05202022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

"சுதந்திரம்' ஒரு கபட நாடகமே!

காங்கிரசும் அதன் தலைமையும் ஒருபோதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீர்மானகரமான வெற்றியை விரும்பவில்லை என்பது தெளிவு. "காலிகளுக்கு'' பரந்துபட்ட மக்களுக்கு எதிராகச் செலுத்தப்படும் நூற்றாண்டுகால வெள்ளை ஏகாதிபத்திய ஒடுக்குமுறைச் சுரண்டலின் போது கட்டி வளர்க்கப்பட்ட அதிகாரவர்க்க நிர்வாக எந்திரம், போலீசு, இராணுவம் ஆகியவைகளை அப்படியே எடுத்துக் கொள்ள பெரிதும் விரும்பினர். இந்த அரசு எந்திரம் தகர்க்கப்படுவதை அவர்கள் சிறிதும் விரும்பவில்லை.


புரட்சிகரச் சக்திகளைக் கண்டு இந்திய முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அஞ்சியது போலவே தனது மொத்த அழிவைக் கண்டு ஏகாதிபத்தியமும் பயந்தது. இந்திய நிலைமைகளை பலாத்காரத்தைக் கொண்டு இனி கட்டுப்படுத்த முடியாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டது. யுத்தத்தால் சின்னாபின்னப்படுத்தப்பட்டு நிதிப்பற்றாக்குறையின் காரணமாக தடுமாறிய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இராணுவ பலத்தை அதிகரிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.


"நமது நாட்டின் தொழில் தேவைகளைவிட அதிகமானதாக நமது இராணுவக் கடமை இருந்ததையும் போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதிலும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும்.'' (நினைவிருக்கும் வரை, பக். 518)


இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான ஒரு காரணமென அன்றைய கிழக்கிந்தியப் பிராந்தியத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் சர். பிரான்ஸ்டகர் என்பவன்தான் மேற்கண்டவாறு கூறினான். மற்றொரு காரணத்தை மவுண்ட்பேட்டனின் இந்தியப் படைத்தளபதி லார்டு இஸ்மாய் இப்படிக் கூறுகிறான்:
"1947 மார்ச்சில் இந்தியா இருந்த நிலைமை வெடி குண்டுகளால் நிறைக்கப்பட்டு நடுக்கடலில் நற்கும் ஒரு கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது போல இருந்தது. நெருப்பு, குண்டுகளை நெருங்கு முன் அதை அணைக்க வேண்டிய பிரச்சினை முன்னே நின்றது. எனவே நாங்கள் செய்ததைத் தவிர வேறு மாற்று செய்வதற்கில்லை.''


எனவே சமரசத்திற்கான அவசியம், இந்தியாவில் தனது அரசியல் அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்தது. தனது நிதி, தொழில், வணிக, அந்தஸ்துகளை நிலைநிறுத்திக் கொள்கிற வகையில், தனது சுரண்டல் நீடிக்கும் வகையில் சமரசம் காண வேண்டியிருந்தது. இதனினும் முக்கியமாக நாடு "காலிகளின்'' கைக்குப் போய்விடாமல் "காப்பாற்றும்' அவசியமும் முன்னெழுந்தது. தங்களது நம்பிக்கைக்குரிய ஏஜெண்டுகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு திரைமறைவில் இருந்து ஆட்டி வைக்கும் வேலையைச் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.


"ஏனெனில் முதலாளிகளுக்கு அக்கறையுள்ள விசயம் பொருளாதார ஆதிக்கத்தைப் பெறுவதே. அரசியல் ஆதிக்கத்துக்கான வடிவம் பற்றிய விசயம் அவ்வளவு முக்கியமானதல்ல.''


லெனின் கூறிய இவ்வார்த்தைகள் இந்தியாவின் அன்றைய நிலைமைகளுக்கு மிகப் பொருத்தமானது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின் ஒரு அங்கமே "இந்தியச் சுதந்திரம்'! இந்தியாவில் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரசுத் தலைமைக்கு ஆட்சியதிகாரம் கைமாற்றப்பட்டது; கத்தியின்றி ரத்தமின்றி வெட்கமின்றி சமாதானமாக ஆட்சி கைமாறியது; யூனியன்ஜாக் கொடி இறக்கப்பட்டது; ­வர்ணக் கொடி ஏற்றப்பட்டது; "சுதந்திரம்' ஆகஸ்ட் 15 நள்ளிரவில் பிரகடனப்படுத்தப்பட்டது.


இறுதியாக மணப்பெண் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டாள்; ஆனால் அவள் ஏற்கெனவே ஒரு விபச்சாரியாக ஆக்கப்பட்டு விட்டாள்!


"அரசியல் ரீதியில் சுதந்திரம்' அடையப் பெற்றதென்று கூறப்பட்ட "1947 சுதந்திரமும்', 1950ல் ஏற்பட்ட "குடியரசும்' ஏகாதிபத்தியங்கள் தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் சுதந்திரமான சுரண்டலுக்காக ஏற்படுத்தப்பட்ட, அவர்களுக்கு மட்டுமே ஜனநாயகம் கொண்ட ஒரு நாடு தான் இந்தியா!


ஆகஸ்டில் வாங்கப்பட்ட இந்தச் "சுதந்திரம்' இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் இறுதி வெற்றி அடைந்ததைக் குறிக்கிறதா? இல்லை. பிரிட்டிஷாரின் தொழிலும் ­மூலதனமும் நட்டஈடின்றிப் பறிமுதல் செய்யப்பட்டதா? இல்லவே இல்லை. மாறாக அப்படியே அரவணைக்கப்பட்டு நீடித்து விரிவடைய வகை செய்யப்பட்டது.


1948 ஏப்ரல் 6ந் தேதி பொருளாதாரக் கொள்கை பற்றிய "சோசலிச' நேரு அரசாங்கத்தின் தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில் "அன்னிய மூ­லதனத்திற்கும் தொழில் நிறுவனத்திற்கும் முழுச் சுதந்திரத்தை இத்தீர்மானம் அளிக்கிறது'' என மிகத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷாரின் ­மூலதனம் மட்டுமா தொடர்ந்து நீடித்தது? இல்லை. ஆங்கிலேயப் பேரரசின் அதே கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் "சுதந்திர' இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நீடித்தான். சீதனமாகப் பெறப்பட்ட பிரிட்டிஷ் இந்திய இராணுவக் கூலிப்படை அதே பிரிட்டிஷ் ஜெனரல் பௌச்சர் என்பவனின் கீழ் மேலும் இரு ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மட்டுமின்றி நீதி, நிர்வாகம், சட்டம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஆங்கிலேயரின் வழிமுறைகளிலேயே நீடித்து வருகிறது. 1911ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் இந்தியாவுக்கு வந்தபோது, "தேசியக் கவிஞன்' என வர்ணிக்கப்படுகின்ற வங்கத்தின் ரவீந்திரநாத் தாகூர் "மாட்சிமை பொருந்திய' மன்னனை வரவேற்று வாழ்த்துப் பாடிய "ஜனகனமண' என்ற பாடல் வெட்கமின்றி இந்தியாவின் தேசிய கீதமாக இசைக்கப்பட்டு வருகிறது. காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இன்னமும் தொடர்ந்து ஒரு உறுப்பு நாடாக இருந்து வருகிறது.