இந்த ரௌடிகளின் கூடாரம் தனிநபர் ஒழுக்கத்திற்குப் பெயர் போனது. அன்று இளம்பெண்களோடு நிர்வாணமாக "ஆத்ம பரிசோதனை' செய்தார் "உத்தமர்' காந்தி. இன்று பறக்கும் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணிடமும், இரவில் தனித்துவரும் இளம் பெண்களிடமும், நடிகைகளுடன் அம்மண ஆட்டம் போட்டும் "ஆத்ம பரிசோதனை' செய்யும் மத்திய, மாநில மந்திரிகள் என தன் தகுதியை உயர்த்திக் கொண்டுள்ளது.
"மனிதருள் மாணிக்கம்' நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் ஆடிய காதல் களிவெறியாட்டங்கள் அண்மையில் உலகம் முழுவதும் அம்பலப்பட்டு நாறியுள்ளது. மாற்றான் மனைவி மீது மையல் கொண்ட இந்தக் கழிசடைதான் இந்தியக் குழந்தைகளின் "மாமா'வாம்! நேரு எட்வினா காதல் களியாட்ட விவகாரம் காங்கிரசுத் தலைவர்களின், ஏன் ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளின் வெட்கக்கேடான "தனிமனித ஒழுக்கத்திற்கு' மிகத் துல்லியமான எடுத்துக்காட்டு!
இங்ஙனம், அசிங்கங்களையே ஆபரணமாக அணிந்திருக்கும் காங்கிரசு போலிச் சுதந்திர ஆண்டுகளுக்குப்பின் ஏகாதிபத்திய எசமானர்கள் மற்றும் உள்ளூர் எசமானர்களான தரகு முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் முன்னிலும் மிகுந்த விசுவாசத்துடன் ஊழியம் செய்து வருகிறது. தொடர்ந்து ஆங்கிலேய ஏகபோகத்தின் சுரண்டலைப் பாதுகாத்து வருவதோடு ஜெர்மன், ஜப்பான் முதலான நாடுகளின் ஏகபோக மூலதனங்கள் நுழைவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் பூதாகரமாக வளர்வதற்கும் வழிவகை செய்துள்ளது. சமூக ஏகாதிபத்தியமாக ரசியா சீரழிந்தபின் நமது நாட்டைச் சுரண்டவும் கொள்ளையிடவும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், காங்கிரசுக் கட்சி ஏகாதிபத்திய ஏவல் நாய்களின் கூடாரம்; தேசவிரோதத் தரகு முதலாளிகளின், நிலப்பிரபுத்துவ நீசர்களின் பாதச் செருப்பு; சமூக விரோதிகளின் கடைசிப் புகலிடம்; நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களின் உறைவிடம்; இந்து மதவெறியர்களின் பார்ப்பனக் கும்பலின் மடம்; கிஞ்சித்தும் ஜனநாயகமற்ற தனிமனிதச் சர்வாதிகாரிகளின் வாழ்விடம்; மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பிக் காட்டிக் கொடுத்துக் கழுத்தறுக்கும் கயவர்களின் முகாம்; அடக்குமுறைச் சட்டங்களைப் போட்டு மக்களை ஒடுக்கும் பாசிஸ்டுகளின் பாசறை; தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கிவரும் தேசிய வெறியர்களின் கொட்டடி; புரட்சியாளர்களைக் கருவறுக்கும் மக்கள் விரோத கொலைக் கருவி; சாதி, மத, இன ரீதியாக மக்களை மோதவிட்டு உதிரம் குடிக்கும் ஓநாய்களின் மறைவிடம்; பாசிசத்தைச் சுமந்துவரும் பல்லக்கு!
இத்தனைக் குப்பைகளையும் மறைத்துவிட்டு, அவற்றை வரலாற்றுச் சிறப்புமிக்க ஏடுகளாகக் காட்டுவது, நிமிடத்திற்கு நிமிடம் துரோகத்தனத்திலேயே வளர்ந்த காங்கிரசுக் கட்சியைத் தியாகப் பரம்பரையாகச் சித்தரிப்பதும் எத்தர்களின் வேலையே என்பதை இனியும் மறைக்க முடியாது. சாக்கடையில் வாசனைத் திரவியம் ஊற்றி மணத்தைக் கூட்ட முயற்சிப்பதும், விஷத்திலே தேன் கலந்து வியாபாரம் செய்வதும் இனியும் நீடிக்காது. அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டும், அரசியல் பித்தலாட்டத் திட்டங்கள் கொண்டும் நீண்டுவரும் உண்மையின் கூர்முனையைத் தடுத்துவிட முடியாது. உழைக்கும் மக்களின் உக்கிரமான போராட்டத் தீயில் கதர்க் குல்லாய்கள் கருகுவது நிச்சயம். புரட்சிகர சக்திகளின் போராட்டப் பெரும்புயல் நமது நாட்டின் ஆதிக்க சக்திகளான ஏகாதிபத்தியங்களையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்து வீசிக் கொண்டிருக்கிறது. இந்திய உழைக்கும் மக்கள் புதிய ஜனநாயகப் புரட்சியில் வாகை சூடும்போது காங்கிரசின் மீதமிச்சக் குப்பைகளும் எரிக்கப்படும். துரோக வரலாறு ஒழிக்கப்பட்டுப் புதிய ஜனநாயகப் புரட்சி வரலாறு பொறிக்கப்படும்!