இடதுசாரிக் கண்ணோட்டமுள்ள எல்லா இளைஞர்களும், மார்க்சிய உணர்வு கொண்டவர்களும் ஆந்திர மகாசபையை ஓர் இடைத்தளமாகப் பயன்படுத்திக் கொண்டு மக்களிடையே வேலை செய்யத் தொடங்கினர். இதனால் ஆந்திர மகாசபையின் தன்மையே மாற ஆரம்பித்தது. அதுவரை ஆந்திர மகாசபையின் வலதுசாரிகள், தெலுங்கு மொழி வளர்ச்சிக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் மட்டுமே செயல்பட்டு வந்தனர். அவர்கள் ஏழை விவசாயிகளின் கோரிக்கைகளின் பேரில் சில வெற்றுத் தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றுவது வழக்கம். ஆனால் மார்க்சியவாதிகள், விவசாயிகளிடையே இத் தீர்மானங்களைப் பிரபலமாக்கி, ஆந்திர மகாசபையின் தலைமையில் இக்கோரிக்கைகளுக்காகப் போராட அவர்களைத் திரட்டத் தொடங்கினர். குறுகிய காலத்திலேயே ஆந்திர மகாசபை உண்மையிலேயே ஒரு மக்கள் அமைப்பாக வளர்ந்து விட்டது.
ஆந்திர மகாசபையின் வலதுசாரிகள், இயக்கத்தின் இவ்வளர்ச்சியைக் கண்டு பயமடைந்தனர். அவர்கள் இவ்வியக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயன்று தோல்வியுற்றனர். படிப்படியாக போங்கீர் மகாசபை (மாநாடு) காலத்தில் (1944) ஆந்திர மகாசபை மார்க்சியவாதிகளின் தலைமையின் கீழ் வந்தது.