஒடுக்குமுறைக்கும் பலாத்காரத்திற்கும் பழக்கப்பட்டிருந்த மிராசுதாரர்களுக்கு மக்களிடையே பரவி வந்த புதிய உணர்வையும் மக்களியக்கம் வளர்ந்து வருவதையும் சிறிதும் பொறுக்க முடியவில்லை. அவர்கள் போலீசையும் குண்டர்களையும் கொண்டு மக்களைத் தாக்கத் தொடங்கினர். மிராசுதாரர்கள் பகிரங்கமாகத் தங்கள் துப்பாக்கிகளுடன் வெளிவந்து மக்களையும் அவர்களின் தலைவர்களையும் சுடத் தொடங்கினர்.
இச்சமயம் ஜனகோன் தாலுகாவில் தேஷ்முக்காக இருந்த விஷ்ணூ<ர் ராமச்சந்திர ரெட்டியை எதிர்த்த காடவெண்டி கிராம மக்களின் போராட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற நிகழ்ச்சியாக அமைகிறது. தெலுங்கானாவில் மக்கள் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு இது ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது. இந்த தேஷ்முக், சங்கத்தின் தலைவர்களைக் கொல்லத் திட்டமிட்டான். இதற்குத் தனது குண்டர்களைத் தயார் செய்தான். போலீசின் உதவியையும் பெற்றான்.
ஜூலை 4, 1946 அன்று காடவெண்டி கிராமத்தில் மிராசுதாரர்களின் குண்டர்கள் நன்றாகக் குடித்துவிட்டு உள்ளூர் ஆந்திர மகாசபையின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளைத் தாக்கவும் அவர்களை வலுச் சண்டைக்கு இழுக்கவும் தொடங்கினர். மிராசுதாரர்களின் அயோக்கியத்தனமான திட்டத்தை மக்கள் உடனே உணர்ந்து கொண்டனர். ஆந்திர மகாசபையின் தொண்டர்கள் உடனே தடிகளாலும், இதர கிராமக் கருவிகளாலும் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டு தங்கள் அலுவலகம் முன் கூடினர். செங்கொடிகளுடன் மிகப் பெரும் ஊர்வலமாகச் சென்றனர். "புரட்சி ஓங்குக'', "ஆந்திர மகாசபை வாழ்க'' என்னும் போராட்ட முழக்கங்கள் விண்ணதிரக் கிளம்பின. ஜமீன்தாரின் மாளிகையை ஊர்வலம் எட்டியபோது அங்கு மறைந்திருந்த குண்டர்கள் திடீரென்று ஊர்வலத்தைத் தாக்கத் தொடங்கினர். தொண்டர்களை நேரடியாகச் சுடத் தொடங்கினர். ஊர்வலத்தை நடத்திச் சென்ற தொட்டி மல்லய்யாவும் மங்க கொண்டய்யாவும் மிகவும் கடுமையாகக் காயமுற்றனர். அக்கிராமத்தின் மகாசபையின் தலைவராக விளங்கிய தொட்டி கொமரய்யாவின் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு ஒன்று பாய்ந்தது. உடன் அவர் உயிர் பிரிந்தது. இவ்வியக்கத்தில் முதல் உயிர்த் தியாகி அவர்தான்.
இயக்கத்தில் ஒரு மாபெரும் விவசாய வீரன் இறந்துவிட்டான். மக்களது கோபம் எல்லையற்றுப் பெருகியது. கிராமம் முழுவதும் திரண்டு, மிராசுதாரரின் குண்டர்கள் மறைந்திருந்த குடிசையைச் சூழ்ந்து கொண்டனர். "இரத்தத்திற்கு இரத்தம்'' என மக்கள் முழக்கமிட்டனர். இதனைக் கண்டு குண்டர்கள் பீதியுற்று, மிராசுதாரரின் மாளிகைக்குப் பாதுகாப்பிற்காக ஓட்டமெடுத்தனர். வெகுண்ட மக்கள் மிராசுதாரரின் மாளிகையையும் முற்றுகையிட்டனர். இச்செய்தி சுற்றுப்புறக் கிராமங்களுக்குப் பரவியவுடன் எல்லா கிராமங்களின் மக்களும் காடவெண்டி கிராம மக்களுக்காக ஓடி வந்தனர். அக்கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் மக்கள் அன்று கூடினர். மிராசுதாரரின் மாளிகையைத் தீக்கிரையாக்க தயார் செய்யத் தொடங்கினர்.
இச்செய்தி கேட்டு தேஷ்முக்கின் மகன் பாபுராவ், துப்பாக்கிகள், ஈட்டிகள் மற்றும் இதர பயங்கர ஆயுதங்களுடன் சுமார் 200 குண்டர்களை அழைத்துக் கொண்டு தனது மாளிகையைப் பாதுகாக்க ஓடி வந்தான். நூற்றுக்கணக்கான மக்கள் கிராமத்திற்கு வெளியே கவனம் வைத்துக் கொண்டிருந்தனர். இக்கூட்டத்தைக் கண்டவுடன் "ஆந்திர மகாசபைக்கு வெற்றி'' என்று இடியோசை கிளப்பிக் கொண்டு குண்டர்களைத் தாக்கத் தொடங்கினர். குண்டர்கள் மீது கல்மாரி பொழிந்தனர். 3 மைல்களுக்குக் குண்டர்களைத் துரத்தினர். கைக்கு கிடைத்தவர்களை இரக்கமின்றி அடித்தனர். மிராசுதாரரின் பெரிய மாந்தோப்பை அழித்தனர்.
இச்சண்டையில் குண்டர்களின் தலைவனை மக்கள் பிடித்து விட்டனர். அவன் காலிகளில் ஒருவன். தேஷ்முக்கின் பேர்போன அடியாள். அங்கே அப்போதே மக்கள் ஒரு நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுத்து அவனை விசாரணைக்கு உட்படுத்தினர். அவனது குற்றங்களுக்குப் பகிரங்கமாக மக்கள் சாட்சி சொல்ல முன்வந்தனர். அவனுக்கு மக்கள் நீதிமன்றம் உடனே மரண தண்டனை விதித்தது. தனது குற்றங்கள் எல்லாம் பகிரங்கப்பட்டபோது, இந்த ரௌடி தனது குற்றங்களுக்காக வருந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்டான். இது கண்டு மக்கள் நீதிமன்றம் அவனை மன்னித்து, அவனுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்தது.
இதற்கிடையில் சுமார் 6 ரிசர்வ் போலீசார் அங்கு வந்தனர். குண்டர்களைத் தண்டிப்பதாக போலி வாக்குறுதிகள் தந்து அவர்கள் மக்களை நம்பச் செய்தனர். இதன்பின் தங்கள் வீடுகளுக்கு மக்கள் திரும்பினர். மக்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றவுடன் தங்கள் வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டு போலீசார், தேஷ்முக்கிடம் குண்டர்களை ஒப்படைத்தனர். இது மட்டுமின்றி, ஆந்திர மகாசபை ஊழியர்கள் மீது கலகம் விளைவித்ததாக ஆறு பொய் வழக்குகளை சோடித்து தாக்கல் செய்தனர்.
உயிர்த்தியாகி கொமரய்யாவின் உடலை கிராமத்திற்கு மக்கள் எடுத்து வந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு பெரும் ஊர்வலமாக வந்தனர். அவரது உடல், மக்கள் தலைவன் ஒருவனுக்கான பெரும் மதிப்புடன் தகனம் செய்யப்பட்டது. தேஷ்முக்குக்கு முன் காடவெண்டி மக்கள் பணியவில்லை. அக்கிராமத்தில் அவனது விவசாய வேலைகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டன.
கொமரய்யா ஒரு மகத்தான உயிர்த்தியாகி. அவருடைய தியாகங்களால் தெலுங்கானா இயக்கம் ஒரு புதிய உயர்ந்த கட்டத்தை எட்டியது. புதிய மக்கள் கவிஞர்கள் மக்களிடையே பிறந்தனர். எங்கும் "அமரஜீவி கொமரய்யா.....'' என்று மக்கள் பாடத் தொடங்கினர். அது வெகுசீக்கிரம் பிரபலமான பாட்டாகியது.