Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் புலிக் காட்டுப்பிரதேசங்கள் மீதான பொருளாதார தடையையடுத்து ரி.ரி.என் தொலைக்காட்சியில் நிலவரம் என்ற பகுதியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு உப்புச்சப்பற்ற நடைமுறைக்கு உதவாத பரப்புரை ஒன்றைச் செய்தனர்.

 அதில் புலித் தேசிய பொருளாதாரத்தை மீட்டுவிடுவோம் என்றும், உலக பொருளதாரம் பற்றியும் கரிகாலனும், பாலகிருஸ்ணனும் அலட்டினர். பார்க்க  http://www.pathivu.com/?ucat=nilavaram என்ற இணையத்தில். இதைப்பற்றி விமர்சனம் ஒன்றை நான் எழுதி வருகின்றேன். இருந்தபோதும் இவை பற்றி நான் முன்பு எழுதிய கருத்துக்களம் இதை மறுதலிக்கின்றது. அந்த வகையில் அவை கூட பதிலளிக்கின்றது.

 

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்

 

பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் சந்திக்கும் நெருக்கடி ஒருபுறம் என்றால், இனவாத நடைமுறைகள் தமிழ் மக்களுக்கு மீள முடியாத பேரிடியாக உள்ளது. இதைவிட புலிகளின் வரி அறவிடும் முறையும், அவர்களின் தேசிய பொருளாதாரக் கொள்கையும் மறுபக்கம் பேரிடியாகி அவலமாகவே பெருக்கெடுக்கின்றது.

 

1983 முதல் 2001 வரையிலான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் அழிந்த சொத்துக்களின் மொத்தப் பெறுமதி சுமார் 40300 கோடி ரூபா என்று இலங்கை மத்திய வங்கியே 2003 இல் அறிவித்துள்ளது. அதாவது வருடாந்த இலங்கையின் தேசிய வருமானத்தை விட இது அதிகமாகும். இது அழிந்த சொத்து இழப்பை மட்டும் குறிக்கின்றது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 1983-1987 க்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 34 ஆயிரம் வீடுகள் சேதமாகின. 1987-1994 க்கு இடையில் புனருத்தாரணம், புனர்நிர்மானம், நிவாரணமாக 2265 கோடி ரூபா செலவு செய்யப்பட்டது. போர்ச் செலவீனம் மற்றும் பல்துறை சார்ந்து 1987 முதல் 1998 வரையிலான காலத்தில் (செலவு, சொத்தழிவு, உற்பத்தி இழப்பு) மிக விரிவானது.

1.நேரடிச் செலவு

நேரடியாக போருக்கான அரசின் செலவு                                                           21232 கோடி ரூபா

பொதுஜன பாதுகாப்பு மேலதிக செலவு                                                              4000 கோடி ரூபா

புலிகளின் போர்ச் செலவு                                                                                   4200 கோடி ரூபா

இடம்பெயர்வு சம்பந்தப்பட்ட செலவு                                                                 3800 கோடி ரூபா

மொத்தம்                                                                                                           33392 கோடி ரூபா

2.சொத்திழப்பு, புனர்நிர்மாணச் செலவு

1987 - வடகிழக்கு புனர்நிர்மாணச் செலவு                                                         1040 கோடி ரூபா

1995 - வடகிழக்கு புனர்நிர்மாணச் செலவு                                                         4900 கோடி ரூபா

வீடுகள் புனர்நிர்மாணம் (வடக்குகிழக்கு)                                                          1010 கோடி ரூபா

வடகிழக்கு வெளியே வீடமைப்பு                                                                        450 கோடி ரூபா

வடகிழக்கு வெளியே அழிவுகள் (1998 பெறுமதி)                                           11230 கோடி ரூபா

1995 க்கு பின்                                                                                                     2480 கோடி ரூபா

3.உற்பத்தி இழப்பு

தொழில் நிபுணர்கள் காரணமான இழப்பு                                                        11250 கோடி ரூபா

வடகிழக்கு உற்பத்தி இழப்பு

1.1982 அடிப்படையில்

உற்பத்தி குறைவு மொத்தமாக                                                                       27300 கோடி ரூபா

2.தேசிய வளர்ச்சி வீதத்தில்

வடக்குகிழக்கின் உற்பத்தி இழப்பு                                                                 39200 கோடி ரூபா

உல்லாச பயணத்துறை                                                                                  12000 கோடி ரூபா

அந்நியமுதலீடு                                                                                                7500 கோடி ரூபா

மொத்த போர்ச் செலவு                                                                               151752 கோடி ரூபா

அழிவுகளைத் தவிர்த்த மொத்த செலவீனம்                                             130642 கோடி ரூபா

 

இந்த சமூக அமைப்பில் இலங்கையின் இன யுத்தம் தொடங்கிய 15 வருடத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சம் கோடி ரூபாவுக்கு மேல் அழிந்துள்ளது. இதில் பொருட்களின் அழிவுகள் உள்ளடக்கப்படவில்லை புலிகள் 2000 ஆண்டு வரை அண்ணளவாக 4260 கோடி ரூபாவை யுத்தத்துக்கு செலவு செய்துள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இதே காலத்தில் இராணுவம் 35118 கோடியை செலவு செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக தேசிய வருமானத்தில் 50 முதல் 60 ஆயிரம் கோடி இராணுவதுறை சார்ந்து அழிக்கப்ட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அவலம் இப்படி உள்ளது என்றால், மனித உறவுகளில் அவலம் இதை விட அகலமானது. சொந்த வாழ்விடத்தில் இருந்து அன்னியமாகும் உளவியல் இழப்பு பல்துறை சார்ந்தது.

 

2003ம் ஆண்டு மத்தியவங்கி தனது அறிக்கையில் யுத்தத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் 80 ஆயிரத்துக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 23 ஆயிரம் என அறிவித்த மத்தியவங்கி, அப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,05,500 எனக் குறிப்பிட்டுள்ளது. ஒரு சமூகமே குடியெர்ந்த நிகழ்வால் ஏற்பட்ட அதன் துயரம், யாழ் மேட்டுக்குடி போலி மனப்பான்மையின் வெளித்தோற்றத்தை விட அடி ஆழத்தில் ஏற்படுத்திய சேதம் வெளிக்கு தெரியாத வடுக்களாகவே உள்ளது. வடக்கில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லீம் மக்களின் நிலையோ இதைவிட சோகமானது. வடக்கு கிழக்கு மக்கள் சந்தித்த துயரங்கள் மலையளவானது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

 

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதான உழைப்பு விவசாயமாக இருந்தது. இதன் அழிவு எல்லையற்றது. இதைப் போல் தமிழ் மக்களின் இரண்டாவது பிரதான உழைப்பாக மீன்பிடி அமைந்து இருந்தது. இந்த உழைப்புக்கு நேர்ந்த அவலமான சேதம் பற்றிய புள்ளிவிபரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளது. யுத்தத்தின் இடைக்காலமான 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வடக்குகிழக்கில மொத்த மீனவர் தொகை 269629 யாக இருந்தது. 560 மீன்பிடி கிராமங்கள் இருந்தன. தமிழ் மக்கள் தொகையில் மிகப் பெரிய உழைப்பின் ஆற்றலை வழங்கிய இந்த உற்பத்தித்துறை, முற்றாக இன்று முடங்கிக் காணப்படுகின்றது. 1983 இல் யாழ்குடா மட்டும் 48 ஆயிரம் மெற்றிக் தொன் மீன் உற்பத்தி செய்தது. ஆனால் இது 2002 இல் 5 ஆயிரம் மெற்றிக் தொன்னே உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டதாக நலிவுற்றுவிட்டது. குடாநாட்டில் 1989 இல் 101177 மீனவர்கள் காணப்பட்டனர். 2000 ஆண்டில் இது 31159 பேராக குறைந்து போனது. 1995 க்கு முன் 7466 மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் சேதமாக்கப்பட்டது. மொத்த மீன்பிடி படகு மற்றும் உபகரணங்களின் சேதம் 182.45 கோடி ரூபாவாகும். இதைவிட 12 ஐஸ் தொழிற்சாலைகள், வள்ளம் கட்டும் இடங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டன. ஒரு இனத்தின் உற்பத்திதுறை முற்றாகவே ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டுவிட்டது. மீன்பிடி அறிவியல் மலடாக்கப்பட்டுள்ளது. பரம்பரையான கல்விமுறை சேதமானதால், தேசிய பொருளாதார அடிப்படை சிதைக்கப்பட்டுள்ளது. அந்த உழைப்பில் இருந்து மக்கள் முற்றாக அன்னியமாகிய நிகழ்வு, அந்த உழைப்பின் மீதான ஆற்றலையே இல்லாததாக்கிவிட்டது. சமாதானம், அமைதி என்ற நாடகத்தில் மீன்பிடி கொஞ்சம் அங்குமிங்குமாக மீள முற்பட்டுள்ள நிலையில், புலிகளின் வரி அதன் கழுத்தில் கைவைத்துள்ளது. பல மீனவக் கிராமங்களில் புலிகளின் வரிக் கொடுமைக்கு எதிராக போராடியதுடன், மீன் பிடிக்க மறுத்த நிகழ்வுகளும் அங்காங்கே கசிந்து வெளிவருகின்றது. இந்த நிலையிலும் இன்று 82 கிலோ மீற்றர் கடல் பாதுகாப்பு வலையமாக காணப்படுகின்றது. புலிகளின் கடல் பாதுகாப்பு வலயம் இதற்குள் உள்ளடகப்படவில்லை. 67 மீன்பிடி கிராமங்கள் இராணுவ சூனிய பிரதேசமாக கைவிடப்பட்டுள்ளது. ஒருபுறம் யுத்த பிரதேசமாகவும், மறுபுறம் அராஜகத்தை அடிப்படையாக கொண்ட சூறையாடலும் அமைதியாகி அதுவே சமாதானமாகியுள்ளது. சொந்த உழைப்பைக் கூட சுதந்திரமாக செய்ய முடியாது மக்கள் செய்வதறியாது கையைப் பிசைகின்றனர். ஒட்டு மொத்த வாழ்வின் அனைத்து துறைகளையும் இழந்து, எதுவுமற்ற தேசத்தின் பிச்சைக்காரர் ஆகின்றனர்.

 

விவசாயம், மீன்படி என்ற பிரதான உழைப்பு யுத்தவெறியர்களின் சொந்த நலனுக்குள் சிக்கி அழிந்து வரும் நிலையில், வடக்கு கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்று உள்ளதுடன், வறுமையில் சிக்கியுள்ளனர். இந்த வறுமையின் துயரம் கடுமையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் 60 சதவீதமான மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை. ஒரு சமூகமே கல்வியை இழந்து நிற்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வாழ்வோரில் 85 வீதத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்து வாழ்பவர்களே. இந்த நிலைமை யாழ் குடாவைவிட கிழக்கில் அதிகமான அளவில் உள்ளது. புள்ளிவிபரங்கள் பெறமுடியவில்லை.

 

சமூக அவலம் பன்முகத் தன்மை வாய்ந்தவை. யுத்தம் ஆண்களை குறி வைத்து வேட்டையாடியதால், பெண்களின் விதவைக்கோலம் சமூக கோலமாகியுள்ளது. இவர்களின் வாழ்வை மேம்படுத்த தேசிய வீரர்களிடம் எந்த தேசிய வேலைத் திட்டமும் கிடையாது. ஆனால் ஏகாதிபத்தியம் இவற்றை கொண்டு நாட்டில் ஊடுருவுகின்றது. 2004 மார்ச் மாதம் தேசிய வீரர்களின் தலைமையகம் உள்ள கிளிநொச்சியில், 4000 விதைவைகளுக்கு சுயவேலைவாய்ப்பை வழங்க உலக உணவு திட்டத்தின் கீழ் சுழற்சியான கடனை வழங்கத் தொடங்கியுள்ளது. எந்த சுயவேலைவாய்ப்பும் வாழ்வை கொண்டோட்டக் கூடிய நிலையில் இலங்கை இன்று இல்லை என்ற உண்மை இதற்குள் ஒருபுறம் தொங்கி நிற்கின்றது. மறு தளத்தில் 2004 மார்ச் மாதமே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மைய புதிய கட்டிடத்தை கிளிநொச்சிக்குச் சென்றிருந்த ஏகாதிபத்திய பிரதிநிதியான பிரிட்டிஷ் தூதுவர் ஸ்ரீபன் இவன்ஸ் திறந்து வைக்கின்றார். எந்த மாவீரர் குடும்பமும் இதைத் திறக்கவில்லை. சமூக அவலம் இந்தளவும் மலினமாக்கப்பட்ட நிலையில், கொள்ளைக்காரர்களிடம் மறுபடியும் சூறையாட தாரைவார்க்கப்பட்டு இருப்பதை இவை சாட்சிப்படுத்தி நிற்கின்றது. காட்டிக் கொடுப்புகள் அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மனித அவலங்கள் மறுபக்கத்தில் எல்லையற்றதாக உள்ளது.

 

மனித அவலங்களின் பல்வேறு புள்ளி விபரங்கள் முழுமையாக கிடைக்காவிட்டாலும், சில புள்ளிவிபரங்கள் கிடைத்துள்ளன. மனிதனுக்கு விடிவைத் தராத யுத்தம் வடக்கு கிழக்கில் 30 ஆயிரம் பேரை அங்கவீனராக்கி உள்ளது. இவர்களுக்கு எந்தவிதமான சமூகப் பாதுகாப்பையும், வழிகாட்டுதலையும் தமிழ் தேசியத் தலைவர்கள் வழங்கியதில்லை. இது போன்று யாழ்மாவட்ட 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் மொத்தமாக 25 ஆயிரத்து 773 பெண்கள் கணவனை இழந்துள்ளதாக செயலகப் பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது. கணவனை இழந்தவர்களில் 16வயதிற்கு உட்பட்ட 9பேரும், 17 வயது முதல் 30வயதிற்குட்பட்ட 937பேரும், 31வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட 7 ஆயிரத்து 989 பேரும், 50 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 838 பேரும் உள்ளனர். இந்த விதவைகளின் உற்பத்தி, கிழக்கிலேயே அதிகமானது. கிழக்கில் படுகொலை அரசியல் அன்றாட அரசியல் நிகழ்வாக காணப்பட்டது. பெண்களின் விதவை கோலத்துக்கு அப்பால், பெண்கள் கணவன் தந்தை மற்றும் மகனை பிரிந்து வாழ்தல் ஒரு விதியாகியுள்ளது. இதனால் பொருளாதார ரீதியான சமூகச் சிதைவும், புதிய தலைமுறையின் நலிவுற்ற வாழ்க்கை வக்கற்ற ஒரு சமூகமாக பரிணமிக்கின்றது.

 

இலங்கை அரசியலின் உலகமயமாதல் கொள்கை, இன அழிப்பு கொள்கை சாதாரணமாக தமிழ் குடும்பங்களின் காணப்பட்ட அடிப்படையான சில பொருளாதார ஆதாரங்களைக் கூட அழித்துள்ளது. யாழ். குடாநாட்டில் மட்டும் சுமார் 4509 ஹெக்ரேயர் பயிர்ச்செய்கை நிலப்பரப்பு, உவர் நிலமாக மாற்றமடைந்துள்ளது குடாநாட்டில் மட்டும் கடந்த கால யுத்ததினால் 5 இலட்சம் தென்னை மரங்கள் அழிந்துள்ளன. இதன் மூலம் குறைந்தபட்ச பொருளாதார அடிப்படையைக் கூட குடும்பங்கள் இழந்து நிற்கின்றன. ஒரு தென்னை மரத்தை மீள நட்டுப் பராமரிப்பதற்கு சுமார் 5ஆயிரம் ரூபா வரை தேவைப்படுகின்றது. இதை மீள புனரமைக்க முடியாத அரசியல் தலைமைகள், அனைத்துக்கும் அன்னியனிடம் கையேந்தும் தலைவர்களைக் கொண்ட அரசியல் பிச்சைக்காரர்கள், மறு தளத்தில் வக்கற்றுப் போன சமூகமாக தமிழ் இனம் மாறிவிட்டது. அன்றாட சுற்றுச்சூழல் வழங்கிய பொருளாதார வளங்களான பனை, மா, பலா என்று அனைத்தும் அழிந்து விட்ட நிலையில், ஒரு சமூகத்தின் இருத்தல் என்பது பன்முகத் தன்மையில் கேள்விக்குள்ளாகியுள்ளது.

 

வடக்கு கிழக்கு கல்வியை எடுத்தால் அதன் பாதிப்பு அகலமானது. யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் உள்ள 2008 பாடசாலைகளில் 156 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. யுத்த சிதைவால் சுமார் 144 பாடசாலைகள் வேறு இடங்களில் இயங்குகின்றன. மிகப் பின்தங்கிய பிரதேசங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளது. தீவக வலயத்திலுள்ள 76 பாடசாலைகளில் 30 பாடசாலைகளும், வலிகாமம் வலயத்திலுள்ள 152 பாடசாலைகளில் 21 பாடசாலைகளும், திருமலை வலயத்திலுள்ள 80 பாடசாலைகளில் 15 பாடசாலைகளும், மன்னார் வலயத்திலுள்ள 75 பாடசாலைகளில் 14 பாடசாலைகளும், யாழ்.வலயத்திலுள்ள 119 பாடசாலைகளில் 11 பாடசாலைகளும், தென்மராட்சி வலயத்திலுள்ள 68 பாடசாலைகளில் 10 பாடசாலைகளும், வவுனியா வலயத்திலுள்ள 83 பாடசாலைகளில் 22 பாடசாலைகளும், மடு வலயத்திலுள்ள 41 பாடசாலைகளில் 5 பாடசாலைகளும், துணுக்காய் வலயத்திலுள்ள 54 பாடசாலைகளில் 5 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதைவிட வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஒருவரே ஆசிரியராகவும், அதிபராகவும் உள்ள 85 பாடசாலைகள் உள்ளன. இரு ஆசிரியர்களைக் கொண்ட 149 பாடசாலைகளும், மூன்று ஆசிரியர்களைக் கொண்ட 138 பாடசாலைகளும் உள்ளன. கல்வி என்பது வடக்கு கிழக்கில் நலிந்து சிதைந்து செல்லுகின்றது. இன்று வடக்கு கிழக்கில் 8000 மேற்பட்ட ஆசிரியர்களும், 500 இற்கு மேற்பட்ட அதிபர்களும், 200இற்கு மேற்பட்ட கல்விப்பணிப்பாளர்கள் இருந்த போதும், கல்விக்கான ஆசிரியர் பற்றாக்குறை மிகப் பெரியதாகி வருகின்றது.

 

மருத்துவத் துறையை எடுத்தால்

 

 என்றும் இல்லாத அவலத்தை யாழ் குடா சந்திக்கின்ற நிலையை ஒப்பிடும் போது, மற்றைய பிரதேசங்ளை நாம் கற்பனை பண்ணமுடியும். யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 7 ஆண்டுகளில் 6,480 பேர் உயிரிழந்துள்ளனர். மருந்துத் தடை, தமிழ் வைத்தியர்கள் மக்களின் வரிபணத்தில் படித்துவிட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு நாட்டை விட்டு ஒடுதல், புலிகளின் அதிகார அடக்குமுறைக்கு உள்ளாகி மருத்துவர்கள் வெளியேறுதல், பொதுவான கல்வி தர வீழ்ச்சி, சமூகப் பலவீனங்கள் என்பன உயிரிழப்புக்களை பல மடங்காக்கியுள்ளது. மலேரியா, புற்றுநோய், நெருப்புக் காய்ச்சல், வயிற்றோட்டம், மற்றும் வீதி விபத்துக்கள் என்பன என்றும் இல்லாத அளவில் மரண விகிதத்தை அதிகரிக்க வைத்துள்ளது. 1997ஆம் ஆண்டு 820 பேரும், 1998ஆம் ஆண்டு 883 பேரும், 1999ஆம் ஆண்டு 875 பேரும், 2000 ஆம் ஆண்டு 770 பேரும், 2001ஆம் ஆண்டு 932 பேரும், 2002ஆம் ஆண்டு 1012 பேரும் 2003ஆம் ஆண்டு 932 பேரும் உயிரிழந்துள்ளனர். உண்மையில் மருத்துவர் பற்றாக்குறையும், வசதி இன்மையும் மிக அவலமானதாக உள்ளது. உதாரணமாக யாழ்.ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவில் 2004 பெப்.1 முதல் 10 நாள்களில் 6,605 பேர் சிகிச்சை பெற்றனர். பெருமளவில் சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றுக்கு நாள் ஒன்றுக்கு, யாழ் பிரதான மருத்துவமனைக்கு 1000 பேரளவில் சிகிச்சைபெற வருகின்றனர். இது 2003 ஜனவரி மாதத்தில் மட்டும் யாழ். போதனா மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவில் 24136 பேர் சிகிச்சைக்காக வந்தனர். நாளாந்த சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நாள் கணக்காக ஏழை நோயாளிகளே வரிசையில் தூங்க வேண்டியுள்ளது.

 

இது இப்படி இருக்க, வடக்குகிழக்கில் 400 சுகாதார நிலையங்கள் சேதமடைந்துள்ளது. இதில் 49 முற்றாக இயங்க முடியாது போயுள்ளது. 15 ஆயிரம் கல்விக்கூடங்கள் முற்றாக தகர்ந்துள்ளது. 326700 வீடுகள் முற்றாக அழிந்துள்ளது. 60 சதவீதமான வீதிகள், 10 புகையிரதப் பாலங்கள், 29 புகையிரத நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளது. இப்படி பற்பல. இந்நிலையில் வடக்கு கிழக்கு புனர்நிர்மாணம் செய்ய 4593 கோடி ரூபா தேவை என்ற மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில்

 

இடம் பெயர்ந்தவர் மீள்குடியேற்றம்        568 கோடி ரூபா

சுகாதாரம்                                                353 கோடி ரூபா

கல்வி                                                       205 கோடி ரூபா

வீடமைப்பு                                              1005 கோடி ரூபா

உள்கட்டமைப்பு                                      1651 கோடி ரூபா

விவசாயம்                                               509 கோடி ரூபா

வீதி புனர்மைப்பு                                     191 கோடி ரூபா

நீர் மின்சக்தி                                            111 கோடி ரூபா

 

இந்த பணத்துக்காக புலிகளும் அரசும் ஏகாதிபத்திய கால்களில் நக்கிபிழைக்க முனைகின்றனர். தேசம் தேசியம் என்பது வெற்று வேட்டாகவே உள்ளது. இதற்காக வெளியில் தமிழ் மக்கள் தமது சொந்த இருப்பிடத்தை, வாழ்வியல் சார்ந்த சுற்றுச்சூழலைக் கூட இழந்து நிற்கின்றனர். சுமார் 42260 ஏக்கர் விவசாய நிலம் அதிஉயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் முடக்கப்பட்ட காரணத்தால் சுமார் 16 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். 40 தொழிற்சாலைகள் இவ்வலயத்தினுள் முடக்கப்பட்டுள்ளமையினால் சுமார் 1700 தொழிலாளர் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 82 கிலோமீற்றர் நீளமான கடற்கரை பயன்படுத்த முடியாத பாதுகாப்பு வலயமாகியுள்ளது. இதனால் 4436 மீனவக் குடும்பங்கள் நேரடியாக பாதிப்படைந்துள்ளனர். பாதுகாப்பு பிரதேசம் அல்லாத இடங்களில் பொதுமக்களின் 400 வீடுகள் மட்டில் படையினர் இன்னமும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மேலும் 290 பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் படையினர் வெளியேறவில்லை என புள்ளி விபரங்களின் மூலம் அறியவருகிறது. யாழ் மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக 29525 வீடுகள் பயன்படுத்த முடியாது போயுள்ளது. சுமார் 300 பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இருபத்தைந்திற்கும் அதிகமான முக்கிய வீதிகள் பொதுமக்கள் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. பல ஆஸ்பத்திரிகள் முதல் மக்களின் வாழ்வோடு தொடர்புடைய பல கட்டிடங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் 3700 வீடுகளை இராணுவம் தனது பாவனைக்கு என ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதை ஆக்கிரமிப்பு இராணுவம் செய்கின்றது. என்றால், புலிகள் தமிழ் மக்களின் பல ஆயிரம் வீடுகளை, சொத்துக்களை ஆக்கிரமித்தள்ளனர். இதைவிட முஸ்லீம் மக்களின் விவசாய நிலங்களை, குடியிருப்புகளை கூட ஆக்கிரமித்துள்ளனர்.

 

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இழந்த சொத்துகளின் பெறுமதி 11 கோடி டொலர் (1100 கோடி ரூபா) என மதிப்படப்படுகின்றது. வடக்கு கிழக்கில் புலிகள் முஸ்லிம் மக்களை தமிழ் மக்கள் என்று கூறியபடி நடத்திய, முஸ்லிம் விரோத நடவடிக்கையால் முஸ்லிம் மக்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை புலிகளிடம் இழந்துள்ளனர். மொத்தம் 21614 குடும்பத்தைச் சேர்ந்த 102867 வடக்கு கிக்கில் இருந்து புலிகள் வெளியேற்றினர். அவர்கள் தமது சொந்த வீடு, நிலம், வியாபார நிலையங்கள் அனைத்தையும் புலிகளிடம் இழந்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் சொந்த 3537 வீடுகளை முழுச் சொத்துடன் புலிகளிடம் இழந்தனர். அவர்கள் வசித்த 194 அரசாங்க வீடுகளையும், 6 பாடசாலைகளையும், 16 மத வழிபாட்டு இடங்களையும் கூட புலிகளிடம் இழந்தனர். இதைவிட வர்த்தகம், மீன்பிடி இழப்பும் பாரியது. இன்று 20 சதவீத வரியை புலிகள் முஸ்லிம் பகுதிகளில் தொடர்ந்தும் அறவிடுகின்றனர். இதில் இருந்து முஸ்லிம் பகுதிகளில் அடிக்கடி வன்முறைகள் நிகழ்கின்றன.

 

மக்களின் நலன்களில் சிறிதும் அக்கறையற்ற யுத்த வெறியர்களும், இராணுவ நலன் சார்ந்து அராஜக வழிகளை தமக்கு சாதகமாக்கி சூறையாடுபவர்களாலும், அப்பாவி மக்கள் தமது பொருளாதார சமூக வாழ்வை இழப்பது அதிகரித்துச் செல்லுகின்றது. ஒரு போராட்டம் மக்களின் வாழ்வின் சுபீட்சத்தைக் கொடுக்கும் போது அடிப்படையில் அது முற்போக்கானது. மற்றயை நாட்டிடம் பிச்சை எடுத்தும், கடன் வாங்கியும் முன்னேற்றுவோம் என்பது ஏமாற்றுபவர்களின் அரசியல் வித்தையாகும். இதைத் தான் அரசாங்கம் செய்கின்றது என்றால், புலிகளும் தாமும் அவ்வழியே என்று கொக்கரிக்கின்றனர். மக்களுக்கு சுபீட்சத்தை கொடுப்பதற்கு பதில் அதுவே மக்களுக்கு எதிரானதாக மாறிவிடும் போது, அந்தப் போராட்டம் கேள்விக்குள்ளாகிவிடுகின்றது. சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்கி அவர்களை நலிவுற்றவராக்கியது என்றால், அதற்கு எதிரான போராட்டம் அதில் இருந்து மீட்சியைக் கொடுக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் இரண்டும் தமிழ் மக்களை அக்கபக்கமாக ஒடுக்கி வருகின்றது. மக்கள் தமது சொந்த வாழ்வின் அனைத்து சமூக அடித்தளத்தையும் இழந்து விட்டனர்.

 

மக்களின் வாழ்வுடன் அன்னியமான போராட்டம் மக்களின் வாழ்வை நேரடியாகவே பல்வேறு துறைகளில் சீராழிக்கின்றது. வறுமையை ஒரு போக்காக்கி உள்ளது. யுத்தமும், உலகமயமாதலும் மட்டக்களப்பில் தாய்மையும், குழந்தை பிறப்பும் என்பதை, மரணத்தின் எல்லையில் ஊசலாட வைத்துள்ளது. இதன் அடிப்படையில் வெளியாகியுள்ள சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.

 

வருடம்

1987

2000

2001

2002

சிசு மரணம்

54

121

117

166

தாயின் இறப்பு

12

07

09

07

இறந்த நிலையில் குழந்தை பிறப்பு

71

138

167

145

மொத்த இறப்பு

137

266

293

318

 

மட்டக்களப்பில் குழந்தையின் இறப்பு கடந்த 15 வருடத்தில் அண்ணளவாக மூன்று மடங்காகி உள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை பெருக்கெடுத்துள்ளது. குழந்தைகள் பாடசாலை செல்வது குறைந்து வருகின்றது. சிறுவர் உழைப்பு பெருகி வருகின்றது. சிறுமிகள் மேலான பாலியல் வன்முறை பெருகி வருகின்றது. குழந்தை உழைப்பு என்பது உயர் அந்தஸ்தில் உள்ளோரின் பாலியல் தேவையை பூhத்தி செய்யும் ஊடகமாகியுள்ளது. பாடசாலைகளில் வன்முறை பெருகியுள்ளது. ஆசிரியர்கள் அதிபர்கள் இணைந்து பெண் குழந்தைகளை பாடசாலையில் பாலியல் ரீதியாக சுரண்டுவது அபலமாகியுள்ளது. வறுமை காரணமாக வேலைக்குச் சென்ற சிறுமியை பாலியல் ரீதியாக கற்பழித்த சொந்த கணவனை மன்னித்த மனைவி, சிறுமியின் பெண் உறுப்பில் சூடுபோட்ட சம்பவங்கள் கூட மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. இவர்கள் சமூகத்தின் உயர் அந்தஸ்துடையவர்கள். இவர்கள் தமிழ் தேசிய வாதிகளின் தீவிர ஆதரவாளர்கள். இப்படி பல பாலியல் ரீதியான சம்பவங்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆழமாகவே நலிந்து சிதைந்து வரும் ஏழைத் தமிழ் மக்களின் அவலம், கேட்பாரற்ற ஒரு சமூகப் போக்காக மாறிவிட்டது.

 

வடக்கு கிழக்கு சமூகமே அகதியாகி உள்ள நிலைமை என்பது, தனது சமூக இருத்தலின் மேலான கையேலாத் தன்மையை எதிரொலிக்கின்றது. அகதிகளுக்கான சர்வதேச அறிக்கை ஒன்றில் சொந்த வாழ்விடத்தை விட்டு 8 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த சமூகத்தின் சமூக இருப்பு என்பது, வரைமுறையற்ற வகையில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இவர்களின் நலன்களில் அரசும் சரி, புலிகளும் சரி அக்கறைப்படுவதில்லை. தத்தம் இராணுவ அரசியல் நலனுக்கு இசைவாக, இவர்களை வெறும் கருவிகளாகவே பயன்படுத்தப்படுகின்றனர். அமைதி சமாதானம் என்ற பெயரில் யுத்த நிறுத்தம் தொடங்கியது முதல் இவர்களின் மீள்குடியேற்றம் என்பது தேசியத் தலைவர்களின் வேண்டாவெறுப்பான ஒரு விடையமாகவே இருந்தது. சர்வதேச நாடுகளின் விடையமாகியது. சர்வதேச அமைப்புகள் மக்களுக்குள் ஆழமாக ஊடுருவும் ஒரு நெம்பு கோலாகியது. சர்வதேச அமைப்புகளின் தயவிலும் மற்றும் தன்னியல்பாகவும் மீள் குடியேற்றம் நடைபெற்றது. முதல் 18 மாதத்தில் 311000 பேர் தமது பழைய இருப்பிடத்துக்கு திரும்பியுள்ளனர். மீள்குடியேற்றம் ஒரு சுடுகாட்டின் மேலானதாகவே தொடங்கியது. இந்த சுடுகாடான வடக்கு கிழக்கில் 327000 வீடுகள் சிதைந்துள்ள நிலையில் மீள் குடியிருப்பு என்பது வேதனையான ஒன்றாகவே தொடங்கியது. எந்த நிவாரணத்தையும், எந்த தேசிய வழிகாட்டுதலையும் தமிழ் தேசியத் தலைமைகள் வழங்கவில்லை. சிதைந்த தேசியச் சுடுகாட்டில் அன்னிய நாட்டுப் பேய்களின் வழிகாட்டுதலுக்கே உட்பட்டுள்ளனர். நேரடியாக அன்னியனும், இனவாத அரசுக்கு ஊடாக அன்னியனும் வழங்கிய சில நிவாரணங்களான உணவு மற்றும் நிதியில் ஒரு பகுதியை கட்டாயமாகவே தமிழ் தேசியவாதிகள் சூறையாடி வருகின்றனர்.

 

இதைத் தாண்டி மீள் குடியேற்றம் கூட ஆபத்தான ஒன்றாகவே உள்ளது. பலர் தொடர்ச்சியாக கண்ணிவெடி தாக்குதலுக்கு நாளந்தம் உள்ளாகின்றனர். வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி உத்தியோக பூர்வமாக 10 இலட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது 20 இலட்சத்தைத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகின்றது. உலகளவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடியில் இது கணிசமானது. 55 கண்ணிவெடிக்கு ஒன்று இலங்கையில் புதைக்கப்பட்டுள்ளது. உலகளவில் புதைக்கப்பட்ட மொத்த கண்ணிவெடி 11 கோடிக்கு மேலாகும். இதை அகற்ற 3300 கோடி டொலர் (330000 கோடி ரூபா) தேவை. ஒட்டு மொத்தமாகவே புதைக்கப்பட்டவற்றை அகற்ற 1100 வருடங்கள் தேவை. இலங்கையில் 2002 வரையான காலத்தில் 35000 பேர் கண்ணிவெடிக்கு பலியாகியுள்ளனர். 27000 பேர் கால்களை அல்லது வேறு உறுப்புகளை இழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 15 ஆயிரம் பேர் இராணுவ வீரர்களாவர். வடக்கு கிழக்கில் முழுமையாக கண்ணிவெடியை அகற்ற 20 வருடங்கள் தேவை. மொத்தமாக இவற்றை அகற்ற 6000 கோடி ரூபா தேவை. இந்த நிலையில் கண்ணிவெடியை தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு அகற்ற 272 கோடி ரூபாவை பல்வேறு நாடுகள் வழங்கியுள்ளது. இந்த நிலையில் வக்கற்ற மக்கள் வாழ வழியற்ற நிலையில் இந்த கண்ணிவெடிகளின் மேல் குடியேறுகின்றனர். சமாதானம், அமைதி என்பது நாளாந்தம் கண்ணிவெடி வெடிச் சிதறல்கள் மேல் தான் அரங்கேறுகின்றது. கண்ணிவெடியை அகற்ற சர்வதேச அமைப்புகள் கொடுக்கும் கூலியின் பெரும் பகுதியை புலிகள் பறித்து எடுக்கின்றனர். தர மறுத்தவர்களை கூட்டமாகவே வைத்து தாக்கப்பட்ட சம்பவங்களும் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் குறைந்த பட்சம் கண்ணிவெடி அகற்றலைக் கூட சுயமாக தேசியவாதிகளால் செய்ய முடியாது என்ற நிலையில், எப்படித் தான் தமிழ் தேசத்தை நிர்ணயம் செய்யப் போகிறார்கள்.

 

உண்மையில் இந்த வேதனைக்குரிய தமிழ் சமூகம், மத்தளம் போல் மோதப்படுவதன் ஊடாகவே இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் ஜனநாயக தோற்றத்தில் பொம்மி நிற்கின்றது. சமூகமே புலம் பெயர்ந்து அகதியாகி மீள குடியேறத் துடிக்கும் தமிழ் மக்களின் வாழ்வோ என்றுமில்லாத வேதனைகளால் அல்லல் உறுகின்றது. சமாதானம், அமைதி மீண்டுவிடும் என்ற நம்பிக்கையில், அதை பலப்படுத்தும் எல்லாவிதமான மனித விரோதப் போக்கையும் கூட ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களின் தலைவிதி என்பது துயரமானது. யூனிசேவ் அறிக்கை ஒன்று வடக்கில் 69 சதவீதமான குழந்தைகள் அகதி முகாம்களில் வாழ்வதாக தெரிவித்துள்ளது. இந்த இளம் குழந்தைகளின் தலைமுறை வாழ்வு ஒரு சமூகப் போக்கின் வளர்ச்சிக்கே நேர் எதிராகவே தொடங்குகின்றது. அதுவும் யாழ் சமூகத்தின் நிலையே இது என்றால், தமிழ் சமூகத்தின் வீழ்ச்சி என்பது பள்ளத்தில் உருண்டு ஒடுவதைத் தாண்டி எதுவும் இருக்கப்போவதில்லை.

 

94 ஆயிரம் குழந்தைகள் வறுமை காரணமாக கல்வியை இழந்துள்ள நிலையில், யாழ் மாவட்டப் பாடசாலைகள் சிலவற்றில் பொறுக்கி தின்னும் கும்பல் ஒன்று மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்கு 15 ஆயிரம் ரூபா தரும்படி நிர்ப்பந்திக்கின்றனர். நிதி கோருவது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் கல்வித் திணைக்களத்துக்கே சென்று முறையிட்ட போது, தம்மையொன்றும் செய்யமுடியாது என்று கூறும் அளவுக்கு அதிகாரத் திமிர் நிறைந்த கும்பல் ஒன்று உருவாகியுள்ளது. ஆகக் குறைந்தது 3 ஆயிரம் ரூபா கட்டவேண்டும் என்று கோருவது அரசாங்கமல்ல. தமிழ் மக்கiளிடையே உருவாகியுள்ள திடீர் பணக்காரக் கும்பலே. இதில் தேசியம் பேசும் புலிகளும் இணங்கிப் போவது மட்டுமல்ல, தமிழ் மக்கள் என்று மூச்சிரைக்க கோசம் போடும் பினாமிப் பல்கலைக்கழகம் கூட இந்த மனித விரோத கொள்ளைக்கு எதிராக மூச்சுவிடுவதில்லை.

 

தமிழர் தாயகத்தின் பொருளாதாரம் என்ன?

 

உலகமயமாதல் என்ற கட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தேசங் கடந்த பொருளாதாரமே தமிழீழத் தேசிய பொருளாதாரம் என்பதை புலிகள் நிறுவிவருகின்றனர். அண்மையில் புலிகளின் விழாக்கள் அனைத்தும், தேசங்கடந்த பன்னாட்டு பொருட்களின் விளம்பரங்களால் அலங்கரிக்கப்பட்டே நடத்தப்படுகின்றது. வன்னியில் அவர்களின் நடத்தும் பேச்சுவார்த்தை மேசைகள் கூட, பன்னாட்டு சந்தை பொருட்களின் விளம்பர பொருளால் அலங்கரிக்கப்படுகின்றது.

 

உதாரணமாக அண்மையில் மூன்றாவது தமழீழத் தேசிய விளையாடு விழாவை புலிகள் 20.2.2004 கிளிநொச்சியில் நடத்தினர். அந்த தேசிய விழாவில் கொக்கோகோலா விளம்பரங்கள், புலிக் கொடியை விட பெரியளவில், புலிக் கொடியின் பின்னணியில் வடிவமைக்கப்பட்டடிருந்தது. (பார்க்க 21.2.2004 தினக்குரல் பத்திரிகையில்) சாதாரண செய்திப் பத்திரிகையிலேயே இப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. உத்தியோகபூர்வமற்ற வகையில் புலிகளின் ஆதரவுடன், தமிழீழத் தேசிய குடிபானம் கொக்கோகோலாவாக மாறியுள்ளது. இதன் மூலம் துரோகியான தேசிய குளிர்பானத்துக்கு, துரோக தண்டனையாக மரணதண்டனை வழங்கப்பட்டு விட்டது. இதை யாரும் உரிமை கோரவில்லை. இதற்காக வழமைபோல் யாரும் குரல் கொடுக்கவுமில்லை. புலிகள் பன்னாட்டு பொருட்களின் இடைத்தரகராக மாறிவரும் நிலையில், தேசிய பொருளாதாரத்தின் எஞ்சிய மூச்சுகளும் சேடமிழுக்கத் தொடங்கியுள்ளது. புலிகள் கொழும்புத் தரகர்களுக்கு கீழ் இருப்பதை விட, நேரடி தரகராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தான் சிங்கள இனவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற கூத்தை நடத்துகின்றனர்.

 

உலகத்தில் மிகத் தரமான ருசியான பழங்களை உற்பத்தி செய்யும் எம் மண்ணில் கிடைக்கும் பழங்களை தேசத்தின் மக்கள் உண்ணாது அவற்றை ஏற்றுமதி செய்யவும், அதில் உற்பத்தியாகும் குளிர்பானங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது. தமிழ் மக்கள் உலகத்திலேயே மிகக் கழிவான கொக்கோகோலாவை உறிஞ்சும் புலிகளின் கொள்கை தேசிய கொள்கையாகியுள்ளது. இதனடிப்படையில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் வடக்கில் உற்பத்தியாகின்ற பலா, பப்பாளி, அன்னாசி மற்றும் கொடித்தோடை ஆகிய பழங்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி பதனிட்டு ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென பழ உற்பத்தியாளர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்க, பழ உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட அமைப்புகளில் பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத நடவடிக்கையாக ஒருங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதேச ரீதியாக வடமராட்சி - |ஊற்று| நிறுவனமும், கோப்பாய் - இருபாலைச் சந்தியில் அமைந்துள்ள மக்கள் நலன்காக்கும் பிரிவும், நல்லூர் - சமூக அபிவிருத்தி மன்றமும், சங்கானை - சிறுவர் கல்விக்கும் பால்நிலை அபிவிருத்திக்குமான நிறுவனமும், தென்மராட்சி - அறவழிப் போராட்டக்குழு அலுவலகம் ஊடாக இந்த காட்டிக் கொடுப்பை ஏகாதிபத்தியத்துக்கு ஒழுங்கமைத்துள்ளனர். இப்படி பற்பல தேசிய உற்பத்திகள் சொந்த மக்களின் பாவனையில் இருந்து விலக்கப்பட்டு, வெள்ளையர்களின் நலனை உறுதி செய்கின்றனர். இதை இயற்கையான உணவு என்ற விளம்பரத்துடன் சந்தைப்படுத்திக் கொழுக்க ஏகாதிபத்திய மூலதனங்கள் இடைத் தரகர்கள் மூலம் களமிறங்கியுள்ளன. அதேநேரம் இயற்கை உணவு, குடிபானம் என்று விளம்பரம் செய்ய முடியாத வெள்ளை நாட்டு இரசாயனக் கழிவுகளை பளபளக்கப் பண்ணி, தேச மக்களுக்கு தேசிய உணவாக மாற்றப்படுகின்றது. தேசிய வீரர்கள் இதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, கடை விரிக்கின்றனர்.

 

மறு பக்கத்தில் எம் மண்ணில் அன்னிய மூலதனம் கேட்பாரின்றி தாராளமாக புகுகின்றது. குடாநாட்டுக்கான மின்விநியோகத்தை ~அக்கிரிக்கோ| என்னும் பிரிட்டிஸ் நிறுவனம் அமெரிக்காவிடம் இருந்து அண்மையில் வாங்கியது. இதற்கு முன் ஒரு வருடமாக ~அல்ரெம்| என்ற அமெரிக்க நிறுவனமே மின்சாரத்தை வழங்கியது. வடக்கு போக்குவரத்துத் துறையை அன்னியன் வாங்கியுள்ளான். இப்படி பற்பல. தேசிய வீரர்களின் சம்மதத்துடன், தியாகிகளின் பிணங்களின் மேலாக செங்கம்பளம் விரித்து அன்னியர்கள் வரவேற்கப்படுகின்றனர்.