இம்முறை கிராமத்தின் எல்லா ஏழைப் பிரிவுகளுக்கும் இருந்தது. தாழ்த்தப்பட்டோர், வண்ணார்கள், நாவிதர்கள், கும்மாரி மற்றும் வியாபாரிகள் ஆகிய எல்லோருமே இக்கொத்தடிமை உழைப்பினைச் செய்ய வேண்டியிருந்தது. நடுத்தர, மற்றும் பணக்கார விவசாயிகள் கூட இக்கொத்தடிமை உழைப்பிலிருந்து தப்பமுடியாது. விதைப்புக் காலத்தில் அவர்கள் மிராசுதாரர்கள் நிலத்தில் முதலில் விதைத்து முடிக்க வேண்டும். பின்னரே தங்கள் சொந்த நிலத்தில் விதைக்க முடியும்.
இதற்கும் மேலாக ஏழை மக்கள், அநேக விதமான, சட்ட விரோதமான வரிகளை மிராசுதாரர்களுக்குச் செலுத்த வேண்டும். தங்கள் தானியங்கள் உழுபடைக் கருவிகளுக்கும் வரி, திருமணங்களுக்கு வரி, தங்கள் பெண்கள் பருவம் அடைந்ததற்கு வரி, பிறப்புக்கும் இறப்புக்கும் வரி போன்ற கற்பனைக்கெட்டாத பல சட்ட விரோத வரிகளை ஏழைகள் செலுத்த வேண்டும். இவை ஜாகீர்தாரர்கள், தேஷ்முக்குகள் மற்றும் பெரும் மிராசுதாரர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட வேண்டும். மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள் ஆகியோர் ""நாகு'' மற்றும் மிக அதிகமான கந்து வட்டி முறைகளில் ஏதாவது ஒரு காரணத்தின் பேரில் கிராம மக்களைக் கொடூரமாகச் சுரண்டி வந்தனர்.
வெகுகாலமாக அரசியல் அமைப்புகளோ, அரசியல் நடவடிக்கைகளோ நிஜாம் மாநிலத்தில் அனுமதிக்கப்படவில்லை. 1936க்கு பிறகுதான் ""மாநில காங்கிரஸ்'' அமைக்கப்பட்டது. நிஜாம் மாநிலத்திற்கு பொறுப்பு வாய்ந்த அரசுக்காக அது மெதுவாக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கியது. நவாபை அதிகாரத்திலிருந்து விலக்காதவாறு அவனுடன் சமரசம் பேசுவதுதான் அதன் கோரிக்கை.
பின்னர் ""ஆரிய சமாஜம்'', முசுலீம் ஆதிக்கத்திற்கு எதிராகத் தொடங்கப்பட்டது. இந்து மத அடிப்படையில் இந்து இளைஞர்களை அது அமைப்பாகத் திரட்டத் தொடங்கியது. ஆனால் மாநிலத்தில் மிகப் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். எனவே முசுலீம் எதிர்ப்புப் போராட்டம், நிஜாம் நவாபை எதிர்த்த ஒரு போராட்டமாக உருவெடுத்தது.
மாநிலத்தின் தெலுங்கானா பகுதியில், தெலுங்கு மக்களின் மொழி, சக நிலைமை, கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பணியாற்றும் குறிக்கோளுடன் ""ஆந்திர மகாசபை'' தொடங்கப்பட்டது. நிஜாம் மாநிலத்திற்கு வெளியே தேசிய இயக்கம் முன்னேறிக் கொண்டிருக்கும் போது ஆந்திர மகாசபை இயக்கம் மாநிலத்தில் தொடங்கியது. இவ்வியக்கங்கள் நிஜாம் மாநிலத்தில் மக்களின் கவனத்தை, குறிப்பாக மாணவர்களின் கவனத்தை கவர ஆரம்பித்தன. அவர்கள் மத்தியில் தேசிய உணர்வு வளரத் தொடங்கியது.