"மாபெரும் சட்டபூர்வமான இயக்கம்தான் மக்களைக் கவர்ந்து கொண்டு இருந்தது. என்ன அது, எப்படித்தான் இருக்கும்? காந்தியே அதை விளக்கவில்லை. விரித்துரைக்கவில்லை. தீர்க்கதரிசனம் உடையோருக்கு, தூய உள்ளம் படைத்தோருக்கு தானே படிப்படியாக அது விளக்கம் கொள்ளும் —அடர்ந்த காட்டினூடே களைப்புற்று நடக்கும் பாதசாரியின் கால்களுக்குப் பாதை தானாகத் தென்பட்டு, ஓய்ந்துபோன அவன் கண்களுக்கு ஒளிக்கதிர் ஒன்று தோன்றவும் அவனுக்குப் புதிய நம்பிக்கை உதயமாவது போல.'' (அதிகாரப்பூர்வமான இந்திய தேசியக் காங்கிரசு வரலாறு, 1935 பக். 376)
காந்தி எப்போதுமே தெளிவற்றே இருந்திருக்கிறார் என்பதை சுபாஷ் போஸ் உறுதிப்படுத்துகிறார். "உண்மையில் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. காலம் கனியுமுன் அவர் தன் ரகசியங்களை வெளியிட விரும்பவில்லையோ அல்லது அரசாங்கத்தை நிர்பந்தத்தில் வைக்கும் போராட்ட முறைகளை அவர் செவ்வையாக உருவாக்கிக் கொள்ளவில்லையோ, தெரியவில்லை.'' (சுபாஷ் போஸ், இந்திய போராட்டம், 192034, பக்.68)
"நம் தலைவர்களில் பலருக்கு சுயராச்சியம் எனில் விடுதலையைவிடக் குறைவான ஏதோ ஒன்று எனத் தெளிவாயிருந்தது. இவ்விசயம் பற்றி காந்திஜியோ தெளிவின்மையோடு இருந்தார்; அதைப் பற்றித் தெளிவாய்ச் சிந்திக்கவும் அவர் ஊக்கம் தரவில்லை'' (ஜவஹர்லால் நேரு, சுயசரிதம், பக்.76) என நேரு வெளிப்படையாகவே கூறுகிறார்.